பேரின்பக் காதல்

Venerable Vedanayaga Sastriar

Evangelical Poet

TANJORE

BORN 7 September 1774                                        DIED 24 January 1864

          TINNEVELLY                                                                TANJORE

PERINBAKADAL

This is divided into four parts:

1.        Gnana Tarattu

2.        Tiruchabai Tarattu

3.        Perinbakadal

4.        Pralaba Oppari

I Tim. 1:15.

This is a faithful saying and worthy of all acceptance that Christ Jesus came into the world to save sinners.

Isaiah.  53:4.

Surely he hath borne our griefs and carried our sorrows.

Composed by

Vedanayaga Shastriar

The Evangelical Poet

Tanjore A.D. 1813

Publication Committee of

Late Vedanayaga Shastriar’s Works

Tanjore

1935

பேரின்பக்காதல்

சதுர்பாகமானது

1.        ஞான தாராட்டு

2.        திருச்சபை தாராட்டு

3.        பேரின்பக்காதல்

4.        பிரலாப ஒப்பாரி

1 தீமோ. 1: 15.

பாவிகளை இரட்சிக்கக் கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தாரென்கிறது உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்குப் பாத்திரமுமான வார்த்தை.

ஏசா. 53:4.

மெய்யாகவே அவர் நம்முடைய பலவீனங்களை எடுத்துக் கொண்டு நம்முடைய நோவுகளைச் சுமந்தார்.

கிறிஸ்தாப்தம் 1813வருஷம்

தஞ்சைமா நகரில்

திருநெல்வேலிச் சுவிசேட கவராய

வேதநாயக சாஸ்திரியார்

செய்தது.

தஞ்சை மாஜி கனம் வேதநாயக சாஸ்திரியாரவர்கள் நூல்களின் பிரசுர சங்கத்தாரால் பதிப்பிக்ப்பெற்றது.

1935.

Perinbakadal

Preface

This book which contains contemplations on the nativity and sufferings of Christ, consists of four little books called ஞானத்தாராட்டு (Gnanatarattu), திருச்சபைத்தாராட்டு (Tiruchabaitarattu), பேரின்பக்காதல் (Perinbakadal) and பிரலாப ஒப்பாரி (Pralaba Oppari).

1. Gnanatarattu, on Christ. This treats on the nativity of Christ and the benefits procured thereby.

And this will assist Christians in their devotion by singing it in various tunes on Christmas both in their houses and Churches.

2. Tiruchabaitarattu, on children. This will help to contemplate the poverty of the Son of God at his birth, and the innumerable blessings the children of men enjoy from their very infancy.

As it becomes not Christians to sing the above mentioned songs on Christ or to use irreligious and foolish songs as the heathens do when they put their children to sleep, it was therefore found necessary to compose the above Tiruchabaitarrattu in 60 Couplets.

3. Perinbakadal. This book following the order of the Church Catechism shows the system of Religion and the Passion of Christ and also the merits derived from thence.

There is another Perinbakadal which was composed formerly by an author named Antonicuttee   Annaviar, and which, although a good work to excite the heart to devotion, does not fully and regularly explain the sufferings of Christ. On this account and for some other reasons, it appeared necessary to compose this new work.

4. Pralapa Oppari, on the death of Christ, is a work similar to the Perinbakadal.

There is no doubt that this may prove beneficial not only to the Christian children by its being a branch of learning for their improvement, but also very edifying to those who are to approach the Table of the holy Communion, for what can yield better comfort to a sinner than the atonement of Christ?

It may also be divided into parts, and sung in various tunes at Divine Service during the seven weeks of Lent.

Those who wish to explain the Scriptures in public or to make ஞானச்சதுர் (Gnanachadur), i.e. the act of preaching the Word of God to a concourse of people assembled an appointed place in the days of Lent, may explain this Perinbakadal which has been the method adopted by the Author himself.

For the various reasons above specified, Vedanayaga Shastriar, the Evangelical Poet, completed in the year 1813 these three tracts in connection with each other called Gnanatarattu, Tiruchabaitarattu and Perinbakadal, and subjoined to them a book called Pralaba Oppari sung as a contemplation for the fasting days observed for 1834  in the hope that they will be very useful to all Christians and their children.

________________

பேரின்பக்காதல்

முகவுரை

கிறிஸ்துவின் பிறப்பையும் அவர் பாடுகளையும் தியானிக்கிறதற்கு உதவியாய்ச் செய்த இப்புஸ்தகத்தில் ஞானத்தாராட்டு, திருச்சபைத்தாராட்டு, பேரின்பக்காதல், பிரலாப ஒப்பாரி என்ற நான்கு சிறு புஸ்தகங்கள் அடங்கியிருக்கின்றன.

