3. அதமேவை செய் மத வினையை
அதமற வெறி முடிஅடியொடு சிதையமெய். | தேவ |
4. துதிமுழங்க மதிவழங்க
கதிபேற அருளுயர் நதி பெருகி வருக. | தேவ |
5. பிரசங்க சாஸ்திரி நெல்லையான்
பரமுறுதின மதில் சுரபத மருளிய. | தேவ |
6. தவம் வளர செபம் உயர
சுபமணி கவிசொல சபை அகமகிழ்வுற. | தேவ |
-----------------------------------
(இராகம்: பைரவி) | (ஆதி தாளம்) |
பாரில் மனுவாகினான் பாரிதயை வாரியான்
யாரிவர் பராபரன் அடியார்க்கருள் பூரணன்
1.சீரிலங்கு நேசமே சேனையாசி வாசமே
தீயரெம் விசுவாசமே - திவிய ஒளி வீசுமே. | பாரில் |
2. பெத்தலேகேம் கானகம் உற்ற குடில் வானகம்
மெத்தனவு தாயகம் விளங்கு தூய நேயகம். | பாரில் |
3. சங்கைதுரை தங்கவே மங்கள முழங்கவே
சங்கட மடங்கவே தமியர்துதி பொங்கவே. | பாரில் |
4. பாவவினைப் போகவும் பரமபதம் சேரவும்
தாழ்விலாது வாழ்கவும் சத்திய உண்மையாகவும். | பாரில் |
5. ஆசைமணவாளனே ஆக்கொட்டிலிலாளனே
யார்க்குமனுகூலனே அனாதிமனுவேலனே. | பாரில் |
6. காட்டிடையர் கூட்டவே கேட்டை முற்றும் ஒட்டவே
கேட்டமனு ஈட்டவே கிரீடமுடி சூட்டவே. | பாரில் |
7. தாழ்மையினுதாரணம் சகலருக்கு மாரணம்
மேன்மை ஞானமாகுணம் விளம்பு சீவகாரணம். | பாரில் |
8. யேசுதிருநாமமே யாவர்கள் சந்தோஷமே
தாசனெலியாவுமே சங்கீதம் சொல நாளுமே. | பாரில் |
-----------------------------------
வேதபதி சீவபதி மெய்ப்பதி திருப்பதிதே
வாதிபதியேக சக்கராதிபதி-நீதிபதி
இஸ்திரி வித்திற் பிறந்த ஏகவஸ்தாமேசுக்கி
றிஸ்தன்பின் சாமியே நீ.
(இராகம்: அடாணா) | (ஆதி தாளம்) |
இஸ்திரி வித்தில் பிறந்த கிறிஸ்தன்பின் சாமி
ஈசனே நேசனே பிரகாசனே சருவேசனே
ஈசன் நேசன் பிரகாசன் சருவேசனே.
சத்தியபதி துதிபதி நரபதி சுரபதி
சருவதயாபதி தவிது பதியான
நித்திய சங்கீத சங்கீர்த்தனங்களு முழங்கிய
நீதிபதியேசு சக்ராதிபதி கிருபாநதியே. | இஸ் |
1.காத்திரப் பரமானந்த சூத்திரப்பாதாரவிந்த
கருணை விளங்கிய ஞானேந்திரமே
சாத்திரப் பொருள் விருத்தாந்த நேத்திரக்கிருபைகடேர்ந்த
சத்திய வேதாந்த சொற்றிட்டாந்தரமே
தோத்திரமுமக்கனந்த கீர்த்தனப் பிரதாபமேவத்
துத்தியம் நீடூழி சதா நித்திய காலமுண்டாக
பாத்திரமாக்கிக் கொள்ளும் விச்சேத்திரத் திரித்துவ தேவே
பட்சமேயனந்தங் கோடிலட்சமே கடாட்சமே. | இஸ் |
2. வானத்திருந்து வந்தக்கியானத்திருளகற்ற
மரியகன்னி வயற்றிலே யுதித்தீர்
ஞானத்திரவியனு பானத்தையுமருளி
நன்மைத்திரு மறைகளையும் விதித்தீர்
ஈனத்தலகை நரகானத்திலேகதற
இத்தரையின் பாவங்களெச் சத்துருக்களும் சிதற
கோனத்தியத்தவீது தானத்திலங்கு மனு
கூலனே கருணை மனுவேலனே செங்கோலனே. | இஸ் |
3. அழியுமகில புவனமு மதிலுளதுமே
அரிய வலமை பெருமையுமதி வளமையும்
ஒழியும் உலையும் குலையும் நொடியில் மாயமாய்
உயர்ச்சி புகழ்ச்சியோ அனித்யமானதே
வழியு முயர் துணைக்குன் பாதமும் நேசிக்க
வலிய பாதகனுக்கு மனதுருகுவையே
பொழியும் கவிப்படிக்கு வேதநாயகன் மேல்
பூரிப்பாக வாரிப் பலன் கொடுக்கும். | இஸ் |
(1835-வரு)
-----------------------------------
அட்டதிசை யாவு மமைந்த அனாதிசுதன்
கொட்டிலுக் குள்ளே படுத்துக்கொண்டானோ-சட்டமிவை
கூட்டுங்கோ புன்மேற் குழந்தையை வைத்தன்பாய்த்
தாராட்டுங்கோ ராராதி ராரோ.
(இராகம்: செஞ்சுருட்டி) | (ஆதி தாளம்) |
ராரராரா ரோ ரார ராரா ரோ
ரார ராரா ரோ ராராதிபாலா ராரராராரோ.
