பாவத்துயரறுக்கும் பாதகமெலாந் தவிழ்க்குந்
தேவத் திரவியத்தைச் சேர்விக்கும்-சாவொழிக்கும்
வானத்தூடேற்றும் மகிழ்ச்சிபெற வாழ்விக்கும்
ஞானஸ்நானத்தின் நலம்.
(இராகம்: இங்கிலீஷ்) (Gick)
ஞானஸ்நானத் தீட்சையே கன
மானத் தியானக் காட்சியே யின
நன்மைப் பிரம சூட்சியே மன
வுண்மைப் பரம சாட்சியே
சனவானத்தமலர் மீட்சியே தன
வானொத்தவர் சொன் மாட்சியே தினம்
மகிழ்ச்சி புகழ்ச்சி திகழ்ச்சி சுபட்சி
மாட்சி மேன்மைக் கத்தாட்சியே | ஞான |
1.அக்கியானத்திருள் நாசமே | அதி |
மெக்கியானப் பிரகாசமே | மதி |
அரிய நல் விசுவாசமே | கதி |
பெரிய சொல் லுபதேசமே | நிதி |
மிக்காப் பொக்கிஷ பாசமே | பதி |
விக்கா பக்கிஷ நேசமே | விதி |
லாட்சமட்செய ராட்சியப்பரம
தீட்சண திவிய கடாட்சமே | ஞான |
2. ஆரண ஞான வேதாந்தமே | நிறை |
பூரண மோன நாதாந்தமே | பறை |
அர்ச்சய வுச்சிதா னந்தமே | மறை |
நிச்சய சச்சிதானந்தமே | முறை |
காரண தீத ஞானேந்திரமே | யிறை |
தாரண போத விருத்தாந்திரமே | யுறை |
கந்தரஞ் சுந்தரம் முந்தர மந்தரம்
காந்த சுகாந்த திட்டாந்தமே | ஞான |
3. மேலாதார சற்பாத்திரமே | துவி |
நூலாதார சொற் சாத்திரமே | கவி |
வேதநாயகன் றோத்திரமே | புவி |
நீதநாயகன் சூத்திரமே | நவி |
சீலாகோல முக்காத்திரமே | சவி |
சாலாமூல தக் கோத்திரமே | செவி |
சித்திர விசித்திர சமுத்திர சுமுத்திர
விச்சேத்திர நன்னேத்திர நட்சத்திரமே | ஞான |
-----------------------------------
சென்மச் சுவாபத்தின் தீவினையெலா மொழித்து
வன்மப் பசாசை மடக்கியே - துன்மனசை
நீக்கி புதுமனதை நீடி மறுசெனன
மாக்கினன் ஞானஸ்நானத்தால்
(இராகம்: இங்கிலீஷ்) (Reel)
ஞானஸ்நானத்தா லென்பாவம்
நாசமாக விடுமடிமுடிவா
நாதத்தாதி காலத்தேவ
நாமத் தேசுவா
வானத்தானா மானா கோனா வந்தாளோசனா
1.பாவத்தாலென் ஆவிக்கான
வாழ்வைத் தேடாதழியவு முறையோ
பாசத்தாலென் மாசைத்தீர்த்தான்
நேசத் தேயோவா
ஜீவக்கோவா நாவிற் பாவா
தேவத்துவ மூவா | ஞான |
2. ஜென்மத்தாலென் வன்மத்தோடக்
கன்மப் பாவத் துளையினில் விழுவேன்
திண்ணத்தாலும் எண்ணத்தாலும்
பண்ணியதோ கோடி
தன்மத் தெருளே நன்மைப்பொருளே
என்னைக்கா வருளே | ஞான |
3. மைந்தர்கள் குற்ற மநந்தவிரத்தம்
சிந்தமரித்த வொருதிரு மகனே
வந்தனை யந்தத் தெந்தனையுந்தச்
சிந்தனை நூந்தாயோ
தந்தா திந்தா பந்தா சொந்தா
சர்ச்சிதா னந்தா | ஞான |
