ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

ஞான போராட்டத்தின் பேரிலே

 

281

 

வெண்பா

பொங்காதே மெத்தப்பு கையாதே வந்திட்டான்

துங்கன் தவீது துரைச்சாமி - சிங்கம்

அடடா பழைய சற்பம் சோதனை விட்டு

விடடா அதென சொற்பமே.

 

(இராகம்: சுருட்டி)

(ரூபகம்)

 

பல்லவி

அடடா பழைய சற்பமே சோதனை விட்டு

விடடா அதென சொற்பமே

 

அனுபல்லவி

விடமேறிய உனது முடியைத் தகர்த்துடைக்க

வேதனிதல்லோ வந்தார் வாதைப்படுவாய் போடா

அட

 

சரணங்கள்

1.அன்று பரன் சமுகம் நின்று கருவங்கள் கொண்

டகன்று நரகில் விழுந்தாய் பின்னுஞ்

சென்று விலகுங்கனி தின்று கெடுவதற்கு

திமை ஏவைக்கு மொழிந்தாய் அதற்கென

றின்று கிறிஸ்து வந்த தொன்றுமுணராதே நீ

இருடா இரு கண் கெட்ட

குருடா சமரிடடா

திருடா மெத்தத் துள்ளாதே

பொருடா புத்தி சொல்கிறேன்

அட

 

2. முந்தும் மனுடர் தமை நிந்தைப் படுத்த வேண்டி

முடுகிவனத்திலடுத்தாய் ஆதி

தந்த வரங்களை யிழந்து போவதற்கு

சதி கற்பனைகள் தொடுத்தாய் இப்போ

எந்தையுனையழிக்க வந்ததறிவாய் நிசெய்

இடக்கும் பவத்தினிச்சை

கொடுக்கும் அக்கினி அம்பைத்

தொடுக்கும் உனதுடைய

துடுக்கும் என்னடா செய்யும்

அட

 

3. அல்லும் பகலுமாகச் சல்லியரிக்கிராப்போல்

அரித்து மதிமயக்கிறாய் உயிர்

கொல்லும்படி மூவாசைத் தொல்லைகளை மனதில்

கொடுத்து மிகத்தியக்கிறாய் இன்று

வெல்லைப்பதியில் வந்த செல்லத்துரைமுன் உந்தன்

மெலுக்கும் ஒன்றுமில்லா வீண்

பிலுக்குங் குலுக்கு முடல்

அலுக்கும் நெடிய தலைத்

துலுக்கும் எங்கடா போகும்

அட

 

4. சிங்கம் போலக் கெற்சித் தெங்குஞ் சுற்றித்திரிந்து

தீமை செயத் தொடுக்கிறாய், கன

பங்கமான சிற்றின்பங்கள் மிகவும் காட்டி

பரம நன்மை தடுக்கிறாய் உன

தங்கம் பதறவென்ற துங்கன் தவிதெனக்குண்

டதத்துப் படபடத்துக்

குதித்துத் துடி துடித்து

மிதத்துக் கடுகடுத்து

மதத்துப் பேசாதே போடா

அட

 

5. மாட்டுக் குடிலிலே மேனாட்டுத்துரை பிறந்துன்

கேட்டைத் தொலைத்துப் போட்டார் குற்றச்

சாட்டுகளை யினிமேல் கேட்டுப் புறக்கணித்தேன்

தன்னை விடவுமாட்டார் கவி

தீட்டும் வேதநாயகன் பாட்டும் பெருக்கமாச்சு

சேரடா ஒரு கை வந்து

பாரடா தவிது வங்கிஷ

வேரடா உனை வெற்றி கொண்

டாரடா பத்திரஞ் சொன்னேன்

அடடா

(1825-வரு)

-----------------------------------

 

282

 

வெண்பா

மனது ருகிப்பாத மலரடைந்தேன் பாவி

உனது கிருபை பெற உன்னி-தினமே

சதியுலகும் பேயும் சமரிடு தையோ

இது சாமிக்கே தெரியாதா

 

(இராகம்: தோடி வர்ணம்)

 

பல்லவி

சாமிக்கே தெரியாத தா இது

ததி அன்பு கூர் நாதா

 

சரணங்கள்

1.சேமின், கருத்த ரான

தேவாதி சேயா சுந்தர

நாம மகத்துவ தேவ

ஞானக் கிறிஸ்து ராசேந்திர

 

தா நிசநிதா ரிசநிதா கரிசதா நிசரிசா

சநி தநி நிசசரி சசா நிதப ம

பதநி பதம பபக நிகரிச நிதநி சரிகம

கமபதநிச, நி க்கரி சரி நி

சா நிதபகா ரிசரி கா மபம

சாமி

 

