குருக்கள் பகையாய்க் கோவிலு மிரண் டாய்
நெரு க்கமனுப விக்கும் நேரம்-இரக்கமே
அந்தர மானோ மாருதவியுங் காணோம்
தந்தையே நின்றாள் சரண்.
(இராகம்: சயிந்தவி) | (திச்ர ஏகம்) |
தந்தையே தருணங்காவே
சந்ததம் வந்தன மெய்த்தேவே
1. சுந்தரக் கிருபாசன்னா
தூய ஞானா சூரியசம் பன்னா | தந்தை |
2. நெருக்கப் பட்டுப் பரதபிப்போரே
நேரிட்டு நம்மை நோக்கு மென்றீரே | தந்தை |
3. எங்கணுஞ் சிதறிப் போனோம்
ஏழையும் நிர்ப்பந்தருமானோம் | தந்தை |
4. ஆதரிப்பா ராருமில்லை
அம்பரா கிருபையாக முன்னில்லே. | தந்தை |
5. கெட்ட மக்கள் நாங்கள் தானே
கிருபை கூருமையா தம்பிரானே. | தந்தை |
6. பாவத்தாலே முற்றிலுங் கெட்டோம்
பாதமே கதிகை விடப் புட்டோம். | தந்தை |
7. சத்தியப் பரம பிதாவே
தாமதியாதே யுமையாவே. | தந்தை |
8. சாதிகனிலைமைக் கெடாமல்த்
தாங்கி யாதரிப்பாய் கைவிடாமல். | தந்தை |
9. யேசுவின் முகத்தைப் பாரும்
இக்கட்டாபத் தெல்லாத்தையுந் தீரும். | தந்தை |
10. வேதநாயகன் சொன்ன பாட்டு
மெய்ப்பரா அடியார்கள் மன்றாட்டு. | தந்தை |
(1834-வரு)
-----------------------------------
காக்கக் கடனிலையோ கண்ணுறங்கு கின்றாயோ
கேட்க வெகுதூரங் கேட்காதோ-கோக்கோ
தனை தீண்டனுக்கிரகித்துத் தந்த பொருளே
யெனை யாண்ட மெய்த் தெய்வமே.
எனையாண்ட பொருளே
உந்தனா சீர் வாதந்தா வையா.
அனையே தந்த வினையே சிந்த
தனையே தந்தெந்தனையே மீண்டதுவே. | - எனை |
1. தந்தைனாதி தந்த குமாரா | - எனை |
சுந்தர மேவிய மனுடவதாரா
எந்தை யேசுநாத சுவாமியே. | - எனை |
2. மாது பொருட்டின் வாக்குத்தத்தா
பாதக மற்ற மகா பரிசுத்தா
வேதமளித்த வொரேயொரு கர்த்தாவே. | - எனை |
3. நெருக்கப்படும் நேரத் தெமை நேரிட்
டுருக்கமாகக் கூப்பிடு மென்ற
பெருக்கத் தேவ பிதாவின் றிருவுளமே. | - எனை |
4. அந்தரமா னோமாரை யுமறியோம்
தந்தையர் தாயர் மைந்தரும் வீணே
எந்தை யாபரா இரட்சியு மேசையா. | - எனை |
5. நம்பினர் வீணே நாடினர் வீணே
அம்புவியின் கண்ணாத ரவில்லை
எம் பராபரா கருணாம்பரமே. | - எனை |
6. கொடுமைக் காலங் கூப்பிடுகின்றோம்
மிடிமைப் பட்டோம் வேதனை மெத்த
அடிமைக் காரோ அருமைக் குலத் தேவே. | - எனை |
7. வேலிப் பயிரைத் தின்கத் தோன்றின
மேய்ப்பர்களாட்டைச் சிதற வடித்தார்
ஓலம் ஓலம் உரிமைச் சருவேசா. | - எனை |
8. மேய்ப்பர்கள் தங்களை மேய்த்துக் கொண்டார்
மூப்பர்களுக்கு ணீதி யுமில்லை
காப்பது கடனே கருணைத் திருவடிவே. | - எனை |
9. ஆடுகளெங்குஞ் சிதறிப் போனது
காடுகளெங்குந் தேடிப் பாரும்
ஓடின வாட்டி னொற்றைக் கோனாரே. | - எனை |
10. பார்ப்பாரில்லைப் பரிவாரில்லை
கேட்பாரில்லைக் கேள்வியுமில்லை
மூப்பா நீயே காப்பாய் குருநாதா. | - எனை |
11. நெல்லை வேதநாயகன் பாவா
வல்ல தேவா மகிமைக் கோவா
அல்பா ஓ மேகா வேகாவாவே. | - எனை |
(1835-வரு)
-----------------------------------
ஆயாடங் கொண்ட தினாலாடுகளெல்லாஞ் சிதறிப்
போயலைந்து காடுகளிற் புக்கினதாற்-றேயமெங்கும்
கஸ்திப் படுகின்றோங் காப்பாற்றுங் கர்த்தாவே
இஸ்திரி வித்தேசையா.
(இராகம்: சைந்தவி) | (அடதாள சாப்பு) |
ஓ இஸ்திரி வித்தேசையா
அன்பு கூராய் துன்பந்தீராயோ.