4. முக்காலத்தண் டக்கியானத்திற்
சிக்காமற் கொண்டுறவு செய்தனையே
மூடப்பாவி கேடற்றோடக்
கூடத் தேடாயோ
மிக்கா கக்கா சக்கா சொக்கா
மேன்மைத் திருயேகா | ஞான |
5. நெல்லை வேதநாயகனோத
வல்ல பாதத் தருள்புரியரசே
நீதத்தாதா போதத் தூதா
நாதச் சங்கீதா
வல்லா வேகா நல்லா வாகா
அல்பா வோமேகா | ஞான |
-----------------------------------
நன்மைப் பெருக்கமே ஞானப்பிரவாகமே
புன்மைக் குணமனைத்தும் போக்கியே-தொன்மை
யினக்கூட்டம் வாழ்க இஸ்நான மளித்த
உனக்கே சரணொரு தேவா
உனக்கே சரணொரு தேவனே
யுனத கருணைகூர் ஜீவனே
சரி கமபப் பமரிப் பமரி கா காரிரி
பப சசப்பமரிப் பமரி கா காரிரி
கனிவினை சிந்த நீடிய திருவடிவே
நினை நம்பினே னேசுநாதனே நான்
பச பச ரீ ககமரி கக ரிகரிரிரீ (2) | உன |
சா சா சனிபப் பமரி பமரி காகாரிரி
1.வானாட்டினும்பர் வழுத்திய காட்சியே
வஸ்தென்ற வொரு மானுவேலா
நானாடு தேசத்தின் மெய்த்திரு முதலே
ஞானஸ் நானப் பரம கிறிஸ்தேசு ராஜனுதா | உன |
2. ஆகாத்திய மிஞ்சி அழுந்திய பாவிநான்
அத்தியந்தபணி வாகவேதான்
மகாத்திர மாசத்திய மாமறைதனிலே
வாரக்கிருபை செய்யும் மகத்துவத் திரியேகனே | உன |
3. நாதாக்கள் சிந்தைக்குணர்த்தும் நிதானமே
நற்றவத்தி லுயர் ஞானஸ்நானமே
வேதாட்சர போதத்தின் மெய்வர மருளே
வேதநாயகன் பா மேசியா கிறிஸ்தாதிபா | உன |
-----------------------------------
(இராகம்: இங்கிலீஷ்)
ஞானஸ் நான மான தேசு
நாத னருளிய நவதிரு முறை
மோன நேமதான நேசம் முக்கிய
திரவியமுது நெறிமுறை
மானிடர்செய் மாசகல வந்த சுவிசேடம்
ஈனமுற்றிலும் நீங்க ஏசுகிறிஸ்துவி லோங்க
வான தூய ஆவி வாங்க மாமறைப் புகழ்தாங்க
சாநி தத தாதபம பாமபக மபதப மபதப (2)
சாநி தத தாதப ம பாமபக மாமா
பாத தாநித பாப்ப தாநி சாரிச நீத
சாநி நீத சாநி நீதச ரரிச நீத தாபா | ஞா |
தேவ சாயல் மேவ ஆதம்
தீய சாயல் சிதையவும் அனுதினம்
ஆவலாக ஜீவவேதம்
ஆய்ந்து தேர்ந்து அமரவும் நரர் மனம்
ஆவியாலும் நீரினாலும் அந்தமாய்ப் பிறந்தே
தேவராட்சியமேக தேவதூதர் போல்யோக
தேவசே யெனப் பேராக தேவ ஆசி யுண்டாக | ஞா |
-----------------------------------
மேன்மைத் தானவர்களோடு
வீற்றிருப்பதற்கு வேண்டி
ஞானஸ்நானத்தின் யோர்தான்
நதியினில் மூழ்கிச் சென்று
வானத் தானத்தினின்று
வந்த நாயகனைக் கண்டு
கோனத் தாவீது சீயோன்
குமாரிநின் றிறைஞ்சினாளே.
வணக்கம்.