1.சீரினாதிபனே பேரிலாதவனே தேவ
சோதியதான திரித்துவா திவிய பாலகனே.
2. வாரும் வாரும் நின்கண் பாரும் பாரும் கிருபை
கூறும் கூறும் கிருஸ்தேசுமன்னா காரும் ஓசியன்னா.
3. காவிலேயமைவாம் பாவ மாறிடவே
ஆவலாய்மனு வாகப் பிறந்தவா ஆதியான் சுதனே.
4. முந்து மாதியினால் வந்த சாபமுமே
சிந்தியே அழிவாக எழுந்தவா தேவ தேசிகனே.
5. வேத மாமறை யூடோதும் வாசகமே
போதமாய் நிறைவேற்றப் பிறந்தவா பூலோகரட்சகனே.
6. மாறில்லாதவனே பேறு தாரவனே
ஈறில்லாத தயாப சருவேசா ஏசுநாயகனே.
7. சத்தியத்துருவே நித்தியத் தொளிவே
பத்து லட்சணமுள்ள சொரூபா பாவ நாசனனே.
8. ராச மாளிகைமேல் ஆசைதானில்லையோ
நீச மாட்டகமானது வந்ததோ நேயதற்பரனே.
9. ஆனயாவையுமா ஞானமாகவுவே
ஈன மேயணுகா மலுண்டாக்கும் நீ ஏழையோபரனே.
10. தேசுலாவிய மாரோஜ மாமலரே
தூசுதானிலை யோகுளிர் மெத்தவோ ஜோதியான் மகனே.
11. எல்லை ஏதுமில்லா வல்லமைபரனே
புல்லின் மேவப் பொறுத்தனையோ சுவிசேடபோதகனே.
12. ஞாலரும் பரம் வாழ் சீலருந்தொழவே
பாலருந்திய ழுதனையோ நரர் பாவமோ பரனே.
13. விண்ணின் மீதினிலே எண்ணமாகவுமே
அண்ணலோடுயர் பொன்முடி சூட்டுதற்கான வேடமிதோ.
14. விள்ளுதற் கெமையே வள்ளலெம் முதலோன்
பிள்ளையாக்க மனு மகனாகிய பிள்ளையே ஐயனே.
15. மாசில்லா மரியாள் சூசையார் தொழவே
நேசமாயுருவான அரூபா நீதியாதிபனே.
16. நீதரானவதி தூதர் பாடு முனை
வேதநாயகன் பாடவு வந்தையோ வேதநாயகனே.
-----------------------------------
(இராகம்: இங்கிலிஷ்)
சீவ தேவ ஏகனே பரா பரா
திரித்து வத்தொரு மகத்துவப்பர
கிறிஸ்து யேசுரா சீரா தீரா தவீதுகுல நரா.
1.மாவலா வலா நலா செயா செயா
மனுக்குமாரனே தினக் கருணையே வணக்கமே தயா
மாயா நேயா வரமருளையா. | ஜீவ |
2. வந்தன மனந்தமே மெயா மெயா
வாதிடுங்கடி கோதடங்கிட மாதிடுமபையா
வானசேனை பணியு மேசையா. | ஜீவ |
3. அந்தரா சுதந்தரா சரா சரா
அனைத்துயிர்களை வகுத்துச் சீர்பலதொகுத்த சேகரா
யாரா தாரம் நீ நிராதரா. | ஜீவ |
4. அஞ்சலி நிதஞ்சொலி சலாம் சலாம்
வஞ்ச மெஞ்சத் தஞ்ச மிஞ்சவந்தன மெலாம்
வாச தாசனெலியா நற்புகலாம். | ஜீவ |
-----------------------------------
லித்தா பத்தா மெஞ்ஞானத்தா வினோதத்தா
சுத்தா பரம சொரு பத்தா-சித்தத் தா
நித்தா பத்தா நிசத்தா நியாயத்தா
அத்தா வத்தா நமஸ்காரம்.
(இராகம்: பூரிகல்யாணி) | (ஆதி தாளம்) |
அத்தா வத்தா நமஸ்காரமே
ஆக்கொட்டிலிலே வந்தாயே.
1.வற்றா வாரிநன் கோநேத்திரா வானத்தாதா அசரீரீ
வித்தாபத்தா நித்தியாசாரி
வேதத்து நீதத்து விபகாரி. | அத்தா |
2. அன்பே வானோர் சோபன கீதா ஆதிகாரண கத்தாவே
இன்ப திரித்துவ ஏகத்துவமே
இணையற்ற மகத்துவ பரத்துவமே. | அத்தா |
3. மெய்ப்பர தேவா மெய்ப்பரயோவா மிக்கா மா பரிபூரணமே
மெய்பரிசுத்த மெஞ்ஞான தானபர
மேசியா மனாதி காரணமே. | அத்தா |
4. சித்திர அரூபா சத்ய சொரூபா சித்ர கருணாகரதேவா
விசித்திர விசித்திர மெய்ச்சுவி சேடா வேதநாயகன் பாவா.
-----------------------------------
(இராகம்: தோடி ஜாவளி) | (ரூபகம்) |
தயானீ கிறிஸ்து மேசியா
அகண்ட மா பிரகாசி
சுயாதிகார பரா சுபவிசேஷ காரதரா.
