ஞானப் பதக் கீர்த்தனைகள்

வேதநாயக சாஸ்திரி

பொது வாழ்த்து

 

393

 

பல்லவி

ஏகனே ஏகாம்பரக் காவலே காரும் ஆ! ஆ! ஆ!

காவலே காலம் பெற காவலே காரும்

காவலே இராவுந் திற காவலே காரும்

 

அனுபல்லவி

சுற்றி வா தேவா சுயம்பர ஜீவா

துரிதம் வா தேவாதிர காவலே காரும்

 

சரணங்கள்

1. பற்றி வா தேவாதிர காவலே காரும்

பரிந்து வா யோவாதிர காவலே காரும்

ஆ! ஆதேவ் ஒரே தேவ்

தீட்சை மெய்க்குரு தேவ்.

- ஏகனே

 

2. ஆயிரந் தலைமுறைக் கடுக் கடுக்குக் காவலே

ஆயிரமாயிரந்தரம் அஞ்சலஞ்சல் காவலே

தாயரே மறந்தும் நீ தாரகமே காவலே

தாசர் விசுவாசிகட்குச் சந்ததமுங் காவலே.

- ஏகனே

 

3. நாளும் எந்நாளும் மனுவேலே நீ காவலே

நாடி வணங்கு மணவாளன் நற் காவலே

வேளையிதே மணவாளி பொற் காவலே

வேதா தா ஆசியேசு நாதா நீ காவலே.

- ஏகனே

 

4. கானாக் கலியாண தாராளா காவலே

மேனாடு வானாடு சீராளா காவலே

தானா தயாளா எம் வாழ்வே நீ காவலே

சற்சி தானந்தா உன்னாளே மெய்க் காவலே

- ஏக

 

5. நித்தம் நித்தம் அத்தனே சித்திதரங் காவலே

கத்தவத்திலேறிய மகத்துவ நீ காவலே

சுத்த பரிசுத்தவா சத்திர பதிக் காவலே

உத்தம கிறிஸ்து பதம் பத்திரமே காவலே.

- ஏக

 

6. சுவிசேட கவிராய கோத்திர மெய்க் காவலே

சுப சோபனம் ஓங்க நேத்திரம் பார் காவலே

சுவிசேட சபை வாழ்க காத்து வா காவலே

துத்தியம் துத்தியம் நித்தியம் தோத்திரமே காவலே.

- ஏக

 

-----------------------------------

 

394

 

வெண்பா

கொண்டாடிக் கூடிக் குலாவுங் கிறிஸ்துவுக்கு

ளுண்டான யாவுமுமக்குண்டாகப்-பண்டாதி

மைந்தர்க் கர்ச்சித்து விவாக சம்பந்த மகா

னந்தக் கிருபையும் நன்மையும்.

 

பல்லவி

நன்மை பெற்றனுதினம் வாழ்கக் கன-சுப

நன்மை பெற்றனு தினம் வாழ்க

நன்மையுண்டாகக் கிருபை யுண்டாக

 

அனுபல்லவி

தன்மக் கிறிஸ்தேசு தயாபர

தொண்மைச் சுவிசேட சுபத்திரர்.

- நன்மை

 

சரணங்கள்

1. துங்க மிக லங்கிர்த

நலங்கள் சுகிர்தங்கள் சுப

மங்கள முழங்க நித

முங்கனம் விளங்கவே.

- நன்மை

 

2. சனமுஞ் சற்சன சிந்தை

பனமுந் தனமும் நல்விற்

பனமுங்கனமு மேவித்

தினமுந் தினமு மாக.

- நன்மை

 

3. சுந்தரமிகும் புகழ்ச்சி

றந்தனந் தனந்த கால

மைந்தர் நிறை சந்ததி

தழைந்துள மகிழ்ந்துமே

- நன்மை

 

4. நீடுங் கடவுளைக் கொண்

டாடும் வேதநாயகன்

பாடும் பதம் பலன் கை

கூடுந் திருச்சபைகள்

- நன்மை

 

-----------------------------------

 

Table of contents

previous page start next page