தேவேபிதாவே திரித்துவ யேயோவாவே
காவே குதாவே யோர்கத்தாவே-கோவே
யியவே சருவேசுரா யேழைப் பாவி
தயவாயிருஞ் சுவாமி
(இராகம்: மோஹனம்) | (அடதாள சாப்பு) |
சருவேசுரா ஏழைப் பாவி என்பேரிலே
தயவாயிருஞ் சுவாமி
திரியேக பரதேவா நெறிமேவு மொருயோவா
சித்தமிரங்கிக் காத்து கிறிஸ்தின் முகத்தைப்பார்த்து | சரு |
1.ஒன்றுமில்லாத காலத்தன் றுலகமனைத்தும்
உண்டு செய்த வல்லவனே பல
நன்று கோடியெனக் கென்று படைத்து நிதம்
நல்கும் ஒரு நல்லவனே
வென்றி மறந்துன் தயை குன்றுந் துரோகி எனைப்
பன்றியென நினைந்து கொன்றிடாய் சினந்து | சரு |
2. தந்தை நின் ஒன்றான மைந்தன்தனைக் கொடுத்தித்
தகமையுலகை நேசித்தாய் நின்
சொந்தக் கிருபைதனைச் சிந்தித்துணர மறை
தொகுத் தெனக்குப தேசித்தாய்
இந்தப் பெரிய நேசம்
புந்திக் கொளிவதாக்கும்
எந்தப் படியும் என்னிற்
பந்த மனைத்தும் போக்கும் | சரு |
3. தேவரீர்க் கேராத தீவினகளைச் செய்தும்
தெண்டியாமற் பொறுத்தீர் நீர்
யாவு மறிந்திருந்துங் கோபித்துக் கைவிடாதென்
நன்றிக் கேட்டை மறுத்தீர்
சீவனே யுமக்குப் பாவி வதிளென் செய்வேன்
மேவியடி தொழாமல்
ஆவியெங்ஙன முய்வேன் | சரு |
4. நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமெனுமில்லாமல்
நீதி வழியைக் கடந்தேன் கெட்ட
வஞ்ச உலக வாழ்வை
மிஞ்சத் தேடிப் பேயின்
மனதுக் கேற்க நடந்தேன்
பஞ்சபாவிக் கூவிக்
கெஞ்சும் செபத்தைக்கேளும்
அஞ்சல் புரிந்து திருச்
செஞ்சரணந் தந்தாளும் | சரு |
5. புங்கமிகும் வானோர்கள் சங்கமடிபணிந்து
போற்றும் பரம தந்தையே நெல்லை
தங்கும் வேதநாயகன் மங்களங்கள் பாடிச்
சாற்ற மனம் மகிழ்ந்தையே
யெங்கும் நிறைந்திலங்கும்
துங்கப் பரமசோதி
பங்கிலிருந் தெனக்கி
ரங்குஞ் சருவநீதி | சரு |
(1823-வரு)
-----------------------------------
தஞ்சமிகு செஞ்சரணல்லால் பெல்லாத
வஞ்சசகனுக் கெங்கே மறைவிடமுண்-டஞ்சல்புரிந்
தென்று மெனையா ளிரக்கமிகு மேசையா
நன்றியறியாப் பாவி நான்
(இராகம்: செஞ்சுருட்டி) | (ஆதி தாளம்) |
அறியாத பாவி நானையா யெனை
யாளுமேசையா நன்றியறி
நெறியான வேதமும் நிறைஞான போதமும் | அறி |
1.கோபியாதேயும் என்னைச் சாபியாதேயும்
தேவரீர் பட்ட பாட்டைப் பாரும்
சிறியன் கேட்ட மன்றாட்டைத் தாரும் | அறி |
2. கிருபையாயிரும் சுவாமி பொறுமையாயிரும்
வறுமை வினையை நீக்கிப்போடும்
வஞ்சகன் குற்றத்தை மறைத்துக் கூடும் | அறி |
3. எந்த நாளுமே உவந்தென்னை யாளுமே
விந்தைமலர் செம்பதத்தைக் காட்டும்
மெத்தவும் சித்தம் வைத்தன்பு பாராட்டும் | அறி |
4. திரும்பிப் பாருமேன் எனைவிரும்பிச் சேருமேன்
இரும்பு மனக் கடினத்தைப் போக்கும்
எந்தை பிதாவோடெனை யுறவாக்கும் | அறி |
5. ஆற்றல் பெய்துமே மனத்
தேற்றல் செய்துமே
போற்றும் நீசனுக்கிரகஞ் சொரியும்
புண்ணியனே யுனின் கிருபை புரியும் | அறி |
6. தோஸ்திரமையா சங்கீர்த்தனமையா
காத்தருளுமுன் சரணம் சரணம்
கைவிடாதேயும் தருணம் தருணம் | அறி |
7. ஆதிவஸ்துவே பரஞ் சோதிக் கிறிஸ்துவே
வேதநாயகன் கற்றிப் படிக்கிறேன்
மீட்பரே யுமைப் பற்றிப் பிடிக்கிறேன் | அறி |
(1823-வரு)
-----------------------------------
மாதொருத்தியாலே மனுடரெல்லாங் கெட்டோமே
யாதி சற்பமின்னம் அலறுதே-யேதுசெய்வோம்
மன்னக் கிறிஸ்தேசு நாதசுவாமியே
நின்னடி தந்து நேமி.
