ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

205

தேவ சுவாப மகிமையின் பாட்டுகள்

 

வெண்பா

ஓம் நமா ஓம் பரமா ஓம் ஓம் பரப்பிரமா

ஓந்திரியே கத்துவதொன்றாம் யோவா-ஓம் ஓம்

கனந்துதியுங் கீர்த்தனமும் ஓம் சதாகாலத்

தனந்தஞானச் சொரூபா

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

அனந்தஞான சொரூபா நமா ஓம்

அனந்தஞான சொரூபா

 

சரணங்கள்

1.கனங்கொள் மகிமையின் கர்த்தாவே

காத்திர நேத்திர பர்த்தாவே நரர்

காண்க வந்தாரே நமா ஓம் காண்க வந்தாரே

கருணாகரதேவா அனந்தஞான சொரூபா

- அன

 

2. துங்கவானச் சங்கையின் ராசா

துத்திய மகத்துவச் சருவேசா கிருபை

தோன்ற நின்றாரே நமா ஓம் தோன்ற நின்றாரே

சுயாதிப கர்த்தா அனந்தஞான சொரூபா

- அன

 

3. அந்தப் பரமானந்த குணாலா

ஆதத்தின் தீதற்ற மனு வேலா எமை

யாண்டு கொண்டாரே நமா ஓம் ஆண்டுகொண்டாரே

ஞானாதிக்கத் துரையே அனந்தஞான சொரூபா

- அன

 

4. ஆடுகளுக்குரிமைக் கோனே

ஆரண காரணப் பெருமானே நரர்க்

கன்பு கூர்ந்தானே நமா ஓம் அன்பு கூர்ந்தானே கிரு

பாசனத்தானே அனந்தஞான சொரூபா

- அன

 

5. பந்தத்துயரந் தீர்த்தாரே எங்கள்

பாபத்தைச் சாபத்தை யேர்த்தாரே சென்று

பார்க்கவந்தாரே நமா ஓம் பார்க்கவந்தாரே

பரமாதிக்கத்தானே அனந்தஞான சொரூபா

- அன

 

6. நெல்லை வேதநாயகன் பாட்டா

நித்திய கீர்த்தன கொண்டாட்டா அரு

ணீடிவந்தாரே நமா ஓம் நீடிவந்தாரே திரு

நேசகுமாரா அனந்தஞான சொரூபா

- அன

(1835-வரு)

-----------------------------------

 

206

 

வெண்பா

ஆதி ஓம் அல்பா ஒமேகா ஒரே யோவா

சோதியருப சொரூபி ஓம்-நீதி யோம்

ஆமனா ஓம் ஓசியன்னா ஓம் இரட்சியும் ஓம்

ஓம் நமா ஓமனாதி

 

பல்லவி

ஓம் நமாவே யனாதி ஓம் நமாவே

ஓம் நமா அல்பா ஒமேகா ஓரே யோவாவே

 

அனுபல்லவி

ஆமனா ஓம் ஓசியன்னா ஓம் அல்லேலுயாவே

 

சரணங்கள்

1.அந்தர சொற்கம் புவியுந்தந்த பரப்பிரமா புவி

மைந்தர் பாதகந் தவிர்க்க வந்த கிருபைச்சீமா

- ஓம்

 

2. தற்சுய சுயம்பிரகாச முப்பொருளசரீரி அருள்

அட்சய நிச்சய அற்புதப் பிரதானா சாரி

- ஓம்

 

3. அளவிலா நன்மைச் சொரூபானந்த சந்தோடா கன

வளமிகும் பரிசுத்த சத்தியவாசகச் சுவிசேடா

- ஓம்

 

4. ஆதியே யரூபியே யாண்ட பரமேசுரா மெய்த்

தாதையே சுயாதிப தயாபர சருவேசுரா

- ஓம்

 

5. மாறிலா வுன்னத மகத்துவத் திரியேகா ஓ

ராறு லட்சணப்பிரதாப ஆரணப்பிரவ டீகா

- ஓம்

 

