ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

கிறிஸ்துவின் பாடுகளின் பேரிலே

 

152

 

வெண்பா

வானுலகோர் மாந்தர் மனோவாக்குக் கெட்டாத

வீன மணுகாத சருவேசன் - ஞானத்

தீதமுறையிற் பாடுபட்டி ரட்சித்த தன்றோ

அதிசய மான புண்ணியம்.

 

(இராகம்: உசேனி)

(திரிசுர தாளம்)

 

பல்லவி

அதிசய மான புண்ணியம் நமைப் படைத்த

ஆண்டவர் பாடுபட்டு மீண்டி ரட்சித்த செயல்

அதிசய மான புண்ணியம்.

 

அனுபல்லவி

சதிவினை யலகை சொல்லியபடி விலகிய

தருமிசை கனிநுகர் அதமெவை பவமற

மதமிகு தேவ குமாரனிப் பூமியில்

வந்ததும் சீவனைத் தந்தெமைப் புரந்ததும்.

 

சரணங்கள்

1.வானம் புவி படைத்த நாதன் மனுவதாக

மாட்டுக் கொட்டிற்குள் வந்து மதலையாய் பிறந்ததும்

வறுமைய தாய்த் திரிந்ததும் மறுதேசத்துக்

கீனமதா யேழுந்ததும் எட்டாவது நாள்

இரத்தம் சிந்தி விருத்த சேதனம் பண்ணப்பட்டு

எளிமைய தாய் வளர்ந்ததும்

இஸ்நானகன் பால் ஸ்நானம தடைந்ததும்

கானகமதி னிடை சத்துருச் சோதனை

முற்றினும் ஜெயித்ததும்

ஞானத்தைப் போதித் தற்புத மிகப் புரிந்ததும்

நாயகன் பாடுற நேயமதான தும்.

அதி

 

2. பாங்காகச் சீடர் தமது பதம் விளக்கி

பரிசுத்த நற்கருணை பக்கிஷ மா யருளி

பலபல புத்தி சொன்னதும் பரிந்திரவில்

பூங்காவனத்தில் சென்றதும்-பொறுமையாகப்

புண்ணியன் ஆற்றுமத்தில் புகலருங்கஸ்தி வாதை

பூண்டு திகிலடைந்ததும்-புவியனைத்தும்

தாங்கினன் அழுது கொண் டேங்கி பிரலாபித்து

தரையில் மும்முறை முகம்பட விழுந்தது மவர்

ஓங்கிய ஜெபங்களும் தபங்களும் அவஸ்தையில்

உதிரப் பிரவாக வேர்வைகள் பெருக் கானதும்.

அதி

 

3. ஆற்றுமப் பாடு பட்டபின் ஆகாத யூதாஸ்

அண்ணலை முத்தியினால் எண்ணமறவே காட்டி

ஆங்காரமாய்க் கொடுத்ததும் அடர்ந்து யூதர்

தோற்றி வந்தே வளைந்ததும் சுற்றிலும் நின்று

துன்னிய கயிற்றினால் உன்னி வரிந்து கட்டி

துடிக்கப் பிடித்தி ழுத்ததும் துடுக்கதாக

மாற்றமது ரைத் திழுத் தேகி அன்னாமுனும்

வஞ்சகனான காய்பாமுனும் விட அவர்

சாற்றிய தூஷணம் நிந்தைகள் துப்புதல்

சகலமும் சயித்து உத்தரித்ததும் பொறுத்ததும்.

அதி

 

4. பொங்குங் குருக்கள் கூட்டம் பொறாமையினால்

பொந்திப் பிலாத்து வின்பால் எந்தை சுதனைக்கட்டி

போயவர்க் கொப்பளித்ததும் பொல்லாத மன்னன்

வங்கையாய் குற்றப்படுத்தி மரணத் தீர்ப்பு

வழுத்தக் கற்றூணில் சேர்த்து அழுத்தமாய்ச் சேர்வை யெல்லாம்

வாரினாலே யடித்ததும்-வசைகள் சொல்லி

பங்கமதாக முண்முடி தலைக் கறைந்ததும்

பயித்திய னெனப் பல கோரணி புரிந்ததும்

அங்கொரு சிலுவையைத் தோள் மிசை சுமந்து கொண்டு

அற்புதன் கொலைக் களத் தொப்புடன் நடந்ததும்.

அதி

 

5. தேவனிக் கோலமாகவே செருக் களத்தைச்

சென்று கொல்கதா வெனும் குன்றினி லெழுந்தபின்

திருடரிருவர் நடுவே சிலுவைதனில்

பாவிகள் தானறைந்ததும் பரிகாசங்கள்

பண்ணவும் நிர்வாணமாய் அண்ணல் தொங்கினதுவும்

பாய்ந்த குருதி வெள்ளமும் பயங்கரமாய்

ஆவி விட்டிறந்ததும் சீவனை கொடுத்ததும்

அயில் விலாத் திறந்ததும்-அடக்கப்பட்டது மப்பால்

மேவியங் குயிர்த்ததும் எழுந்ததும் நடுவிட

மீள்வதும் வேத நாயகனுக்கன் பாவதும்.

அதி

 

-----------------------------------

 

153

 

வெண்பா

பூங்கா விற் சோரி சிந்திப் பொந்திப் பிலாத்தினிடம்

தாங்காத பாடனைத்துந் தான் பட்டு - வாங் காமற்

போற்தக் குரு சேறிப் பொன் றினானின்னரச

னாற்று மாவே கண் டறி.