(இராகம்: முகாரி)
சாமி நின்னடி தந்து நேமி
கிறிஸ் தேசுநாத
சாமி நின்னடி தந்துநேமி
பூமிதனில் வந்த அபிர
கா மூதவி தாதிமைந்த - சாமி
1.ஆதியந்த மிலாவனாதி | அளவில்லாத |
நீதி நிறைந்த பரஞ்சோதி நிகரொன்றில்லா
வேதமந்திர கியானமோதி வெளிச்சமாக
சாதியெலார்க்கு மோட்சவீதி தனையே காட்ட
மாது விற்றினில் மோன மனுட குமாரனான | சாமி |
2. தானாயிருந்த வொரு சத்தம் சருவலோக
கோனான தேவ திருச்சித்தம் குறைகளன்றி
வானூடெழுந்த பரிசுத்தம் மனுடருக்குப்
பரனாய் விளங்கும் வாக்குத்தத்தம் பராபரனின்
ஞானாகமத் தொருத்துவம் ஆனாலும் மெத்த மகத்துவம் | சாமி |
3. சம்மனசுக்கள் நலசங்கம் சதாபதிதன்
செம்மலைக்கொண் டாடினது துங்கம் திரியேகவஸ்து
மும்முத லொன்றா யெழுந்த புங்கம் முன்னாள் வனத்தில்
விம்மிய பிசாசை வென்ற சிங்கம் மேசையா நீயே
யெம்மிறைய பரஞ்சித் தங்கம்
துன்மனசா லென்ன வில்லங்கம் | சாமி |
4. இன்றைக் கழியும் லோக வாழ்வு இதைநிசமென்
றொன்றித் திரிவதே யென் தாழ்வு உறுதியற்றுய்
கன்றிமயங்கும் மனநோவு மயக்கமற்றுப்
பொன்றத் தயவோ டென்னை யேவு புண்ணியமையா
வென்றிக் கருணைத்தூவு என்றைக்கும் நீ என்றேவு | சாமி |
5. ஆதமேவை செய்த தாறுமாறு அகிலத்துற்ற
சாதிகட்கு வந்ததே யவதூறு தவீதுபோற்றும்
யூதாவின் கோத்திரச் சிங்கேறு ஒருத்தராலே
தீதனைத்தும் பொடித்த நீறு தேவசகாய
வேதநாயகன் பாவைக் கூறுவே னெனக்கருள்
மோட்ச பேறு | சாமி |
(1825-வரு)
-----------------------------------
உன்னத வஸ்துவே யோசியன்னா சிவனே
என்னையாட் கொள்ளவந்த எந்தையே-மன்னா
பயமாகிப் பாவி பரதபிக்கின்றேன்
தயை கூரையா நின் சரண்
(இராகம்: சங்கராபரணம்) | (ஆதி தாளம்) |
தயை கூரையா யென்சாமி பாவிநான்
தயை கூரையா நின்தாசனோ சனா
தயை கூரையா
1.செயமனுவேலன் நயவனுகூலன்
சீரா தீரா வதிகாரா திருக்குமாரா
தேவர்கள் பணிவிடை மேவிய நேச
விலாச கிருபாசன யேசு நரேந்திரா | தயை |
2. வானத் திருந்துவந்து ஞானத்துருவுகந்து
வளமைக் கொண்டு கிருபைவிண்டு குடில் கண்டு
மாடடை வீட தினூடு புன்மேடையி
னீடிய போதினி மோடியதாமோ | தயை |
3. அன்னையெளிய தாயோ என்னை ரட்சிக்கும் நீயோ
அதிசய விதமோ இதிதமோ வுன்னதமோ
ஆபர வசனமாகுது மெய்யா
ஆயிரமாயிரங் கீர்த்தனமையா | தயை |
4. தந்தை பிதாவின் மைந்தன் மைந்தர் வடிவமாகி
தராதல மேவி வா பாவி யெனக்கூவிச்
சாங்கம தாயரு ளோங்கிம காபெரும்
ஈங்கிஷை யாயுயிர் நீங்கின தாலேநீ | தயை |
5. தேவரட்சிப் பனைத்தும் பாவிகட்காய் விளைத்துஞ்
சிலுவையில் மாண்டும் துயர் பூண்டுஞ் சிறைமீண்டுஞ்
சீவனோடாதி பராபரனார் வல
பாரிசமே யரசாளு மிநேரம் நீ | தயை |
6. தூதர்சேனை கொண்டாட்டோ வேதநாயகன் பாட்டோ
சோபனமையா யேசையா மேசையா
சுத்த கிருபாநதி நித்திய பராபர
வஸ்தெனு மாதி கிறிஸ்து மணாளா | தயை |
(1821-வரு)
-----------------------------------
துன்பம் மலைபோலே சூழ்ந்து திந்த வேளையிலே
அன்பர்களுஞ் சத்துருக்க ளானார்க-ளென்பானே
உன்பாலில் வந்தேனு வந்தேனுனை யடைந்தேன்
நின் பாதந்தானே நிலை
(இராகம்: காம்போதி) | (அடதாள சாப்பு) |
நின்பாதந் துணையல்லால் வேறொரு துணையில்லை
நித்திய பரம போதா.