6. சந்ததஞ் சந்ததஞ் சரண் தந்தருள் கிறிஸ்தையா நித்திய

வந்தனம் வந்தனம் பராபர வஸ்து மேசையா

- ஓம்

 

7. வேதநாயகன் சந்தப்பா விந்தைப்பாவே யேசு

மேசியா தந்தையர் நமக்குச் சொந்தப்பாவே

- ஓம்

(1831-வரு)

-----------------------------------

 

207

 

வெண்பா

அம்பர வேகாம்பர துலாம்பர பரம்பர சி

தம்பர தயாள கருணாம்பரமே-தம்பஞ்

சருவேசுரா ரட்சியுந் தம்பிரானே

கிருபாசனா ஓசனா.

 

பல்லவி

ஓசனா கிருபாசனா பவ

மோசனா ஞானப்போசனா

 

அனுபல்லவி

மாசனா பரமவாசனா

ஓச

 

சரணங்கள்

1.அம்பரா கருணாம்பரா

வானத்

தும்பரா மெய்ச் சிதம்பரா

ஓச

 

2. ஆரணா ஆதிகாரணா

பரி

பூரணா வேதவுதாரணா

ஓச

 

3. அத்தனே பரிசுத்தனே

சதா

நித்தனே கடாட்சித்தனே

ஓச

 

4. சீவனே யனுகூலனே

யேசு

பாலனே மனுவேலனே

ஓச

 

5. காத்திரா வேத சாஸ்திரா

இரு

நேத்திரா தவிது கோத்திரா

ஓச

 

6. வந்தனம் பதம் வந்தனம்

புகழ்

தந்தனம் பாது வந்தனம்

ஓச

 

7. வேதநாயக னோதுதா

யக

மேசியா கிருபையே செய்வாய்

ஓச

(1831-வரு)

-----------------------------------

 

208

 

வெண்பா

ஆதியந்த மில்லான் மாறாதான் சருவ வல்லோன்

ஏது மறிந்தோ னளவிலா ஞான-னோதுமிட

மெங்கு நிறைந்தோன் சத்தியன் தூயனீதியுளோ

னங்கிருபை யாளனமலன்.

 

(இராகம்: ரீதிகௌளே)

(ஆதி தாளம்)

 

பல்லவி

அமலா தயாபரா அருள் கூரையா குருபர

அமலா தயாபரா அருள் கூரையா.

 

சரணங்கள்

1.சமையமீரா றோராறு சாஸ்திரங்கள் வேதம் நான்கும்

அமையுந் தத்துவந் தொண்ணூற்றாறு மாறுங்கடந்த

 

2. அந்தமடி நடுவிலாத தற்பரனாதி

சுந்தரமிகு மதீத சோதிப்பிரகாச நீதி

அம.

 

3. ஞானத்திரவிய வேத நன்மைப் பரமபோத

வானத் தேவப்பிரசாத மகிமைக் களவில்லாத

அம.

 

4. காணப்படா அரூப கருணைச் சுயசொரூப

தோணப்படா வியாப சுகிர்தத் திருத் தயாப

அம.

 

5. சத்திய வசன நேயா சமஸ்த புண்ணிய சகாயா

கர்த்த தத்துவ உபாயா கருணை பொழியும் வாயா

அம.

 

6. எல்லையில்லா மெஞ்ஞான ஏகபராபர வஸ்தான

சொல்லரிதாம் நீதான துல்லிபத்தொன்றா மேலான

அம.

 

7. கருணாகரா உபகாரா தராதரா

பரமேசுரா கிருபாகரா சருவேசுரா

அம.

 

8. ஆதியொன்றான மூவா அற்புத வாசே யோவா

வேதநாயகன் பாவா மேலாந்திரித்துவ தேவா

அம.

(1811-வரு)

-----------------------------------

 

209

 

வெண்பா

ஏகாம்பரா வெனையாளும்பரா நம்பரா

வாகாம்பரத்தில் வரும்பரா-காகாகா

தம்பரா சிதம்பரா சயம்பனாதி யெம்பரா நீ

யம்பரா பரம்பரா பரா.