2. ஓம் அருபியா சொருபியா உருபியா உதவியா

ஒரு பரமகுமர தயாநதிசரண்

உனத அதிசய திருவடிவே

உலகு கருவுது கடிகதறுது இரட்சியுமுடுகி

ஓசியன தேறுதல் செய் தாதரியும்

சாமி

 

3. தாமதிப்பே தென்பரா சறுவதிகாரா

காரி சாநி தாநிசா, தாநிதக்க ரீக சரிநி-தாம

சாதியார் கொடூரமே சூது சற்பனைகள் மிகுதி-தாம

காம ககரிசரீ ரீகரிரிசநிசா சாநிச சநித நீ

சாநி தபகம பதசரி

தாம

சாலவிடநினைவோ வாலகெறுவிதமோ

கேலிமதமொழியோ

சா நித்திய மனதுருகுது

தாம

 

பா தபம மா பமக கா ம கரிசா நி தநிசா

தநிசா நிசரி சரிகா ம

பத நீதப, கமத மக, ரிகமகரி ரிசரிகம பதநிசா

நிசரி நிச தநிப தமபகமக ரிரி சா

தநிப தநிசரி

தாம

 

சாதனைகளோ கவடமோ வினையமோ சமரமோ

(2)

சதியோ சரச பரிகாச

சகல வித நொடிபகிடி கிறுதுநகை புரிதல்பல, தவறுமே

தணியமரு, ளலகை பகைகள் சடுதியறவே

தயை செய் தருள்புரி

தாம

 

சா நி தநிசா, நிதநி நீத, மததா

பதநிதா தநிசதா தநிசரி

- 2

 

சா நிதப கா கமபத பாம கரிசா

நிதநிசரி சாரிகம மா க காமப்பம

காரி ரிக கா

த நிசரிகம சரிகம பத கமபதநிச

பதநி சரிச, ரிக்கரி, நிரிச

த நித பதப கமக ரிக்கரி

த நி சரிகம

தாம

 

சாதுரிய வேத சறுவேசுரபிதா

தவிது ராஜகுல மா மரியெனுந்

- 2

தாய் தொழுசுதா மனுடவதார உனதா

தரும மனு வேலரசனே சாலமுனது

தாசனடியேன்

ச முக ச னதி கடுகி முடுகி

மருகி மருகி அழுதுருகிறேன்

சற்றெனு முனது மனதிலருமை பெருமை

வைத்தருள் அபையம் அபையம்

தாம

நாம கீர்த்தன வேதநாயகனைக் கண்ணோக்கி

பூமி புரக்கவந்த புண்ணிய கிறிஸ்திராசேந்திர-தாநி

சாமி

(1836-வரு)

-----------------------------------

 

283

 

வெண்பா

சிந்தையை வீணிற் சிதறவிடாதே யலைந்து

தந்தலகைக் காளாய்த் தவியாதே-பிந்நி

விரும்பிநின்று மாயை விளைக்குஞ்சோதோமைத்

திரும்பிப் பாராதே நெஞ்சமே

 

பல்லவி

திரும்பிப் பாராதே சோதோமைத்

திரும்பிப் பாராதே

 

அனுபல்லவி

விரும்பிப் பார்த்து லோத்தின் பெண்டு

முரம்புப் புத்தூ ணானதைக் கண்டு

திரும்பி

 

சரணங்கள்

1.சந்தைக் கூட்டம் பொம்மலாட்டு மாதர்

சந்தடி செய்யும் சீராட்டு

விந்தை யான பேராட்டு மந்தை

வேடிக்கை யென்று விட்டோட்டு

திரு

 

2. செல்வத்திலே மெத்தச் செருக்கு நீ

செய்வ தெல்லாமுழுத்தி ருக்குப்

பல வழி நீரோட்டப் பெருக்கு ஏன்

பண்ணுகிறாய் இந்த முருக்கு

திரு

 

3. ஆக்கை அழியும் பங்கம்

மூவரசையும் வில்லங்கம்

காக்கை கழுகு கங்கம் தினக்

காத்திருக்குமுன் அங்கம்

திரு

 

4. அங்குமிங்குஞ் சுற்றித் தயங்கிறாய்யுல

காசையினால் மெத்த தியங்கிறாய்

சங்கடத்துட் பட்டு மயங்கிறாய் வீண்

சண்டாள ரோடே யேன்முயங்கிறாய்

திரு

 

