ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

கிறிஸ்துவுக்கும் மனைவிக்கும் ஐக்கியம்

 

315

 

வெண்பா

முன்னவாழவா முதல்வாவொரே யோவா

மன்னவா சீவா மகா தேவா-வென்னவா

வத்தா சுபத்தா வருபத்துரு பத்தா

கர்த்தாபர்த்தா வெனைக் காவா.

 

பல்லவி

கர்த்தா பர்த்தா வெனைக்கா

மேசியா சருவேசா

கானான் ராட்சிய பாரத் தீசா

தாவீது குமரேசா.

 

சரணங்கள்

1. மார்த்தாள் மரியாள் பணி செயும்

வித்தாரக் கிருபை நேசா

மாசிலாப் பிரஸ்தாப வுச்சித

இரட்சக ரேசு ராசா.

- கர்த்தா

 

2. முன் னாளதமே வைபவத்தை

மாற்ற வுதித்த வஸ்துவே

மூடாற் றுமத்தின் கேடாற்றி யெனை

யீடேற்றியருள் கிறிஸ்துவே.

- கர்த்தா

 

3. மானார் கோனா ரும் போற்றி

வணங்கும் பொற்றாளா

சீனாச் சியோன் மலை வரும்

ஞான மனவாளா.

- கர்த்தா

 

4. மாட்டுக் கொட்டினில் வந்த

ஆட்டுக் குட்டி யரே

காட்டி நின்னருள் பூண்டியன்புபா

ராட்டிக் கொள்வீரே.

- கர்த்தா

 

5. சொந்தச் சீவனை யாட்டுக்காகத்

தந்த நல்லாயனே

துக்கப்பட்ட நராட்க்களை யிரட்

சிக்க வந்த சகாயனே.

- கர்த்தா

 

6. ஆதமம் மணனே வையம் மணி

நானும் நிறுவாணி

யானாலுமெனை மீட்டுக் கொண்டெனை

யாண்ட கண்காணி.

- கர்த்தா

 

7. அசரீரி ஓவுதாரி

ஆறோனாசாரி

யாதரி பராமரி வி

சாரி தற்காரி.

- கர்த்தா

 

8. வானோர் நெடுவானடு வினி

லாட வந்தமேசையா

வந்தனை தந்துனை வேதநாயகன்

பாட மகிழ்ந்த வேசையா.

- கர்த்தா

(1825-வரு)

-----------------------------------

 

316

 

வெண்பா

சங்கையின் ராசா வந்தார் தாமதமிலா தெழுங்கோ

செங்கையினிற் றீபம் வைத்துச் செல்லுங்கோ-பங்கமன்றி

மங்கலஞ் செய் வீடடைந்து மங்களங்களாய் விளங்கு

துங்க மிஞ்சு ஞான சுந்தரி.

 

பல்லவி

ஞானச் சுந்தரியா ஞானச்சுந்தரியா

ஞானச் சுந்தரியா

நாசரேனு நங்கையே நாசரேனு நங்கையே

நாசரேனு நங்கையே ஞானச் சுந்தரியா.

 

அனுபல்லவி

வானச் சந்தி ரீகைப் பத

மானத் திலங்கு சுந்தர.

- ஞான

 

சரணங்கள்

1. சங்கையின் ராசா வந்தார்

மங்கலமே யுவந்தார்

அங்க மகிழ்ச்சி யாவோ

மங்கெதிரா கப் போவோம்.

- ஞான

 

2. ஞான தீபம் விளங்க

நாதன் மறைமுழங்க

மானுவேற்கு மனம் வை

மானே மணக் கோலஞ் செய்.

- ஞான

 

3. வேதநாயகன் பத

மேசியாவுக்கே யித

மாதுனக்கான வேலை

மாறாத செபமாலை.

- ஞான

 

-----------------------------------

 

317

 

வெண்பா

தேசுலவு மேலாந்திரித்துவத்தி லொன்றான

மாசில்லா ஞான மணவாளன் - மேசியா

நேசக் கருணை நிரம்பியெனை மீண்ட

வாசைக் கிறிஸ்தாசனோ.

 

(இராகம்: கேதாரகௌளம்)

(ஆதி தாளம்)

 

பல்லவி

ஆசை கிறிஸ்தரச னிவர்தானோ வென்றன்

அருமை ரட்சக ரென்பதிவர் தானோ

 

சரணங்கள்

1. மாசில்லாத சித்திர பானு போலுதிக்கிறார்

மகிமைத் தமது திருவசனத்தை விதிக்கிறார்

வந்தெனை முகம் பராரா

மனத்துயரத்தைத் தீராரா

மாட்டாரா கைவிட்டுப் போட்டாரா

மாட்டுக் கொட்டிற்குளிவர் வந்த தென்னமோ.