 

பல்லவி

ஆத்துமாவே உன்னரசன் துயரடைந்த கனபாடே

தேற்ற மாகவே சொல்லாய் இது சீயோன் மகளோடே

 

அனுபல்லவி

தோற்றமாய்க் கொடும் யூதர் பகை

தொடுத்தே உயிர் முடித்தார்-என்

ஆத்

 

சரணங்கள்

1.பூங்காவினில் விழுந்தோர்

பவம் பொறுக்க வனத் தெழுந்தார்

தீங்காற் செபம் புரிந்தார் திருச்

செங்குருதிகள் சொரிந்தார் பரன்

தாங்காத் துயர் பூண்டார்

இத்தயவா யுனை மீண்டார்-என்.

ஆத்

 

2. யூதாசு வந்தடுத்தான் முத்தி

உகந்தே ஒப்புக் கொடுத்தான்

தீ தாய் பரர் வளைந்தார் கொடும்

தீமையாவையும் விளைந்தார் மிக்கக்

கோதாய்க் கரங் கட்டினார் தலைக்

குருவின் வீடதிற் கிட்டினார்-இதோ.

ஆத்

 

3. அன்னாவுமே பொரிந்தான் காய்

பாவு மிக வெரிந்தான்

பின்னோர் களும் ஏசினார் பெரும்

பெயர் தூஷணம் பேசினார் மிகை

சொன்னார் படு சூட்சிகள் அவ

சுத்தமான பொய்ச் சாட்சிகள்-இதோ.

ஆத்

 

4. துட்டனோ பகை நிறைந்தான் பரஞ்

சோதியின் முகத் தறைந்தான்

கெட்டியாய்க் கண்ணைக் கட்டினார் பல

கெட்ட பாவிகள் குட்டினார்-அர்ச்

சிட்ட னோர் தனும் மறுத்தான்

எசு தேவ சேயனும் பொறுத் தான் - பார்.

ஆத்

 

5. கொந்தளித் ததி காலமே யூதர்

கும் பெலாங்கன ஓலமாய்ப்

பொந்தியுப் பிலாத் திடத்தே மனம்

பொங்கியே ஒப்புக் கொடுத்தார் ஒரு

விந்தையாய் நடுக் கேட்டான் மிக

வேதனை செய்து போட்டான் - பார்.

ஆத்

 

6. கற்றூ ணோடு சேர்த்தான் வார்க்

கசை யாலடித் தார்த்தான்

வெற்றி யாமென எண்ணினான் குருதி

வெள்ள மோடிடப் பண்ணினான் பார்

பற்றி முண்முடி சூட்டினார்

பரிகாச வேந் தென நாட்டினார்-ஒகோ.

ஆத்

 

7. மூங்கிற் கோல் கையிற் கொடுத்தார் கொடும்

மூர்க்க மாயறை விடுத்தார்

சாங்கமாய்ப் புகழ் வாழ்த்தினார்

சகலாத்துச் சட்டையைப் போர்த்தினார்

கிறிஸ்தோங்கலின் முகந்துப்பினார் ஒரு

காலை தூஷணஞ் செப்பினார்-ஓகோ.

ஆத்

 

8. ஏரோதும் பரிகாசித்தான் பித்தன்

எனவே சொல்லி ஏசித்தான்

விருது வெண்ணுடை யிட்டான் கும்பில்

மீளவும் வர விட்டான்-துரை

பரபாவையே விடுத்தான் கொல்லப்

பாத்திபன் றனைக் கொடுத்தான்.

ஆத்

 

9. குருசை புயத் தெடுத்தார் கொலைக்

கொல்கதா மலைக் கடுத்தார் எருசலை நகர்

கடந்தார் நெடும்

தெரு வீதியைத் தொடர்ந்தார்-அங்கே

உருகி அழப் பெண்கள்

கண்ணீ ரோடினதிருக் கண்கள்-ஐயோ.

ஆத்

 

10. வலிதாயுடை களைந்தார்

சேவகர் தான் சுற்றி வளைந்தார்

சிலுவைதனில் ஏற்றினார்-கொடும்

தேவதூஷணஞ் சாற்றினார்

மூவுலகாவையும் ஆண்டான் அங்கு

பெலியாகியே மாண்டான் - பார்.

ஆத்

 

11. சோதியுமுயிர் கொடுத்தான் பெருஞ்

சூரியன் ஒளி விடுத்தான்

நீதியாவையுங் கண்டான் இரு

நீதராலடக் குண்டான் நெல்லை

வேத நாயக னாடி னான் இது

சேதியாவையும் பாடினான் - பார்.

ஆத்

 

-----------------------------------

 

154

 

வெண்பா

ஐயோ கடவுள் அருங் கொலைக் குள்ளானா னோ

மெய்யாய் சீவனையும் விட்டானோ-வையகத்தின்

சாபமோ யான் புரிந்த சற்பினையாலே விளைந்த

பாவமோ இந்தப்படி

 

பல்லவி

ஐயோ மனுவால் வந்த சாபமே கிறிஸ்

தடைந்த பா டெல்லா மெந்தன் பாவமே

 

அனுபல்லவி

துய் யோனாதி மாந்தர்க்கு சொன்ன கற்பினை மீறி

செய் யாத்து ரோகஞ் செய்ததால் செனித்த

ஜென்மப் பாவமே

ஐயோ

 

சரணங்கள்

1.அருபனுருபான தென் பாவமே வானோ

ராசன் பால் குடித்த தென் பாவமே

உருகி அழுதது மென்பாவமே சுன்னத்

துற்ற விதனமு மென் பாவமே

பெரிய தீட்சையும் பெற்றுப்

பேயாற் சோதிக்கப் பட்டு

மருகி உபவாசமாய் மயங்கின தென்பாவமே-

ஐயோ

 

2. காவிற் செபஞ் செய்த தென்பாவமே முழங்

காலினின்றிரந்த தென்பாவமே

வீணவஸ்தை யெல்லாம் என்பாவமே குருதி

வேர்வை பெருகின தென் பாவமே

தாவிமும் முறை சோர்ந்து தரையில் வீழ்ந்து திகைத்து

தாவிப் பிரலாபித் தாத்துமப்

பாடான தென் பாவமே-

ஐயோ

 