என் பாவம் போக்கியே கிருபை புரியுஞ் சுவாமி
யேசு வஸ்துவான யேசுக் கிறிஸ்து நாதா | நின் |
1.ஆதிமனுடருக் கன்றோதும் படிமனுட
னாகப் புவியிற் பிறந்தீர்
சாதியனைத்து முய்ய நீதிக்கென்றுதலை
சாய்த்துக் குருசிலிறந்தீர்
வேதமுழுது நிறைவேற்றிக் கடைசியிலே
வெற்றி முடியுஞ் சிறந்தீர்
ஏதமிலாதவனாதி திருமகனே
எங்கும் நிறைந்திலங்கும் ஏக திரித்துவ தேவா | நின் |
2. தேவரீர்க் கேராத குற்றஞ் செய்திருந்தாலும்
சித்தமிரங்கி வாரும்
மேவி எனது வினையாவு மகலவிந்த
வேளை யெனையுங் காரும்
பாவிக்குதவியாக மனுவேலே நீர்பட்ட
பாடனைத்தையும் பாரு
ஆவலாக வுனையடைந்து சரண்புகுந்தேன்
ஆபத்தை நீக்குமையா யிப்போ மெய்யாய் | நின் |
3. என்றாலு முன்செயலெவ ராலுமறியொண்ணா
திஸ்திரி வித்தான தூயனே
முன்றாவிதரசனைச் சவுலின் கைக்குத்தப்பித்து
முடிசூட்டி வைத்த நேயனே
நன்றாக வேதநாயகன் சொன்னப் பதத்துக்கு
நன்மை தருஞ் சகாயனே
ஒன்றா மெய்த் தெய்வமே குன்றாதெனை யிங்காளும்
உத்த மகத்துவ ஈசா
உயர் பெத்தலே மலை வாசா | நின் |
(1807-வரு)
-----------------------------------
பொந்திப் பிலாத்துவின்கீழ் பாடுபட்டுப் பொன்குருசில்
ஐந்து காயத்தை யடைந்தோனே - எந்தனுக்குச்
சீரும் பொருளும் செயலும் பலவுறவ
மாருந் துணை யிலையையா
(இராகம்: முகாரி) | (அடதாளசாப்பு) |
ஆருந்துணையில்லை யெனக்
காதியான் திருப்பாலாவுந்தன்
ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்
தாளுவா யேசுநாதா
சீருலாவு பூங்காவி லோர்கனி
தின்ற பாதகமாற்றவே
சிலுவை மீதினிலே யுயிர்விடும்
தேவனே என் சுவாமி | ஆருந் |
1.முந்து மானிடர் தந்த தீவினை
முழுவது மறவேண்டியே
முண்முடியுடன் குருசிலேறிய
முன்னவா கிருபை கூர்வையே
சிந்து முன்னு திரத்தி லென்வினை
தீர்த்து ரட்சியு மையனே
தீயபாவி யெனக்கு வேறொரு
செயலிடந் துணை யில்லையே | ஆருந் |
2. தந்தை தாயரும் மைந்தர் மாதரும்
சகலரு முதவார்களே
சாகும் நாளதில் நீயலா லெனைத்
தாங்குவார்களு முண்டுமோ
சொந்தம் நீயெனக் கன்றி வேறொரு
சொந்தமானவ ரில்லையே
சுத்தமும் பொருளத்தமும் முள
பத்தமே என தத்தனே | ஆருந் |
3. கள்ளனாகிலும் வெள்ளனாகிலும்
பிள்ளை நானுனக் கல்லவோ
கர்த்தனே வலபக்க மேவிய
கள்ளனுக் கருள் செய்தையே
தள்ளி என்னை விடாம லுன்னடி
தந்து காத்தரு ளப்பனே
தயவதாய் ஒரு குருசிலேறிய
சருவ சீவ தயாபரா | ஆருந் |
4. நன்றி யற்றவ னாகிலு மெனைக்
கொன்று போடுவதாகுமோ
நட்டமே படுங் கெட்ட மைந்தனின்
கிட்ட ஓடின தில்லையோ
கொன்ற வர்க்கருள் செய்யவென்றுபி
தாவை நோக்கிய கொற்றவா
குற்றமேது செய்தாலும் நீ யெனைப்
பெற்றவா பொறுத் தாள்வையே | ஆருந் |
