துன்பந் தொலையாதோ சோதனைகள் மீளாதோ
வன்பின் மனக்கவலை மாறாதோ-வன்பாய்க்
கரமே விரித்துக் கழுக்குருசின் மாண்ட
பரமே கண்பார்த்திரங்கு வாய்.
பரமே பரமே தேவா பரதாபம் (மாதேவா)
பார்த்திரங்கே.
கருணாகரமே யோவா கனிவாயென்
முன்னெருங்கே | பர |
1. அருட்பிரகாசமே அதிசய நேசமே
அத்தனாரே யென்கோ ஆண்டருளே (அப்பாவே)
ஆண்டருளே | பர |
2. ஒரு பரமேயல்லா திருவருளே வல்லா
ஒப்பிலானே யெந்தாயுன்பதந்தா ஓகர்த்தா
உன்பதந்தா | பர |
3. படிபகை கூறுது கடி மிகச் சீறுது
பத்தனானே அன்பாய்ப் பரிந்திரங்கே பர்த்தாவே
பரிந்திரங்கே | பர |
4. ஆசறுவாதமே தேசுறுபாதமே
அப்பனாரே தந்தானந்தந்தாவே (ஆ திரித்துவா)
னந்தந்தாவே | பர |
5. அருளெல்லையான சுதா திருநெல்லையான்பாதா
அச்சுதா மா சங்கா ஆற்றுமதேவா (மகத்துவா)
ஆற்ற வாவா | பர |
(1837-வரு)
-----------------------------------
வாடித்தவித்து மனது ருகி நின்பாதந்
தேடியடைந் தேன் திருவுளமே- கோடி
உரமிகு மெஞ்ஞானத் தொரு தேவ தேவ
பரம பிதாவே கண்டார்.
(இராகம்: முகாரி) | (ஆதி தாளம்) |
பரம பிதாவே கண்பாராயோ
பாராயோ கிருபை கூராயோ
பார்த்தென் கவலையெல்லாந் தீராயோ.
சரமசரங்க டொழுஞ் சருவேசுரா
தந்தாய் நின்சரண் சரணந்தாதியே. | - பர |
1. பொன்னுல கமுமக் காசனமே
பூதலத்தின் ஞான போசனமே
உனனதத்திருக்கு மொன் றானதேவே
உத்தமகர்த்தனோர் யோவாவே. | - பர |
2. அரூப சொருபி அருபாரூபி
அற்புத சகல நன்மைப் பிரதாபி
கருணைச் சுயம் பிரகாச பரப்பிரமமே
காத்தருளுந் தஞ்சம் திருவுளமே. | - பர |
3. நீதானென் குல தெய்வமுன் னோனே
நெல்லை வேதநாயகன் சொன்னானே
வேதா வேதாந்தப்பழம் பொருளே
மேசியா முகம் பார்த் தெனக்கருளே. | - பர |
(1880-வரு)
-----------------------------------
துன்பத்தால் பேயிறுட சோதனையால்பாழுலகில்
இன்பத்தால் ஓடிவரும் எண்ணத்தால்-வன்பிற்
கரணமயங்கிக் கலக்க முற்றேன் காப்பாய்
சரணையா யேசுநாதா.
சரணையா தேவ சங்கையி னேசுராஜா
கருணையே யோவா காட்சியுன்னத வாசா | - சர |
1. சம்பத்து வாழ்வே துன்பத்திற் காவே
சாதிக்குத்தேவே தாவீது (மனுடர்) கோவே. | - சர |
2. சத்தியநாதா ஞானப் பிரசாதா
நித்திய போதா நீதா நீ (சதா) தாதா. | - சர |
3. அந்தா பாதார விந்தா சுகந்தா
சந்தா பதந்தா தற்பரா (நே) னந்தா. | - சர |
4. பாவத்தை நீக்கி சாபத்தைப் போக்கி
ஆபத்திற் றூக்கி யாளாக்கி (என்னை) கொளையா.
5. நீதி மன்றாட்டா நித்திய கொண்டாட்டா
வேதநாயகன் பாட்டாரே (நெல்லை) நீரே. | - சர |
(1837-வரு)
-----------------------------------
பாவியடியார் படுந்துயரங் கொஞ்சமோ
தேவரீர் சித்தந் திரும்பாதோ - தீவிரமா
யோசிய னாரட்சியு முன்னதப் பராபரனே
யேசு கிருபாசனா.
யேசு கிருபாசனா நேசமனா
யேக பராசரணேகதி ஒசியன்னா.
ஆசறு பாவவி மோசன்னா
ஆ மனா மனா. | - யேசு |
1. வானத்திருந்து வந்த வலமைச் சீமானே
மனத்துயரந் தீர்க்காயோ கோனே. | - யேசு |
2. அருமைக் கிறிஸ்தென் ஆசை மேசையா
ஆபத் ததிகரித்துதையா. | - யேசு |
3. சிறுமை காயோ சீவப்பிரானே
சீயோனை மணஞ் செய்த பெருமானே. | - யேசு |
4. நெருக்கப் படாமல் நேருங்குதாவே
பெருக்கத் தருள் செய்யும் பிதாவே. | - யேசு |
5. துன்பத்தை மாற்றும் துயரறத் தேற்றும்
அன்புப் பெருக்கிலணைத் தாற்றும். | - யேசு |
6. நம்பினேன் பாதம் ஞானாசீர்வாதம்
எம்பரா அருள் வரப்பிரசாதம். | - யேசு |
7. வேதநாயகன் பா மேவுபேரின்பா
ஆதி பராபரமே யன்பா. | - யேசு |
(1835-வரு)
-----------------------------------
வராத வினையும் மரணத்திகிலும்
புராதன மிராத துயரும் பூண்டேன் - பராபரனின்
சேயே யருள்புரியே தேவ கிறிஸ்திறையே
நீ யேயெனையாள் பரா.