 

(இராகம்: அடாணா)

(ஆதி தாளம்)

 

பல்லவி

அம்பராபர அம்பராபர

அம்பரம் அல்லேலூயா.

 

சரணங்கள்

1.உம்பர் பரம்பு சுயம்பொரே காம்பர

சம்பரம இன்ப சிதம்பர தேவா

அம்.

 

2. தந்தை யனந்த சவுந்தர சுந்தர

மந்திர சிவாபர மண்டலயோவா

அம்.

 

3. ஒருகனிதின கனி வினைகெட உலகதில்

மரிதிரு மகனென வருமுதலவனே

அம்.

 

4. அறிவினிலுய ரதிசயமகிமையி னெறி

யறுகுண சறுவகிருபையின் மனுவேலா

அம்.

 

5. அருவுரு வொருதரும் பரம குருபர

திருநடு விடவரு திவிய பரவெளியே

அம்.

 

6. தற்பர சிற்பர சத்திய பரப்பிரம

அற்புத மெய்ப்பொருள் அட்சயதேவா

அம்.

 

7. ஆதியனாதி யரூப சொரூபச

ரீரி பராமரி யாதரி நீயே

அம்.

 

8. வேதநாயக னோதுகிருபாகர

மேசியா சர்வ சீவதயாபர

அம்.

(1832-வரு)

-----------------------------------

 

210

 

வெண்பா

மனவிருளை நீக்கி வலியபவம் போக்கி

அனவரதமும் புகழுண்டாக்கி-யெனை யாட்கொ

ளோதிக்கொடுத்த உரைதவறா தோங்கு சரு

வாதிக்கத் தேவகுமாரா.

 

(இராகம்: சஹானா)

(சாப்பு தாளம்)

 

பல்லவி

சருவாதிக்கத் தேவகுமாரா

தயைபுரி பரம நரவதாரா.

 

சரணங்கள்

1.கிருபையி னதிசய பரம சுகிர்த சித்திரக்

கிறிஸ்து பெருத்த மகத்துவத்தாரே

சரு

 

2. அரியதிரு வசனபரம அமுதசா

கரபரம்பர சிதம்பர தேவா

சரு

 

3. நரருயிரருள் பெற வருகருணாம்பர

பரமண்டலாதிப உம்பர்க டேவா

சரு

 

4. தவிது குமரனென வருகிறிஸ்தேந்திர

சமஸ்த நன்மைத் திரித்துவ கருத்தாவே

சரு

 

5. மனதிரு ளறவரு மொருதிருவடிவே

தினமெங்கள் பவங்களைப் பொறுப்பாயே

சரு

 

6. அனவரதமுஞ் சுவிசேட கவிராயன்

கனமங்கள முழங்கக் காவாவே.

சரு

 

-----------------------------------

 

211

 

வெண்பா

வல்லபம் ஞானம் பரிசுத்தம் நீதி பொறை

வெல்வைச் சருவ வியாபகத்தி-னல்ல

உருக்கப் பிதாவின் றேவாளுகை நன்றுண்மை

பெருக்கத் திருக்கருணையே.

 

(இராகம்: தோடி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பெருக்கத் திருக்கருணைப்

பிதாவத்தனே.

 

அனுபல்லவி

நெருக்கப்படு மெனையாள்

நித்திய கத்தனே.

பெரு

 

சரணங்கள்

1.வல்லப மென்னுயிர் காக்கும் வெகுமானம்

நல்லவழிசேர்க்கு துன்னுன்னத ஞானம்

பெரு

 

2. சுத்திகரிக்குதுன் றுய்ய பரிசுத்தம்

பத்திரப் படுத்துதெனை நீதிமிகுத்தம்

பெரு

 

3. சருவவியாபக மெனைச் சார்ந்திருக்குது

பொறுமை சினத்தைப் பொருந்தாதிருக்குது

பெரு

 

4. ஆளுகையெனைத் தெரிந்துன்னடி சேர்க்குது

மீளவுமுன்னன்மை செல்வமிக வாக்குது

பெரு

 