வஸ்தொரே கிறிஸ்து வேதா
மானுவேலே யேசுநாதா
வந்தெமைக் கிருபைக் கண்பாராயோ. | - ஓ இஸ் |
1. ஆதி மானிடர் புரிந்த
பாதகந் தொலைக்க வந்த
அண்ணலே யுமக்கபையமே
ஓ இஸ்திரி வித்தேசையா
ஆதரித் திரங்க வேண்டுமே. | - ஓ இஸ் |
2. சத்துருச் சோதனை போலே
மெத்தவுங் கவலையாலே
சஞ்சல மதிகரிக் குதே
ஓ இஸ்திரி வித்தேசையா
தஞ்சமே தந்தஞ்சல் கூருமே. | - ஓ இஸ் |
3. எங்கணும் பகைக்கப் பட்டோம்
மங்கியேது யரிற் கெட்டோம்
இரட்சகா இரட்சியுங் கர்த்தாவே
ஓ இஸ்திரி வித்தேசையா
இத்தனை தாமதமேதையா. | - ஓ இஸ் |
4. எத்தனை மனக்கிலேசம்
நித்தமும் சத்துருக்கள் மோசம்
எந்தையே கைவிட்டு விடாதேயும்
ஓ இஸ்திரி வித்தேசையா
எப்படியுங் காத்தருள் மெய்யா. | - ஓ இஸ் |
5. கெட்டுப் போன மக்கள் தானே
இஷ்டப் பிரசாதக் கோனே
கிருபையாயிருஞ் சுவாமியே
ஓ இஸ்திரிவித் தேசையா
கிறிஸ்துவே உமக் கோலோலமே | - ஓ இஸ் |
6. பெருக்கத் துயரஞ் சூழ்ந்து
குருக்கள் பகையுஞ் சேர்ந்து
நெருக்க மனுபவிக்கிறோம்
ஓ இஸ்திரி வித்தேசையா
நெஞ்சக முருக வில்லையோ. | - ஓ இஸ் |
7. ஆடுகள் சிதறிப் போச்சோ
அன்னியருக் கிஷ்ட மாச்சோ
பாடுபட்ட பட்சக் கோனாரே
ஓ இஸ்திரி வித் தேசையா
காடுகளிற் றேடிப் பாருமேன். | - ஓ இஸ் |
8. மந்தை யைக் கிருபைக் கண்பாருஞ்
சிந்தை யிற்று யரந் தீரும்
சந்ததந் தொழுவஞ் சேருமேன்
ஓ இஸ்திரி வித்தேசையா
வந்தன முமக் கிஸ் தோத்திரமே. | - ஓ இஸ் |
9. வேதநாயகன் சந்தப்பா
மேசியா எங்கள் சொந்தப்பா
ஆதர வருள் வானப் பாரே
ஓ இஸ்திரி வித்தேசையா
அம்பரா சமையங் காவாவே. | - ஓ இஸ் |
(1835-வரு)
-----------------------------------
மலைபோலே துன்பம் வரினு மடியார்
அலையாதவா வரந்திஸ்தி-னிலை காக்கு
தந்தைப் பராபரன் றந்தருளும் பாலா
எந்தனை யுங் காததியிது.
(இராகம்: உசேனி) | (ரூபகம்) |
தந்தைப் பராபரன் றந்தருள் பாலா
தமியனைக் காத்தருளுந் ததி சீலா.
1. விந்தைக் குணாலா மெய்மறை நூலா
மேசியாவே சுராச மனுவேலா. | - தந்தை |
2. உன்னதப் பிரானே யுனக்கடியானே
யென்னை யிரட்சித் தருளுஞ் சீமானே. | - தந்தை |
3. ஆற்றும நாதா அற்செய பொற்பாதா
காத்தருளுங் கருணைத் தாதா. | - தந்தை |
4. வரங்களின் கையா மகிமையின் துய்யா
இரங்கும் மிரங்குங் கிறிஸ்தையையா. | - தந்தை |
5. கருணைக் கண் பாருஞ் கலிவினை தீருஞ்
சரணஞ் சரணமையா தயை கூரும். | - தந்தை |
6. மேலான வாழ்வே மெய்யே யோவாவே
காலா காலத்தி லெனைத் தற்காவே. | - தந்தை |
7. சத்துருத் துரோகஞ் சற்பினைப் பூலோகம்
சித்தமிரங்கி யருள் திரியேகம். | - தந்தை |
8. கருணைப் பத்தாவே கரிசித்துக் காவே
கை விடா தேயு மொரு கர்த்தாவே. | - தந்தை |
9. மீண்டருளன்பா வேதநாயகன்பா
ஆண்டருளுந் தயை வைத்தன்பா. | - தந்தை |
1835-வரு)
-----------------------------------
துக்கக் கவலை தொலையாதோ நித்த நித்த
மிக்கப் பரதபிக்க வேண்டுமோ-மெய்க்கோவே
ஆசகற்றிப் பாவியடியேனை மீட்க வந்த
யேசுநாதா இரங்கையா.
(இராகம்: உசேனி) | (ரூபகம்) |
யேசுநாதனே இரங்குமென்
னேசு நாதனே.
ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே
அருளே தெருளே பொருளே
ஆவலாகினேன் மகா பிரலாப முழ்கினே னையாவே
ஆயா நேயா தூயா யிரட்சியும்
ஆபத்தினால் பரதாபித்து நிற்கிறேன். | - யேசு |
1. அருமை யிரட்சகனே யுனையல்லா மலாதர வாரையா
ஆற்றும நாயகநீ யெனக் கல்லவோ
அன்பு கூர் மெய்யா
தருணந் தருணங் கை விடாதேயுந்
தலையா நலவா வலவா
தாமதியாதே கிருபையாயிருஞ்
சுவாமியிப் போதே
தாதா நாதா நீதா நீகா
தருமப் பிரகாசனே பரமச் சருவேசனே. | - யேசு |
2. ஐந்துக் காயத்தின் கிருபைக் கோட்டையி
லடைக்கலந் தாவே
ஆதாமின் பாவத்தால் மானிட
னான மெய் வாழ்வே
விந்தைக் கிருபை யளிக்க வேண்டும்
விமலா நிமலா அமலா
வேறு பண்ணாதே மிகுஞ் சிறு
பாறு நண்ணாதே
வேலா கோலா நூலா நீயே
விரும்பிச் சேருங் கோவே திரும்பிப் பாருந் தேவே | - யேசு |
3. உன்னைப் போல் நரர்க்கார் பாடுபட்டது
உரிமைச் சீமானே
வுத்தம மேய்ப்பனே சத்திய மீட்பனே
உண்மைக் கோமானே
என்னை யிரட்சிப்பதுன் கடனல்லவோ
இறையே நிறையே பொறையே
ஏதமில்லா னேஅடி யரைத்
தீது சொல்லானே
ஏகா வாகா ஆகா யிரட்சியும்
இரக்கமே யுன்றஞ்சம் நெருக்கமே பிரபஞ்சம். | - யேசு |
4. ஆடுகளெங்குஞ் சிதறிப் போனது
அருமைக் கோனாரே
ஆயர்களெல்லாந் தங்களை மேய்த்து
அகந்தை யானாரே
பாடுபட்டாரே எங்கே யிருக்கிறீர்
பரிவே தெரிவே விரிவே
பாங்கு கெடாதே கடல் மிசை தூங்கி விடாதே
பத்தா கத்தா நித்தா நீ வந்து
பரதாபம் பாராயோ வருசோபந் தீராயோ. | - யேசு |
5. சாதிகளுக் காய் பாடுபட்டவர்
சலித்துப் போனாரோ
சல்லியஞ் செய்கின்ற கல்லுக்கு ருக்களைச்
சலித் தரிக் காரோ
வேதநாயகன் பாட்டைப் பாடுவேன்
மிடியே னடியேன் கொடியேன்
விந்தைப் பிரானே திருப்பதம் வந்திப் பனானே
வீடே யீடே நீடே பாவியின்
வினையை நீக்குவாயே தனையனாக் குவாயே. | - யேசு |
1835-வரு)
-----------------------------------
தந்தைப் பிதாவினொரு சொந்தக் குமாரனென
வந்த கிறிஸ்து மகாதேவா-சந்ததமுன்
வல்லமையாலாண்டு வழி நடத்திச் சீர் விழிபார்
நல்லதிசயம் பெருக நான்.
அதிசயம் பெருகவிழி பாரும்
இருச்சரணப் பங்கயந் தாரும்
1. நயம் பொருவுங் காலா நறுமையுள
சயம் பெனின் மாலா பரம பாலா
ஒ மனுவேலா | அதி |
2. ஞான மேன்மையாக வுனதருள்
நன்மைமிகும் பிரவாக
திரு விவாகப் பிரிய சினேக | அதி |
3. பரந்தனிலு லாசா நடுவிட
வருங் கிருபை விலாசா
எனது நேசா இயேசு ராசா | அதி |
4. தேடுமுத்தம் போதா திருவருள்
நீடு சத்திய நாதா
தேவ பிரசாதா பரம தாதா | அதி |
5. அல்லா அல்பா ஓமேகா சருவத்துக்கும்
வல்லா வல்லா வாகா
நரர் சிநேகா தரு தியாகா | அதி |
6. ஆதி யம்பர சீவா அனுக்கிரகி
வேதநாயகன் பாவா
ஒருமை யோவா பரம தேவா | அதி |
-----------------------------------
நின்னையல்லாது மகா நிற்பாக்கியனானேனே
எந்த விதம் ஈடேறுவேனையா-மன்னா
பரமேசுரனே அடியனை யாட்கொள்
கிறிஸ்தேசு நீ பரிந்து
கிறிஸ்தேசு நீ பரிந்து
அதிசுந்தரக் கிருபை சொரிந்து
1. நரஸ்துதி பாடா தனுக்கிரகித்த
ஞானசீவப் பெருமானே
நாதனே கைவிடாதேயுன் திருவடி
நம்பினேன் பரம சீமானே | கிறிஸ் |
2. அறத்தியல் பில்லா அந்தகநரனே
அடைக்கல மெனச் சரண டைந்தேன்
அநித்திய உலகால் சத்துரு வினையால்
அருந்துயரால் மன துடைந்தேன் | கிறிஸ் |
3. நின்னையல்லால் நிற்பாக்கியன் எனக்கு
நிலைத் திருப்பதற்கிட மிலையே
உன்னத ஞானத் தொளிவினில் ஒளிவே
உச்சித ஞானக் கன்மலையே | கிறிஸ் |
4. எத்தனை சேதம் சோதனை வரினும்
இரங்கி ரட்சியும் பரிவாலே
சத்திய வேதாட்சர ரகசியமே
தரும கருணை மனுவேலே | கிறிஸ் |
5. தந்தையும் தாயும் சகலமும் நீயே