1.பிரவஞ்ச வஞ்சமிஞ்சி அஞ்சலென வேயிறைஞ்சி
பெத்தலேம் அதிபா கெஞ்சி அதிபா கெஞ்சி
கெஞ்சி வந்தேன் பாதஞ்சொலி. | தயா |
2. காணொணா பரப்பொருளே-காட்டிலிடையோர்திரளே
காட்சிதரும் திருவருளே திருவருளே திருவருளே
அருளை நாடும் மனமகிழே. | தயா |
3. வார்த்தையே மாங்கிஷத்திலேகி வடிவு சுந்தர பாலனாகி
மக்கட்கிரங்குச் சாகி இரங்குச் சாகி இரங்குச் சாகி
உச்சாகி விவேகி யூகி. | தயா |
4. உன்னத மகத்துவ ராஜா-ஒப்பில்லாத தயை விலாசா
உரை எலியா கவிராஜ கவிராஜ கவிராஜ
தாச நேசா. | தயா |
-----------------------------------
(இராகம்: ஆரபி) | (ஆதி தாளம்) |
சரணமையா சரணமையா
சருவேசா தருணமையா.
1.கருணை நிறை பொறையுமுறை
கதிவாசா தவிரெம் குறை. | சர |
2. பரிசுத்தா தயை வைத்தாள்
கரிசித்தாள் சிவசித்தா. | சர |
3. சுப சோபன்னா பவ மோசன்னா
சுக வசனா துதி யோசன்னா. | சர |
4. விடை குடிலில் பழைய உடை
வெளி யிடையர் நெடிய படை. | சர |
5. சதியுலகம் வெகு கலகம்
ததிசமையம் நயம பையம். | சர |
6. அண்டமனைத்திட முங்கொள்ளான்
அன்னை கன்னி மடியிலுள்ளான். | சர |
7. பெத்தலேகேம் உரியபதி
பிறக்க நிலமிலைய கதி. | சர |
8. சுவிசேட கவிராய
தோத்திரமே யதிநேயம். | சர |
-----------------------------------
வானவர்கள் பாடினர்கன் மாடிடையர் கூடினர்கள்
கானகமுடே பிரவைகாட்டவே-தானவனே
யோர் கன்னியாஸ்திரி பாலுற்றனனே நன்றியொடு
சீர்பதிக் கென்றுந் சொலுவோந் தெண்டன்.
(இராகம்: இங்கிலீஷ்) | (ஏகதாளம்) |
சீருதாரி மாதயாபி திவிய யேசு சுவாமி
தேசிகர் சர்வவியாபி சேனை நன்மை நேமி
1.ஆரியாநிதானியாபி மானி தானி பூமி
ஆசிவீச நேச ரூபியாகினார் சலாமி.
நீரிரிரி சக்ககபா ரிரிபாதநிநி
சாநிநிநி தாததபா மாபமபதாத
நிரிரிரி சக்ககபா ரிரிபாதநிநி
நிரிநிச நிசநித பாப நீதபாப
2. வஞ்சகப் பேய் சஞ்சலமே அஞ்சவே விண்ணாரே
தஞ்சமே யடைந்தனமே தள்ளவே எண்ணாரே
மிஞ்சும் வாஞ்சை நெஞ்சிலுமே மேவுவாரே நேரே
விஞ்சைப் பெத்லேம் கானகமே விளங்கு மன்பைப்பாரே.
3. அத்தனே சத் திரிதத்துவ கர்த்தனே ஆள வந்தார லேலூயா
பத்தி மிகுத்த பயத்துடனித்தனை பாட நினைமனமோயா
வித்த மிகுத்த மகத்துவ சித்தனே மேவு பரா பரன்சேயா
இத்தரை யுற்றவா மெய்க்கரிசித்தனே யேகனே மேசிய தூயா.
4. சிறிய எளிய நரர் கொண்டாடி சேனை தூதர் கூடி
தெரிய இருளில் பிரவை நீடி செக மகிழவும் பாடி
அறி ஞனெலியா துதியூடாடி அகமகிழவே நீடி
அதிபதி புவி நரரைத்தேடி அடவியிடமே நாடி. | சீரு |
-----------------------------------
(இராகம்: காப்பி) | (ஆதி தாளம்) |
வந்தன மனந்தனந்தமே சுவாமி
மைந்தாவே தவீது மைந்தாவே
பாதந்தாவே சந்ததமே.
1.சுந்தர தேவா சுயாதிப சீவா
சோதியனாதி பிரக்கியாதியே யோவா
தொழும் பனைபாது காவா- | ஆ.வந்த |
2. நேயனே ஆயனே நித்திய சகாயனே
நிட்சய உச்சித நிருப உபாயனே
நிலை விளங்கு மைங் காயனே- | ஆ.வந்த |
3. இயேசு மகாராச நேச மதி விலாச
வீசு புகழ் மகேச விகசித விசுவாச
விவேகப் பிரகாச தேச- | ஆ.வந்த |
4. பெத்தலை அதிபதி யுத்தம புகழ் துதி
பேதையர்க் கருள்மதி பிரபல்யா இதுததி
பெற எலியா நற்சுருதி- | ஆ.வந்த |
-----------------------------------
(இராகம்: கன்னடா) | (ஆதி தாளம்) |
ஆதியடி முடி நடு
வானபரன் வெல்லையடி
வாரமனுக் கோலவடி
வந்தயேசு சீர்கொளடி
வந்தித்தால் நாம் வந்தித்தால்
வளமிகுமே நலமிகுமே.
