ஆபிரகாமின் வித்திலவதரித்து தயமான
தேவனாட்டுக் குட்டி திருக் கலியாண நாளிற்
காவலாய்ச் சீயோன் வெற்பிற் கன்னியாஸ்திரிகள் வாழுஞ்
சோபன வீட்டுக் கேகிச் சோபனஞ் சொல்லுவோமே
சோபனமே சோபனமே
சோபன பெண்காள் சோபனமே
தீப ஞானஸ் நானப் பிரதாபத்
தேவதைப் பெண்காள் சோபனமே | - சோப |
1. மங்கள மங்களஞ் சோபனமே
வந்தனம் வந்தனஞ் சோபனமே
துங்க பிதாவுக்கு மைந்தர்க்குமா விக்குங்
தோத்திர கீர்த்தன சோபனமே | - சோப |
2. சங்கை மணாளர்க்குச் சோபனஞ் சோபனந்
தவிது மைந்தர்க்குச் சோபனஞ் சோபன
மெங்களரசர்க்குச் சோபனஞ் சோபன
மேசு நாதர்க்குச் சோபனஞ் சோபன | - சோப |
3. ஆட்டுக் குட்டிக்குச் சோபனஞ் சோபன
மவர் மனைவிக்குச் சோபனஞ் சோபன
தேட்டக் கணவர்க்குச் சோபனஞ் சோபனஞ்
செல்வக் குமாரிக்குச் சோபனஞ் சோபனம் | - சோப |
4. தானான வர்க்குச் சோபனமே சச்சி
தானந்தர்க் கானந்தச் சோபனமே
மானார் சியோன் குமாரி திருமண
வாளிக் கெந் நாளுக்குஞ் சோபனமே | - சோப |
5. அட்செய பெண்காள் சோபனஞ் சோபனம்
அற்புத பெண்காள் சோபனஞ் சோபன
முச்சித பெண்காள் சோபனஞ் சோபன
முன்னத பெண்காள் சோபனஞ் சோபன | - சோப |
6. நிச்சய நிச்சய சோபனமே சதா
நித்திய நித்திய சோபனமே
மெய் சபை சீயோன் மங்கைக்கு நங்கைக்கு
மேன்மை மணாளிக்குச் சோபனமே | - சோப |
7. ஆதியான் மணவீட்டுக்குச் சோபனம்
ஆற்றுமப் பெண்கள் கொண்டாட்டுக்குச் சோபனம்
வேதநாயகன் பாட்டுக்குச் சோபன
மேசியாவின் மன்றாட்டுக்குங் சோபனம் | - சோப |
-----------------------------------
மங்கள மங்களம் சோபன மங்களம்
மங்கள மங்களமே
மங்கள மங்களம் சோபன மங்களம்
மங்கள இங்கிதமே.
அமலா தயாபரா நினதாசியே மிகவே
சமாதானமுஞ் சந்தோஷ பாக்கிய
மாக வாழ்கவுமே. | - மங்கள |
1. திரியேக ரட்சகனே
மரியாள் திருச் சுதனே
திரியேகர் நாமத்திலே யனுதினமே
செய் அற்புதனே. | - மங் |
2. மணவாளனும் மணவாளியும் மகப்
பெற் றொரு மித் தொன்றவே
மண நாளிற் றந்த மெய்
வார்த்தையை மறவாம லென்றென்றுமே. | - மங் |
3. சல்லாபமும் உல்லாசமும்
சாமி கிறிஸ்துவிலே
எல்லா செல்வங்களும் பாக்கியங்களும்
யேசுவின் நாமத்திலே | - மங் |
4. சற்குரு மாருப தேசி வாத்தியர்
திழைத்துச் செழித்துறவே
சத்திய திருச்சபை அண்ணாவி மார்களும்
நித்திய மகிழ் பெறவே. | - மங் |
5. பதமே படித்திசை வேத
நாயகன் கவித்திறமே
நிதமே யடித்துணையே பெருகிநீ
டூழியும் வாழ்வுறவே. | - மங் |
-----------------------------------
ஆட்டுக் குட்டிக்குச் சோபனக் கலியாணம் வந்து
தாஷ்டிகத்தவரின் றேவி தன்னை யாயத்தஞ் செய்தாள்
சூட்டிய பன்னீராட்டிச் சுகந்த வர்க்கங்களாலே
நாட்டமாய்க் கனிமாப் பெண்கணலுங்கிடத் தொடங்கினாரே.