தமியனின் பிழை பொறுப்பாயே
வந்தனம் துதி சங்கிர்த்தனம் தினமே
மகிழ்தெனிதை யத்திருப்பாயே | கிறிஸ் |
6. வெல்லையிற் பிறந்த மேசியா அரசே
மேன்மை ஞானப் பிரபலனே
நெல்லையிற் சிறந்த வேதநாயகன்பா
நேசதவிது காவலனே | கிறிஸ் |
1851-வரு)
-----------------------------------
கருணா சமுத்திரா (சீவ) மிகக் காவையா
இஸ்திரி யேவை புத்திரா
சரணாம்புய விசித்திரா
ருவ அட்சய சமுத்திரா | கருணா |
1. வேதாகம சிவானந்தா
மிகவலா நேச ரூபகாரி சுராங்கு
நாதா சருவேசுரா நம்பினேன் பதமே
நாம கிறிஸ்துனதா | கருணா |
2. மாபவவினாசா எந்தாய்
வஸ்தனாதிப்பரம சோதி நரர்க்கு
கோபாக்கினை சாபமே கெண்டந்தீங்கறவே
தயா செய் யேசு னதா | கருணா |
3. சீராதிப தேவ நண்பா
திரிவிதா ஓர் பரம சுவாமி கிருபைக்கு
நேரார் மனவாசமே நெல்லையான் கவி
யேசு ராசணுதா | கருணா |
-----------------------------------
கண்ணூரால் மெய்சிரசால் காய்ந்த பரிமளத்தால்
அண்ணலுனைப் பூசியருச்சிக்க-எண்ணி வந்த
மாது மரிமதலை வாஞ்சைக் களித்த பதம்
ஈது தருணந்தா தாதா.
தாதா தாதா மாது மகதலை கை
தழுவத் தடையிடா முழு முதல் பாதத்தை
1. நாதா போதா ஆர்தானு னக் கிணை
நம்பினேன் தம்பம், நின் செம்பொற் பதம் துணை | தாதா |
2. அந்தர வானிரவி சுந்தர மாக்கினை
அந்தர மாம் புவிக்கருள் செய் நோக்கினை | தாதா |
3. தொலையா சமுத்திரம் அலையிடியு பத்திரம்
இலை மனு சூத்திரம் நிலையுன் கால மாத்திரம் | தாதா |
4. பாவியென் றுணர்ந்து நீ கோபம் விட்டதுண்டோ
தாவி கரையுங் கண்ணீர் மேவ கிருபை கொண்டே | தாதா |
5. பொன்னிணை யடி யன்று மண்ணில மீது சென்று
தென்னகஞ் சிர சொன்று நுன்னம் மலையே இன்று | தாதா |
6. பாதார விந்த மல்லால் ஆதார மேது சொல்லாய்
வாதா உன் மனங்கல்லா நீதானறிந்தா யெல்லா | தாதா |
7. அடி முடி ஒன்றில்லானே அடியிணை சரண்தானே
கடியிடர் கெடவானே படியிடம் வந்த கோனே | தாதா |
8. நெல்லையன் சேய் பதம் சொல்ல நின் அருட் பதம்
துல்லிப மே சதம் வல்லமை புகழ் நிதம் | தாதா |
-----------------------------------
(இராகம்: இந்துஸ்தானி) | (ஆதிதாளம்) |
இராஜா தஞ்ச நிசசகா எஞ்சா பூரணா
இன்பனே சங்கை போதகா
இயேசு காரணா
1. ஈசா எங்கள் மேசியா எந்தா யோசன்னா
நேசா நித்திய யேசையா நெஞ்சினாதனா | இரா |
2. சீரா விஞ்சை நாயனே திவிய ரட்சகா
தேவா நல்ல ஆயனே சிந்தை சாதகா | இரா |
3. தினமே பக்தர் தோத்திரா செந்தாள் தா நன்றே
ஜெயஜெய மங்கள தோத்திரா தெண்டனென்றேன்றே | இரா |
-----------------------------------
(இராகம்: ஜாவளி) | (ஆதி தாளம்) |
நலமனக் கியான வான
மோன சொந்த மேசியா
தலைமுறை தியான சேனை
வேத சங்க தயாபனீ | நல |
1. எருசலைக் காதி பத்யா
இயேசு கிறிஸ்து ஏகனே
எளியனைப் பாதுகாத்து
இரட்சி முக்ய இறைவனீ | நல |
2. தினந்தின மோசனாமா
நாமானாவா தேவனே
திருச்சபை நாளுமோங்க
வளமைத் தாங்கச் செய்வைநீ | நல |
3. கவி யெலி யாசீர் பாட
ஆசி நீடக் கதி நீயே
கனம் துதி யோலம் சாலம்
மேலும் கிருபை புரிவையே | நல |
-----------------------------------
நித்திய ஜீவனீ தயாலு நீ
நேச மனு வேலனீ
1. சத்திய பரி பால நீ
சாங்கோ பாங்க சீல நீ | நித் |
2. எங்கு நிறை விவேக நீ
யேசு ராஜ யோக நீ | நித் |
3. துங்கமதி தங்குபதி
ஜோதி நீ சதா கதி | நித் |
4. மண்ணுலக மாய மலோ
மா சகாயம் நீயல்லோ | நித் |
5. அஞ்சல ஞ்சல் அருள் செய்யையா
ஆசிர்வாத மேசியா | நித் |
6. தக்கபடி போற்றும்படி
தாச னெலியா வுன்னடி | நித் |
-----------------------------------
சுவாமி யுன்றன் கிருபைக்க பயமே
துணை செய்யும் நயமே.
