ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

தேவ வசனத்தின் பேரிலே

 

217

 

வெண்பா

தேவமெல்லாந்தான் விளம்புதற்கு மெஞ்ஞான

போதகரைத் தந்தான் புகழ்ந்தான் - ஆதலினால்

நீடித்த நன்மை நிறைந்த பராபரனைப்

பாடித் துதி மனமே பண்பு.

 

(இராகம்: காம்போதி)

(திரிசுர)

 

பல்லவி

பாடித் துதிமனமே பரனைக்கொண்

டாடித்துதி தினமே

 

அனுபல்லவி

நீடித்த காலமதாகப் பரனெமை

நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்

பாடி

 

சரணங்கள்

1.தீர்க்க தெரிசிகளைக் கொண்டு முன்னறச்

செப்பின தேவபரனிந்தக் காலத்தில்

மார்க்கம தாகக் குமாரனைக் கொண்டு

வழுத்தின அன்பை விழித்து தியானித்து

பாடி

 

2. காட்டொலிவத் தருவா மெமைநல்ல

கனிதரும் தீவிதாட்சிச் செடியோடுற

நாட்டித்தஞ் சொந்தச் சனமாக முற்றும்

நடத்தின நேரைத் திடத்துடன் சிந்தித்துப்

பாடி

 

3. சொந்தச் சனமான யூதரைத் தள்ளித்

துலையில் கிடந்த புறச்சாதி யாமெமை

மந்தையிற் சேர்த்துப் பராபரன் தம்முட

மைந்தர்களாக்கின சத்தோடத்துக்காகப்

பாடி

 

4. எத்தனை தீர்க்க ரனேக மப்போஸ்தலர்

எத்தனை போதகர்கள் ரெத்தச் சாட்சிகள்

எத்தனைவேண்டுமோ அத்தனையுந் தந்திங்

கித்தனை யாய்க் கிருபை வைத்தநங் கர்த்தனைப்

பாடி

 

5. வேதாகமங்களை அச்சினிற் போட்டு

விலையன்றி எங்கட் கிலவசமாய்த் தந்து

சாதாரணச் சுவிசேடத்தைப் போதிக்க

சற்குருமாரை யனுக்கிரகஞ் செய்ததைப்

பாடி

 

6. அக்கியான தேசத் திருளையகற்ற

அநேகரைத் தூரத்திருந்திங் கழைத்தபின்

இக்கணத் தெங்கள் குலத்திலும் போதக

ரென்னச் சிலரை யிஸ்தாபித்த நேசத்தைப்

பாடி

 

7. காலத்தை நேரத்தை யாற்றும சரீரத்தைக்

கட்டளை யிட்ட பரனுபகாரத்தைச்

சீலத்துடன் வேதநாயன் பாடின

திட்டத்தையும் நினைந் திஷ்டத்துடன் தினம்

பாடி

 

-----------------------------------

 

218

 

வெண்பா

சொந்தக் கிரியைகளும் சொல்லியதன் னீதிகளும்

அந்தந்தப் புண்ணியமு மாகாதே - யெந்தனக்கு

மேனீதியாகவுயர் வேதசுதனே நானும்

மானீதி மானானேனையா.

 

பல்லவி

நீதிமானானேனையா உம்மாலே நான்

நீதிமானானேனையா

 

அனுபல்லவி

சோதிநவ யேருசாலேமின் மேவிய

தோன்றல் பராபரனின் சமூகஞ் செல்ல

நீதி

 

சரணங்கள்

1.ஆதியில் ரட்சிப்பின் வார்த்தை யறைந்ததால்

அப்படியே மனுவாகப் பிறந்ததால்

சாதியனைத்துக்கு மாகவிறந்ததால்

சத்திய வேதத்தைத் தந்து சிறந்ததால்

நீதி

 

2. ஆற்றுமத்தாலும் சரீரத்தினாலும்

ஆதிபராபரன் சித்தத்தினாலும்

சாற்றரும் பாடுகள் ஏற்றத்தினாலும்

சாவை விழுங்கிக் கெலித் துயிர்த்ததாலும்

நீதி

 

3. சர்ப்பத் தரத்தை யுடைத்தத்தினாலும்

தாழ்நரகத்தை யடைத்தத்தினாலும்

முற்பவம் போகத் துடைத்தத்தினாலும்

மோக்கிட வாழ்வெனக்குக் கிடைத்தத்தாலும்

நீதி

 

4. துங்கமிகும் ஞானஸ்நானத்தினாலும்

தூயதிவ்விய நன்மைப் பாத்திரத்தாலும்

எங்குமிஸ்பிரீத்துவின் சுத்தத்தினாலும்

யேசுவென்ற திருநாமத்தினாலுமே.