1.இஸ்திரி வித்தரியபரி
சுத்த சுத்த மகத்துவசரி
பத்தி லட்சணச் சிகரி
பரமகுரு பதம் பணி தரி
பாசத்தால் முழு விசுவாசத்தால்
பாக்கியமே சலாக்கியமே. | ஆதி |
2. நீத மிகுமாதி சத்தி
நித்திய நீள் வேத சித்தி
நிச்சய மெஞ்ஞான முத்தி
நீங்கா மனு வேலைப்பற்றி
நேசித்தால் நாம் நேசித்தால்
நிலை மகிழ்வே நித மகிழ்வே. | ஆதி |
3. இயேசு மகராச நிதி
எங்களுயிர் சீவ பதி
என்று முள திவிய கதி
ஏகதுரை மகிழ் சனதி
இன்பத்தால் மா இன்பத்தால்
இசை நிறைவே நிச அறிவே. | ஆதி |
4. தேவ திரியேக வஸ்து
செப்பவரி தான முத்து
தேவசிகாமணி சம்பத்து
திரித்துவத் தொன்றாங் கிறிஸ்து
சேவித்தால் நிதஞ் சேவித்தால்
ஜெயம் வருமே திட மிகுமே. | ஆதி |
-----------------------------------
(இராகம்: ஹரிகாம்போதி) | (ஆதி தாளம்) |
மானிடனானாரே வல்லமைத் தேவன்
மானிடனானாரே.
1.வானிலுயரமான உனதன்
ஆனி லையினில் மனிதன்
ஆனதற்புதமே ஆயிதென்
வல்லமைத் தேவன். | மானி |
2. வானங் கொள்ளான் ஞான முள்ளான்
ஏனம் எதையும் நள்ளான்
ஈனக் கொட்டிலையும் கண்டான்
வல்லமை தேவன். | மானி |
3. எங்கும் நிறைந்த துங்கன் மறைந்து
தங்க வந்தனர் பிறந்து
அங்கு மோட்ச கதவு திறந்து
வல்லமைத் தேவன். | மானி |
4. கர்த்தர் தத்துவ நித்திய சத்துவ
சுத்த தெய்விகத்துவ
துத்திய சத்திய குமார மகத்துவ
வல்லமை தேவன். | மானி |
5. நல்ல கர்த்தன் துல்லி பத்தன்
எல்லையில்லாச் சித்தன்
வெல்லையே பிறந்தார் அத்தன்
வல்லமை தேவன். | மானி |
6. சாபம் நீங்க கோபம் வாங்க
தாபமாகித் தாங்க
சோபனச் சுபமே யோங்க
வல்லமை தேவன். | மானி |
-----------------------------------
(இராகம்: கியாஸ்) | (ஆதி தாளம்) |
திவிய குமரையா திருமெய்யா
அகா - சலமேசையா | - திவிய |
எரு - சலமேசையா | - திவிய |
கனி - சுத னேசையா | - திவிய |
தவீது - குல மேசையா
1.வானாட்டு மேன்துரை
மகாராஜா சலே மேசையா. | (3) | திவிய |
2. தாய்க்கேட்டைப் போக்கொரே
தயா நேயா சலே மேசையா. | (3) | திவிய |
3. சத்தாயோ சத்துவத்தா
சதா பதியருள் கூரையா. | (3) | திவிய |
4. ஜே கோவா சத்திய பரா
ஜெயந்துதி தினமேசையா. | (3) | திவிய |
5. பெத்தலேங் காட்டகமோ
பிரபுனக் கருமையையா. | (3) | திவிய |
6. சத்திரத்து மிடங் கிட்டாதோ
தம்பிரான் மகத்துவ சேயா. | (3) | திவிய |
7. பத்த னெலியா கவியா
பாக்கியா தோத்திரமையா. | (3) | திவிய |
-----------------------------------
(இராகம்: ஜாவளி) | (ஆதி தாளம்) |
ஜெயதுதி ஜெயதுதி-திவிய பெத்தலைப்பதி
திகழ் கிறிஸ் தெம்மதி-செகமனைத் ததிபதி
1.உயர்தய வதிகரித்துரிமை செய் நாதன்
உவந்தெமைத் தேடியிங்குற்ற நன்நீதன். | ஜெய |
2. ஓசன்னா மன்னா மன்னா உச்சித நேசா
ஓலமையை அல்லேலூயா சருவேசா. | ஜெய |
3. அனுதினமுனை மனநினைவாலும் போற்ற
அபையம் அபையமிரட்சி அருளுரை சாற்ற. | ஜெய |
4. வேதவினோதப் பிரக்கியா தமாயோக
மேசியா யேசையா தேசிகனேக. | ஜெய |
5. சீரியை வீரியை சூரிய சரீரி
தேவ சிகாமணி கவிக்கனுசாரி. | ஜெய |
-----------------------------------
(இராகம்: இந்துஸ்தானி) | (ஆதி தாளம்) |
ஈசா ஈசாராவே லதிபதியே
இந்நில நராட்கருள் வாருதியே
அருள் வாருதியே அருள் வாருதியே.