- ஆசை

 

2. அழகினில் ராசகுமாரனைப் போலே யிருக்கிறார்

அன்பான பார்வை யாலென்ன கத்தையுமுருக்கிறார்

ஆற்றுமத்தகை மீறுதே

யாசை விண்ணுலு மேறுதே

அற்புதமோ தெய்வ வுற்பனமோ

ஆச்சரிய மாயெனை மீண்டாண்ட தெய்வமோ.

- ஆசை

 

3. அத்தன் றிருச் செயலைப் புத்தி யெப்படி கொள்ளும்

ஆண்டவன் கிருபைக் கென்னக மக்களித்துத் துள்ளு

ஆராய் வில்லாத வாழமே

அளவிலடங்காத நீளமே யவர்

அன்பது மின்பமதும்

ஆச் சரியமாய் பிரமிப் பாக்கி வைக்குதே.

- ஆசை

 

4. கர்த்தன் றிருவுடலிற் காயமைந்திருக்குது

கங்குல் பகலு மாயென் கருத்தினை யுருக்குது

காணாத வாட்டை நோக்காரா

கண்டு பிடித்தாற் றூக்காரா அவர்

கற்பனையும் விற்பனமுங்

காட்சியாகத் தோன்றி யென் கண்ணுக்குள் நிற்குதே

- ஆசை

 

5. வேத நாயகன் சொன்ன பாட்டைக் குலாவுகிறார்

மிக்க சபையினடுவே வந்துலாவுகிறார்

மேனியெல்லாம் பசும் பொன்னா

மெய்யாக வானத்தின் மன்னா இவர்

விண்ணோர்க்கு மண்ணோர்க்கு

மேவி நடுவாக வந்த மேசையாவோ

- ஆசை

 

-----------------------------------

 

318

 

வெண்பா

காதல் மிகுந்தேன் கருத்திலுனைத் தேடினேன்

பேதை மனது பிரலாபித்தேன் - வாதையுற்றேன்

ஏகா லட் சந்தரஞ் சங்கீர்த்தனங் கீர்த்தனமே

நீகாட்சி தாராய் மனா.

 

(இராகம்: பைரவி)

 

பல்லவி

நீ காட்சி தாராயோ மனா நினை நம்பினோனா

னிமலனே யிதுவேளை சாமி

 

சரணங்கள்

1. ஆகம குல ஸ்திரி தவிதேந்திரனின் றனைய

ஆதியானந்தனே கிறிஸ்தேந்திரா சவுந்திரா

நீசநிச நீரிதப மாபதப மபகாரிச

நீசரிகசா ரிகமபா கமபதாபம பத

பதபதநி தநி சநிசரிச

நிசரிகரிச நிரி நீதப

பதநிசா நிதப மப தமாக ரிச

நிசரி காம பத

நீ காட்சி

 

2. அந்தி பகலுனை நாடி யென்

சிந்தை மிக மெலிந்தே தினம்

ஆசை விசுவாச மனநேச மிகுபாச முறவு

மெனினிருதயமுருகுது மன

ததிசய பரவசமாகுது

அபையமே யுனது கிருபையே செய்ததி

அருமை ரட்சகனே நீ சாட்சி

 