1.        ஞானத்தாராட்டு கிறிஸ்துவின் பேரிலே. இது கிறிஸ்துவின் பிறப்பையும் அதினாலுண்டான பலன்களையுங் காட்டும்.

கிறிஸ்தவர்கள் தங்கள் ஆண்டவர் பிறப்பின் பண்டிகைகளிலே அவைகளைத் தேவாலயத்திலும் தங்கள் வீடுகளிலும் பலவித ராகங்களாய்ப் பாடித் தங்களை எழுப்பிக்கொள்ள உதவியாயிருக்கும்.

2.        திருச்சபைத்தாராட்டு குழந்தைகள் பேரிலே. இதில் தேவகுமாரனுடைய பிறப்பிலிருந்த மகா தரித்திரத்தையும் மனுஷஜாதியினுடைய குழந்தைகளுக்கு இருக்கிற அநேகஞ் சலக்கரணைகளையும் நிரந்து காட்டி இரட்சகருடைய பிறப்பை தியானிக்க எத்தனஞ்செய்தது.

கிறிஸ்தவர்கள் தங்கள் பிள்ளைகள் நித்திரை செய்யப் பாடுகிறபோது மேலாகச் சொல்லப்பட்ட கிறிஸ்துவின் தாராட்டைப் பாடுகிறது மரியாதையன்று. ஆகிலும் அந்தப் பிள்ளைகள் தூங்குகிறதற்கு வீணான பாடல்களை அங்கங்கே அஞ்ஞானிகள் தண்டக்கத்தின்படி பாடிவருகிறார்கள். அப்படி நம்முடையவர்கள் செய்கிறதழகல்ல.

ஆனதினால் அறுபது கண்ணியில் திருச்சபைத் தாராட்டென்கிற ஒரு பாடலை உண்டுபண்ண வேண்டியதாயிற்று.

3.        பேரின்பக்காதல் இரட்சிப்பின் ஒழுங்காய் வேதத்தின் அடக்கத்தையும், கிறிஸ்துவின் பாடுகளையும் அதினால் உண்டான பலன்களையும் பாடினது.

முன்னாளிலிருந்த அந்தோனிக்குட்டி அண்ணானியாராற் சுருக்கமாய்ச் செய்யப்பட்ட ஒரு பேரின்பகாதல் உண்டு. அது எழுப்புதலைக் கொடுக்கிற பாடலாயிருந்தாலும், அது கிறிஸ்துவினாலிடத்துப் பாடுகளையுஞ் சரித்திர வரிசையாய் விவரித்துக் காட்டியிராததினாலும் பின்னுஞ் சில முகாந்தரங்களைப்பற்றியும் இந்த நூதனமான பேரின்பக்காதலை உண்டுபண்ண வேண்டியதாயிற்று.

4. பிரலாப ஒப்பாரி கிறிஸ்துவின் மரணத்தின்பேரிலே பேரின்பக்காதலுக்கு ஒப்பானது.

இப்புஸ்தகஞ் சகல கிறிஸ்தமான பிள்ளைகளுக்கு அறிவைத் தருகிற பாடலாயிருக்கிறதுமன்றி, நற்கருணைக்குச் சேருகிற பக்தியுள்ள ஆத்துமாக்களுக்குச் சொல்லி முடியாத எழுப்புதலைக் கொடுக்குமென்கிறதற்குச் சந்தேகமில்லை.  ஏனென்றால், இரட்சகருடைய பாடுகளைத்தவிர பாவிகளான மனுஷஜாதிக்கு அதிக ஆறுதலானது வேறேதிருக்கலாம்.

கிறிஸ்துவின் பாடுகளை தியானிக்கிற ஏழு கிழமைகளிலேயும் இவைகளைப் பங்கு பங்காய் எடுத்து அந்தந்த இடங்களில் வெவ்வேறே ராகங்களை ஸ்தாபித்து தேவாலயத்திலே பாடலாம்.

பின்னையும் அந்த நாளிலே வெளியரங்கத்திலே வேதத்தைப் பிரசங்கிக்க அல்லது ஞானப்பாடல்களின் சதுர்ச்செய்ய மனதானவர்கள், விசேஷமாக இந்தப் பேரின்பக்காதலைக் கையாடி அதின் பேரில் வியாக்கியானம் பண்ணலாம். அப்படி இந்நூலை உண்டுபண்ணினவருஞ் செய்தார்.