1. அவாவே யென தருமைப் பெருமான்
அன்பே நான் துன்பப் படுவேனோ
அநியாய வுலகில். | - சுவாமி |
2. உலகானது திரும்பத் திரும்ப
வொழி யாத்துயர் களை வருத்துதே
யுளம் நோகு தென் செய்வேன். | - சுவாமி |
3. பல காலமு மலகை கருவிப்
பல சோதனைப் படுத்தத் திரியுதே
பயந் தருண்டு நிற்கிறேன். | - சுவாமி |
4. ஒரு நாழிகை யுகம் போலாகி
யுண்மையே யென தாவி கலங்குதே
யுயிர் போய் வருகுதே. | - சுவாமி |
5. சின்னமாய்ப் பிறர் நகைக் கவிட்டது
என்ன மாயமோ தெரிய வில்லையே
என்றென் பிராண நாதனே. | - சுவாமி |
6. ஐயோ மனதிரக்க மில்லையோ
அடமாய் வருங் கொடிய தொல்லையோ
ஆதரவு சொல்லையோ. | - சுவாமி |
7. இரவோ பகல் பகலீரவதாய்த்
திரிகாலமு முருகி நிற்கிறேன்
எருசலையிற் தெய்வமே. | - சுவாமி |
8. நெல்லையான் கவியுருக்க முருக்கம்
நீயோ வென தாசைப் பெருக்கமே
நின்றிரு விரக் கமே. | - சுவாமி |
-----------------------------------
(இராகம்: கேதார கௌளம்) | (ரூபகம்) |
காணுஞான சீலனை வானமெய்
கருணைக் காவலனே.
பணிபூணு பத்தி திருஷ்டிக் காட்டி
பாடிக்கோ நாடிக்கோ யூகி-காணு
விகசித விங் கித சிதநல்ல
வெவ்வித தத்துவ நாடக
நிகரினொ வொரு வருமுட னோடி
நேரிநோக்கு மாடவா
பகர வரிய பலதிற வெல்லை
பரம போத வாடகா
சகல சுகுண தயாபராஜ
சருவ சூட்ச மாசோதி. | - காணு |
-----------------------------------
(இராகம்: காப்பி) | (ஆதி தாளம்) |
தேவ தேவ மாதேவா மகானு பாவா கா
சீவ கோவே ஆவல் தீரும்
சேர்வை தாரு மேக தேவனே ஓ ரேக தேவனே | - தேவ |
1. அன்னை தந்தை நின்னையன்றி யாருமில்லையே
என்னையாளா விட்டாலின்னம்
எங்குமே பெரிய தொல்லையே. | - தேவ |
2. கொந்தளிக்கு முலகமிதில்-வந்த ஆக்கமே
விந்தையாய் வழி நடத்தி
வேகம் சேர்த்துன் சொந்த மாக்குமே. | - தேவ |
3. மண்ணும் பெண்ணும் பொன்னு மென்னை மயங்கச் செய்யுதே
விண்ணையே நான் நோக்கி நிற்கப்
பண்ணும் யேசுநாத தாவீதே. | - தேவ |
4. ஆதியந்தமேது மில்லானாதி நாதனே
கோதில்லாப் பிரக்கியாதி கொள்ளும்
சோதி பாத வேத போதனே. | - தேவ |
-----------------------------------
(இராகம்: தன்யாசி) | (ஆதி தாளம்) |
நேச தேவ கிருபாசன வந்தித்த
வாசவ கன சீரா.
இராசவ சந்நிதா தாசரை யாசித்த
தேசுலவே கோவா. | - நேச |
1. சரணுச் சரணு பரவர கண்ணோக்கரா
கருணைச் சூடு நேரா
சுரரோச்சுதவு செய பய வலபுய
தாசதிபதி தாதா | - நேச |
2. சுந்தர நரபட்ச வந்தவ கவனம் நீ
ரந்தர பதசரணா
பரேந்திர பாரக புராந்திய சந்தித்த
மந்திர செப கருணா | - நேச |
3. தருமப் பரம ஒரு நிருப தேவத்தா
உரிமைப் போத சீலா
நரராச்சரிய நயதய சுயமய
வடி தொழு மனுகூலா. | - நேச |
4. மைந்தரை நிதரெட்சை சிந்தை செய்பரமா
வியந்தர தர தகர்வா
படாந்தர பாதக நெடாந்தர நிர்மல
தந்தை நின் மொழி பகர்வா. | - நேச |
-----------------------------------
(இராகம்: ஹரிகாம்போதி) | (ஆதி தாளம்) |
நம்பினேன் சரண் நம்பினேன்
யேசையா உனை நம்பினேன் ஐயா.