1.நேசா சருவேசா ஓசன்னாவே
நித்தம் நித்தம் தோத்திரம்
வாமன்னாவே ஓ வாமன்னாவே. | ஈசா |
2. தாதா நாதா நீசரி தாபரமே
சத்தியசபை துத்திய மாசிரமே
ஓ மாசிரமே ஓ மாசிரமே. | ஈசா |
3. அஞ்சல் தஞ்சமேசியா ஓலோலமே
அம்பராபரா எங்களனு கூலமே
எங்களனு கூலமே எங்களனு கூலமே. | ஈசா |
4. வெல்லை முன்னணைமேவு மெய்கிறிஸ்தையா
விக்கினம் வராமற்கா அதிதயையா மா
அதி தயையா மா அதி தயையா. | ஈசா |
5. இரட்சகா உன்னதா இத் தாழ்ந்த பூமி
இசை எலியா புகழ் இயேசு சுவாமி-புகழ்
இயேசு சுவாமி புகழ் இயேசு சுவாமி. | ஈசா |
-----------------------------------
அன்புப் பெருக்குக் களவுண்டா, ஆரணப்பேர்
இன்பப் பெருக்குக் கோரெல்லையா-பொன்பகுத்தது
அல்ல வுலகே யறியீரோ ஆச்சரியம்
வல்லமைத் தேவன் மனுடனா!
இராகம்: காப்பி) | (அடதாள சாப்பு) |
மனுடனாகவே வந்த
வல்லமைத் தேவே.
தனுட உருவங்கொண்ட தற்பரயோவா
சரணஞ் சரணமேசு சுவாமி நீ காவா. | மனு |
1.தந்தை சுதனிஸ் பிரித்துச் சாந்து மொன்றாக
தயை புரிந்தன் புவைத்த சருவ சிநேக
விந்தை மனவுருக்க வெள்ளப் பிரவாக
மேன்மைக் கிருபைக் கென்றுந் தோத்திரந் தெய்வீக. | மனு |
2. ஆதி நரர் புரிந்த பாதகமாற
அந்தர மிசை வானோர் களானந்தங் கூறச்
சாதி யனைத்துந் தவறாமலீ டேறச்
சத்திய வேதாட் சரங்கணிறை வேற. | மனு |
3. தஞ்ச மடைந்தோங் கைவிடாதே யுந்தாதா
சருவ நன்மைப் பிரதாப சற்பிர சாதா
அஞ்சல் கொடுத்திரட்சித்தாண் டருணீதா
அன்பின் மகத்துவத் தனாதிக் கிறிஸ்து நாதா. | மனு |
4. சித்தமிரங்கி யுந்தன் திருவிழி நோக்குந்
தேவ பிதாவோ டெமை யொப்புற வாக்கு
மெத்தக் கிருபைவைத் தெங்கள் பாவத்தைப் போக்கும்
விக்கினம் வராமற்காத்து வினையெலாம் நீக்கும். | மனு |
5. முல்லைத் தலைவர்கூட முனைந்து கொண்டாட
முச்சாஸ்திரிகள் தேட முக்காணிக்கை நீட
வெல்லைபதி யோர்நாட வெறிமருள் வாட
வேதநாயகன் பாட வினைபறந் தோட. | மனு |
(1835-வரு)
-----------------------------------
(இராகம்: சங்கராபரணம்) | (தாளம் திச்ர ஏகம்) |
தவிது கன்னி வயிற்று பாலா
தயையே தயையே தயையே சரணம்.
தவமே நவமே சிவமே சரணம்
சத்தியா மெய்க்கிறிஸ்தே யரணம்
சமையம் சமையம் சமையம் கிரணம். | தவிது |
1.அமிர்தம் அமிர்தம் அருளும் ஆரணம்
ஆதி சத்துவ புஜ நற்காரணம்
அடியார் மிடிதீர் சுகமெய்த் தாரணம்
அபையம் அபையம் அபையம் பூரணம். | தவிது |
2. நிமல சொரூப நிரூபக் கியானம்
நித்தியா நீ பூர்த்தி தியானம்
நிகரில் எவருமில்லை சமானம்
நிலையே நிலையே நிலை நிதானம். | தவிது |
3. வடிவு சுந்தர இறைவா வந்தனம்
படியின் பாவச் சிறுமை யந்தரம்
கடவுள் படுக்கை வெறும் புல் மந்திரம்
திடமே ஜெயமே ஜெயமே சந்ததம். | தவிது |
4. இயேசு மேசியா அதிபா சமூகம்
எலியா விளம்ப இசை மனமகம்
ஓசைப் பெத்தலேம் சிறிய மாட்டகம்
உரிமை உரிமை உரிமை வியாபகம். | தவிது |
-----------------------------------
(இராகம்: பைரவி) | (ஆதி தாளம்) |
தேவாதி தேவனை நமது
கர்த்தாதி கர்த்தனை நாம்
கும்மி கோலடித்து
கும்பிட்டு வணங்கி
கூடி பாடிடுவோம்-நாம்.
1.தேவாதி தேவ சுதன் அவர்
வான நாட மலன் தம்
மகிமையை மறந்து
மண்ணி லவதரித்து
மானிடனானாரே. (தேவன்) | தேவாதி |
2. இயேசெனும் இரட்சகர் உயர்
பரிசுத்த நாமமே நம்
பாவத்தைப் போக்கி
பரவசமாக்கி
பரகதி சேர்த்திடுமே. (நம்மை) | தேவாதி |
-சேம் சாஸ்திரியார்
-----------------------------------
பாத்திபனாய்ப் பாவிகளைப் பார்த்திரங்க அன்பின்மிகு
காத்திரமாய் வந்துதித்த காரணந்தா-னேத்த
உயர்விரிவே யோசன்னா ஊழியோ டூழி
செயதுதி ஜே யோவாவுக்கே.
(இராகம்: இந்துஸ்தானி) | (ஏகதாளம்) |
யோவாவுக்கே எந்நாளும்
உயர் புகழ்ச்சி ஓசன்னா ஜே
யோவாவுக்கே எந்நாளும்.