சேவித்துக் கொண்டேனையா-சீர்பாதத்தை
தெரிசித்துக் கண்டேனையா
1.ஆவிக்குரிய மணவாளன் இயேசுக் கிறிஸ்து
ஜீவப்பிரான் ஒரு தேவக்குமாரனை நான் | சேவி |
2. சந்ததக் கிருபை சிறந்த சத்தியப் பிதாவினொரு
மைந்தன் கிருஸ்துவேநின் மகத்துவப் பிரசன்னத்தைச் | சேவி! |
3. வானக் கருணை பொங்கி மானிடர் பவந்தீர்க்கும்
ஞானஸ்நான தீட்சை யோர்தா னதியில் மூழ்கி | சேவி |
4. நீற்றுப் பூச்சைத் துறந்து நெஞ்ச முருகிச் சென்று
ஆற்றுமத்தா லுண்மை யாலும் பணிந்துநின்று | சேவி |
5. கந்தமலர் விடுத்து காவின் மலர் தடுத்து
புந்திக் கமலம் என்ற பொற்பின் மலர் தொடுத்து | சேவி |
6. காலையு மாலையுங் கருதி நெல்லையான் செப
மாலை யுருச்செபித்து மனது பரவசமாய் | சேவி |
-----------------------------------
(இராகம்: இங்கிலீஷ்)
ஞானஸ்நானம் பெற்றேசு
நாதருக்குள் ஆளானாய்
மேன்மையான பேர்பெற்றாய்
மேலும் பாக்கியவானாய் போனாய்
1.ஞானஸ்நானம் திரியேகர்
நாமத்தினிலே பெற்றாய்
ஆன நன்மை யாவுமுற்
றாதாமின் சீர்கேடு மற்றாய் | ஞான |
2. தேவ வார்த்தையின் படி
செய்வது கடமையே
ஆவியார் இறங்குதல்
அறியோணா மகிமையே | ஞான |
3. பாலர் தம் மண்டை வர
பண்ணி ஆசீர்வதித்தார்
சால யேசு நேசமாய்
தள்ளா துனை அரவணைத்தார் | ஞான |
4. ஆசீர்வாதம் உண்டாகும்
ஆறுதலே கிடைக்கும்
மாசில்லா மெய் மோட்சத்தில்
வாழ்வாய் சுபமாய் என்றென்றும் | ஞான |
-----------------------------------
சத்திய கிருபா சமுத்திரத்திலே மூழ்கி
முத்திபெற ஞானத் தீட்சை பெற்று-நித்திய கிறு
பாசனமே வீற்றிருக்கும் அட்சயக் கிறிஸ்துவண்டை
ஓசனமே யோடி வாவா
(இராகம்: புன்னாகவராளி) | (ஆதி தாளம்) |
ஓடிவா ஜனமே கிறிஸ்துவண்டைக்
கோடிவா ஜனமே பண்டிகைகொண்
டாடிவா ஜனமே பாதாரவிந்தம்
தேடிவா ஜனமே.
நீடு சமர்புரி கோடி அலகையை
நிற்கிரகித்து வாள்பிடித்த
உக்கிரமனுவேலனைக் கண்டு | ஓடி |
1.நேர்ந்தடிகள் துதித்து நித்திய செபத்தின்
நாடித் தவங்கள் கதித்துச்
சேர்ந்தருளை மதித்துச் சோதிக்கச் செய்த
தீய சற்பத்தை மிதித்து அநித்தியமான
சகச்சாலத்தைப் பணித்து
அகத்தக் கிரமத்தை விட்டுத்
திட்டமாக நின்றுபத்துக்
கட்டளைப்படி யேசென்று
தேவதுந்துமி முழங்கச் சங்கீதங்களும்
பாவினங்களும் விளங்க
அண்டமுங் குலுங்கப்பர
மண்டலங்களு மிலங்க
ஆராதனைகள் செய்து சீராய் நடந்துகொண்டு
அரிய பரம்பொருள் ஒருவனை நெஞ்சக
முருகி நடஞ்செய்து பெருகிய அன்புடன் | ஓடி |
2. ஞானஸ்நானம் பெற்றுச் சுருதிநூலின்
மேன்மைச் சாஸ்திரங்கற்று
ஈனப் பாவிகள் சுற்று மாயங்க ளக்கி
யானக்கிரிகைக ளற்று மாங்கிஷத்தின்
இருளாந்தகாரம் நீங்கி
யருளானந்தங்க ளோங்கி
யிஷ்டமாய் நடந்தெல்லார்க்கும்
துஷ்டத்தனப் பொல்லார்க்கும்
யேசுநேசத்தைச் சூட்டி மனோகரத்தால்
பாசத் தன்பு பாராட்டி கவனமாக
அந்திசந்தியுஞ் செபங்கள்
மந்திரங்களைப் படித்து
ஆண்டாண்டெமைக் கரிசித்து
மீண்டாண் டனுக்கிரகித்த
அறிவுகளிங்கித கிருபை விளங்கிய
திரிமுதலின் சரணுறுதியுடன் றொழ | ஓடி |
3. வேத நூன்முறை செல்லும் வேதநாயகன்
ஓது கீதங்கள் சொல்லும்
நீதிநேர் வழிநில்லும் அனித்தியமான
மேதை யாசையைக் கொல்லும் ஒன்றுக்கொன்று
நிசத்தைப் பேசிக்கொள்ளுங்கோ
பசித்தவர் முகம் பாரும்
நித்தியத்தைச் சிந்தியுங்கோ
சத்திய வாய்மைப் பிரகாரம்
நேசவங்கணமாக இருதயத்தின்
பாசமிகுஞ் சினேக இங்கிதயோக
சங்கையுங் கனமு மோங்கி
மங்கள சோபனத்துடன்
சாகா தனந்தகாலம்
வாகாய் மகிழ்ந்து வாழ்க
தரணமுவந்தொரு திருவுருவங்கொடு
வருபரனின் சுதனருள் பெற நம்பியே | ஓடி |
(1835-வரு)
-----------------------------------
நாடம்பரத்தையே நாடுங்கோ பேயினுட
ஆடம்பரத்தைய கற்றுங்கோ-கேடறுங்கோ
வானத்தாதாவின் மகத்துவ நாமத்தாலே
ஞானஸ்நானம் பெற்ற நாம்
(இராகம்: உசேனி)
ஞானஸ்நானம் பெற்றாய் நம் கிறிஸ்தேசு
நாதனோடுறவுற்றாய்.