3. துட்டர்கள் வளைந்தது மென்பாவமே குருத்

துரோகி செய் வஞ்சகம் என்பாவமே

கட்டி இழுத்தது மென்பாவமே அன்னா

காய் பாமுன் விட்டது மென் பாவமே

திட்டித் தூஷணம் பேசிச் சிரசைச் சீலையால் மூடி

குட்டி நிந்தைப் படுத்துங்

கோரணிகள் என் பாவமே

ஐயோ

 

4. கன்னத் தடித்தது மென் பாவமே சாட்சிக்

காரர் பொய் சொன்னது மென் பாவமே

சின்னப் படுத்தின தென் பாவமே ஒரு

சீடன் மறுத்தது மென் பாவமே

மன்னன் பிலாத்து வின்பால் மாறுபாடாக யூதர்

தன்னிகரில்லான் மேற் குற்றம்

சாட்டினதிங் கென் பாவமே

ஐயோ

 

5. கற்தூணிற் கட்டுண்ட தென் பாவமே வாரால்

கசையா லடிபட்ட தென்பாவமே

வெற்று வெண் சட்டையிட்ட தென்பாவமே

ரோதே விளைத்த பரிகாச மென் பாவமே

குற்றவாளியோடு நிற்கக் குறித்துக் குருசி லேற்றப்

பற்றியே மரணத் தீர்ப்பு

பண்ணின திங் கென் பாவமே.

ஐயோ

 

6. முள்ளின் முடி சூட்டின தென் பாவமே கணு

மூங்கில் கோலால் அடித்த தென் பாவமே

கள்ளனைப் போற் கட்டுண்ட தென் பாவமே

ஞாயக் களரியினின்ற தென் பாவமே

துள்ளிக் கொடுங் குருசைத் தோளின் மேலே சுமத்தி

தள்ளிக் கபால மலை

தனிற் சென்ற தென் பாவமே.

ஐயோ

 

7. மலைத்த பெரு மூச் செந்தன் பாவமே கண்ணீர்

மலங்கிச் சொரிந்தது மென் பாவமே

கொலைக் களத்திற் சென்ற தென் பாவமே-காடி

குடிக்கக் கொடுத்தது மென் பாவமே

நிலைத்த குருசிற் சேர்த்து நீண்ட இருப்பாணியால்

அலைத் துடல் குலுங்கவே

அறைந்ததும் என் பாவமே.

ஐயோ

 

8. பாரச் சுமை யெடுத்த தென் பாவமே தள்ளம்

பாரி விழுந்தது மென் பாவமே

வீரமாய் வசை சொன்ன தென் பாவமே கும்பு

வேடிக்கை பார்த்த தெந்தன் பாவமே

நேரமாய்க்கள்ளர் நடுவே நிறுவாண மாய்க் குருசில்

கோரமாய் அறைந்து கொன்ற

கொடுமைய தென் பாவமே.

ஐயோ

 

9. கஸ்தியாய் தாகங் கொண்ட தென் பாவமே-இடக்

கள்ள ணொக்கத் தூஷித்த தென் பாவமே

சத்துருக்கள் பகைத்த தென் பாவமே தலை

சாய்க்க இட மற்ற தென் பாவமே

சித்தமா யுலக னைததுந் திரு நெல்லையானும் வாழ்க

மெத்த வுநினைந்து யிரை விட்டிறந்த தென்பாவமே.

ஐயோ

 

-----------------------------------

 

155

 

வெண்பா

பாவிகளே கண் ணெடுத்துப் பாருங்கோ மெய்யான

தேவ சுதன ந்தோ சிறுமையாய்-மேவியிங்கே

மாதுயராய் இத்தனை அகோரமாய் பாடுபட்டார்

மாதயவாய் எங்களுக் காய் வந்து.

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

மாதயவாக எங்களுக் காகப் பாடுபட்டார்

இத்தனையாய்-மேசையா-தேவ சுதன்

மா

 

சரணங்கள்

1.ஆதியதஞ் செய் பாதகத்தினால் அற்புத நீதர்

கிருபை போதர் யேசு நாதர்

மா

 

2. கடின மாகக் கொடிய யூதர் கட்டியே நடத்த

மகா சடுத்தப் பாடு படுத்த

மா

 

3. ஆகடியத்துடன் பிடித்துக் கட்டிச் சென்றாசாரி முன்பாகக்

கொண்டு போகக் கொலையாக

மா

 

4. அன்னாவுங் காய்பாவும் சங்கமும் யாவர்களுங் கேட்க

யூதர் பார்க்க ஞாயந் தீர்க்க

மா

 

5. காய்மகாரத்துடன் பொல்லாத சேவகன் கன்னத்திலே யடிக்க

மிக வலிக்கத் துடி துடிக்க

மா

 

6. முக்காடிட்டுத் தலையிலடித்து முந்தியடித்தவனார்

சொலென மூர்க்கப் பொலாதவர் கேட்க

மா

 

7. கோட்டி பண்ணி இராமுழுதும் பலகோரணி கொண்டாட்ட

விளையாட்ட குற்றம் சாட்ட

மா

 

8. வஞ்சகக்கார இரண்டு பொய் சாட்சிகள் வந்து சபையேற

புலை கூறச் சங்கம் சீற

மா

 

9. பத்தி சேர் பேதுரப் போஸ்தலன் சத்தியம் பண்ணி மறுதலிக்க

மனம் சலிக்க சேவ லொலிக்க

மா

 

10. தேசிகன் வஸ்திரம் கிழித்து மரணத் தீர்மானம் செய்ய

மிக வைய்ய நரருய்ய

மா

 

11. காய் பாவின் வீட்டிலிருந்து

பிலாத்து முன் கட்டின கட்டோடே

வருதாடு அதை நாடு

 

12. வேதநாயகன் பாடும் புலம்பல் மெத்த மன முருக

சபை பெருக ஜெயம் வருக.