1.சீவனைத்தர ஆவலாய்த்
தேடி வந்த யேசலா-ஜே. | யோ |
2. ஆதி காவில் கனி பரித்த
வாதை நீக்க அருள் பெருத்த-ஜே. | யோ |
3. வானம் பூமி சகலத்திக்கும்
வகுத்தனைத்தும் வாழ்விக்கும்-ஜே. | யோ |
4. பெத்தலேங் கானகத்தில்
உற்று வந்த வான கர்த்தா-ஜே. | யோ |
5. மாட்டுக் கொட்டிலி னாட்டமா
ஆட்டுக்குட்டி நேராட்டமா-ஜே. | யோ |
6. மனுவடிவைக் கனிமரிய
அனையிடம் பெற வருமரிய-ஜே. | யோ |
7. பாக்கியம் பெற வாக்கியந் தர
தீர்க்க மந்திர பார்க்கு சுந்தர-ஜே. | யோ |
8. இசை யெலியா யேத்து மேல்
ஏலோகி மானுவேல்-ஜே. | யோ |
-----------------------------------
(இராகம்: இந்துஸ்தானி) | (ஆதி தாளம்) |
1.சுத்த நல்ல பங்கா
வீடே கொடு துங்கா
சொல் மெய் விளங்க எவர். | (2) |
சோதி பிரக்கியாதி
துத்திய சீர் நேர் பகர்
உதார நெறி மெயாதி
தோத்திர சீர்நேர் பகர்.
2. துய்ய குரு ஆயா
சூதே தவிர் நேயா
துங்க முழங்க குணம். | (2) | சோதி |
3. நித்திய தயை வேதா
புத்தி தரு போதா
நிச்சய மிகுக்கதிரம். | (2) | சோதி |
4. மங்களப் பிரசன்னா
எங்கு நிறை மன்னா
எங்கள் குலங்கடொழும். | (2) | சோதி |
5. தாசனெலியா கவி
பேச கவனஞ் செவி
சாய்த்தருளிம் மானுவேல். | (2) | சோதி |
-----------------------------------
(இராகம்: இந்துஸ்தானி) | (ரூபக தாளம்) |
ஜனித்தாரே கிறிஸ்தேசு மனுவாகப் பாரில்
தாவீதின் வேரில் தாவீதின் ஊரில்.
1.நினைத்தாரே ஜனத்தோர் பாடனைத்தையும் தீர்க்க
நிர்ப்பந்தம் நீக்க முற்பவம் போக்க. | ஜனி |
2. அனைமரி கனிமகனெனவே யுதிக்க
ஆசிர்வதிக்க நேசம் கதிக்க. | ஜனி |
3. அடியவர் நெடுநாள் வந்திட நோக்கும் நேரே
ஜயன் வந்தாரே வையகத் தோரே. | ஜனி |
4. காவலர் பாவலர் யாவரும் போற்ற
கன்மஷ மாற்ற பொன்மலர் தூற்ற. | ஜனி |
5. வாதாடும் வேதாளம் பாதலத் தோட
மண்ணோர் கொண்டாட விண்ணோர் பண்பாட. | ஜனி |
6. சுந்தர மைந்தன் பிறந்த நல் வாக்கியம்
சுபமா சலாக்கியம் சபைக்கோ மெய்பாக்கியம். | ஜனி |
-----------------------------------
(இராகம்: ஆனந்தபைரவி) | (ஆதி தாளம்) |
நாதா கிருபை மேசியா நம்பினோமெமக்
காதாரம் நீதானேசையா.
தாதா பரப்பொருளே வேதா எமக்கருளே
சந்ததஞ் சந்ததந்திரன் விந்தையனந்தம் புகழ் தேவா
விமரிசையே யோவா விளங்கு நித்திய - சீவா
சமையங்காவா. | நாதா |
1.வாழ்வோ விடை கெட்டிலையா வணங்கியுன்முன்
தாழ்வோந்தாளைக் கிட்டி மெய்யா
பாழடராம லெமை யாளுந்ததி கடமை
பங்க மடங்க வெங்கு மிங்குஞ் சிறந்துதங்கு பாலா
பாவிகட் கனுகூலா பராக்கிரம செங்கோலா
இம்மானுவேலா. | நாதா |
2. கனியால் விளைந்த வினையா கருத்தருக்குக்
கனிமரியாளோரனையா
பனிபோலொழிந்து போகும் அநியாய லோக மோகப்
பற்றற்றுனையே கிட்டச் சித்தத்துவந்தருட் கண்பாரும்
பவக் கடனைத் தீரும் பரிவின்தயை கூரும் வரங்கடரும். | நாதா |
3. மாடாடுலவுங் காடா மகிமைப் பதி
வாகாயிருக்கும் வீடா ஈடா எடுத்துரைக்கக்
கூடாதுனதிரக்கம் கோடா கோடி தூதாக்கள்
கூடி அர்ச்சனை செய்யுமீசா கொண்டாடு மகாராஜா
தொண்டனெலியா நேசா சருவேசா. | நாதா |
-----------------------------------
(இராகம்: பூரிகல்யாணி) | (ஆதி தாளம்) |
தொண்டல்லோ ஓரிபாவா
தொண்டாளும் யோவா.
