ஞானப் பதக் கீர்த்தனைகள்
முகவுரை
இந்தப் பெயரும் வேதநாயக சாஸ்திரியார் புதிதாகத் தொகுத்ததே. ஞானம் + பதம் + கீர்த்தனை என்ற மூன்று சொற்களும் ஒருங்கே சேர்த்து ஆக்கப்பட்டது.
கீர்த்தனை என்றால் சங்கீத சாஸ்திரத்தில் பல்லவி, அனுபல்லவி, சரணம் முதலியவை அடங்கிய பூரண அம்சமாகும். சங்கீதம் உணர்ச்சியைப் பற்றினதே. உதாரணமாக தியாகராஜருடைய ‘விடமுசேயா’ என்ற கீர்த்தனையில் அடுக்கடுக்காக மாற்றி மாற்றி அமைக்கப்பட்ட சுரங்களின் அருஞ்சுவையையே காணலாம். சங்கீதம், சந்தோஷம், விசனம், ஆத்திரம் இவைகளையே காட்டவும் எழுப்பிவிடவும் பிரயோஜனமானது. மெய்யான தெய்வ பக்தி வலிமையாக பலிக்கவும் ஒரு போதனையை மனதில் பதியச் செய்யவும் சங்கீதம் மிகவும் பிரயோஜனமானது. சங்கீதம் அறிவினாலும், புத்தியினாலும் ஒழுங்குபட்டு சீர்படுவது அவசியம். 1 கொரிந்தியர் 14-11,13-16. ஆகையால் புத்திக்கு ஏற்கும்படி ‘பதம்’ என்ற சொல்லைச் சேர்க்கிறார். பதம்-வார்த்தை, வசனம் போதனை, இலக்கியம் என்று பொருள் பெறும். உம்மையும் நீர் அனுப்பின ஒரே குமாரனையும் அறிவதே நித்ய ஜீவன் என்றபடி தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் விளங்கிய போதனையையும், ஜீவியத்தையுமே தம்முடைய கீர்த்தனைகளின் பொருளாகக் கொண்டுள்ளார். மேலும் கிறிஸ்தவ ஜீவியம் உணர்ச்சியிலும் பேச்சிலுமல்ல ஆவியின் வல்லமையில் விளங்கவேண்டும். எபேசியர் 5-19-ல் ஆவியினால் நிறைந்து சங்கீதங்களினாலும், கீர்த்தனங்களினாலும், ஞானப்பாட்டுகளினாலும் ஒருவர்க்கொருவர் புத்தி சொல்லிக்கொண்டு உங்கள் இருதயங்களில் கர்த்தரைப் பாடி கீர்த்தனம் பண்ணி ஸ்தோத்தரியுங்கள் என்றபடி சங்கீதமும் இலக்கியமும் பரிசுத்தாவியினால் பூரணப்பட வேண்டுமென்று ஞானப் பதக் கீர்த்தனை என்று பெயரிடுகிறார். ஞானம் என்பது புதிய ஏற்பாட்டிற்கு முந்தின காலங்களில் பரிசுத்தாவியைக் குறிக்கும்.
இந்த ஞானப் பதக் கீர்த்தனைகள் ஒரே காலத்தில் இயற்றப்பட்டவையல்ல. சங்கீதங்கள் பொதுவாக வேத புத்தகத்தைப்போல பற்பல காலங்களிலும் நெருக்கங்களிலும், துன்பங்களில் இருந்தும், உபத்திரவங்களிலிருந்தும் உண்டான அனுபவத்திலிருந்து எழுதப்பட்டவை. நமக்கு முன்னிருந்தவர்களின் சோதனைகளையும், விசுவாசத்தையும் பார்த்து மேகம் போன்ற திரளான சாட்சிகளால் சூழப்பட்டிருக்கிறோம் என்று உணர்ந்து நமது பற்பல சமயங்களிலும், வாழ்விலும், தாழ்விலும், சுக, துக்க சம்பவங்களிலும் இவைகளை உபயோகித்து தேவனோடு ஐக்கியப்பட்டு அவர் கிருபைபெற்று அவரை மகிமைப்படுத்தப் பிரயோஜனமானது.