மா

 

-----------------------------------

 

156

 

வெண்பா

நீதியினோராச நித்திய பிதாவின் சேயன்

மாதினுட விற்றின் மனுவாகித்-தீதனைத்து

நீக்கிப் பரம நெடிய திருச் செங் கோற்

றாக்கி உயிரை மாய்த்தான்.

 

(இராகம்: கமாஸ்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

கோற்றாக்கி உயிரை மாய்த்தான் ஒரே

கோற்றாக்கி உயிரை மாய்த்தான்-தவிதுட

கோற்றாக்கி உயிரை மாய்த்தான்-பரமசெங்

கோற்றாக்கி உயிரை மாய்த்தான்-மாய்த்தான்.

 

சரணங்கள்

1.மாற்றாக்கி முடியான் வகுத்த முண் முடியான் - வந்

தாண்டான் தம்பிரான் - தம்பிரான் - தம்பிரான்.

கோற்

 

2. மாதங்கமடி படவுனாடி

மாபங்க முற வதனம் வாடி-வாடி.

கோற்

 

3. பொந்தியு பிலாத்து கொலை செய்யத் தீர்த்து

புர வலனைக் கொடுத்தான் - கொடுத்தான் - கொடுத்தான்.

கோற்

 

4. குரு சுடன் சகாயி கொல்கதாவி லேகி

கொடிய மரணமாகி-யாகி-யாகி.

கோற்

 

5. வேதத்தை முழுது நிறை வேற்றி

ஆதத்தின் வழியை அணைத் தாற்றி-ஆற்றி-ஆற்றி.

கோற்

 

6. இல்லிக் கருடீர்த் தானிடுக் கணுற்றார்த்தான்

இரக்க முற்றெமைப் பார்த்தான் - பார்த்தான் - பார்த்தான்.

கோற்

 

7. ஆதித்த னிருண்டு துயர் பூண்டான்

தேவத்தன் மடிந் துலகை மீண்டான் - மீண்டான் - மீண்டான்.

கோற்

 

8. விண்ணோர் தங்கோவே வேத நாயகன் பாவே

வேளையில் வந்தெனைக் காவே-காவே-காவே.

கோற்

(1820-வரு)

-----------------------------------

 

157

 

வெண்பா

உச்சிதச் சீயோனே இங்குற்ற வரார் மோ சேயோ

அட்சய வானோனோ மற்றாரோ பார்-நிட்சயமாய்

முஸ்திதியரவு முடித்துக் குரு சேறும்

வஸ்தாதி யாரோ மதி.

 

(இராகம்: பியாக்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

வஸ்தாதி யாரோ-அந்த

மஞ்சுக் கனி ஆசைப் பத்தாவோ

சீயோனைக் கண்ணோ-ஆயே

(2)

ஞானி சீயோனே கண் ணோக்கே

- வஸ்

 

அனுபல்லவி

விஸ்தார கிருபைக்கே

மரித்தாரே மெய்ப் பிரானார்

கருத் தாகக் கண்ணோ-சாலேம்

(2)

செல்லே கருத்தாகக் கண்ணோக்கே.

 

சரணங்கள்

1.ஓங்கல் பிலாத்துவினிடமே

பாடு பட்டாரே குற்றப் படாமல்

உருக்கமாய்ப் பாவிநரர் எங்களுக் காயே

அறிவான பெண்ணோ-பாவை

(2)

மானே அறிவான பெண்ணோக்கே

- வஸ்

 

2. தீங்க தில்லாத் திருமகனார்

வேதெ ழுத் தாலேவாதை யுற்றோராய்ச்

சிரத்திலே முண் மகுடம் தரிக்கப்பட்டாரே

தியானி பண்பா-கிறிஸ்

(2)

மெய்க் கியானிப் பண்பாடே

- வஸ்

 

3. ஆதிக்கத் தான் குருசிலந்தோ

அறையப்பட்டாரே பேதலிக்காதே

அறிக்கையாய் வேத நாயகன் பாவைப் பாடே

அன்பாகக் கொண்டா-சந்தித்

(உ)

வந்தித் தன் பாகக் கொண்டாடே.

- வஸ்

(1828-வரு)

-----------------------------------

 

158

 

வெண்பா

பாதகனான் செய்த தெல்லாம் பாவமல்லானன்மை யென்

தே தெனிது முண்டோ வெனக் குள்ளே-ஆதலினால்

நான் பாடடைவதல்லோ ஞாய மெனக் கோசாரம்-நீர்

தான் பாடடை வானேன் சாமி.

 

(இராகம்: சங்கராபரணம்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

சாமிக் கேனிந்த பாடு

சண்டாளர் செய்த ஈடு

பூமியில் தேவ நேச புத்திரனாம் ஏசுராஜ (சுவாமி)

 

சரணங்கள்

1.மதி முகம் மிக வாட, வலிய முண்முடி சூட

விதனமே மேனி சாட, வெள்ளமா யிரத்த மோட

சாமி

 

2. வலிய வந் தெனக்காக, மரண அவஸ்தையாக

சிலுவை மரத்தில் சாக, சீநேகத் தாலுயிர் போக

சாமி

 

3. மெத்த நான் தேடும் கோவே, வேதநாயகன் பாவே

சித்தம் வைத் தென்னைகாவே, திரித்துவயேசு தேவே

சாமி

(1811-வரு)

-----------------------------------

 

159

 

வெண்பா

காயமேன் வாரடி யேன் கட்டேன் தழம் புகளேன்

மாய்வதேன் எண்ணிறந்த வாதையேன் - ஞாயமேன்

பொன்னாட்டதி பதியே பூலோக ரட்சகா

என்னாலே ஜீவன் விட்டது.