1.சீராளா தெய்வ பதமு
செங்கோன் மைத்தாவீ தேந்திரன்
சிம்மாசனாதிபதியே
சென்றாளுமையா. | தொண் |
2. வானாட்டுச் சேனைக் கத்தா
கானாட்டிலே பிறந்து
மாநாட்டைக் கூட்டுதற்கோ
வந்தாய் எந்தாய் நீ. | தொண் |
3. கர்த்தாவுக் கொரே பேறு
விஸ்தார லோகங் கூறு
கன முக்கிய வளமைகளோடு
காத்தாளுங் கோவே. | தொண் |
4. அல்லற் படாமல் மாக்கள்
செல்லப் பெருக்கில் வாழ்க
ஆதிப் பரப் பிரமமே
பாது காகாவே. | தொண் |
5. நம்மாதி கர்த்தரான
ஞாலத் தாதித்த னென்ற
இம்மானுவேலு மக்குத்
துதியோசி யன்னா. | தொண் |
6. ஆசிக்கப்பட்ட அப்பா
அன்பாக வந்த நட்பா
அனாதியிப்போ தெப்போதும்
தோத்திரமோ சன்னா. | தொண் |
7. உலக முண்டான முதல்
வலிய பிதாக்கள் திரள்
கலிலே மன்னா உமக்கு
காத்திருந்தாரே. | தொண் |
8. பாட்டுச் சங்கீதங்களின்
நாட்டிப் புகழைச் சொன்ன
ஆட்டத் தவிது வாஞ்சித்து
ஆசித்திருந்தான். | தொண் |
9. ஆசியோனிலிருந்து
வாசியா மிரட்சிப்பு வந்தால்
அடிமைச் சிறையிருப்பைத்
திருப்பீரோ அப்பா. | `தொண் |
10. இப்போது மீட்பரேயென்
அப்பா வந்தீர் மெய்யாக
இங்கேயோர் முன்னணையில்
எங்கோ-மானாரே. | தொண் |
11. பரமண்டலத்தைவிட்டு
பரதேசக் கோலமானீர்
பண்ணவர் வணங்கும் நாதா
பால் தேவையாச்சோ. | தொண் |
12. கடலுக் கெல்லையை வைத்தீர்
கர்த்தா அனாதி வஸ்தே
புடவையிற் சுற்றிப் புல்லிற்
கிடத்தப்பட்டீரோ. | தொண் |
13. மெத்த மனங் கலங்கும்
வேதநாயகன் பாட்டைச்
சித்தமாய் கேட்டருளும்
தேவ சிம்மம்மே. | தொண் |
-----------------------------------
(இராகம்: இந்துஸ்தானி) | (ஆதி தாளம்) |
1.எங்குமா ஒளி அரசர்க்கரசர்
இயேசைய ரே.
பிரக்கியாதி தயை பொங்கி
பிரஸ்தாப நிசம் விளங்கி
காவொரே ஏகத்தா
ஏழை சகா ஆயரே. | எங் |
2. தாய் நெட்டு தயானி சமுத்திரா நீயே. | பிரக் |
3. சீர் கெட்டபாவி திருத்துயர் சீவி. | பிரக் |
4. சுத்ததேவாடு பெத்தலேங் காடு. | பிரக் |
5. விஞ்சை எலியா அஞ்ஞல் சலியா. | பிரக் |
-----------------------------------
(இராகம்: இங்கிலிஷ்) | (ஏகதாளம்) |
அற்புத பரஞ்சுடரே ஆதிமறை நேர் நசரே
அதிபதி ஆசீர் தருமேசு நிறை பூரணரே
சொற்படி யித்தாழ்வுதரை தோன்று துரை. | அற் |
மபமக மாபமக நீதபத மாதநிப - (2)
நிசநிச ரீரி சரிககரீக மாகரிச
நிசநிச நீதபத சாநிதப
மபமக மாத நீப. | அற் |
1.ததி சமையங் கிருபையா தம்பிரானே மேசியா
சதிவினை யாவுங் கெடநீடுஞ் சுவிசேடசெயா
சங்கை தங்குமா உண்மையா தாங்குமையா. | அற் |
2. பெத்தலேகங் கானகமா பெரியபதி வருமிடமா
பிழை பொறுத்தாள நற்ற யாள கிறிஸ்து நமா
பக்தர்க் கருள் தாமதமா பாராமுகமா. | அற் |
3. திட்டமுடன் வானம் புவி செய்தவனீ மாட்டடவி
திசையிடஞ் சேர்ந்த குடிலார்ந்த கதிமாபதவி
செஞ்சொ லெலியா நற்கவி தின முதவி. | அற் |
-----------------------------------
பாவாலுஞ் சங்கீதப் பாட்டாலு மாட்டாலும்
நாவாலும் பற்பல ஞானப்-பதத்தாலும்
தேவாதி தேவ திரித்து வத்தி லொன்றான
வானாதி தேவ னொருமைந்தனைப் போற்றுவமே.
