ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

பரிசுத்தாவியின் பண்டிகை

 

193

 

வெண்பா

இருதயத்தைச் சுத்திகரித் தேதமெல்லாம் நீக்கி

மறுபிறப்பால் முற்றும் வசமாக்கிக்-கிருபை செய்யும்

அட்சயத்திரியேக அருபிப்பராபரனே

பட்சத்தாப மாகினேன்.

 

(இராகம்: பைரவி)

(ஏக தாளம்)

 

பல்லவி

பரனேயுன் மீது பட்சத்தாப மாகினேன்

தாபமாகினேன் பட்சத்தாபமாகினேன்

 

சரணங்கள்

1.அரூபிப்பிரானே வாரும் அசரீரியே

அசரீரியே வாரும் அசரீரியே

- பரனே

 

2. மனதிரங்கித்தற்காரும் வல்லபிதாவே

வல்ல பிதாவே வாரும் வல்லபிதாவே

- பரனே

 

3. பாவிக் கிரங்கிரங்கும் பரம தேவனே

பரம தேவனேயிரங்கும் பரமதேவனே

- பரனே

 

4. பவித்திரஞ் செய்தாளுஞ் சுவாமி பரிசுத்தாவியே

பரிசுத்தாவியே சுவாமி பரித்தாவியே

- பரனே

 

5. திரு வுளமேயுருகுந் தேற்றரவாளனே

தேற்றரவாளனே யுருகுந் தேற்றரவாளனே

- பரனே

 

6. அனுக்கிரகஞ் செய்யுமுமக் கடைக் கலமையா

அடைக்கலமை யாவுமக் கடைக் கலமையா

- பரனே

 

7. கருணாகடாட்சம் வைத்தென் கவலைதீரையா

கவலை தீரையா என் கவலை தீரையா

- பரனே

 

8. வேதநாயகன் பாட்டில் விசுவாசிக்கிறேன்

விசுவாசிக்கிறேன் பாட்டில் விசுவாசிக்கிறேன்

- பரனே

(1834-வரு)

-----------------------------------

 

194

 

வெண்பா

அக்கினியினா வாயருந்தவர் மேல் வந்திருந்த

முக்கிய திரித்துவத்தின் முற்பொருளே-மிக்க

அருப சொரூபியே யாண்ட பரிசுத்

தரூபியே தோத்திரமையா.

 

(இராகம்: சேனாவதி)

(ரூபகம்)

 

பல்லவி

அரூபியே அருப சொரூபியே யெமை

யாண்ட பரிசுத் தருபியே

 

அனுபல்லவி

திருவிணாடுறை நிதான கருணையாதிபதி மோன

சுரநராடொழுகும் வான ஒரு பராபரமெய் ஞான

- அரூ

 

சரணங்கள்

1.ஆதி காரண அரூபியே அசரீரி சத்திய

நீதியாரண சொரூபியே

வேதவாசக சமுத்திர ஓதும் வாய்மைகள் சுமுத்திர

தீ திலாதுயர் விசித்திர சாதியாருட பவித்திர

- அரூ

 

2. சீருலாவிய தெய்வீகமே திரிமுதலொரு பொருள்

ஏருலாவிய சினேகமே

பாருளோர் பணிந்து போற்றும் ஆரியர் அடியர் சாற்றும்

நேரமே புகழை யேற்றும்

வீரமாய் மனதையாற்றும்

- அரூ

 

3. பத்தர் பாதகமடாமலே பசாசுல குடல்

சத்துரு சோதனை படாமலே

அத்தனார் தேவகோபம் நித்திய வேதனைகள் சாப

முற்றுமாறிடத்தயாபம் வைத்து நீடும் பிரதாப

- அரூ

 

4. உன்னதப் பரிசுத்தாவியே ஒரு வேதநாயகன்

சொன்ன பாவினப் பிரதாபியே

நின்னையே தெரியக் காட்டும் அன்னை தீதனைத்துமோட்டு

முன்னமே பதியினாட்டும் இன்னமே கீரீடஞ் சூட்டும்

- அரூ

(1838-வரு)

-----------------------------------

 

195

 

வெண்பா

பெந்தே கோஸ்தாவின் பெருநாளிற் சீடர்சிரத்

தந்தா தியக்கினி ரூபாகினான் - சந்தோடம்

ஞானந்தரும் பரிசுத்தாவி நன்னேசம் வைத்தே

யானந்த சீர் விழிபாராய்.