 

(இராகம்: ஆனந்த பைரவி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

என்னாலே ஜீவன் விடுத்தீரோ சுவாமி

இத்தனை பாட்டுக் கிங்கே யடுத்தீரோ

 

அனுபல்லவி

பொன் னாட்டதிபதி பர மன்னாட்டுக் குட்டியே

பொறுமைக் களவில்லாத கிருபைத் திருக்குமாரா

பூண்டு பொற் குருசினிலறை யுண்டெனை

மீண்டனுக்ரக மிட நெறி கொண்டதோ

- என்

 

சரணங்கள்

1.கள்ளனைப் போல் கட்டுண்ட பரதாபம் மெய்ப்பூங்

காவிலாற்றுமத் துற்ற மனஸ் தாபம் வேர்த்து

வெள்ள மாயிரத்தம் பிரண்ட சோபம்-ஆரால்

விபரித்து முடியு முன் பிரஸ் தாபம்

எள்ளத் தனையன் பில்லா உள்ளத் துரோகி நானே

என்னாலுமக் கென்ன லாப மியேசு

மன்னா பரப் பிரம திருவுளமோ இது

- என்

 

2. கற் றூணில் சேர்த் திசைத்த கோரம் வாரால்

கசை யாலடித்த கனபாரம் முண்முடி

சுற்றி சிரத் தழுத்து கோடூரம் பாவி

சொல்லியும் தொலையாதே யிந் நேரம்

கொற்றவனே யித் தூரம் கொண்டதுயர் விஸ்தாரம்

கொலையுண் டெனை விடுதலை புரியவும்

நிலை கண்டிவ் வுலக முழுதறியவும்.

- என்

 

3. சிலுவை மரத்தில் கை கால் நீட்டித் தேவரீர்

திருவிலா வைத் துளைத்த ஈட்டிக் காயம்

வலிய அன்பின் கடைக் கண் காட்டி யின்னம்

வரவழைக்கிறீர் தயை பாராட்டி

விலை முறி யேனைக் கூட்டி வேத நாயகன் பா நாட்டி

மீண்ட சாதிது மிக்க விலாசமே

ஆண்டவா அதிபக் கிட நேசமே.

- என்னாலே

(1830-வரு)

-----------------------------------

 

160

 

வெண்பா

பாதை துலையலையோ பாரச் சுமை கொடிதோ

வாதை முடியும் வருத்துதோ - மா தொருத்தி

தந்த வினையோ தயங்கிச் சிலுவை சுமந்

தெந்தையே போற தெங்கனம்

 

(இராகம்: ஆனந்த பைரவி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஏதனாதி தேவனே சிலுவை சுமந்

தெங்கே போறீர் என் சீவனே

 

அனுபல்லவி

ஆதி பிதாவின் மைந்தா அருமைக் கிறிஸ்தானந்தா

அஞ்சாத தமேவை யருந்திய நஞ்சார் கனியாலே விளைந்ததோ.

-ஏத

 

சரணங்கள்

1.முந்துமனுடர் தம்மால் வந்த வினையை மாற்றி

முழுது முலகை யாற்றி

யெழுதும் வேதத்தைச் சாற்றி

தந்த லகையைத் தாழ்த்தி மைந் தரைக் கரை யேற்றி

தப்பா துயிர் விடுத்து

மெய்ப் பாயிரட் சிக்கத் தோற்றி.

- ஏத

 

2. ஆக மெல்லாம் புண்ணாக அடிப் பட்டிரங்கி நோக

ஆத்தும வாதைகள் மேவி

வேற்றுமு கங் குராவி

சாகத் தீர்க்கப்பட் டெரு சாலேம் பட்டணம் விட்டு

தருகித் தருகி நின்று

மருகி மருகிச் சென்று.

-ஏத

 

3. மெத்த நின் முகம் வாடி இரத்த வெள்ளங்க ளோடி

மெலிந்து முண் முடிசூடி

நலிந்து நடை தள்ளாடி

சத்துருக்களை நாடிச் சித்த முருகித் தேடிச்

சாவைத் தொடர்ந்து கொல்க

தாவுக் கடர்ந்து கூடி.

- ஏத

 

4. பாவியைக் கை தூக்கவோ தீவினையை நீக்கவோ

பரமகதி சேர்க்கவோ

பரனோடுற வாக்கவோ

மேவித்தற் காக்கவோ-சாவின் துயர் போக்கவோ

வெற்பனைக் கடாட்சித்தாப் போல்

எப்போதும் எனைக் கண்ணோக்கவோ.

- ஏத

 

5. சங்கையின் ராசாவே எங்கள் கிருபைப் பிதாவே

சருவ தேவாதி தேவே

பொறுமை யொரே யோவாவே

சிங்காரப் பூங்காவே திரு நெல்லையானின் பாவே

ஜீவனின் மெய் மன்னாவே

சாவ தேனீர் மேசையாவை.

- ஏத

(1830-வரு)

-----------------------------------

 

161

 

வெண்பா

அரியதுயர் பூண்டரும் பாடெலாம் பட்

டுருகியுதிர வெள்ள மோடப் - பெரிதோர்

குரு சிலிறந்திக் குவலையத்தைக் காத்த

பரனர புத்தி ரபரா.

 

(இராகம்: காப்பி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பரநர புத்திர ரான சாமி

 

அனுபல்லவி

உருத்தி னென்னாற்றும நன் னேய நாயகா.

- பர

 

சரணங்கள்

1.சங்கையின் அரசே துங்கவர் சிரசே

இங்கெனின் பவமோ எழுந்த திக்குருசே.