வானாதி தேவ மைந்தனைப் போற்றுவமே
கோனான்றவிதிறை கோத்திரத்தினரர் கோலமதாய் பிறந்தார். | - வானாதி |
1.காவினிலே அதமேவை தின்ற கனி காரணத்தா லியல்பாய்த்
தேவனுமே யேழை ரூபமதா யெமைத் தேடிவந்தே பிறந்தார். | - வானாதி |
2. நீதியினாடையினாலெமை மூடி நிறைந்தின்றலங்கரிக்க
மாதயவாய்ப் பழங் கந்தை பொதிந்திட மாட்டகத்தே பிறந்தார். | - வானாதி |
3. வல்ல வரசரமைச் சராண்மனை மாளிகை யானதிலும்
புல்லணையே மிக மேன்மை யென் றெண்ணிப் பிறந்ததிசயமே. | - வானாதி |
4. சுந்தரமிலங்க பரஞ்சி யணிந்த துலங்கு மஞ்சந்தனிலே
வந்து துதியாமல் விலங்கடர்ந்த வனந்தனிலே பிறந்தார். | - வானாதி |
5. அண்ட புவன மடங்கலு முண்டு செய் தங்குலியிற் சுமந்தோன்
மண்டல மெண்டிசையு மடங்கானோர் மதலையாக வந்தார். | - வானாதி |
6. பெத்தலேகே மினி னித்திய திரித்துவ கத்தன் வந்தாரெனவே
யத்தியந்த பய பத்தி மிகுந்தா காயத்திலும் பர் பணிந்தார். | - வானாதி |
7. வெற் பருகாயர் பரப் பொருள் சேயெனயுற்பனமாய்த் தொழவே
யற்புதமாய் மரி கெர்ப்ப மதுற் பவித்தற் புதனார் பிறந்தார். | - வானாதி |
8. சாஸ்திரி மார்கள் விச்சேத்திரமாய் வந்து தோத்திரமே புரிய
சூத்திரமான பரன் சுதனார் யூதர் கோத்திரத்திற் பிறந்தார். | - வானாதி |
9. வேதநாயகனோது பாவின் மேவி யனுக்கிரகஞ் செய்
சோதியான் மகனேசு நாத சுவாமியைத் தோத்தரிப்போம். | - வானாதி |
(1800-வரு)
-----------------------------------
(இராகம்: இங்கிலிஷ்) | (ஏகதாளம்) |
கமபாதப பாதப சநீதபாக
கபசரிமநீ ரிரிரிரி
கமபாதப பாதப சநீத பாக
கபச ரிமநி சஸசஸா
சசசமாக கரிரி ரீநீ
ரிரிரி மாக ககககாச
கரிக மகம பபக சபக
கபச ரிமநீ சச சசா
நம தத்தனர் இஸ்திரி வித்தினராக
பெத்தலை யுற்றநர சரீரீ
தமதுத்தம பக்தரை மெத்தவும் வாழ்க
வைத்திரட்சித்திடும் அருளீசா
நிசமதாக அனைமரி சிறு சுதனாக வருமகா
கிறிஸ்து மகத்துவ துத்திய வித்தக
நித்திய சத்திய துரை ராஜா.
-----------------------------------
(இராகம்: இங்கிலிஷ்) | (ஏகதாளம்) |
காமபா காமபா கமபத பாகரி
காமபப்ப தாநிசஸ்ச நீசரிநி சஸசஸசா
காரிசநி சாதபக பாகரிச காரிரி
காமபப்ப தாநிசஸ்ச நீசரிநி சஸசஸசா
வாருங்கள் வாருங்கள் வந்து களி கூறுங்கள்
மாட்டுக்கொட்டில் ஆட்டுக்குட்டி
காட்டுக் கோலம் பாருங்கள்
மானுவேலரானவரின் பானொளிவைச் சேருங்கள்
மா மகிழ்ச்சியாய்ப் புகழ்ச்சியோடு ரட்சை தேடுங்கள். | -மானு |
-----------------------------------
(இராகம்: இங்கிலிஷ்)
சரி காகா சாசா நிதநிசரி
மாமா ரிநி சநி சரி கா
காகா சாசா மக மபதா
பாப்பா நிந்நி சாசா சா
மாமா ரிகமத பாபா பககச
நிநிநி நிதசரி சாசா சகபச | - 2 |
1.மகராசா மேசியா பிறந்தார்
ஆசார மெல்லாந் துறந்தார்
பாசாதீதர் பண் பகர்ந்தார்
பூசா சாரமே புரிந்தார்
மாசாமி யே யிவர் தேசார் சுதனிவர்
ஆசாரியரிவர் தூசா னவ ரிவர்
ஈசாய் சிவை யிவர் வாசாலக ரிவர்
மூசா நிகரிவர் ஈசாவே. | - மக |
-----------------------------------
(இராகம்: தர்பார்)
தயாபராமனா ததி யினிய வசனா தயா பராமனா
ஜெயா ஜெயா அதிசயநேயா தேவனோர் சேயா
திடமிகு உபாயா ஆயா ஓ. தயாபராமனா
1.ஆதிப் பரபிரம சீராளா அருள்தாராளா வருதேவாளா
அஞ்சல் தஞ்சம் மிஞ்ச விஞ்சை
அதிபதி நிறையிரு புறவாளா
ஆசை நேச மணவாளா | - தயா |
2. தேடியிப்புவி நீடியே அருள்
கோடியே எமை நாடியே
கூடி தூதர்கள் சாடியே
கூத்தாடியே ஆயர் பாடியே
பாடிநற் சுவிசேட கோடியே | - தயா |
3. தானா தந்தை நிதானா பெத்தலேம்
கானா விடை குடில்வானா இதுசரி
தானா மருள் தவிர் பானா பாவிகள்
கானா அபைய மெஞ்ஞானா
மீனா மங்கள சுப சோபனா | - தயா |
4. ஈசன் தீவினை நாசன் பாவிகள்
நேசன் யேசு மாராஜனாம்
மோசஞ் செய்த பிசாசை வீசவே
தேசுமா பிரகாச பூசித
ஆசீர்வாத தேசிகா | - தயா |
5. அம்பரா சிதம்பரா பரம்பரை கரு
ணாம்பரா தொழும் பரா
தம்ப மெங்கு மினும் பர் பரம்புமோ
ரனைமரி சுதாகர சிங்காரா
கும்பிடு மெலியா நம்பு மாதாரா | - தயா |
-----------------------------------