1. அம்பர சமையம் வந்தனமே
அனந்த துதி புகழ் அனுதினமே ஐயா. | - நம் |
2. கை குவித்தேன் செப தோத்திரமே
மெய்யெனைக் காப்பதுன் சூத்திரமே ஐயா. | - நம் |
3. நாற்றிசை யோர் தொழு மேலவனே
சாற்றரி தாகிய நூல்வலனே ஐயா. | - நம் |
4. அடைக்கலக் கோட்டை அரணைங்காயம்
அடியர்கள் படுபிடி கெட நற்சகாயம் ஐயா. | - நம் |
5. ஜெகதலத் தோர்க்கருள் வேதா மா
மகதலை மரிதொழு பாதா ஐயா. | - நம் |
6. தேவ சிகாமணி நிதமே
செப்புபத முனக் கிதமே ஐயா. | - நம் |
-----------------------------------
சமைய சகாயா தயாப நன்னேயா
தாபரி யாதரி தூயா நிசபெல.
1. இமைய வரேத்து கிறிஸ்து ஏசையா
ஏகோவா கா மெய்யா நிசபெல. | - சமை |
2. கிருபை நிறைவு கருணைப் பிரபு
கீர்த்தி தரும் நின் வரவு. | - சமை |
3. பாரினி நீடி பாவியைத் தேடி
பக்தர்க்கு ராஜ முடி சூடி நிசபெல. | - சமை |
4. சுப சிவ வாரி சுகுண உதாரி
சுவி சேட பாடகருபகாரி நிசபெல. | - சமை |
5. திவிய மனுவேலா ஜெயந்தரு சீலா
தேவ சிகா மணிக் கனுகூலா. | - சமை |
-----------------------------------
வஞ்ச மனப்பாவி யெனை வாழ்விக்க பாடுபட்ட
அஞ்சு காயத் தானந்தத்தானேன்-தஞ்சமே
யெந்த நாளும் வந்தனங் கனங்கனஞ் சங்கீர்த்தனமே
சுந்தரானந்தச் சுதா.
சுந்தராமானு வேலையா
எந்த நாளும் வந்தனமே.
1. மந்திராமா ஞானி அந்தோ
மைந்தர் திருக் கிருபைக் கோனே
விந்தை மிகு சூட்சிப்பரமா
னந்த கிறிஸ் தேசுராசா | - சுந் |
2. அம்பரா ஆசாரி யெங்கோ
நம்புமடி யார்க்கு நீயே
தம்ப மருள் காட்சித் திருமா
னும்பர் தொழு மேசு தேவா. | - சுந் |
3. வஞ்சனான் மாபாவியன்றோ
அஞ்சு காய வப்பனாரே
தஞ்ச மளித்தாட் கொள் நெல்லையா
னஞ்சல செயுமேசு நாதா. | - சுந் |
-----------------------------------
எனக் கின்பனே அன்பனே
பரமாசாரி
உன்னையண்டினேன் தஞ்சம் சிவானுசாரி
1. உன்னதமே ஓம்பரமேயென் கோவே
ஓசியன்னா ரட்சியுமே சியா ராஜாவே. | - எனக் |
2. அர்ச்சயப் பராபரனே யத்தாவே
ஆத்தும மிச்சிக்கும் ஓரருமை பத்தாவே. | - எனக் |
3. காரணமேதோ கதையோ கர்த்தாவே
கவலையினாலே கலங்கிறேனித்தாவே. | - எனக் |
4. நித்திரையாகா ரமின்றி கண்ணாரே
நெடுந் துயரமானேன் பிரானே விண்ணாரே. | - எனக் |
5. வேதநாயகன் சொன்னானே முன்னானே
விரும்பி ரட்சிப்பதுன் கடனாமனானே. | - எனக் |
-----------------------------------
(இராகம்: காப்பி) | (ஆதி தாளம்) |
சருவ தயாபா நீயே தஞ்சம்
ததி சமையமையா சதியிப் பிரபஞ்சம்
ஒரு பரமே தந்தேன் உகந்தெனின் நெஞ்சம்
1. வானகந் துறந்தே கானகம் சிறந்தே
மலைக் கானகம் சிறந்தே
தானே தானே தானே வந்த
கோனேயுவந்தே. | - சரு |
2. மாட்டுக் கொட்டிலுள்ளே ஆட்டுக்குட்டி வெள்ளை
வெள்ளை ஆட்டுக்குட்டி வெள்ளை
பாட்டுப்பாட்டு பாட்டோ கொள்ளை அதைக்
கேட்பதேன் சுள்ளை. | - சரு |
3. உடலுலகடமாய்க் கடியொடு விடமாய்
தினம் கடியொரு விடமாய் தினம்
படீர் படீர் படீரெனும்
கொடுமை தீர் திடமாய். | - சரு |
4. நம்பினேனின் பாதம் தம்பமே பிரசாதம்
அருள் தம்பமே பிரசாதம்
துன்பத் துன்பத் துன்பக் குரோதம்
வம்பறச் செய் நிதம். | - சரு |
5. மங்களப் பிரசன்னா எங்கள் குலமுன்னா
ஆதி எங்கள் குல முன்னா
சங்கை சங்கை சங்கை மன்னா
தங்கு மோ சன்னா. | - சரு |
6. மனுப்பவ மிச்சம் மனநினை வச்சம்