- பர

 

2. தவிது செங் கோலே தழைக்கவன் பாலே

பவநர னெனப்பா டுறு மணு வேலே.

- பர

 

3. வாரதி னடி யோ வாதை முண் முடியோ

பா ரதிலடியேன் பாவ மிப்படியோ.

- பர

 

4. வருத்து சஞ்சலமோ மனவியாகுலமோ

மகத்துவ தெய்வமே மடித்த தென்னலமோ.

- பர

 

5. வஞ்சகன் எனையே மருள் செய் வல்வினையே

அஞ்ச வந்துனையே அளித் தருளினையே.

- பர

 

6. மெத்த விதனமே விளைத்ததுன் சனமே

பத்தனுற் பனமே பாதம் வந்தனமே.

- பர

 

7. தேடு முச்சிதமே தேவ அற்புதமே

நாடிய வேத நாயகன் பதமே.

- பர

(1828-வரு)

-----------------------------------

 

162

 

வெண்பா

உன்னத சிநேகத்துயர்வோ வுயர்ச்சி யோ

இந்நிலத்துக் கெல்லா மிரங்கவோ-மின்னே

மலைக்கா தெம் பாதகத்தால் வன் குருசிலேறக்

கொலைக் காவனம் போனார் கோ.

 

பல்லவி

கொலைக் காவனம் போனாரன்னமே ஆதாங்

கொடிய பாவத்தாலி தோ முன்னமே

 

அனுபல்லவி

வலமைச் சதா நித்திய தலைமைத் தேவாதி பத்திய

வஸ்தனாதி திருச் சேயன் உத்தம கிறிஸ்து நாயன்

மனுடர் களுட பிணையாளி மத்திஸ்தன்

எனுட பிரிய மணவாள சிரேஷ்டன்

வங்கண விங்கி தலங்கிருத நேசன்

சங்க முழங்கிய சங்கையின் ராசன்

மருகிய துயரொடு குருசினில் மடியத்

திருவுளமாய் நம தேசுவுங் கொடிய.

- கொலை

 

சரணங்கள்

1.பொந்தியுப் பிலாத்துவின் கீழாக நின்று

புண்ணியனார் பாடு பட்டுச் சாக

பூரிய ராரியர் வீரிய மாயடர்

காரிர வேசெய் கொடூர மல்லாதினம்

- பொந்தி

 

புடவிக் கிருளே விடியற் பொழுதே

படிறுக் கொடி யோரிடு கட்டுடனே யிரண

போரினார பாரமாக மனுடகு

மாரன் மீத கோர மாக முறையிடப்

- பொந்தி

 

சிந்தை நடுங்கச் செய்யும் லோக ஞாயத்

தீர்ப்பினு பாய மெல்லாம் போக

புந்திக் கடாத மாயம்

போடிச் சம் பிரதாயம்

பொய்மை மனதான நேயம்

பொற்புப் பேச்சா லென்ன தாபம்

போதக ராகிய காதகர் கூறவும்

யூதர் களாம் வலு பாதகர் சீறவும்

- பொந்தி

 

பூண்ட சொற்படி யாண்ட கர்த்தனை

நீண்ட கற்கிடை மீண்டிறுக்கியே

பொங்கி மகா வுதிரங்கள் குபீரென

வுங்கசை வாரடியின் கனவாதைகள்

பொன்னுருமாரியும் வின் னமதா யிரு

கன்ன மெலாம் வலி துன்னவும் நாணொடு

புயங்க ணொந்திட வொன்றி

யழுந்த வரிந்து பிணைந்துயர்

பொற்றிரு மத்தக முட்கிரீடத்தை

யழுத்தியடித்து முகத்திடை துப்பினர்

புகைத்து வசை யெண்ணாது பேசினர்

அகைத்து மணம் நண்ணாம லேசினர்

பகைத்து நரர் பண்ணாத தீமைகள்

புடைத் தோர் கோலது கொடுத்து வீணர்கள்

போத நகைத்துச் சிரித்துத்

தீ துற மெத்தப் பழித்துப்

பொன்றாத குன்றாத நன்றான வொன்றான

என் றேவனின் பால் முழங்காலிடும் போடு

புதி னத்துடனிடவும் விதனப் பட வினறயை

வதனத் திலறை யவு மதினக் கொடுமை செயப்

பொறையுட னின்று குரு சதுகொண்டு

யெரு சலையின் கண்ணுருவ நடந்து

போற்றி மாதர நேக மாயழ

ஆற்றி நேச சிநேக மாகவும்

பூங்கனி யொன்றின் பங்கம்

நீங்கவும் நின்றின் றுங்கம்

புகழாகவு மானிடர் வாழவு

மிகவே தயவாகி யென் னாயகர்

புல்லரோ குருசி சின வாதில் அறைந்திட

கொல் கதா மலையின் மீதிலிறந்திட.

- கொலை

 

2. ஞான மிகுந் தேவாதி தேவன் பரம

நன்மைக் கிருபா நித்திய சீவன்

நானில மானிடர் வானவர் சேனைக

ளான தெல்லாம் நன்னி தான மோடாடிய (ஞான)

சுய மிக்கவு மாதியின் மக்களையே

தருவித் தொரு காவதில் வைத் தினமே சுப

நாலதீத சீல கோலவர மருள்

சாலதீத வாதி மூல குருபர (ஞான)

மேன் மைமகத்துவப் பிரஸ்தாபன் சத்திய

வேதப் பிரமாணிக்கத் தயாபன்

நானச் சுகந்த வாசம் நறுமை யானந்த நேசம்

நன்மறை யுப தேசம் நற்கருணை ப் பிரகாசம்

நாவல ராவலர் யாவரும் நேடிய

பாவமிலாத பராபர மாகிய (ஞான)