ஞானப் பதக் கீர்த்தனைகள் பற்பல இராகங்களில் அமைக்கப்பட்டவை. சமயத்திற்கேற்ப கம்பீரமாகவும், உருக்கமாகவும், நாடக மேறையாகவும் காணப்படும். உதாரணமாக ‘ஓடி வாசனமே’, ‘ஆரும் துணையில்லையே எனக்காதியான் திருப்பாலா’, ஸ்ரீ தியாகராஜர் முதலிய சங்கீத தீக்ஷதர்களின் இராகங்களையும் பற்பல சமயத்திற்கும், பொருளுக்கும் ஏற்றவாறு தொகுத்து எடுத்து இயற்றியுள்ளார். இந்த இராகங்களை அப்பியாசப்படுத்த சங்கீத உபாத்திமார்களையும் நியமித்து தம்முடைய சீஷப்பிள்ளைகளை பயிலுவித்து பாடல்களை அரங்கேற்றுவதில் ஆன செலவு அதிகமே. சில இராகங்கள் வேதநாயக சாஸ்திரியாரே இயற்றி இருக்கவேண்டும். மேல் நாட்டு கீழ் நாட்டு சங்கீதங்களில் கீர்த்தி பெற்று சங்கீதத்தில் வாலிபரைப் பழக்குவித்த Rev.W.H.Blake ஐயர், வேதநாயக சாஸ்திரியாரின் பாடல்களில் கருத்தும், இராகமும் ஒருங்கே சீராய் அமைந்திருக்கிறது என்று வியந்து உள்ளார். தற்காலத்தில் இராகங்கள் மறந்தும், மருவியும் போனதுண்டு. ஆயினும் கருத்தையுணர்ந்து, இராகங்களைத் தேடி அமைத்தும் அல்லது இராக கியானம் உள்ளவர்கள் தகுந்த இராகங்களைக் கூட்டி அமைப்பது இந்தக் காலத்து சபையாருடைய கடமை.
மேலும் தமிழ் இலக்கியம் புத்துயிர் அடைவதையும், தமிழ்க்கல்வி பயிலுவதில் புது இயக்கம் காணப்படும் இந்தக் காலத்தில் வேதநாயக சாஸ்திரியார் அவர்களின் பாடல்கள் கடினமானவை என்று மலைக்க ஏதுமில்லை. வேதப் பொருள்கள் பற்பல இடங்களில் புதைந்து இருப்பதால் இவைகளையறிய வேத அறிவும் அவசியம். ‘முயற்சி மெய்வருந்த கூலி தரும்’ என்றபடி வேதநாயகம் சாஸ்திரியாரின் பாடல்களைப் படிப்பவர்கள் அவரின் கவித்திறன் எவருக்கும் கீழ்ப்பட்டதல்ல என்றும் காணலாம்.
இந்த முகவுரையிலோ அல்லது இந்த ஞானப் பதக் கீர்த்தனைகளிலோ, இன்னும் விளக்கம் வேண்டுமானால் சமயம் பெறும்போது கிறிஸ்தவ மாதாந்திரப் பத்திரிகைகளில் விளக்கப் பிரயாசைப்படுவோம்.
கடைசியாக இந்த ஞானப் பதக் கீர்த்தனைகளை அச்சிட உதவி செய்த வேதநாயக சாஸ்திரியாரின் பேரப்பிள்ளைகளுடைய பேரப்பிள்ளைகளுக்கு நமது நன்றி உரித்தாகும்.
‘கடவுளின் கிருபை தங்கும்
கருதிய கருமம் வாய்க்கும்
புடவியில் செல்வம் ஓங்கும்
புத்திர சம்பத்துண்டாகும்
அடமுடன் ஏசு நாதர்
அருந்தமிழ்க்குதவினோர்
திடமுடன் ஊழிகாலம்
சிறந்து வாழ்ந்திருப்பர் தாமே.’
இது வரையில் ஒரு சில கீர்த்தனைகள் பலவிதமாக மருவினதாக, பலரால் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் அனேக கஷ்டங்களுக்கிடையே அதை முழுமையாக அச்சிட வழி நடத்தின கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
இந்த ஞானப் பதக் கீர்த்தனைகளை திருச்சபை தகுந்தபடி பிரயோஜனப்படுத்தி அவரை மகிமைப்படுத்த அருள் செய்வாராக.
வே. சேம் வேதநாயகம் சாஸ்திரியார்,
தஞ்சாவூர்
Born the 7th September 1774 in Tinnevelly
Died the 24th January 1864 at Tanjore.
தஞ்சை சங்கை வேதநாயக சாஸ்திரியார்
-----------------------------------
சங்கை N. வேதானந்தம் சாஸ்திரியார்
பிறப்பு: 20-1-1870 | மரணம்: 9-3-1930 |
சங்கை வேதநாயக சாஸ்திரியாரவர்களின் பேரன்.
இந்த ஞானப் பதக் கீர்த்தனம் என்னும் புத்தகத்தை அச்சிடப் பிரயாசைப்பட்டவர்கள்.
அது இப்போது முற்றுப்பெற அருள் செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.