1.வானப் பரமவஸ்தானவ னோர் சுந்திரக்
குமார மனுடவதார ரெட்சகனேசு
ஞானத்திரவிய மெனத்தானே மகிழ்ந்தெமக்கு
நாட்டிச் சீவனின் வழி காட்டிக் கட்டளையிட்ட
தாரி தக்குகு செந்தரி
தக செம் செந்தரி கிடதக - ஆ- 2
தகணந் தரி தரிகுந்தரி
தகதீ ணுத கிட தோம்.
பாப் பாப சா சாச
நித நிசகாரி சாநிசநி நித பம
தாகத செந்தரி கிடதக
தக தக திகு திகு தகதி மித்தோம்.
தக தித்தளங்கு
தக ததிங் கிணத் தோம். | ஞான |
2. ஓ பா ரெம் மனு வேல் நரர்
பிரிய அன் பாலதி தயவுடன்
ஒளி மண்டிய பரமண்டல
உயரத் திருவுளமாய்
எழுந்த கணந்தம் அருந்தவருடன்
பிதாச்சுதன் பரிசுத்த
ஆவியினா மதிசய மகிமை யினிலே
அருண் முழுக் கருளியுமே.
யெனை நம்பு வீரெனமறை சொனபடியே
3. ரீ ரீ ரீ ரீ காம ப ம க ரி நி
சரீ கா மப மக ரிக ரிசா
நிச ரிகம கரிநி ரீரிரீ
யே யோ வா ஆதாமா ரொரே கனியினர்
ஓர் காட்சியடைய மனுடனா
அனை மரி சுத னென-யேயோவா.
ரிக ம பா ம கரி ரி
பா ம கரி ம கரி நி ரீரீரீ.
இருடி மாக்க ளெழுத
முன் னோன் மறை சொனபடி-யேயோவா
கா, ரிச நிச ரிச ரிக ம பா மகரி
ப ம கரி ம கரிநி ரீரீரீ.
இசர வேலதிப தவிது ராஜனொடு
முழுவுலகமுந் தொழ-யே யோவா.
மாப்ப மாப்ப கரிகசா
ரீக மாப்ப தபமா
பாநிதப மாதபம
கரி காம பம கரிநி ரீரீரீ.
இந் நிலத்தில் வருவனே
பாடதான பிறகு
புன் மனுடர் துன்மையற
வெழுந் தாவலர் தங்கடமை-யேயோவா.
சாசாசா நீதா நிச நீ தாப ம
பா நீத நிசரி நீ சாசாசர
மாப நீத நிசரி நிரீசா ரீ சனிதாபம
பதநி சாம்ச பதம பாம்ப
க ரிரி காமப ம கரி நீ. ரீரீரீ.
ஈதோ நீபா ரெங்கணுமே சென் றெனி
ஈடாகச் சாதி யெலார்க் கே
தீட்சை தந் தியல்புடனே யுவந்த சீடராக்குவீர்
தவசு நீடி மனதுவாடி
வச மதாகினி சங்கதியென - யேயோவா.
ஞாயாதி பதியாக நடுத்தீர்க்கவே
நானில முடிவினாம் வருமளவும்
நாளெல்லாமும் முடனிருப் போமென நயந்தோதி
மாயாக் கருணை பெற்றோயாக் கீர்த்தனத்தால்
வாழ்த்தும் வேதநாயகன் றோஸ்திரப் பிரஸ்தாபன்.
மா முகிலேறிச் சென்றபோது
வானக்கதி பெற வருளிய
ஞானத் திரவிய மெனு முயர்-தாரி. | ஞான |
(1828-வரு)
-----------------------------------