நாம் பணிந்து சலாம் பண்ணன் பினமே

லாம் பதந்தரும் ஓம் பரம் பொருள்

நன்றறியார் கனி தின்ற துரோக

மகன்றிட வாய்மை புகன்ற கருணாகர

நன்னெறி யோர் தொழு பொன்னகராதிப

வுன்னத ஞான பிரசன்ன கிருபாசன்

நவங் கணங்கள றங்கடி றங்க

ளொருங்க விளங்கிய

நற்றி ரிதத்துவ மகத்துவ பரத்தி

ணொருத்துவ கிறிஸ்து கருத்தர் சுமுத்திர

நலத்தினுயர் விண்ணோர் களாடவும்

நிலத்தினுறு மண் ணோர்கள் பாடவும்

வலத்தின் முடி வில்லாத காலமும்

நரர்க்கு மாதிரு விரக்கம் நீடிய

நாதனமைக் கைப் பிடித் தெப்

போதும் நடத்தித் திடத்தி

நண்பாக வன் பாவியின் பேரிலன் பான

சம்பூரண கெம்பீர சந்தோட முண்டாக

நடுவிட்டினி யுலக முடிவிற் கொடியவர்கள்

கெட வைத் தடியவர் களுடனித்திய மகிழும்

நறுமையனந்த பொறுமை மிகுந்த

பரனொரு மைந்தன்றி ருவடி விந்தம்

நாட்டமாய்த் தொழும் வேதாயகன்

பாட்டிலே பிரிய நேச தாயகன்

நான் குலகத்தின் கண்டம்

ஓங்கு பரத்தினண்டம்

நடமாடிய சேனைகள் யாவதும்

நெடிதான நீடூழியும் வாழ்கவும்

நமது நாதனா ராடுகளுக் காய்த்

தமது சீவன் விடப் பாதகருக்காய்.

- கொலை

(1832-வரு)

-----------------------------------

 

163

 

வெண்பா

நிந்தைப்படுத்த நெடுங் குருசி லேற்ற

முந்த வடித் தே முண் முடி சூட்ட-அவந்தந்தோ

ஓங்கல் பிலாத்து வினுத்தமி கண்டனளே

தூங்கும் பொழுது சொற்பனம்.

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தூங்கும் போது சொற்பனங் கண்டனளே இராசர சாள்

தூங்கும் போது சொற்பனங் கண்டனளே.

 

அனுபல்லவி

ஓங்கல் பிலாத்து பூங் கொடி மாது

ஒளிர் சப் பிர மஞ்சத்தினில் இராசே

- தூங்

 

சரணங்கள்

1.துங்க விசறாவேற் சங்கையதி யதியைத்

துயர மிக வருத்தவும்

வங்கையுடள் யூதர் பங்க முறக் கட்டி

மனனுக் கொப்புக் கொடுக்கவும் இராசே

- தூங்

 

2. கற்றூ ணொடு சேர்த்துப் பற்றிச் சேவகரார்த்து

கசை கொண்டுற வடிக்கவும்

முற்றும் பகை தீர்த்துக் கொற்றவனைப் பார்த்து

முண் முடி சிரசிற் சூட்டவும் இராசே.

- தூங்

 

3. பரபா வோடிறுத்திச் சரியாக நிறுத்திப்

பரிகாசங்கள் பண்ணவும்

அரசாக ஏற்றி விரசாகப் போற்றி

ஆகடியங்கள் பண்ணவும் - இராசே

- தூங்

 

4. செங்கோற் கொப்பாய் மூங்கிற் கோலைக் கொடுத்து

திரு முகத்திலு மியவும்

துங்கச் சகலாத்து அங்கியையும் போர்த்து

சுவாமிக் கெழிற் சமையவும் இராசே.

- தூங்

 

5. மன்னனது கண்டு நன்னீரது கொண்டு

மலைத்துக் கரம் விளைக்கவும்

பின்னும் வசை சாற்றி வன்னச் சட்டை மாற்றி

பெருங் கொலைக் கொப்பளிக்கவும் இராசே.

- தூங்

 

6. சொந்தவஸ்திரஞ் சூட்டிக் கொந்தளித்துக் கூட்டித்

தோளிற் சிலுவை யேற்றவும்

பந்த முறப் படுத்தி நிந்தையுற நடத்திப்

பாதகர் பழி தூற்றவும் இராசே.

- தூங்

 

7. கோதுறச் சீமோனைப் பாதையிற் பிடித்துக்

குருசைச் சுமத்தி வைக்கவும்

காதகதர்கள் கெம்ப மாதர்கள் புலம்ப

கல்வாரி மலைபுக்கவும் இராசே.

- தூங்

 

8. கள்ளர் கணடுவில் வள்ளலைக் குருசில்

கடினத்துடனறையவும்

உள்ளுறு விசன மோரேழு வசனம்

உரைத் துயிர் போய் மறையவும் இராசே.

- தூங்

 

9. காதலனே யுமக்கும் நீதி பரனுக்குங்

கவை கருமங்க ளொணாது

ஏ தெனிற் றிடுக் கிட்டேன் போதத் துயர் பட்டே

னெனச் சொன்னது னின் மாது இராசே.

- தூங்

 

-----------------------------------

 

164

 

(இராகம்: பைரவி)

(ரூபக தாளம்)

 

பல்லவி

ஆதி பாம்பு அணுகியே உம்மை

அணுகியே உம்மை கடித்த தையோ

 

அனுபல்லவி

பாதகி எனைக் காக்க வந்த

பர்த்தா உன் பாதங் கொத்தி வருத்த

 

சரணங்கள்

1.ஐயோ என தாசைக் கியந்த

அருமை நாயகன்கு ருதியே சிந்த

மெய்யாகவே பரர்த்து நானிந்த

மேதினியிலுய் வேனோ ஆ இந்தோ

- ஆதி

 

2. ஏதெனின் பூங்காவிலே சென்று

ஏவையை விழச் செய்ததே அன்று

ஏதோ வினை செய்யலாம் என்று

எண்ணியே உம்மைக் கடித்த தன்று.

