ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

பரிசுத்த திரித்துவத்தின் பண்டிகை

 

198

 

வெண்பா

முச்சுடரே முப்பொருளே முத்தத்துவப்பரமே

யுச்சவேகத்துவமே யோலமே-யிரட்சகா

ஒதுங்கிறிஸ்துவே ஒன்றான வஸ்துவே

ஆதி திரித்துவமேயாள்.

 

(இராகம்: தோடி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஆதி திரித்துவமே யெனை

யாள் மகத்துவமே

 

அனுபல்லவி

சோதி யொருத்துவப் பிதாச் சுதனுமாவியு மாகத்

தோன்றும் நித்தியத்தின் மூன்று பொருளொன்றான

- ஆதி

 

சரணங்கள்

1.சத்தியப் பரமதேவா அளவில்லாத

சகல நன்மைச் சொரூபா

முத்தி தருமொரே யோவா முடிவிலாத

மோட்சராச்சியப் பிரதாபா

பத்தர் பணியும் பரிசுத்த ஞானப்பர்த்தாவே

பக்கிஷமே நிறைந்த முக்கியகிருபைக்கத்தாவே

- ஆதி

 

2. திஷ்டிதிதி சங்காரா உலக ரட்சை

செய்தருளுஞ் சிங்காரா

இஷ்ட மிகுமுதாரா வானதிகாரா

ஏழையடியர்க் காதாரா

மட்டில்லா துயர்ந்த மகிமைத்திருக் குமாரா

மாசதற்ற பரிசுத்த நரவதாரா

- ஆதி

 

3. பாவிக்கிரங்குந் தஞ்சமே பரதபிக்கப்

படவைக்குது பிரவஞ்சமே

சாவிற்கொடிய வஞ்சமே பிசாசு செய்யும்

தந்திரத்தாலென் னெஞ்சமே

மாவிதனபடாமற் காருமொஇரட்சகா

மனதுகந் தருட்கண் பாரும் சர்வ தட்சகா

- ஆதி

 

4. வல்லமைக் கிருபாசனா துயரடைந்த

மைந்தர் பவ விமோசனா

துல்லிப ஞானப்போசனா நித்தியகாலந்

தோத்திரந் தோத்திர மோசனா

வெல்லைப்பதியில் வந்த மேசியாமனாவே

வேதநாயகன் தன் பாட்டைச் சொலுமெனாவே

- ஆதி

(1831-வரு)

-----------------------------------

 

199

 

வெண்பா

அனாதியாய்த் தானாயரூபியாய் நின்ற

மானாயுதா தாதா மகத்துவா-எனாவா

குறியாறு நாலெண் குணத்தினே யோவா

திரியேகா தேவதி செயா.

 

(இராகம்: சஹானா)

(சாப்பு தாளம்)

 

பல்லவி

திரியேகா திரியேகா

திரிலோக ரட்சகா

 

அனுபல்லவி

சருவசீவாற்றுமா சாற்று பரப்பிரமா

- திரியே

 

சரணங்கள்

1.சங்கையின் மெய்க்கோமா

தற்பர வஸ்துவே சீமா

அங்கு மிங்கெங்குமாம்

அனாதி யோம் நமா

- திரியே

 

2. ஆதியா அமலா

அனந்த கிருபையாளா

அந்த மிலாதவா

விந்தைத் துணைத் தாளா

- திரியே

 

3. அரூபச் சொரூபா

அல்பாவோ மேகா

அற்புத விவாகா

அருள் செயும் விவேகா

- திரியே

 

4. அம்பரா நீ மூவா

அல்லாவே யொருவா

எம்பரா மெய்த்தேவா

யே யோவாகாவா

- திரியே

 

5. தேசுறுங் கிருபைக் கண்பார்

திவ்விய சினேகத்தன் பா

மேசையா யேசையா

வேதநாயகன் பா

- திரியே

(1829-வரு)

-----------------------------------

 

200

 

வெண்பா

எங்கும் வியாபித்திருப்பாயே நாங்கள் படும்

பங்கந்திரு விழியாற் பாராயோ-சங்கையோ

காவாவுரிமைக் கடவுளே மெய்யான

தேவாரணத் திரித்துவம்

 

(இராகம்: சங்கராபரணம்)

(ரூபகம்)

 

பல்லவி

ஆரணத் திரித்துவமே யெமை

யாண்டருள் மகத்துவமே

 

அனுபல்லவி

பூரணத் தேவ பிதாச்சுதனாவியே

பொன்னுலகத் தெழு முன்னதமான

போதக் கிருபையா பத்ததி

நீதிச் சுடரே நித்திய

- ஆரண

 