5. நேசத்தி னிரக்கமென் பாவத்தை நீக்குது

மாசற்ற வுன்னன்பெனை மகிழ்ச்சி யாக்குது

பெரு

 

6. உந்தனுண்மை மோட்ச வீட்டுக்குள் கூட்டுது

சந்தேகமில்லாமல் முடிதான் சூட்டுது

பெரு

 

7. தூதர்களின் பாட்டுனக்குச் சோபனப் பாட்டு

வேதநாயகன் பாட்ட தென்ன பாட்டு

பெரு

(1838-வரு)

-----------------------------------

 

212

 

வெண்பா

நானாரோ நீயாரோ ஞானிகடானாராரோ

ஏன் வாய்மதம் பேசியேய்க்கிறீர்-கோனாரோ

தானேதானாகச் சகலந் தன்னாலாகத்

தானேதா னின்றதனி

 

பல்லவி

தான்தானாக நிற்கச் சகலந் தன்னாலே நிற்கச்

சச்சிதானந்த வெளியினித்திய மகத்துவமாக

 

சரணங்கள்

1.நான்தா னென்றுரைக்க

நானுமில்லை நீயுமில்லை நாமமில்லை ரூபமில்லை

நச்சடங்க ளொன்றுமில்லை

தான்

 

2. ஏன்தான் தற்கமதம் வீண் சாத்திரப்பிரட்டல்

ஏட்டையுங் கிழித்தெறிந்து போட்டெரி வளர்த்துப் போட்டு

தான்

 

3. தானவன்றானதாகச் சருவ வியாபியாகத்

தற்சுய சொரூபமாக அர்ச்சயத் தரூபமாக

தான்

 

4. தானவனாக நிற்கத் தானே தானாகநிற்கத்

தன்னிலே தானாக நிற்கத் தனக்குந் தானாகநிற்க

தான்

 

5. வன்மையின் வளங்களோங்கித் துன்மையும் புன்மையுமின்றி

நன்மையுந் தயவுமிக்க உண்மையிலுண்மையுமாக

தான்

 

6. ஞானமு மளவில்லாத மானமு மொரேயொரு நி

தானமுமுடையதாக வீனமுங் குறையுமின்றி

தான்

 

7. அண்டமு மகண்ட பகிரண்டமுங் கடந்துபர

மண்டலங்களுங் கொளாதோர் கண்டசீர தாயெந்நாளும்

தான்

 

8. துத்திய குணங்களெட்டின் பத்திலட்சணங்களுள்ள

சத்திய பரிசுத்ததி னித்திய வஸ்துவதாக

தான்

 

9. பேதமில்லையே யைம்பூதமில்லையே யொரு

தீதுமில்லையே செகச்சூதுமில்லை வாதுமில்லை

தான்

 

10. ஊருமில்லையே சொல்லப் பேருமில்லையே யொப்

பாருமில்லையே யெதிர்த்தாருமில்லைப் போருமில்லை

தான்

 

11. அங்கமில்லையே யவசங்கமில்லையே துற்க

ளங்கமில்லையே சற்றும் பங்கமில்லை லிங்கமில்லை

தான்

 

12. அரியரன் றானுமல்ல அயனுமற்றாரு மல்ல

ஆணுமல்லப் பெண்ணுமல்ல அப்புறத்திலேதுமல்ல

தான்

 

13. பஞ்சந்திரியங்களன்றிப் பஞ்சாட்சரங்களன்றி

பஞ்சவன்னம் பஞ்சபூதம் பஞ்சகத்தாக்களுமன்றி

தான்

 

14. வேதச் சமயந்தேட வேதாந்த கீதம்பாட

வேதாட்சரங்கணீட வேதநாயகன் கொண்டாட

தான்

(1823-வரு)

-----------------------------------

 

213

 

வெண்பா

சருவ வியாப சருவ தயாப

சருவநன்மைச் சொரூபதாதா-முறைமுறையோ

டாம்புவனங்களனைத்தும் படைத்த பரா

ஓம்பரிசுத்த வஸ்துவே.