5. பத்தியேது மிலாது மாய
சுகத்தை நாடிய பித்தனாய்ப்
பாழிலே எனின் நாளெலாங் கெடுத்
தேழையாகினே னென்செய்வேன்
சத்துருவான பிசாசினால் வரும்
தந்திரம் கொடி தல்லவோ
தஞ்சமற்றவ னாகினேன் உன
தஞ்சல் கூறும் அனாதியே | ஆருந் |
6. அறிவில்லா தொரு மிருகமாக நான்
அலைந்த பாதகனாகிலும்
அருமை ரட்சகனே உனின் மனம்
உருகுமே மிக உருகுமே
மறுதலித்த பேதுருவைக் கைவிட
மனது வந்தது முண்டுமோ
மகதலா நகர் மரியின் மேலருள்
வைத்தவா உனின் சித்தமே | ஆருந் |
7. சாதியாருட தீதெலாமற
வாதையாய்க் கொல்கதாவிலே
தந்தையார் முன்னறைந்த நேர்குரு
சின்கணேறி இறந்தவா
வேதநாயக னோது பாடலின்
மீது மாபிரிய நேசனே
மேசியா மகராசனே யெனை
மீண்டிரட்சியும் அபையமே | ஆருந் |
8. ஆயிரத்தி எண்ணூற்றி முப்பதாம்
ஆண்டில் வந்த ஆபத்திலே
ஆபறோ ஐயராற் பிரிந்தடி
யன்படுந் துயரத்திலே
தாயிதத்தினும் நேயம் வைத்துயர்
சம்பளத்தை நடத்தவே
தஞ்சையான் சரபோஜி மன்னிதை
யத்திலே யருள் வைத்தவா | ஆருந் |
9. உன்னதப் பிதாவே விண்வாழ்வதும்
உலக வாழ்வது மோங்கியே
உத்தம புத்திர சீவாசி மன்னுட
ஊழி காலமும் வாழியே
யின்னமுஞ் சரபோஜி மன்னிதை
யத்திலன்பு வளர்த்தியே
என்னையு மெனின் வீட்டையு மெனின்
பாட்டையுங் கிருபை கூர்வையே | ஆருந் |
(1830-வரு)
-----------------------------------
கோடியுலகப் பகையாற் கூளிசெயுந் தந்திரந்தாற்
சாடிப் பொருதுஞ் சடலத்தால்-வாடி மன
வாதையடைந்த கனபாதகன்றன் வஞ்சமற
ஆதரவு கூர் மேசையா.
இராகம்: (ஆனந்த பைரவி) | (அடதாள சாப்பு) |
மன வாதை யடைந்த
கன பாதகன் வஞ்ச
மறவே கிருபை கூரையா
சனவானவர் சங்கம் அனைவோரும் வணங்குந்
தவிராச சுதந்திர திவிய யேசு நரேந்திரா | மன |
1.பாவிக் குந்தன்மேல் விசுவாசமே திருப்
பாதந் துணைதரும் விலாசமே
சீவனே நீரெனக்கதி நேசமே தேவரீர்
சித்தத்துக் கேற்க நடக்கச் செய்யும் பிரகாசமே | மன |
2. கடியுங் கொடுமையாகச் சீறுதே மாயக்
கலக உலகம் பழி கூறுதே
சடமுந் திடமில்லாமல் மாறுதே மிகத்
தயங்கி மனதெல்லாம் வேசாறுதே சுவாமி | மன |
3. ஞாயப்பிரமாணம் குற்றம் சாட்டுதே எந்தன்
நடக்கை யெலாம் பொல்லாப்பில் மாட்டுதே
மாய பிரபஞ்ச மிச்சை காட்டுதே பாவ
வழியிலென்னை யிழுத்தாட்டுதே சுவாமி | மன |
4. கங்குல் பகலுங் கண்ணீர் ஓட்டமே நித்தங்
கவலை பிடித்தென் முகம் வாட்டமே
யெங்கே பார்த்தாலும் மா போராட்டமே கெட்ட
ஏழைக்குன் பதமே கொண்டாட்டமே சுவாமி | மன |
5. பாதுகாத் தருளுதாரியே மிக்க
பரம ஞானக் கருணை வாரியே
வேதநாயகனனு சாரியே யேசு
மேசியா நல்லுபகாரியே சுவாமி | மன |
(1827-வரு)
-----------------------------------
நெரிந்த சாமுரியார் நீதியரைத் தேடார்