3. மாறாதுலகம் வாதையா

தாளேன் மேசையா

மாகா மரி கரி நீரி சாநிதா நிசரிக... மாறா

வாதாடியலகை சீறியே பொருதென் செய்குவேன்

மாமபமமகரிகாக மககரிசரீ

ரிகரிரிசனி சாநிதனி சரிக

மாறா

மாதுடவினை யெனமோ உடலது பகையே

மனமுறிவுளதே யொருவிதமல

மாறா

பாநிததபம கரிகம பாதமப கமகாரிச

பாதநி சரிநி சரிகம பாநிதப மகரி சரிக

வாம மதிமுகமுலருது பூமி தனிலொரு துணையிலை

தாமதமெனவதி விரசா சாமி திருவுளமுருகையா

தாபா மாகரி சரிகம பதபா

மபமகமகரி சநி தபா

தநி சரீகமப தபா

தநி சரீகமப தபா

ரிகம பதநி பதமத பா

தநிசநிநி தததப தபா

தநிசரி நிரிசாநி தபா

கரிசரி சநி ரிநி தபா

மபதரி கம பதநி தபா

மாகரி மகசரிக

மாறா

வரேசா பரமனொரு குமரேசா

வாரடி பரவுசருவேசா

மறைநெறி யினு பதேசா

மனுடரினதி பிரிய நேசா

வரையிலதருள் கிருபை விலாசா

மகதலைமரி பாவ நாசா

மகிமை வலமையினு லாசா

மனுவேலெருசலை மகாராசா

ஓசனா வடிசரணே

மாறா

சாபா தநிச நீதப மகரிநிசா

பாதநிசரி சரி கம பதநி

சாநி தபத நீதப மபதாபம கமபாமகரிச

சபாத சரிக சாரிகம பகமா பதநிதாமபத

சரிகாரி சநி தாநி பாதமாபகாம பதநிசா

ரிககரிசரிச தசத பதப

கப்பகரிகரிச நிதநிசரிக

மாறா

வானோர் தொழுபரா திவிய திருவுருவே

பார்வினை கெட வருமதிசயமே

ஆதரிபரி பாதருள் புரி சேதன கிரிமாதனை மரி

குலாவி மகிழ் சுதா மறை முதல்வனே யருபியாமுனத

திரியேக சருவேசுரா மெய்யான தேவனே சகல

வஸ்துவு மகில புவனமுள வெச்சிஷ்டியு

மறுதின மதிலருளிய பர.

மாறா

ஆறுதல் செய்தெனை யரவணைத்தாற்றுவாய்

அன்பாய் வேதநாயகனருள் பரப்பிரதாபா நீசரிச

நீ காட்சி

(1835-வரு)

-----------------------------------

 

319

 

வெண்பா

அத்தன் திருவுளத்தாலாதி நரர் பாதகத்தால்

மெத்தத்தயைப் பெருக்கின் வெள்ளத்தால்-பெத்தலேக

கானகத்தில் வந்தவரே கற்புடைச் சீயோனே

வானத்தனாரே மகிழ்.

 

(இராகம்: செஞ்சுருட்டி)

(ஏகதாளம்)

 

பல்லவி

வானத்தனாரே மெஞ் ஞானத்தனாரே

சீயோன் மானுக்கம் மானத்தனாரே

 

அனுபல்லவி

கானகத்திலே வந்த மேன்மைச் சிங்கேறே

சீயோன் மானுக்கம் மானத்தனாரே.

- வான

 

சரணங்கள்

1. மாறாக் கருணையாரே வலிய வந்தாரே

மாட்டுக் கொட்டிற் பிறந்தாரே ஐயா

பேறு தந்தாரே பெத்லே மூராரே

சீயோன் மானுக்கம் மானத்தனாரே.

- வான

 

2. வாக்குத் தத்தத்தாரே வல்லபத்தாரே

வானத்தினின்று வந்தாரே மா

பாக்கியத்தாரே பக்கிஷத் தாரே

சீயோன் மானுக்கம் மானத்தனாரே.

- வான

 

3. ஆட்டுக் குட்டியாரே ஆனந்தத்தாரே

காட்டுக்குளே பிறந்தாரே வந்து

மீட்டுக் கொண்டாரே வேடிக்கையாரே

சீயோன் மானுக்கம் மானத்தனாரே.

- வான

 

4. அந்த நற்கோனாரே ஆதித் கோனாரே

கந்தைத் துணியைக் கொண்டாரே பல

விந்தைக் கோனாரே வேதக் கோனாரே

சீயோன் மானுக்கம் மானத்தனாரே.

- வான

 

5. நல்ல மெய்க் கத்தாவே ஞானப்பத்தாவே

வல்லமைத் தேவாதி தேவே ஓகோ

துல்லிபக் கோவே தோத்திரப் பிதாவே

சீயோன் மானுக்கம் மானத்தனாரே.

- வான

 

6. ஆகமத்துரையாரே அன்புவைத்தாரே

சோகு சர்ப்ப மிதித்தாரே ஓகோ

ஏசு வஸ்தாரே யிஸ்திரி வித்தாரே

சீயோன் மானுக்கம் மானத்தனாரே

- வான

 

7. சாதியை மீட்டாரே தள்ளமாட்டாரே

வேதநாயகன் பாட்டாரே ஓகோ

பேதைக் காட்டாரே பேதங் காட்டாரே

சீயோன் மானுக்கம் மானத்தனாரே.

- வான

 

-----------------------------------

 

Table of contents

previous page start next page