 

(இராகம்: புன்னாகவராளி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

பரிசுத்த வஸ்துவே ஓசியன்னா மெய்ப்

பரமகிறிஸ்துவே யோசியன்னா

ஓம்

 

அனுபல்லவி

கரிசித்த அன்பே வரிசித்த நண்பே

கருணைச் சமுத்திரமே ஓசியன்னா

ஓம்

 

சரணங்கள்

1.நல்வேதாட்சியாரே யனுசாரி நம்

மெய்ப்பாக்கியனாரே யுபகாரி

ஆதாரமெங்கு பாதாரப் பங்கு

அடிமைக் கருள்செய் செங்கோலோங்கி

ஓம்

 

2. மேசையா தம்பிரானே நமஸ்காரம் எனை

யாண்டமெய்க்கோனே நமஸ்காரம்

மெய்யானதேவா மேலானயோவா

மேசியாவே நீ காவாவா

ஓம்

 

3. சொற்சத்தியப் பராபரா நமோநமோ சர்வ

தயாகருணாகரா நமோநமோ

சித்திரக்குமாரா பத்தருக்கதிகாரா

உத்தமக்குதாரா உபகாரா

ஓம்

 

4. ஓராதிமூலமே யோலோல முன்

அடைக்கல மடைக்கல மோலோலம்

நீதிவிசாலமே நித்திய சதாகாலமே

வேதகலோலமே ஓலோலம்

ஓம்

 

5. என்பக்கிஷப் பராபரா தினசரணம் - நின்

பாதாரவிந்தமே தினசரணந்

தக்கண வேதநாயக சாஸ்திரி

சங்கீதப்பாட்டா கொண்டாட்டா

ஓம்

 

-----------------------------------

 

214

 

வெண்பா

வாக்கு மனதுக்கடங்கா மட்டிலா உண்மையே

பாக்கியவேக சக்கராதிபா-நோக்கியரு

ளுன்னதத்தினின்றிவ் வுலகத்தைமீட்கவந்த

மன்னனீ யேசுதேவா.

 

(இராகம்: கமாஸ்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

மன்னனீ யேசுதேவ திருமகனீ

மானுவே லியேசுபர

மட்சயவான சுயாதிப தாவீது

 

சரணங்கள்

1.நின்னினிதப மாமகம பதனி

தானிபாதமாப கம

பச்சனிதானித பாதப மாபத

நின்

பொன்னனீசாலே மாமகளரசனீ

போத வேத தீதசுப

நித்திய பூரண ஞான கருணாகர

மன்

 

2. நிசசாரீக சாரீபமாக

சாரீபமாக சரிம்மகசா

பாதனி தாபம பாமகமபா

தானிதபாதரி ரீசானிதபசா

நின்

நீதிஞாயாதிபதி தயாப

தேவசிநேகித செம்மறியே

பாதகசாப விமோசன பரா

தாசனையாதரி யனாதி குமாரா

மன்

 

3. நீசசாரீக சாரீரி

சாரிமகா சரிகக

பாதனி தாபச நீதா

பாமகரீ சரிசாசா பத

நின்

தேசுலாவிய சரீரி

தேவசினேக சொரூபி

மாசுறு பாவிகனேசா

மானுவேலே குமரேசா

மன்

 

4. சரிகக்கக ரிபமக்கரி

சாரிரி பமகரி சசசா

ரிரிரிபப்ப சசசா

ரிகமம்ம கமபதபபச

நின்

பரிசுத்தத்தின் திரிதத்துவ

பக்கிஷ திருவுள யேயோவா

கவனம் வைத்து வேதநா

யகனின்னங் கவி செப்பத்துரை

மன்

(1829-வரு)

-----------------------------------

 

215

 

வெண்பா

மங்களமு மிங்கிதமும் வாழ்த்துதலுந் தோத்திரமும்

சங்கையனந்த சங்கீர்த்தனமும் - பொங்கவே

ஒன்றான மெய்ப்பொருளே யோவா ஒருவேதத்

தொன்றான தேவா உமக்கு.