சரணங்கள்

1.திஷ்டிதி சங்காரக்கர்த்தர் யெமைத்

தேடி மணஞ் செய்த பர்த்தா

இஷ்டப் பிரசாத வானத்தா

இயேசுக் கிறிஸ்தாதித்தா

அஷ்டதிக் கெங்கணும் நெஷ்டூரப்பட்டோம்

அத்தனே பரிசுத்தனே படும்

ஆபத்துகள் சோபத்துயர் நீவிப்பரதாபித்தருள்

- ஆரண

 

2. பெருக்கத் துன்பனுபவித்தோங் கொடும்

நெருக்கத்திற் பரதபித் தோம்

உருக்கத்திற் கரங்குவித்தோமுனின்

திருச் செபங்களைச் செபித்தோம்

இரக்கமில்லையே நரத்தயாபரா

எந்தையேயுனின் மந்தையே

யேதித்தனை சோதிப்பது பாதத்தருள் போதக்கொடு

- ஆரண

 

3. அன்றன் றுள்ளப் பத்தைத்தாரு மெங்கள்

ஆபத்தனைத் தையுந்தீரும்

இன்று மென்றென் றுந்தற்காரும் திரு

இரக்கத்தான் முகம் பாரும்

நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்

நம்பரா கருணாம் பரா

ஞானத்தனுமானத் தொளிர் மேன்மைத் திவிய பானத்தனே

- ஆரண

 

4. மூவரொன்றான யேயோவா உயர்

முக்கிய கிருபையின் தேவா

மேவியடியரைக் காவா நெல்லை

வேதநாயகன் பாவா

பாவிகள்நாங்க ளேவையின் மக்களே

பக்கிஷமே பரம பொக்கிஷமே

பாடும்புகழ் நாடும் பரிவோடுந்தயை நீடும்பரா

- ஆரண

(1835-வரு)

-----------------------------------

 

201

 

வெண்பா

சாதிகளெல்லாம் பிழைக்க சத்திய வேதஞ்செழிக்க

காதகருங் கூடக் கடந்தேறப்-பாதருளே

மாதொருத்தி பாதகத்தால் மாநிலத்திலேயுதித்த

ஆதியத்தனான கத்தனே.

 

(இராகம்: இங்கிலீஷ்)

(ஏகதாளம்)

 

பல்லவி

ஆதியத்தனான சத்திய வேதகத்தனே

ஆறுலட்சணப் பிரதாபதீத நித்தனே

 

அனுபல்லவி

மாதொருத்தியாலு தித்த தேவ சித்தனே

மாசகற்றியே திடத்தியாள் பரிசுத்தனே

- ஆதி

 

சரணங்கள்

1.மந்திர செபங்களின் பரா பரத்துவமே

மங்கள சங்கீர்த்தனத் தொரே திரித்துவமே

சுந்தரக் கிறிஸ்துவுக்குளேக தத்துவமே

சுவாமி தயாபரபிதா மகத்துவமே

- ஆதி

 

2. ஞானமற்ற ஈன வக்கியான மக்கவே

நாலு திக்குமே குருக்களே பெருக்கவே

வானமுற்ற மேன்மை மக்களோ டிருக்கவே

மாச கற்றியாளுருக்க மாயிரக்கமே

- ஆதி

 

3. சாதிகளெல்லா மகிழ்ந் தொன்றாய்ப் பிழைக்கவே

சத்திய கிறிஸ்தவரெலாந் தழைக்கவே

வேதநாயகன் கவிக் கண்ப்பார் செழிக்கவே

மேன்மைசெய் பிசாசையடி யோடழிக்கவே- ஆதி

(1853-வரு)

-----------------------------------

 

202

 

வெண்பா

அமலா அளவில்லா அல்பாவோமேகா

விமலா கருணை மனுவேலா-திமலா

மறைசத்துவ சீவா மாசற்ற யோவா

திரித்துவ வொரு தேவா

 

(இராகம்: இங்கிலீஷ்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

திரிதத்துவனே யொரு தேவனே

செய சத்துவனே வருசீவனே

திடநற் கிறிஸ்தாதி குமாரனே பர

தேவ சே யோவாவே

 

அனுபல்லவி

மறையானே யிறையானே

வாய்ந்த சாந்தகு ணேந்திரனே

வாகனே யூகனே

மனுவோர்க் கருடர வந்தவனே

வலிமை யினாசனனே மகத்துவனே

பலபவ மோசனனே பரத்துவனே

வடிவங் கொண்டெனையாள

வந்தகு தாமேசியாவே

- திரி

 