பொரிந்த திரியவித்துப் போடார்-தெரியுங்கோ
ஆவிக்குரிய அருமை மனுவேலனார்
பாவிக்கு நேசராரே
(இராகம்: செஞ்சுருட்டி) | (ஆதி தாளம்) |
பாவிக்கு நேசராரே
இயேசு மானுவேலரே-இவர்
1.மாசற்ற தேவனார் மைந்தப் பிரதாபரே
இயேசுக் கிறிஸ்தாரே ஆசை மானுவேலரே | பாவி |
2. பிரயாசத் தோரே பாரஞ் சுமந்தபேரே
கிருபை பிதாவாரே இயேசு மானுவேலரே | பாவி |
3. நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார்
நிர்ப்பந்தரைத் தள்ளாரே இயேசு மானுவேலரே | பாவி |
4. கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதாவந்தார்
இட்டப் பிரசாதத்தாரே இயேசு மானுவேலரே | பாவி |
5. சத்துருச் செய்வதென்ன சர்ப்பம் பொரிவதென்ன
இஸ்திரி வித்தார் வந்தாரே இயேசு மானுவேலரே | பாவி |
6. சீயோன் குமாரியரே சிங்காரக் கன்னிமாரே
நாயகன் வந்தாரே இயேசு மானுவேலரே | பாவி |
7. நித்திய விவாகமே நீடிய சிநேகமே
பத்தினி மாதராரே இயேசு மானுவேலரே | பாவி |
8. வேதநாயகன் பாட்டு மேசியாவின் கொண்டாட்டு
சாதிகளின் சீராட்டு இயேசு மானுவேலரே | பாவி |
(1839-வரு)
-----------------------------------
மாசனா வாசனா வாமனா வாமனா
பாசனா நீடு கிருபாசனா-வோசனா
வந்தென் றுன்பந்தீரென வஞ்சங் கஞ்சம் பாரிங்
குந்தன் றஞ்சஞ் சேருவந்து
(இராகம்: இங்கிலீஷ்)
உந்தன் தஞ்சம் எந்தன் துன்பந்தீ
ரோசியன்னா சீவனே
மேசியா மன்னா என்னேய
யேசு தேவனே
1.விந்தந் தந்துன் சொந்தங் கொண்டுங்கா
மேன்மை சீவபானனே
பான்மைத் தேவகோனனே மெய் ஞானஸ்நானனே | உந் |
2. சுந்தரந் தங்குஞ் செம்பொன் சங்கம்பா
வோதும் வேதப் போதனே
தீதுறாத பாதனே சங்கீத நாதனே | உந் |
3. பங்கம்தங் கென்னங்கம் பொங்கும் நெஞ்
சாவலாகி வாடுதே
தேவரீரை நாடுதே யென்னாவி தேடுதே | உந் |
4. வண்டன் றொண்டன் றண்டுஞ் சண்டங்கே
டோட நீடா தாரனே
பீடுடாடு வீரனே கண்டேடு தீரனே | உந் |
5. நன்றுன்னன்பும் நண்பும் பண்புங்கண்
காணவா வென்நேசனே
ஈனர் பாவநாசனே பாவாணர் வாசனே | உந் |
6. அன்றன் றும் பங்கங் கொன்றும்
சகாயமே செய்யாயனே
தூயனே ஐங்காயனே வாநேய சேயனே | உந் |
7. அஞ்சங்கஞ்சென் றொன்றும் பண்பொன்றிங்
கேசுவே தந்தாளுமே
நேசமா யெந்நாளுமே நின்னாசி கூறுமே | உந் |
8. வண்டின் பண் சந்தங் கொண்டெங்குஞ் சீர்
வேதநாயகன் பாடவே
பாதமே கொண்டாடவே யென்றீதின்றோடவே | உந் |
டம் டம் டம் டம் டம் டம் டம் டம் டம்
டாரி டாரி டாரி டாம்
டாரிடரி டாரிடரி டாரி டரி டம்
-----------------------------------
சீவனே மெய்யான தேவனே யொன்றான
மூவனே யேசு முதல்வனே-தேவரீர்
தீவினையினால் மெலிந்து தீநரகுக் காளானேன்
பாவியெனைச் சற்றே கண்பார்
(இராகம்: சுருட்டி) | (ஆதி தாளம்) |