ஐயா மன நினைவச்சம்
மனுவேல் மனுவேல் மனுவேல் பட்சம்
தினம் தினம் லெட்சம். | - சரு |
7. தாசனெலியா சொல்ல ஆசியருள்வாய் நல்ல
ஆசியருள் வாய் நல்ல
யேசையா யேசையா யேசையா வெல்ல
மோசமே தணி வல்ல. | - சரு |
-----------------------------------
(இராகம்: கமாஸ்) | (ஆதி தாளம்) |
சாநிதபா மகமா கமபதநி சாநி
சாந்த சுதா வடிவே உஜித கதி சாந்த
சாரி நீச தாநி பாத மாப மா கமபதநி-சாநி
சாந்த சீவி-னோதரா நிராதரா கிருபாக ராஸ்திரி-சாந்த
தச நித பம கக மா
பத நித பம கக மா
தநி தநி தப தப- சாநி |
இஸ்திர மதுரகர மனா
பரம ரொருவர் அறி நீ
விரத முற வெலச் செய் | - சாந்த |
சர்ரி சநி, நி சாநித
தந்நி தப மத்தா மக
சமா கம பதநி- சாநி |
நீயேநர ரெய்தும் பொரு ளெவ் வேளையும் நேரும்
பத சதா பதநி செய | - சாந்த |
சரி சநி சா நிச நிதநீ தநீதபதா பதபமபா
சசசா மமமா பபப தததா
தசநித பாதப மபதபா தநி சாநி
பரம சுயாதிப அரசு மறுவிலனே திருமகவு
மகதேவ மகா நடுவா வருவா
சரவர நாயக நரதயா பர | - சாந்த |
-----------------------------------
(இராகம்: ஜாவளி) | (ரூபகம்) |
சாமி நாடே சிந்தனை சம்மரோ பார்சித்தி
நீ மனமே தாமதமிதேன் சாமி
1. பூமி தாங்கி மானுவேலே நன்னிதி
பொன்னழகேசனே சன்னதி
நேயச் சேசுனே இத்ததி | சாமிநாடே |
2. ஜோதி நீடி நீதிநேரே பத்தமே
சுத்த விரமே சித்தமே
தூய தீரமே நித்தமே | சாமிநாடே |
3. பாவம் நீங்கி யாவும்மாறி நலியா
பத்தி மிகுதியே எலியா
பாடுஞ் சுருதியே வலியா | சாமிநாடே |
-----------------------------------
(இராகம்: செஞ்சுருட்டி) | (ஆதி தாளம்) |
ஜெப ஜெப ஜெப ஜெப மந்திரனே
சிங்கார மனுவேல் சுதந்திரனே.
1. ஓம்பு சதா தயை புரிபாலா
ஒரு பரகுருவே யனுகூலா | ஜெப |
2. அந்தர மருள் போதா
அருமறை சுந்தர குணநாதா | ஜெப |
3. அடிமுடி விலனே அவதாரா
அற்புத நலனே அதிகாரா | ஜெப |
4. தம்பாதுங் காதயாபரா
சம்பூரண சம்பூரண | ஜெப |
5. கோனந்த கோனந்த
கோனாதி ராசமன்னா | ஜெப |
6. தோத்திர கீர்த்தன சுவிசேடா
சாஸ்திரி போற்றிய சருவேசா. | ஜெப |
-----------------------------------
(இராகம்: செஞ்சுருட்டி) | (ஆதி தாளம்) |
ஆதியோம் பாதா நமோ நமோ
அல்பா ஓம்பரப் பிரம நமோ நமோ.
மாதிர பராபர வஸ்துவே நிராதர
ஆதர கருணாகர நமோ நமோ.
1. சருவேசுரனே நமோநமோகுரு
சச்சி தானந்தா நமோ நமோ
மறைதரு பூசுர மாதவ பரேசுர
முறையினம் யேசுர நமோ நமோ. | - ஆதி |
2. தேவ குமாரா நமோ நமோ நர
திரு அவதாரா நமோ நமோ
மூவரிலொருவா மோக்கிடத் தருவா
சீவ சொரூபா நமோ நமோ. | - ஆதி |
3. சுத்த வானிதியே நமோ நமோ அதி
தூய சன்னதியோ நமோ நமோ
நித்திய சுயாதி பதி நீடு சேனாதிபதி
சத்திய தயாபதி நமோ நமோ. | - ஆதி |
4. தூதர்கள் தேவா நமோ
இயேசு சுவாமியே யோவா நமோ நமோ
வேத வினாவா மெஞ்ஞான தீபா
ஓதிய மூவா நமோ நமோ. | - ஆதி |
5. சீயோன் மணாளா நமோ நமோ விரு
திரு மறையாளா நமோ நமோ
நேய கணாளா நிறையொளி வாளா
தூய பொற்றாளா நமோ நமோ. | - ஆதி |
6. பாவிகள் பாசனா நமோ நமோ வுயர்
பரம பத்திராசனா நமோ நமோ
தீவினை மோசனா திவ்விய போசனா
காவெனை யோசனா நமோ நமோ. | - ஆதி |
7. வேதநாயகன் பா நமோ நமோ திரு
மேசியா நண்பா நமோ நமோ
ஆதியின் முன்பா வல்பா வோமேகா
பாதருளன் பா நமோ நமோ. | - ஆதி |
-----------------------------------