சரணங்கள்

1.அறிவினிலுயராதி பராபரா

அதிசய அபிதான குணாகரா

அளவிட அரிதான நிராதாரா சுர

ஆதன வானகரா

அம்பரா எம்பரா

அந்தத் தந்தச் சுந்தரா

ஆதரா சோதரா அசராசர தாபரசிரா

அருளாகர பாரவ கோசரா

தெருளீகர மாபரமே சுரா

அகோர சத்துருசங்காரா

கிருபாகர மித்துரு சிங்காரா

- திரி

 

2. பரவெளியுரு வான சரீரியே

பவவிருளற வானிறை மாரியே

பல வரமருள் ஞான வுதாரியே யுயர்

பாவலர் கேசரியே

பரிவாயே தெரிவாயே

பக்கிஷ விந்தைத்தயை புரியே

பாரியே தாரியே

பயமே தடுத் தெனையாதரியே

பரலோக நிதானதி காரியே

நரலோக கிருபாநதி வாரியே

பரம்பர மந்திரி யனுசாரி கரி

பரம தந்திரி யாசாரி

- திரி

 

3. கருணையின் வதனா வொருவாமனா

கடவுளர் சுதனா திருநாமனா

கதிதருசாதனா வருவாமனா சிவ

காரண வான மனா

கனமானா தனவானா

கர்த்தத்துவ ராசமனா

காயனா நாயனா

கலனா கவினா கலைக்கியானா

கலிமோசன நேசவிலோசனா

வலியாசன வாசவு லாசனா

காதலனே யென தெசமானிகவி

வேதநாயகன் வெகுமானி

- திரி

(1820-வரு)

-----------------------------------

 

203

 

வெண்பா

சந்தேக மென்ன தயங்காதிருமனமே

வந்தானிருந்தான் வருவானே-அந்தோ

திரிலோல தேவாதிபதி யொரே யோவா

ஒரு தேவ னென்றெ யுரை.

 

பல்லவி

ஒரு தேவாதிப திரிலோகா திப

ஒரு யோவாவென நினைமனமே

 

அனுபல்லவி

திரு நாமவிசேட தேவ திரியேகமே

திருவுளமாக அருள் தரவே

- ஒரு

 

சரணங்கள்

1.அருவுரு நித்தியானந்த ஆகாயத் தெழுந்த

பரமனார் தந்த வொரே ஞானாதிக்க

மரிகருவாக வந்த நரபக்கிஷாதிப

சரண் மலர் தானண்டியருள் பெறவே

- ஒரு

 

2. தேவதி சயசத்திய வேத மெஞ்ஞான துத்திய

சீவனாதி கருத்தர் திருவாக்கே

ஏவையிஸ்திரி வித்தான யேசுக்கிறிஸ்துனக்குண்

டேங்காதே யேங்காதே யிருதினமே

- ஒரு

 

3. ஆதியனாதி வஸ்து ஆவைகன்னி யாஸ்திரிவித்து

பாவி நீ கரிசித்துச் சந்தோஷித்து

வேதநாயகன் சொன்ன ஞானப்பதங்கள் பாடி

மேசியாவைக் கூடியிரு தினமே

- ஒரு

(1840-வரு)

-----------------------------------

 

204

 

வெண்பா

ஆரறிவாருன் பெருமை யாரறிவாருன் கிருபை

யாரறிவாருன் செயலினாழமே-சீரறியாத்

தீம்பரறியாரே சிந்தை தனிலெண்ணாரே

ஓம் பரா யோவா வுனை.

 

(இராகம்: பூரிகல்யாணி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஓம் பரா யோவா திரியேக தேவா

 

சரணங்கள்

1.தேம்பா அன்பா உம்பர் சுயம்பா

அதீத வினோதா திருமறை முடிவா

கத்தவிய மகா சத்திய வாசக

நித்திய பராபர அருளானந்தா

- ஓம்

 

2. ஆதியந்தா தற்பர பரமா

தயாப சொரூபா அதிபதி யொருவா

வஸ்தொன்றான மகத்துவ பராபர

ஆண்ட சதாசிவ கருணா சிந்தோ

- ஓம்

 

3. அருணோதய வொளி கருணாம்பர வெளி

ஆனந்தப் பர அட்சய சொரூபா

அனாதி ரட்சகா அனந்த ஞானா

பத்து லட்சணா பரம சீவனா

- ஓம்

 

4. சிங்கா சனபதி சங்கையி னொருவா

சீவ தயாநதி தேவ சொரூபா

மங்க ளாகரா மனுடவ தாரா

இங்கித நேயா எருசலை ராசா

- ஓம்

 

5. அகண்டா கண்டா நெல்லையன் பாவா

அனந்த நன்மையா அனந்த நாமா

திகந்த பூரண திவ்விய ரூபா

தேவதேவ மாதேவா அத்தா

- ஓம்

 

-----------------------------------

 

Table of contents

previous page start next page