பாவியெனைச் சற்றே கண்பாருஞ் சுவாமி
தேவ திருப்பாலனான சீவனின் மன்னாவே
சிந்தை விசாலா மனோலா குணாலா
தேசுலாவு திவிய நேசா யேசு சருவேசா | பாவி |
1.இந்த லோக வாழ்வை நாடி
என்தன் மனம் வாடுதே
தந்திரப் பிசாசதும் நிற்
பந்தமுறச் சாடுதே
இடுக்கண் மிகுதுயர் படுத்து தெனையே
திடத்த உனதுயிர் விடுத்த திலையோ | பாவி |
2. பெந்தினந் திரண்டுக் கூடிக்
கொந்தளித்துப் பேசுதே
அந்தியுஞ் சந்தியுமாக
நிந்தனை செய் தேசுதே
பினுமுடலட மொடெனொடு சமரிடுதே
நினைவு தவறிடவு மனது பதறுதே | பாவி |
3. பத்துரை மறுத்துப் பேயின்
எத்தினிற் போனேனே
குத்திரத் துரோகத்தினாற்
சத்துரு வானேனே
பதைக்க மனமது கொதிக்கு துலகொடு
கதிக்க வலகையும் வதைக்குதய்யோ | பாவி |
4. அங்குனின் பாடு கள்நல்லோர்
தங்களுக்குப் பேறோ
செங்குருதி பாவிகளின்
பங்கதல்லால் வேறோ
ஆவிது தன்மமல்ல தீவினை வளருதே
தேவரீ ரடி மையை மீழ்வது கடனே | பாவி |
5. வேதநாயகத்தின் பாடல்
மேவு சருவேசனே
பாதகர் பாவமெல்லாம்
நீவு மேசுநாதனே
மெத்த அடிமை துயருற்று மெலிகுவனோ
சற்று முனது திருச் சித்தமுருகலையோ | பாவி |
(1821-வரு)
-----------------------------------
கர்த்தாவே பாவியெனைக் கைவிடாமற் கருணை
வைத்தாதரித்து வழிநடத்தி-முற்றும்
நெருக்கத்திற் சற்றே திரும்பிப்பார் நேயத்
திருக்க ணுருக்கத்தினால்
(இராகம்: பைரவி) | (ஆதி தாளம்) |
திருக்கணுருக்கத் திருக்கமாய்ச் சற்றே
திரும்பிப் பாரையா சற்றே சற்றே
திரும்பிப் பாரையா
பருக்கப் பெருக்கத் திருக்கட் பாலரே
பரம நன் மனுவேலரே
படி மீதினிலடியேன் வெகு
பாவியாகினுங் கோவியாகினும் | திருக் |
1.மெத்தவு மறுதலித்த சீடனை
விரும்பிப் பார்த்தையே
சித்த மாகவே வலது கள்ளனைச்
சேணிற் சேர்த்தையே
எத்தனையினம் பாவிகட் கெல்லா
மிரக்கஞ் செய்தெனை பெருக்கமாகவே
எளியேனதி லொரு பாதகன்
எனை யாள்வ துனதுபாரமே | திருக் |
2. உலகத்தின் பவமனைத்தும் பொறுக்கு
முனக் கெனின் பிழை பெரியதோ
வலகர்த்த னுனின் பாடெமக் கல்லால்
வானவர் தமக் குரியதோ
வலதுற் குணர்களெமை யோ
சீல நற்குணர் கடமையோ
அன்பரைத் தேடி வந்தையோ உயிர்
நண்பரை நாடித் தந்தையோ சொலு | திருக் |
3. தேசுமிக்க மெய்த்திருக் குமாரனே
சீயோன் மணாளனே
பேசுதற் கரிதான தேவ
பிதாவி னாளனே
மாசறுத்துனின் வேதநாயகன்
வகுத்தப் பதத்தைப் பகுத்துப் பட்சமாய்
மட்டிலா மிகு துட்டமே புரி
கெட்ட பாவியை விட்டிடாமலே | திருக் |
-----------------------------------
எங்கெங்குஞ் சற்பனையோ யெவ்விடத்துஞ் சோதனையோ
அங்கங்கு முன்றுணையலா துண்டோ-நங்காவல்
அத்தாவென் கர்த்தா மேசையா யேசையா நீ
சற்றே யெனைப்பார் சரண்.