நீதி

 

5. வித்தக ஞானப் பிரசாதத்தினாலும்

வேதநாயகன் சங்கீதத்தினாலும்

சுத்த சுவிசேட போதத்தினாலும்

தோன்றுந் தேவாசீர் வாதத்தினாலுமே

நீதி

(1806-வரு)

-----------------------------------

 

219

 

வெண்பா

தகமைத் திருவசனஞ் சத்திய புதேற்பாட்டின்

மகிமைச் சுவிசேட வாக்கியம்-அகமகிழ்ந்து

பார்க்குங் கருணைப் பரமசுதனைச் சார்ந்தோர்

ஆர்க்குந் தயை வாக்கியம்.

 

(இராகம்: ஆனந்தபைரவி)

(ரூபகம்)

 

பல்லவி

ஆருக்குந் தயவான வாக்கியம் சுவிசேட வாக்கியம்

அதின்படி நடந்தவர்க்கே சலாக்கியம்

 

அனுபல்லவி

ஆருக்குந் தயவான வாக்கியம்

ஆதிசுதன் சுவிசேடத்தின் யோக்கியம்

சீருக்குள்ளுயர் ஞானம னோக்கியம்

தேடுதற்கரிதான மெய்ப்பாக்கியம்

ஆரு

 

சரணங்கள்

1.அப்புத் தேய்வு சதுர்பூதியமுந் தொகுத்தோர்

வானம் பூமியை யுமது

ளான வஸ்துப்பல ஜீவனையும் வகுத்தார்

செப்பத்துடனிரு பேர்களையே பகுத்தார்

அதமேவை யெனப்பெயர்

செப்பியே சிங்காரக் காவதிலே புகுத்தார்

ஒப்பப் பரப்பொரு டுப்பைச் சிறப்பக

முப்ப நிரப்பு சதுர்பலனைக் கவர்

வெப்பமிகுப்பல கைப்புலை யிற்படும்

விந்தையதத்துட பந்துக்களாகிய

ஆரு

 

2. அட்டதிக்கிற் பழையேற்பாட்டின் காலத்திலே

மோசேசு முனிவனுக்(கு)

அச்சயன் சீனா வென்றவெற் பானதிலே

கட்டளையிட்டருள் ஞாயப் பிரமாணத்திலே

நிறைந் தடங்கிய

கற்பினை பத்தும் வழுத்திய சாபத்திலே

பட்டுப் பரதபித்திட்டுத் துட்டொட்டிட்டுப்

பற்றற்றிருக்கும் நரர்க்கிரக்கக் கடல்

மட்டற்றிட்ட இட்டம் விட்டுத் தட்டுக்கெட்ட

வஞ்சகராகிய பஞ்சமா பாவிகள்

ஆரு

 

3. புத்தியறிவில்லாத வக்கியானர்க்கும்

யேசுக் கிறிஸ்துவின்

புண்ணியத்தை விட்டகம்புரி யூதர்க்கும்

மெத்த மதங்கொள் மகமது மார்க்கர்க்கும்

அரியானப் பதிதர்க்கும்

வேதப்பிரட்டர்களான எல்லார்கட்கும்

சத்தியவேதத்தை விட்டுக் கிறிஸ்துவைச்

சற்றுமெண்ணாமல் மதத்துத் திரிந்தவ

பத்திமிகுத்த தமத்தி னிலைத்த பொய்ப்

பாப்புப் பதித்த துன்மார்க்கருக்குப் பின்னும்

ஆரு

 

4. ஆதத்துக் கமலனளித்த சத்தியந்

தீர்க்கர் முன்னற

அறிந்து மகிழ்ந்தக் களித்தநித்தியம்

நீ தத்தப்போஸ்தல ரெழுதும் பத்தியம் வேதநாயகன்

நிதமுங் கவியுண்டாக்குந் துத்தியம்

போதத்தினிலே மெத்தவும்

வீறுற்ற மகா சுத்தர்கள்

பூரித்துநன் னேயத்தோடு பூசித்திடும் நேர்சத்திய

வேதத்தினிலே சற்றெனுமே பற்றதிலா மத்தர்கள்

வீடற்றெரி வீழச்செலும் வேளைக்குமுனே முற்றிலும்

(1800-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page