 

(இராகம்: ஆனந்தபைரவி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

நேசம் வைத்தானந்த

சீர்விழி பாராயோ தேவதிரித்துவ

நித்ய பரிசுத்தாவி கதி

உற்ற நன்மைப் பிரதாபி

 

அனுபல்லவி

மாசதற்ற பிரகாச முச்சுடர்க்கிரு

பாசமுத்திர சறுவீச தற்பரக்

கிறிஸ்து நித்திய வேந்தருள்

இஸ்பிரீத்துச் சாந்துவே-நேச.

 

சரணங்கள்

1.அதத்தினிடர் வினைக் கதித்த உலகிருள்

அறுத்த ஞான ஒளியே பல

விதத்தின் நரரிருதயத்தை முழுவதும்

விளக்கும் பரம வெளியே மகிழ்வுடன்

உதித்த பரம ஞானி

ஒரு நிதானி அருள் செய்மானி

இதத்தின் நற்குண உச்சிதத்தி லெமைப் புரக்கும்

இஸ்பிரித்தே விஸ்தரிப்புப்

பொஸ்தக சமஸ்த தேவே

- நேச

 

2. உரத்த தவ மிகும் விரத்தரற முறும்

உளத்திலுயர்ந்த வாழ்வே-கன

திரத்தின் வசன மதுரத்திலுலவிய

செபத்தின் மகிழ்ந்த கோவே திரு

வரத்தின் கருணைப் பனியே

சீவனின் கனியே அமரர் தொனியே

பரத்திலிருந்து சீடர் சிரத்தில் எழுந்து வந்த

பாக்கியமே மோக்கிக்ஷ

சலாக்கிய மனோக்கியமே

-நேச

 

3. விடத்தர வினுட படத்தலை மிதித்த

வேதன் மகிழ் புறாவே கன

திடப் பரம பிதா விடத்திலு மிருந்து

செகத்தில் வளருந் தேவே ஞான

தடத்தின் பரம சொரூபி

திவ்விய அரூபி அற்புதரூபி

அடத்தனக் குணத்தை உடைத்துச் சுகப்படுத்தும்

அம்பரமே உம்பர

நிரம்பர பரம் பரமே

- நேச

 

4. கனத்த பெந்தேக் கோஸ்தாவின்

தினத்திற் படர்ந்து வீசும்

கதிர்க் கொள் அக்கினி மயமே அக்கியான

சனத்திற் கொர்நேலியின் இனத்தர்களுக்கும் புறச்

சாதிகட்கும் தரும் செயமே அதிகவிற்

பனத்தின் கிருபா நதியே

தரும நிதியே பரம கதியே

மனத் தியான சாதனத்தன் வேதநாயகன்

மட்டடங்கா மற்சொலும் பா

உச்சிதஞ் சேரச் சுயம்பே

- நேச

(1819-வரு)

-----------------------------------

 

196

 

வெண்பா

சமஸ்த நன்மைச் சொரூபி சாந்திஸ்பிரித்து

நமஸ்தேக வஸ்துவோம் நமா-நமஸ்து

திரு வானுலாவு திரித்துவ சுபஸ்த

அரூபி தமியோர்க் கருள்.

 

(இராகம்: சங்கராபரணம்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

தமி யோர்க்கருள் செய்யும ரூபி

சமஸ்த நன்மைச் சொரூபி அரூபி

 

அனுபல்லவி

அமலா அருவுருதற் பரம திரித்துவ மகிமைத்திரு முதலே

அம்பரா அனாதி மெய்ச்சிதம்பரா கருணாம்பர மேதுதி

 

சரணங்கள்

1.காரணத்திரு அருளே-காட்சிப்பரம் பொருளே

ஆரண சுந்தரமே நிரந்தரமே சுதந்தரமே பதம் துணையே

பூரண உத்தம ஆறுதலேயுதாரண நித்திய தேறுதலே புகழும்

புது மனதில் கன பணிவில் பொறை மிகு சற்குண முறவே

புனிதா கிருபைப்பத் ராசனுதா உனதா உனதருள் புரி

- தமி

 

2. ஆகமகலை க்யானி அதிசயத்தொரு ஞானி

ஏகமறை நிதானி அவதானி வெகுமானி அக்கினி மேனி

வேகத் தெமை மகிழ்ந் தாற்றுவையே என்

தேகப்-பவவினை மாற்றுவையே விடிவே

விடநரகக் கொடியபவக் கடணுலையத் திடனருளே

மேன்மைப் பிரதாப மகத்துவ பான்மைக் கிருபாநதியே துதி

- தமி

 