(இராகம்: செஞ்சுருட்டி) | (சாப்பு) |
சற்றே யெனைப்பாரு மென்
சாமி இரக்கமாய் நீ
துத்திய மகிமைப் பிரதாப
நித்திய திருக்குமாரா | சற்றே |
1.பெத்தலேம் பதியிலுற்ற
பிரபலத் தவிது வேந்தன்
புத்திரனென வந்துதித்த
சத்திய கிறிஸ்து ராசே | சற்றே |
2. சத்திய பராபரன்றன்
சமூகத்தில் மானிடர்க்கு
மத்தியஸ்த னாக நின்ற
மகத்துவ வஸ்துவே யையா | சற்றே |
3. சந்தத மடர்ந் தலகை
தந்திரமிடு தெந்தனுட
சிந்தையு மயங்கிஅறி
வுஞ்சிதறு தென் செய்குவேன் | சற்றே |
4. சொந்த வுடலும் பகை
பிறந்த வுலகும் பகை
அனந்த கோடியும் பகையில்
எந்த மோசமோ என்தேவா | சற்றே |
5. சிந்து முதிரத்தின் மாந்தர்
தீவினை யனைத்தும் நீக்கி
ஐந்து காயத் தடைக்கலத்
தருள் செய்யுங் கிருபையோனே | சற்றே |
6. கர்த்தனே யுமக் கேராமல்
நித்தம் நான்நடந்த பாவம்
எத்தனை யானாலுந் தீர்த்துச்
சத்துரு வானாலுங் காத்து | சற்றே |
7. வேதநாயகத்தின் பாடல்
மேவிய மேசையா நீயே
பாதுகாத்தெனைக் கண்ணோக்கிப்
பாதகமனைத்தும் போக்கி | சற்றே |
(1829-வரு)
-----------------------------------
ஓர் பாதகத்தில் வந்த வூழிவினை மாற்றிச்
சீர் பாதந்தந்த திறலோனே-பாரோர்
தினத் துதியுங் கீர்த்தனமுஞ் செய் தேவசிம்மா
சனக் கருணைப் பரா நீ.
(இராகம்: ஆனந்த பைரவி) | (சாப்பு) |
சிம்மாசனக் கருணைப்ரா பாவிக்குச்
சீர்பாதம் புகல் சுந்தரா ஆனந்த
தம்மால் மனுதனாகி விம்மாதெனை யிரட்சித்துச்
சும்மாக் கிருபைசெய்யும் இம்மானுவேலான | - சிம்மா |
1.பொன்னாட்டின் மெய்மன்னா ஆதிமுன்னா ளொரே
குடிக்குள் வரும் விக்கின விமோசன்னா பரமாசன்னா
திருவாசன்னா மாசன்னா போசன்னா ஓசியன்னா | - சிம்மா |
2. என்னாலுடல் தன்னால் வருமின்னா அயோ
மயக்குது தியக்குது விற்பன்னா விருத்த சேதன்னா
பெரியசாதன்னா நூதன்னா சோபன்னா ஆமன்னா மெய் | - சிம்மா |
3. தானா நெடுவானா பரமகோனா நரோர்
பவத்துயர் தவிழ்த்தருள் மெய்ஞ்ஞானா தேவசமானா
நன்னிதானா பிரதானா பிமானா சுபானா பொற் | - சிம்மா |
4. அந்தாதி யின்மைந்தா பாதகந்தாவு சோத
னைக்கடிகலைக்கக் கெடவுந்தான் நரகந்தாவி
வீனாய்விழுந்தே யழுந்தாது வந்தாள் சரண்சாமி | - சிம்மா |
5. கத்தா வொரு பத்தா பரிசுத்தா நித்திய
இராச்சிய வளத்துட சுபத்தா மாசத்துவத்தா
நேசத்திரித்துவா வொருத்துவா பரத்துவா மகத்துவாபர | - சிம்மா |
6. சராசர தயாபர பிதாவொரு
மகத்துவ மிகுத்தகுமாரா வரநரா
டொழுபதாராவு தாராவ தாரா வாதாரா பர. | - சிம்மா |
7. காத்திரா யூதர் கோத்திரா ஞான பாத்திரா வேத
சாஸ்திரி பதத்தில் வரு தோத்திரா நன்னேத்திரா
பரம சூத்திரா விசித்திரா சுபுத்திரா சுமுத்திரா செய | - சிம்மா |
(1825-வரு)
-----------------------------------
போராடுதே யலகை போட்டி சேய்யுதே யுலக
மோயாதுடலு மெதிர்க்குதே-வாராய் நீ
பத்தனை யாள் பரிசுத்தத்தினா தாரா
சத்திய தேவ குமரா.
(சங்கராபரணம்-வர்ணமெட்டு) | (ஆதி தாளம்) |
பரிசுத்தத்தினா தாரா பத்தனையாளும்
பரம தேவ குமாரா.