வாரீர் மண நலுங்கிட மட மயிலே
மயிலே மயிலே வாசமாய்
வாரீர் மண நலுங்கிட
1. பாரோர் புகழும் மாபிர
காமின் சுபுத்திரி தேவ
பற்பணி கற்புக் கனிம
னற் புதச் சீயோன் மின்னாட்கு. | - வாரீர் |
2. வெள்ளைப் போளங் காசியா
மிருது சுகந் தங்களாற்
கிள்ளை மொழி தெள்ளமுது
வள்ளல் மணவாளியர்க்கே. | - வா |
3. சுத்த நரது தயி
லத்தின் பரணி கொண்டே
யுத்தமி தேவாட்டுக் குட்டி
சித்திர மயிலாளுக்கே. | - வா |
4. நானக் குங்குமஞ் சாந்து
மேன்மைப் பரிமளத்தால்
மானச் சீயோனணங்கு
ஞானப் பூங்கோதையர்க்கு. | - வா |
5. பன்னீரல் பான் மீறாவும்
பொன்னின் கிண்ணங்களேந்தி
யன்ன நடை மின்னழகி-யுன்னத
கன்னி யாஸ்திரிக்கே. | - வா |
6. அந்த சீயோன் மலையின்
விந்தைக் குமாரியர்க்கு
கந்த வர்க்கங்களினால்
சுந்தரத் தொயிலெழுதி. | - வா |
7. மாப்பிள்ளை சிங்கம் வந்தார்
மண வீடலங்கரித்தார்
தாப்பிரிய சீயோன் மகட்குக்
கோப்புடன் சாலேமின் பெண்காள். | - வா |
8. வேதநாயகன் பாடும்
நாதனார்க்குக் கலியாண
மாதர்க்கரசி யோரே
யூதக் குலஸ்திரி வாழ்க. | - வாரீர் |
(1796-வரு)
-----------------------------------
ஆதியத மேவையை யுண்டாக்கியனுக்கி ரகித்து
பாதுகாத்தாண்ட பராபரனே-மாதயவா
யிந்த மங்கலஞ் செழிக்க விங்ஙன மெழுந்து வந்து
சந்தத முனின் கிருபைதா.
(இராகம்: தூசாவந்தி) | (ஆதி தாளம்) |
இந்த மங்கலஞ் செழிக்கவே கிருபை செய்யு
மெங்கள் திரித்துவ தேவனே.
சுந்தரக் கானாவின் மணப்
பந்தலிற் சென்றம் மணத்தைக்
கந்தரச மாகச் செய்த
விந்தை போலிங்கேயும் வந்து. | - இந்த |
1. ஆதி தொடுத்தன்பை யெடுத்தாய், மனுடர் தமை
யாணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதிவரம் நாலுங் கொடுத்தாய், பெற்றுப்பெருகி
நிற்க வுலகத்தில் விடுத்தாய்
மாதவர் பணியும் வேத, போதனேயந்தப் படியுன்
னாதரவைக் கொண்டு சுதன், நீதியை நம்பிப்புரிந்த | - இந்த |
2. தக்க அபிராமும் விண்டனன், அதனைமன
துக்குளெலியேசர் கொண்டனன்
முக்கிய ஆரானில் தண்டின, னினைத்தபடி
சக்கிய மதாகக் கண்டனன்
பக்குவ முரைத்திடாரெ, பக்காளு மீசாக்குவுக்குப்
பக்குவத்தில் வேட்டலாகப்
பக்கிஷமாய்ச் செய்தாப் போலே | - இந்த |
3. சத்திய வேதத்தின் வாசனே, யருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பத்தர்கள் பவவிமோசனே, பழுதணுவு
மற்ற கிறிஸ்தேசு ராசனே
வெற்றியால் யாக் கோபுவுக்கு, முற்றினு மளித்த பேறாய்ப்
புத்திர சம்பத்துண்டாகி, நித்திய சுப சோபனமாய் | - இந்த |
4. இங்கித மிகுந் தெய்வீகப்-பராபரனா
லெங்கும் வளரும் நல்யோக
சங்கை பெற்றுயர் சினேகத், தேவசகாய
சங்கிதனருள் விவேக
நன்குணர் வேதநாயகன், தங்கிய சபைகள் மகிழ்ந்
தங்கிஷம் விளங்கும் வாய்மை, மங்கள மங்களமாக | - இந்த |
-----------------------------------
ஆதியை யரூபியானை யடிமுடி நடுவாய் நின்ற
நீதனை யேசுநாத நிமலனை நினைந்து போற்றி
கோதற விவாகஞ் செய்த கோமகனோடே கூட
மாதையும் வலமாய் வைத்து வாழ்த்தி மங்களஞ் சொல்வோமே.