5. பாதகரோ டொன்றுஞ் சொல்லாய் அவர்

பாதையிலே சற்றும் நில்லாய்

மாதரைத் தேடிச் செல்லாய் கெட்ட

மாங்கிஷ இச்சையைக் கொல்லாய்

திரு

 

6. ஆண்டவ ரேசு சகாயம் உனக்

கடைக் கலத் தைந்து காயம்

வேண்டிக் கொள்வது நேயம் கை

விடாதே இந்த வுபாயம்

திரு

 

7. வேதநாயகன் பாட்டை யேசு

மேசியாவின் மன் றாட்டைப்

பாது காக்குமோர் கோட்டை யென்று

பத்திர மாக்கிக்கொள் கூட்டை

திரு

(1820-வரு)

-----------------------------------

284

 

வெண்பா

உன்னதத்தை நோக்கி ஒருபொருளைச் சிந்தனைசெய்

பொன்னுலகைப் போக்கடித்துப் போடாதே-மின்னலொத்து

தாழ்வு தங்கும் பாழுலக சண்டாள மா மாய

வாழ்வை நம்பாதே மனமே

 

பல்லவி

மாய வாழ்வை நம்பாதே மனமே

வாதையாம் பொல்லாத விக்கினமே

 

அனுபல்லவி

தீயதுட்டப் பேய் நகைக்கத்

தீமை புரியாதே

மாய

 

சரணங்கள்

1.விந்தை மாதர் தந்தை தாயர்

மைந்தர் தானும் பெந்துள் ளோரும்

நிந்தை செய் தொழிந்து போவர்

தெந்தனம் பண்ணாதே

மாய

 

2. ஆடு மாடு வீடு வாசல்

மாட கூட மேடை யோடு

பாடு மூடுங் காடு சாடுங்

கேடு நினையாதே

மாய

 

3. ஆனை கொக்குச் சேனை மெயக்கும்

பானுதிக்கும் பனியொக்கும்

வேன லுக்கும் விழலுக்கும்

ஏன் மலைக்கிறாய் நீ

மாய

 

4. வாகு தங்கு போக சங்கை

மோக முங்கி யாக மங்கி

யே கலங்கி யே குரங்கி

நீ குரங்கா காதே

மாய

 

5. வாணிபங்களே மிகுந்துந்

தோணி வங்கமே புகுந்தும்

வீணிலங்க மேநினைந் திங்

காணுவங் கொள்ளாதே

மாய

 

6. பொட்டரிக்குஞ் சுட்டெரிக்கும்

துட்டர் கொட்ட மிட்டெடுக்கும்

நட்டமிக்கும் கெட்டலைக்கும்

பட்டிறக்கப் போறாய்

மாய

 

7. சூது பொம்மலாட்டைச் சாடு

துரோகமாகிய கேட்டைப் போடு

வேதநாயகன் பாட்டைப்பாடு

மேசியாவைத் தேடு

மாய

 

-----------------------------------

 

285

 

வெண்பா

பாவி நானையா பரதேசி பூமியிலே

சீவன் வழியில் என்னைச் சேராயோ-மூவரிலோர்

மெய்யான தேவன் மனுஷனென்ற மேன்மையே

சையா பிதாவே யானந்தா

 

பல்லவி

பிதாவே ஆனந்தா பிதாவே ஆனந்தா

பரதேசி ஐயா நானே பாதார விந்தந்தா

 

அனுபல்லவி

சதா நித்திய தஞ்சமே

வானின் சஞ்சீவி

சத்தியமே மேசையா ஓபர-பிதா

 

சரணங்கள்

1.மனோக்சியப் பரா பாவிக்குச்

சாலத் துயரே

(சால)

பாங்காய் எனைத் தேற்றி தேற்றி

இரட்சி சருவேசா

(மனோ)

அதிசய வஸ்து வான

தேவாதி தேவே

மங்கள காட்சியோர் பரதேசி-பிதா

 

2. சலாக்கியத்தினால் மாயைக்குச்

சாயப் படுமோ

(சாய)

தந்தாயெனை ஆற்றி ஆற்றிக்

கடாட்சி குருநாதா(சலா)

சறுவ சமஸ்தரான

யே யோவா நீயே

சங்கீத பூர்த்தியோர் பர -

பிதா

 

3. நல் வாக்கியத் திரு நெல்லையான்

பாட்டுக் கருளே

(பாட்டு)

வேந்தே யெனைச் சேர்த்துச் சேர்த்து

காப்பாய் மனுவேலே

(நல்)

உரிமைக் கிறிஸ்து வான

என் கோமானாரே

எங்கள் சங்காத்தியோர்

(பர)பிதா

(1850-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page