1.ஒரு சுத்த ஸ்திரி தந்த திருமா
மறை தொழு சருவேசா
உனதாசை கொண்டு வாடி
மெத்த வுருகிறேனே சா
பாதப மகரிகா மபமகரிசா நீ
பதநி சரிகமபா கமபா | - 2 |
மகரிசா சரிகமபா கமபதநி
சாதபம பாமகரிசா நீ பதநி. | - பரி |
2. நீ திரித்துவமும் நீ பரத்துவமும்
நீ கிறிஸ்திறையு மொன்றி நின்றவா சாமி
ஒப்பதிலா வொரு பிரமமே துரித மிகு
பாதகனை நீதிடத்தியே யுவந்தருள். | - பரி |
3. ஐந்து காயத்தைப் பார்த்து
பாத மாப காம ரீகா சரிகம | - ஐந்து |
ஆயனேயடியான் மேலே கிருபையாக
பாதப மபகம் பா மகரிச நித
பாதனிசரிகம பா சதபமகம | - ஐந்து |
அந்த மொடு குருதி சிந்த விலாவதிலும்
நைந்த இருபத மோடுந்து மிருகரத்தின் | - ஐந்து |
தாபா மபகமப தாபா மகரி சநி
தாபா மகமபம தாபா சநிதபம
தாபா சரிக சநி தாபா தநீரிசநி
தாபா சநித பம தாபா மகரிகம | - ஐந்து |
ஆராயினுமருள் செய் சீராதவிது வங்கிஷ
வேரா திருமறை யுத்தாரா பரமவதி
காரா கருணைசெறி நேரா நெடுநசரை
யூரா கிறிஸ்து வென்ற பேரா தெய்வகுமாரா | - ஐந்து |
சா ரிசநித சநிதபம கமபா
தப சநித பம கமா பதனி | - 2 |
பாபாப தாதாத நீநீநி சாசாச
ரீ ரீ ரி காகா சரிசா நிதா நீ | - 2 |
சககரிசநீ சரிசநிதபா
தநீதப மகா மபாமகரிசா
சக்கரிகம பபமத பசநீரி
சககரிக சரிரிரி சநிதப மாதபமகரிகம | - ஐந்து |
ஆயென தருமையிநேச மணவாளா
துய்ய மகத்துவ சுயாதிபனே | - 2 |
ஆலா மனோலா குணாலா கிருபாலா
முன்னூலா அட்செய திவிய காரணா | - 2 |
ஆதி மறையா ஆதரியையா
ஆளடுமை நானியேசு மேசையா
வேயுனது பாடுகளினாலெனது பாதகமே
லாமகல நீ கிருபையே செய்தருள் வாயபையம்
ஐந்துக் காயத்தைப் பார்த்து
ஆண்டருளுந் தற்காத்து
விந்தை தவிது கோவே
வேதநாயகன் பாவே
விண்ணோர்க் கனாதி தேவே
மெய்யானயே யோவாவே-பாத | - பரிசுத் |
(1828-வரு)
-----------------------------------
நின்னை மறந்தேனினதருளைப் போக்கடித்தேனே
பொன்னைச் சதமென்று போற்றினேன் - இன்னமென்ன
மெய்யையா பாவியைக்கைவிட்டு விடாதேயும்
ஐயையா நான் பாவியே.
(இராகம்: மலையாமி) | (திரிசுரதாளம்) |
ஐயையா நான் பாவி யென்னை
யாளுந் தயாபரமே
1.பொய்யாமுலக வுல்லாசத்தினால்
மனம் போன வழி நடந்தேன்
ஏசையா அபைய மபைய மிரங்கும்
ஏசையா வென்தா தாவே | ஐயை |
2. எத்தனை சூதுக ளெத்தனை வாதுகள்
எத்தனை கேடுகளோ யென
தத்தனை யென்பிழை யத்தனையும் பொறுத்
தாண்டருளுங் கோவே | ஐயை |
3. வஞ்சகமோ கரவோ கவடோ மாய்
மாலமோ ரண்டகமோ மனச்
சஞ்சலம் நீக்கி யெனக்கருள் செய்யும்
சமஸ்த நன்மைக் கடலே | ஐயை |
4. பொய்யும் பிரட்டு முருட்டுந் திருட்டும்
பொறாமையு மாணுவமும் விட்
டுய்யும்படி யருள் செய்யுமனாதி
யொரே கதிரித்துவமே | ஐயை |
5. உன்னை யெல்லாத்திலும் பார்க்கச் சிநேகித்
துனதடியார்களையும் பரிந்
தென்னைச் சிநேகித்திருப்பது போல்வர
மீயும் பராபரமே | ஐயை |
6. வேத புஸ்தகத்தை ராவும் பகலும்
விடா மற்றியானித்துக் கன
சேதன நூல் வேதநாயகன் பாட்டைச்
செபஞ் செய்கிறேன் காவே | ஐயை |
(1894-வரு)
-----------------------------------