(இராகம்: கேதாரகௌளம்) | (திரிசுர தாளம்) |
சந்தத மங்கள மங்களமே
சந்தத மங்கள மங்களமே
அந்த மாதி யிலானருள் சேயா
எந்தை யேசுக்கிறிஸ்து சகாயா. | - சந்தத |
1. ஆறு சாடி அயமது வாகவே
வேறுசெய் கலிலேய வினோதா
மாறிலாமலிம் மன்றல் செழிக்க நற்
பேறு தந்தருளாய் பிரதாபா. | - சந்தத |
2. அந்தரம் பரம்பூமி யடங்கலும்
விந்தை மேவி நிறைந்த விசாலா
இந்த நாள் மணஞ் செய்யுமிவர்க்கருள்
தந்துனாசிடை சாற்றுந் தயாபா. | - சந்தத |
3. வையமுற்ற மணவரைப் பந்தலி
லையனே யுன்னருள் கொடு வந்திருந்
துய்ய வைங் குறியாலுமு வந்தருள்
செய்யுமேக திரித்துவ தேவா. | - சந்தத |
4. கர்த்தனே கருணைக் கடலேயுயர்
பெத்தலைப் பிரதாப விசேடா
புத்திரர் பெறவும் புகழோங்கவுஞ்
சித்தம் வைத்திம் மணர்க்கருள் தேவா. | - சந்தத |
5. வேதநாயகன் பாடற்கு மங்களம்
விமலனாஞ் சருவேசற்கு மங்களம்
ஏதமற்ற வரூபிக்கு மங்களம்
யேசுநாத சுவாமிக்கு மங்களம்.- சந்தத
(1796-வரு)
-----------------------------------
சுந்தரம் சேர்க்கானாவின்றுய்ய மணவீட்டி லப்பைக்
கந்தரச மாக்கின நின் காட்சிபோ-லிந்த மண
வாயிலில் வந்துந்தன் மகிமை யளித்தாளேசு
நாயகா எந்நாளுமே
(இராகம்: சங்கராபரணம்) | (ஆதி தாளம்) |
யேசு நாயகா வந்தாளும்
எந்நாளுந் திவ்விய
யேசு நாயகா வந்தாளும்
ஆசீர்வாதமாக விந்த, நேச மணமே நன்றாக | - யேசு |
1. தற் பர பரப் பிரம, மகத்துவப் பிரதாப
அற்புத மிகக் கிருபை கூருங், கண் பாரும் | - யேசு |
2. சுந்தர மிகும்படிமு, னந்த மண வீட்டில்
வந்துனருள் தந்த தயை போலே, யன்பாலே | - யேசு |
3. தாச னெலியேசர் விசு, வாசமொடு பேசும்
வாசகப் படியே நிசமாக, வசமாக | - யேசு |
4. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி விசுவாச
நித்திய சமாதானமுற்று வாழ்க வாழ்க | - யேசு |
5. துங்க மிகும் நன்கனம், விளங்கி வளமாக
மங்களம தோங்க நலந், தாங்கத், தாங்க | - யேசு |
6. நித்திய சுப சோபனமோ, டெத்திசையினும் பெருகிப்
புத்திர சந்தானமே செழிக்க தழைக்க | - யேசு |
7. வேதநாயகன் றமிழ், விளங்கும் விதமாக
மாது மணவாளனு மிலங்கத், துலங்க | - யேசு |
(1796-வரு)
-----------------------------------
மங்களம் மங்களமே சுப
மங்களம் மங்களமே
மானுவேலி யேசு மேசியா மகராயனுக்கே
1. சங்கை யதிபனுக்கே தயை
தங்கு மனாதியர்க்கே
தான வான ஞான மோன
சுவாமி தற் சோதியர்க்கே | - மங் |
2. நித்திய வஸ்துவுக்கே சதா
துத்தியங் கிறிஸ்துவுக்கே
நேச விசு வாசர் வாச
ராச ராசாதி பர்க்கே | - மங் |
3. மாதிடம் தந்தவர்கே மரி
மாதிடம் வந்தவர்க்கே
மைந்த ரெங்கள் பந்தம் தீர
சிந்தை மகிழ்ந்தவர்க்கே | - மங் |
4. சாவைத் தவிர்த்தவர்க்கே பேயின்
தலையை மிதித்தவர்க்கே
சபையின் மணவாளனுமாம் தலைமை
சக்கராதி பதிக்கே | - மங் |
5. விண்ணோர் மண்ணோர் வாழ்க குரு
வேந்தர் துரை கவிஞர்
விரத்தர் தருமர் யாரும் வாழ்க
மேதினி வந்தவர்க்கே | - மங் |
6. நற் சுவிசேடருக்கே பவ
நச்சறு தேசிகர்க்கே
நயமாய்த் துதியா யெலியா சொலிய
நாத கிருபாசனர்க்கே | - மங் |
-----------------------------------