- ஆதி

 

3. வேதனை மிகவே பாடடைந்து

மேனி எங்கனும் நொந்து சடைந்து

வாதைப்பட மனமே உடைந்து

மரு கிப்புலம்பு கின்றேன் மடிந்து.

- ஆதி

 

4. கூளிப் பாம்பே இஸ்திரி வித்து

குதிகாலை நீ கொத்திக் கடித்து

மாளவே வதைப்பாய் என்றுரைத்து

வைத்த வார்த்தை உண்மையாய்ப் பாவித்து

- ஆதி

 

5. என்ன செய்குவேன் ஏசுபாதமே

இப்பாடுற்றது தானே போதுமே

மன்னவன் மரிக்க இப்போதுமே

வாழ்ந்து நானிருந்தால் நீதமே.

- ஆதி

 

6. பாவி நான் செய்பாவம் உம்மை

பற்றிப் பாம்பு தீண்டிற்றே தம்மை

தேவனுயிர்ப் பித்திங்கே நம்மை

திரும்பச் சுபமாய் வாழ்வித்தல் செம்மை.

- ஆதி

 

-----------------------------------

 

165

 

(இராகம்: சங்கராபரணம்)

(ஏகதாளம்)

 

பல்லவி

என் பிரிய நாயகனை இயேசு நசராதிபனை

அன்பு மிகு பூரணனை அரியர் கொல யோசனை

 

சரணங்கள்

1.முன்பு செய்த யூதாவினை

முத்தியிடச் செய்தையனை

துன்புறப் பிடித்தேபினை

துட்டர் சென்றார் காய்பாமனை

- என்

 

2. கண்ணதைக் கண்டாலழாதோ

காதிற் கடுஞ் சொல் விழாதோ

எண்ண மனைத்தும் போகாதோ

இதைய முடைந் திடாதோ

- என்

 

3. ஞாயம் விசாரிக்கு முன்னே

நாதனைச் சினந்து கொன்னே

திய னறைந்தான பின்னே

சிந்தனை யுறாத தென்னே

- என்

 

4. மூப்பர் வேத பாரகரும்

முக்கிய சங்கத்தார் பலரும்

காய்புறு சேட்டாரியரும்

கன் றுதல் கொண்டார் எவரும்

- என்

 

5. சேவகரும் சேர்ந்து கூடி

சேனை வித வசைகள் பாடி

கோவை கொல்ல வகைகள் தேடி

குற்றம் சாட்டினார்கள் சாடி

-என்

 

6. கேள்வி பல கேட்டிடித்து

கிறிஸ்துவின் கன்னத் தடித்து

நாள் விடியும் வரை நடித்து

நகை செய்தனர் துடித்து

- என்

 

7. குட்டி இரா முழுதும் வைது

கோரணிகள் பலதும் செய்து

திட்டி வெகு வினைய மெய்து

சீரினர் நிந்தனை களுய்து

- என்

 

8. தேவ சுதன் எனப் பரனார்

செப்பு மொழி கேட்ட வொன்னார்

தேவ தூஷணஞ் செப்பினார்

தேறு மெனவே சாற்றினார்

- என்

 

9. பாவிகள் பரன் சுதனை

பழி சுமத்தி மன்னனை

மேவி அதிகாரமனை

விரைந்தாரான் மாவே நினை.

- என்

 

-----------------------------------

 

166

 

(இராகம்: புன்னாகவராளி)

(சாப்பு தாளம்)

 

1.ஆதம் வினை தீரப்புது

ஆதம் என வந்துதித்த

ஆதவா திவ்ய மாதவா

 

2. ஆத்தும சரீர வாதை

சாற்றுதற் கதீத மேதை

அறைகுவேன் பாவச் சிறை புகேன்

 

3. வாரடியோ முண் முடியோ

தீரவே சகித்தனையோ

மனுவேலா எனக்கனு கூலா

 

4. நீதிமான் என்றே உரைத்து

நீதி தப்பியே பிலாத்து

நீக்கினான் குருசில் போக்கினான்

 

5. பாடுறக் குறுசிலுனைப்

பாதகரறைந்தும் பினை

பாசமாய் மன்னிப்பே சொனாய்

 

6. வலது கள்ளன் கூவு செபம்

நல தெனப் பரம பதம்

வாழ்த்தினை உரை சாற்றினை

 

7. அப்பனே உன் கையிலாவி

செப்பி தந்தேன் என்று கூவி

என் அத்தனே நீ மரித்தனை

 

8. உன்னதன் மரித்திருக்க

என்னவிதம் நானிருக்க

உரை ஐயா தவிது துரை மெயா

 

9. மட்டிலாப் பவங்கள் மிஞ்சி

துட்ட வஞ்சன் நெஞ்சனஞ்சி

வாடினேன் உனை நாடினேன்

 

10. உன்னை அன்றி ஆதரவு

பின்னை யுண்டோ ஆதரவு

ஒழி நலா சீவவழி அலா

 

11. தங்கு சிலுவைப் பிரதாபா

சங்கை இங்கித சொல் தீபா

சரணமே அதிதரணமே

 

12. நித்திய சீவாதிபதி

சத்தியத் தவத் தோர்மதி

நேசனே சருவேசனே

 

13. வந்தனம் அனந்த னந்தம்

சந்ததம் புகழ் பிரபந்தம்

வரிசையாய்ச் சொல் அருள் செய்வாய்

 

14. நித்தம் வைத்துக் காதலையா

பத்தன் எலியா சொலையா

நீளுமே எந்நாளுமே.

 

-----------------------------------

Table of contents

previous page start next page