ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

சிலுவை என்ற உபத்திரவத்தின் பேரிலே

 

286

 

வெண்பா

வானிருண்டு பூமி நிலை மாறி கடல்சுவறி

ஆன பொருளெல்லாம் அழிந்தாலும்-ஞானபரன்

ஐந்துகாயத்தின் அடைக்கல முண்டானதினால்

நெஞ்சே கலங்காதே நீ

 

(இராகம்: தனசரி)

(ஆதி தாளம்)

 

பல்லவி

நெஞ்சே நீ கலங்காதே நான் என் செய் வேனென்று

நெஞ்சே நீ கலங்காதே சிமோன் மலையின்

இரட்சகனை மறவாதே.

 

அனுபல்லவி

வஞ்சர் பகை செய்தாலும்

வாரா வினை பெய்தாலூம்

நெஞ்

 

சரணங்கள்

1.வினை மேல் வினை வந்தாலும் பெண்சாதிபிள்ளை

மித்திரர் சத்துரு வானாலும்

மனையொடு கொள்ளை போனாலும்

வானம் இடிந்து வீழ்ந்தாலும்

நெஞ்

 

2. கவலைகள் மிகக் கொண்டாலும் பிசாசுகளைக்

கண்ணின் முன்னே கண்டாலும்

எவர்கள் துன்பஞ் செய்தாலும்

எதிரிகள் எல்லாம் வைதாலும்

நெஞ்

 

3. ஆதிசற்பம் பொரிந்தாலும் பொல்லாத பேர்கள்

அக்கினிபோ லெரிந்தாலும்

பாதியுடல் மெலிந்தாலும்

பட்டினியே கிடந்தாலும்

நெஞ்

 

4. பட்டையம் பஞ்சம் வந்தாலும் அதிகமான

பாடு நோவுகள் மிகுந்தாலும்

மட்டிலா வறுமைப் பட்டாலும்

மனுஷரெல்லாம் கைவிட்டாலும்

நெஞ்

 

5. சின்னத்தனம் எண்ணினாலும் நன்மை செய்யத்

தீமைதானே பண்ணினாலும்

பின்ன பேதகஞ் சொன்னாலும்

பிசாசு வந்து நாப்பினாலும்

நெஞ்

 

6. கள்ளனென்று பிடித்தாலும் விலங்கு போட்டு

காவலில் வைத் தடித்தாலும்

வெள்ளம் பிரண்டு தலை

மீதிலலை மோதினாலும்

நெஞ்

 

7. வேதநாயகன் எந்நாளும், பதங்கள் பாடும்

மேசியா வந்துன்னை யாளும்

ஏதித சத்தியச் சொல்வோ

இயேசு உன் ரட்சகரல்லோ

நெஞ்

 

-----------------------------------

 

287

 

வெண்பா

சொல்லாதானின்னைத் துதியாதானல்ல வழி

செல்லாதானன்மை யொன்றுஞ் செய்யாதான் - பொல்லாதான்

ஆனாலும் பாவியெனக்கன் பாய்ததுணைக்குவா

வானோர் பாடுஞ்சேயோவா.

 

(இராகம்: தீரசங்கராபரணம்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

வானோர் பாடுஞ் சேயோவா

மகிமைப்பிரதாபா வாதுணைக்கு

 

அனுபல்லவி

கானானாட்டுக் கரசதிகாரா

கோனார் சேட்டக் குமாரா எனக்கு

வானோர்

 

சரணங்கள்

1.காலா காலத்தரிய கிருபையே

கடிவினை கெடவந்தாயே நரர்

கோலத்தேயொளிர் தேவாதிசேயே

சாலத்தயவுசெய் நீயே எனக்கு

வானோர்

 

2. மைந்தர்க்குறவான அதிசய சமத்தே

தாவீதின் வங்கிஷத்தே வரு

சுந்தரத் தொருகனி யாஸ்திரி வித்தே

யெந்தைக் குறை கரிசித்தே எனக்கு

வானோர்

 

3. அடியேன் மிடியாரிடஞ் சென்று சொல்லவோ

அருமை ரட்சக நீ அலவோ பொரு

கடிமுடி பட மரித்துயிர்த்தெழும் வலவா

கணவனே சலாம் தலைவா எனக்கு

வானோர்

 

4. வானச் சிங்காரா மகத்துவச் சொரூபா

வந்தென் னிடத்திங்கி ருவா திவ்ய

ஞான போசனத் துருவா அருவா

மேன்மைக் கிருபாசனத் தொருவா எனக்கு

வானோர்

 

5. வெற்றித் தான மோக்கிஷ வழிகாட்டே

வேதநாயகன் பாட்டே அடி

பற்றித் தான் தொழ உவந்து கொண்டாட்டே

பரிந்து பேசும் மன்றாட்டே எனக்கு

வானோர்

 

-----------------------------------

 

288

 

வெண்பா

வேதனையும் நோவும் வியாகுலமும் அல்லாமல்

ஆதர வொன்றுண்டுமோ அகிலத்தால் - ஏதுசெய்வேன்

வந்தா தரி தாதா வஞ்சகனுக்குச் சந்த

தந்தாளிணை துணைதான்

 

பல்லவி

சந்த தந்தாளிணை துணைதான்

தாதா அடியனை ஆதரி பரி

 

சரணங்கள்

1.அந்தர வானொடு புவியுந்தரு காரணனே

ஆதிப் பர வெளியே அருள் மிகும்

சோதித் திரு வொளியே

அடியேனலிந்தேன் மிடியால் மெலிந்தேன் உன

தன்புற்று நோக்கியென் றுன்பத்தைத் தீர்த்தருளும்

அற்புதமேவு பரப் பிரம தேவனே

தாந்தாந் தக செந் தரிகிட

தீம் தாந் திரி நாதிரிகிட தில்லானா

தாந்தாம் தரிகிட தீம் திரு

டெகு டகுச் செணு

சுகிர்தத் ததிங் கண தோம் - சந்

 

2. புத்தியிலா தலைமிருகத்திலுங்கேடானேன்

பூமியின் பாரத்திலே அழுந்திய காமவிகாரத்தினால்

புலையே புரிந்தேன் நிலையே பிரிந்தேன் கன

புண்ணியனே திருக் கண்ணோடு பார்த்துனின்

புத்திரனுக்காயிந்த சத்துருவைக் காத்தருள்வாய்

தாந்தா

 

3. அந்திபகல் அனுதினமுந்துயரமுறுதே

அஞ்சல் செய்வாரிலையே அடையலர்

வஞ்சகம் தீரலையே

அகலா தலகை இகலேசெய்யுதே நிதம்

ஆதரித்தன்புடன் பாதுகாத் தெந்தனை

ஆண்டருளும் சுவாமி வேண்டிக்கொள்ளுகிறேன்

தாந்தா

 

4. தஞ்சமுனாதர வருள் எஞ்சலிலாதசமு

தாயமன்றாட்டவே நெல்லை வேத

நாயகன் பாட்டாவே

தருவாய்திடனே வருவாய் உடனே வந்து

தப்பாமற் காத்தருளும் இப்போதும் எப்போதும்

சங்கீர்த்தனம் வந்தனம் கிறிஸ்தேசுவே.

தாந்தா

(1825-வரு)

-----------------------------------

 

Table of contents

previous page start next page