தம்பிரா னொரு மெய்த் தேவே | ௦ |
சத்தியத் திருப் பிதாவே
யும்பரி னுரிமைக் கோவே
யுன்னதத் துயர்ந்த வாழ்வே
நம் பினேஞ் சரணந்தாவே
ஞான சங்கீர்த் தனப்பாவே
அம்பராயே யோ வாவே
அருள்செய் அல்லே லூயாவே
கிருபைப் பரா கிருபைப் பரா
கிருபைப் பரமேசுரா
கீர்த்தனம் சங்கீர்த்தன மிஸ் தோத்திரம் சருவேசுரா
1. அருமைப் பிதாச் சுதனரூபி அட்சயத்திரியேகமே
அனந்த சதானந்தரு ளானந்தப் பிரவாகமே. | - கிரு |
2. அதிக சவுரிய வல்லமை மகிமைப் பிரதாபியே
அதிசய வினோத கிருபாசனத் தோர் ரூபியே. | - கிரு |
3. பரம தயாபர கருணாம்பர உனத நேசமே
பகர முடியாத பரிபூரண விலாசமே | - கிரு |
4. உணரவரி தானவுயர்வான அபிதானமே
யுருவமிலா துவமை யிலா தொளிர் பரம ஞானமே | - கிரு |
5. பரிசுத்தம் நீதிக்கண் முக்கிய பாக்கிய சத்ய தேவனே
பரிவுற்ற பூரண பக்கிஷாபதி நித்திய ஜீவனே | - கிரு |
6. அருள் செய்பரா அருள் செய்பரா அனந்த சதாகாலமே
அம்பராவே காம்பரா கருணாம்பரா ஓலோலமே. | - கிரு |
-----------------------------------
சீவப் பரப் பிரமயே யோவா திவிய
திரியேக அதிசய தேவாரே குருபர
மூவாளொரேய ரூபி முக்கிய கிருபைச் சொரூபி. | - சீவ |
1. சருவேசுரா சருவக் கியானி
கிருபாகரா அரிய மெஞ்ஞானி
திரிலோக மாளும் பிரதானி பெறைத்
தற்பரா மெஞ்ஞான தாதா நீகுருபர. | - சீவ |
2. கருணாகரா கதிதரும் கத்தா
பரிபூரணா அதி பரிசுத்தா
பரமேசுரா மெஞ்ஞான பத்தா சரண்
டந்தாள் சதானந்தா எந்தாய் நீ குருபர. | - சீவ |
3. அதிபதியே அற்புத நாதா
அதிசயமே சத்திய வேதா
பரகதி யாள் நித்திய போதா துதி
தூதாக்கள் பாடிய சுந்தரா குருபர. | - சீவ |
4. அருளம்பரா வானவர்கோவே
ஒரு தம்பிரானான மெய்தேவே
யுருவம் படாகித்திய பிதாவே சரண்
நம்பினோம் வேதாந்த நாதா நீ குருபர. | - சீவ |
5. ஓம் அல்லா அல்பா ஓமேகா
மாவல்லா மகத்துவ தெய்வீகா
ஆ அல்லேலூயா திரியேகா ஆ
மன்னா சிநேகா முன்னா நீ கா கா | - சீவ |
-----------------------------------
சிவ தவ சுப நவ தெய்வ அதி
செய சொரூபியே அருள்புரி
திரி முதலொரு பொருளது குண திவிய ரூபியே.
உவமையற்ற மெஞ்ஞான சத்திய
உன்னதத் தேவா தயாபர
ஒப்பில்லா உண்மைப் பராபர ஓரே யேயோவா | - சிவ |
1. ஓம் பகவா ஓம் நமா அல்பா, ஓமேகாவே ஓகோ
உம்பரா கருணாம்பரா ஓலம் பதந்தாவே
ஆம்பிரமா ஓம் நமா அனாதிமூலமே ஓலோலம்
அல்லேலூயா மகத்துவ மனந்த காலமே | - சிவ |
2. அதிசவுரிய பெலமகிமை யனாதி யன்பையா ஓர்
ஐயனே பரமையனே யருள் செய்யுமின்பையா
துதிமிகு மதிபதி சயபதி சுரநரபதியே ஐயாவே
சுத்தனே சதா நித்தனே கரிசித்த வானதியே | - சிவ |
3. வேத மந்திரதீத விந்தை கண் மிகுந்த சிங்காரா வுதாரா
மித்திர பேத கனத்த மேவிய சத்துரு சங்காரா
ஆதியந்த மிலாத சுந்தர ஆமனாமனா ஓகோகோ
அனந்தனந்த சங்கீர்த்தனந் துதியாளு மோசன்னா. | - சிவ |
-----------------------------------
யேசுவையே துதி செய் மனமே-கிறிஸ்
1. மாசணு காத பராபர வஸ்து
நேச குமாரன் மெய்யான கிறிஸ்து. | - யேசு |
2. அந்தர வான் தரை யுந்தரு தத்தன்
சுந்தர மிகுந்த சவுந்தர நந்தன். | - யேசு |
3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க. | - யேசு |
4. வெல்லையின் மேவிய தேவ சிரேஷ்டர்
நெல்லையின் வேதநாயகன் பாட்டன். | - யேசு |
-----------------------------------