அண்டர்கோன் வானத் தனாதிகுமாரனமைக்
கண்டு சந்தித்த விந்தக்காலந்-தொண்டடியார்
மாசீராய் வாழ்ந்து மகிமைபெறவுண்டான
ஆசீர்வாதக் காலமே
(இராகம்: செஞ்சுருட்டி) | (ஆதி தாளம்) |
ஆசீர்வாதமே கிருபையுண்டான காலமே
அல்லேலூயா
மேசியாவினால் விசு
வாசநேசர்மேல் அல்லேலூயா | ஆசீர் |
1.தந்தை திருப்பாலன்
அதிவிந்தை மனுவேலன்
சாதியாருட தீதுமாறிட
மாது மாமரியாளிடம் வந்த | ஆ. அல்லே |
2. காட்டொலிவத் தருநாமே
கோட்டான் குஞ்சுகளாமே | (ஏசா. 43:20) |
மீட்டுக்கொண்ட தேவாட்டுக் குட்டியின்
பாட்டுக்கும் பட்டபாட்டுக்குந் துதி | ஆ. அல்லே |
3. உத்தம போதகமார் ஒரு
மித்துவந் தோதியநேர்
சுத்த சுவிசேட ஞானவாக்கியம்
எத்தனை யெத்தனை யானபாக்கியம் | ஆ. அல்லே |
4. சத்திய ராஜாங்கம் தழைத்
தெத்திசையு மோங்க
சித்தமான திருவுளச் செயல்
அத்தியந்த வானந்த சந்தோஷம் | ஆ. அல்லே |
5. அட்சயமாக மிசியோன்
தட்சகர் வாழ
தெட்சணாயண முத்தராயணம்
எச்சபைகளும் பெருகப் பெருக | ஆ. அல்லே |
6. சித்திரகூடம் போலே திரத்திடும்
அஸ்தி வாரத்தாலே
தேசமெங்கணும் வேதம் விளங்கவும்
தேவாலயங்கள் பிரசங்க முழங்கவும் | ஆ. அல்லே |
7. அருமையாளரே கிறிஸ்துவுக்
குரிமையாளரே
திருநெல்லை வேதநாயகன் பாட்டுத்
தேவகுமாரனுக்கான கொண்டாட்டு | ஆ. அல்லே |
திருநெல்லை யாதியாய்த் தென்
கடல் வடகடல் மட்டாகப்
பெருகிய சபையின் தேவஸ்
தலங்களும் பெருக்கமாகி
அரியசற் குருமாரோங்க
ஆகஸ்றேபிளையர் வாழ்கக்
கிருபைசெய் தருளுமையா
கிறிஸ்துவே யேசுநாதா
(1855-வரு)
-----------------------------------