(இராகம்: அசாவேரி) | (ஆதி தாளம்) |
நீயே யெனையாளும் அம்பரா
மனுடாவதாரா.
நேயே வானினின்று வந்தாயே பராபரன்றன்
சேயே கிருபை புரிவாயே என் முன்னிற்பாயே
1. ஆதியனந்த பரஞ் சோதி திவ்விய
அருமைக் கிறிஸ்து வேயென் நீதி
சாதியனைத்து மீட்க மாதின் வித்திலுதித்த
ஏதமில்லாத யேசுநாத ஜீவாதிபதி. | - நீயே |
2. அந்தா அனாதிபிதா மைந்தா அடியார்க்
கருள் புரியும் பாதார விந்தா
நந்தா தருள் செயுமனந்தா பாவிகளுக்குச்
சொந்தா சமையமிது வந்தாளுனக் கபையம். | - நீயே |
3. துங்கா சுவிசேடப் பிரசங்கா மருள்
துன்னுங் கொடுமையின் காலங்கா
மங்கா வரப்பிரசா னங்கா மரணவேளை
பங்காக நின்றருள் செயுங் காரணப் பிரதாபா. | - நீயே |
4. துக்கக் கவலை யொருமிக்கக் கூடித்
துன்னும் விசாரத்தாலே வாடி
அக்கிரமத்தின் கிரிகை மிக்கப் பெருக்கமாகி
அந்த காரத்தின் மக்கள் கொந்தளித்து நிற்கிறார்கள். | - நீயே |
5. ஈட்டுத்திற மிலானைக் கூட்டு பரம
நாட்டுக் கிருபையைப் பாராட்டு
மாட்டுக் கொட்டிற்குள் வந்த
ஆட்டுக் குட்டியுனக்கு
நீட்டுப்புகழ் நெல்லையாள்
பாட்டுப் படிக்கிரங்கி. | - நீயே |
(1835-வரு)
-----------------------------------
அன்பாக வந்துன்னடி மையைத் தற்காத்து
வன்பாவந் தீர்த்து வரந்தாரும்-இன்பப்
பரர்க் கேபிரியப் பரம சருவேசா
நரர்க்கே யருட்பாலா.
(இராகம்: ஹரிக்காம்போதி) | (திச்ரஏகம்) |
நரர்க் கேயருட் பாலா
நன்மைச் சருவேசா
நாதர் க்கொரே பாலா வுண்மைச் சருவேசா.
1. கருத்தா யென்னாதா உருத்தாய் நீ வேதா
காத்தருள் தாதா உண்மைச் சருவேசா. | - நர |
2. ஆதார னந்தா பாதார விந்தா
ஆனந்தானந்தா உண்மைச் சருவேசா.
3. இம்மானு வேலே இசரேல் செங்கோலே
யிரட்சியுமன் பாலே உண்மைச் சருவேசா.
4. சத்துருவை நீக்கும் வெற்றியுண்டாக்கும்
தமியர்பவம் போக்கும் உண்மைச் சருவேசா.
5. அன்பாக வாரும் துன்பேதந் தீரும்
ஆ தரித்துக்காரும் உண்மைச் சருவேசா.
6. மிக்கான அன்பா மேலான நண்பா
வேதநாயகன்பா உண்மைச் சருவேசா.
(1831-வரு)
-----------------------------------
ஏதோ வெளியன் இடுக் கந்த விர்ப்பதற்கு
வாதோ மனது வரலையோ-தாதா
திடுக் கிடக்கைப்ப்பிள்ளை களைச் சீடர் சினந்துந்
தடத்தருள் செய்யுஞ் சீவனே.
(இராகம்: காமஸ்) | (ஆதி தாளம்) |
சீவனேசு கிருபாசனா என்
சிறுமை தீர்த்தரு ளோசனா
என் சிறுமை தீர்த்தரு ளோசனா
என் சிறுமை தீர்த்தரு ளோசனா
1. காவிலாதி செய் பாவ மூடவே
கடிய பேய் நர கோடவே
பூவு ளோருமைப் பாடவே பரி
பூரணக் கிருபை நீடவே. | சீவ |
2. தொண்டர் பாதக ரண்டகங் கெடத்
துயரமே படு மத்தனே
தெண்டனின் சரணண்டினே னெனின்
தீமைதீர் பரிசுத்தனே ஜீவ | சீவ |
3. அடியாடி பெற அலகை யழல்விழ
அரிய பொன்முடி கொடுபட
படியினான் படு கொடிய இடர்கெட
பலது தீமையு முறிபட | சீவ |
4. சிந்தையோ டுனைப் பாடுந் தேவ
சிகாமணி எலியாவை யே
தந்தையே அவ னாவையே அ
வாவையே யுரை மேவையே | சீவ |
(1859-வரு)
-----------------------------------