3. நித்திய திரித்துவவே நெசத்ததி நவமே

துத்திய மகத்துவமே வழுத்துவமே ஒருத்துவமே பரத்துவமே

சத்திய உத்தமதாபரமே கனவெற்றி யளித்த பராபரமே தருணம்

சதிவினை சற்பினை களறக் கதிவழியில் புக அருளே

சதிராய் வேதநாயகன் அதிராய்க்கவி சொல் கருணாம்பரம்

- தமி

(1836-வரு)

-----------------------------------

 

197

 

வெண்பா

முச்சுடரே யற்சயமே முத்திரை யிட்டச்சார

நிச்சயமுந்தந் தெமை நேசித்ததே-மெச்சிச்

செபித்திறைஞ்சு கின்றோஞ் சிறியோருளத்தைப்

பவித்திரஞ் செய்யும் பரிசுத்தாவி.

 

(இராகம்: காம்போதி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பரிசுத்த ரூபியான சருவேசா எமைப்

பவித்திரஞ் செய்தருள் இருதயவாசா

 

அனுபல்லவி

வரிசித்தருள் பொழியும் கரிசித்த நன்மைத்தேவே

மாதவத்தோர்க் கிஷ்டப் பிரசாதத்தொரே யோவாவே

மைந்தரகந்தனில் வந்தவர் சிந்தை

அடர்ந்த வகந்தை அழிந்தற வுந்திரு

மறையற நெறிமுறை உறுதியிலறியவும்

மறுமை நறுமை தரும் மறுசெனனமுறவு

அனந்த னூடுறை முற்பவ நாசனே

அனந்த கோடி சூரியப் பிரகாசனே

- பரி

 

சரணம்

துட்டப் பசாசினுட இட்டப்படி நடந்த

துர்குணம் எம்மைவிட்டு நீங்கவும்

துன்மைக்குச் சார்ந்த மனம்

நன்மைக்க்குச் சேர்ந்து நின்று

தொடர்ந்து திவ்ய நற்கருணை வாங்கவும்

கெட்டபிரவிச் சுபாபம் பட்டழியும் படிக்குக்

கிருபைக் கிறிஸ்துவுக்குள் ஒங்கவும்

கேண்மை நிலைக்குமென்றும்

ஆண்மை யுலைக்கு மென்றும்

கிரிகித் தெளியவரைத் தாங்கவும்

சிட்டருரைத்த வேதக் கட்டின்படி சென்றேகத்

தீவினை என்னப்பட்ட யாவினுக்கும் பின்னாக

நட்டம் வருத்தும் பாவக்கட்டின் இச்சைக்குச்சாக

ஞானத்திடனடைந்து வானத்திலென்றும் வாழ்க

 

நன்றி யறிந்துநின் வென்றி தருந்தயை

என்று நினைந்தடி சென்று பணிந்திட

ஞாலத்தினிலதி காலத் தளவிலுன்

நூலைத்தின மெனின் வேலைக் கெழுமுனம்

நயத்தினுத்தம பயத்தின் மெய்த்திரு

தயத்தின் வைத்ததி சயத்தினற்குண

நவநரன் எனநீடக் கவலையின்

நவமதி இருளோட அருள்புரி

நாதா திரித்துவத்ததீதா மகத்துவப்பிர

சாதா சத்தியமறை வேதா உமக்குத்துதி

நறுநச்சு விடக்கனி இச்சை மிகுத்தவர்

அச்சமறத்தின லட்சை தவிர்த்திட

இரட்சகரைத்தரும் உச்சித வஸ்தெனும்

முச்சுடரிற் பிரமச் சொரூபச் சுதன்

நலிவுற்றரத்துக் கலகக் குணத்தின்

அலகைக் குழுக்கள் வலதைக் கெடுத்து

நடுவிட வருபவருட கிருபையினரர்

இடவரும் அதிசய கடவுளொருமை முதல்

நலமிலங்கதிக பெலன்க ளொடுகடி

பல விலங்கமது கலங்க அமரிடு

 

உனத்ததில் வருமொலி யுடனெருசலையுறு

மிதத்தினடியவர் ஒருசதம் இருபதும்

நகைகளான வீணாம்புகலுளறிய

பகைவர்காண மேலோங்கிய சிரமதின்

நடத்தி யன்றருள் நீடுபராபரன்

இடத்தி னின்றெமை மேவுமனோகர

நரருக்குரிய வேதநாயகன் பாவே

அரூப சொரூப ஓரானாதியன் பாவே

- பரி

(1837-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page