 

(இராகம்: தோடி வருணம்)

 

பல்லவி

ஒன்றா மெய்ப் பொருளே யோவா

ஒருவேதத் தேவா.

 

சரணங்கள்

1.குன்றாக் கருணா காட்சி

பொன்றா முத்திரியேக

நன்றாமனந்தஞான நன்மைக் கிறிஸ்துராசா

காரிசநிதநி சரிசரிகாரிசரி கம கா

ரிகமபதா பமகமபதநி தபதநிசா

நிரிசாநி தாபம தாபாம காரிசா

ஒன்

 

2. சாந்தகவதிசுந்தர கருணாகர வலமை பா

ரிசதிவிய ரட்சச சுபபரமண்டல அழகா

சதானந்த சீவிய தேவாதி குமாரா

ஒன்

 

3. யேசுநாதா நீயே

தாதா பமக மதபமக மாபததநி பதம தாப்பாம

யேசு

சுயம்பான சிதம்பர சறுவாதிக்கிஷநிச

கிருபா சமுத்திர

யேசு

நீத தபதாதப மப்பமபா (கமபத) 2

பாம தாதப மப்பாமகா

மம்ம கமபா மதாபம பாம

பாததநி பதம தாப்பாம

யேசு

 

சம்பன பராக்கிரம சுந்தரமே நவதள (2)

பாக்கிய பூரண மகத்துவமே ஆதிமுதலே

அனந்த சந்தோட சுப சுவிசேட

சம்பரம திவ்விய........ யேசு

சா சநிசரி ரிசாசநிதா ரிசாநி தநிசநீதா

தநி சநீத பதநிதாப பமத தாநி

தநி சநீதபம காரிசா

சரிகாம காரிசா சரிகம சரிகமபா

மபதமபா தநிததப பதாநி

சரிரிநி சாசநி தநீததப

மபாம பாததநி பதம

யேசு

வானவர்பணி நீடருவா பாங்கான சுகிர்தபரா

மனுடர் வாழ்க வருநரேந்திரா

அனையுகந் தகனி வினைமுடியமாட்ட

மரிகெர்ப்ப நீடிய உரிமைத் திருமதலையே

மனநினைவையுமுணர ஒரேதேவா

அதிசய வஸ்தொரு வருமறியா

உல்லாச தவிது குருபர யேசுநாதா நீயே யெந்தனைக் காத்தாளையா

 

மாசிலாத செங்கோலா மானுவேலரசே

வேதநாயகன் பாகூர்ந்தாதரி சுருதிசாரா

மிக்க உத்தம சத்திய கோவே வேதமறைவழி

கனகஸ்தி படமிகு வலுபத்திர மடரும்

இஸ்திரி ரட்சக இஸ்திரி தட்சக

இஸ்திரி வித்தொரே யோவா

காரி

ஒன்

 

-----------------------------------

 

216

 

வெண்பா

 

தீருவிழீ யருள்புரிந்திட விருதயமருள்

வரும்வினைகெட விருமலரடி-சரணே

பரநர திருவுரு பாவிகள் கவனம்

அருவுரு வொரு பரமா.

 

பல்லவி

அருவுரு வொரு பர மகாதேவா

நராவதாரா சதாசிவா

 

சரணங்கள்

1.பரநர திருவுருவே யோவா

பாவிகள் கவனாநர தயாபா

அரு

 

2. அதிசய குமர குரிசறேலா

கிருபையாபத்தின் மனுவேலா

அரு

 

3. அரிய பரம கிருபாசன்னா

இரட்சியுங் கருத்தா வோசன்னா

அரு

 

4. தம்பிரானொரு திரியேக வஸ்து

சதாநித்திய கிறிஸ்துவுக் கோம் நமஸ்து

அரு

 

5. அடியார் பரவு கருணாம்பரமே

மகத்துவ மகத்துவப் பராபரமே

அரு

 

6. திருவிழி யருள்புரி குருநாதா

வேதநாயகன் சங்கீதா

அரு

(1843-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page