இப்பல முகாந்தரங்களைப் பற்றிச் சுவிசேட சுவிராய வேத நாயக சாஸ்திரியார் 1813-ம்‌ வருடம் இந்த ஞானத்தாராட்டு, திருச்சபைத்தாராட்டு, பேரின்பக்காதலென்ற மூன்று சிறு புஸ்தகங்களையும் ஒன்றுபடுத்தி, 1934-ம்‌ வருடம் ஆசரிக்கப்பட்ட உபவாச நாளின் தியானிப்பாகப் பிரலாப ஒப்பாரி என்ற பாடலை உண்டுபண்ணி அத்தோடே சேர்த்துச் சகல கிறிஸ்தமான சபைக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் பிரயோசனமாயிருக்குமென்கிற நம்பிக்கையோடே முடித்தார்.

_________________

3-ம் பதிப்புக்கு முகவுரை

காலஞ்சென்ற சுவிசேட சுவிராயர் சங்கை பொருந்திய தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அவர்கள், தேவ நாம மகிமைக் கென்றும், சகல கிறிஸ்தவ சமயத்தாரும் வீட்டிலும், வெளியிலும், கோவிலிலும் உபயோகிப்பதற் கென்றும் உண்டுபண்ணின எழுப்புதலான பாடல்களில் அநேகம் இன்னும் அச்சிடாமலிருப்பதையும், ஏற்கனவே அச்சிடப்பட்டவைகளில் சில தற்போது இல்லாமற் போனதையுங் கண்ணுற்ற தஞ்சைக் கிறிஸ்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக ஒரு கூட்டம் கூடி அவற்றைப் பதிப்பிக்குமாறு ஏற்ற முயற்சி எடுத்துக்கொள்ளத் தலைப்பட்டார்கள்.

இக் கூட்டத்திற்கு கனம் சாஸ்திரியாரவர்கள் வீட்டாரின் பிரதிநிதிகளும் வந்திருந்து, கூட்டத்தின் நடபடிக்கைகளுக்குத் தங்கள் முழுச் சம்மதத்தையும் கொடுத்து உற்சாகப்படுத்தினது கூட்டத்தாருக்கு ஒரு விசேஷித்த தூண்டுகோலாயிருந்தது.

கூட்டத்தார் கனம் சாஸ்திரியாரவர்களின் நூல்கள் யாவையும் கூடியமட்டில் அச்சடித்து யாவரும் பிரயோசனமடைய அவற்றைச் சொற்ப விலைக்கு விற்க ஏற்பாடு செய்யும்படியாக நடபடிக்கைகள் நடத்தவும் பொருள் சேர்க்கவும் தஞ்சையிலுள்ள பின்வரும் அவயவங்களடங்கிய ஒரு கமிற்றியை நியமித்தனர் :-

President: Mr. D. Samuel, M.A., L.T., (Dt. Educational Officer)

Secretary: Mr. P. John Christian, Govt. Pensioner, Burma

Treasurer: Mr. N. Joseph Kay, F.M.S., Pensioner

Members: Rev. R. Ezekiel, Priest, S.P.G.

            Mr. S.G. Daniel, B.A., Retd., Educationist & Registrar of Marriages

            Mr. S.R. Moses, B.A., Accountant, Collector’s Office

           Mr. S. Amirtham, Pensioner, Military Finance Dept.

           Mr. I.M. Arokiasamy, F.M.S., Pensioner

           Mr. G. George Thangasami, Lawley Press

           Mr. V. Shem Vedanayagam, Shastriar

இச்கமிற்றியார், மேற்கண்ட கூட்டத்தாரின் தீர்மானத்துக்கிசைய, தற்கால கையிருப்புக் கேற்றவாறு முந்த பேரின்பக்காதல் என்னும் இந்நூலை முன்னிருந்ததைப் பார்க்கிலும் சொற்ப விலைக்கு வெளியிட்டிருக்கிறார்கள்.

தஞ்சை கிறிஸ்தவர்களின் நல் நோக்கத்தை அங்கீகாரஞ்செய்து, தங்களுடைய நல் ஆலோசனையினாலும் பொருளுதவினாலும் கமிற்றியாரை உற்சாகப்படுத்தின நண்பர்கள் யாவருக்கும் கமிற்றியார் நன்றியுள்ளவர்களா யிருக்கிறார்கள். கனம் சாஸ்திரியாரின் மற்ற நூல்களும் சீக்கிரம் வெளி வரும்படியாக யாவரும் நல்லுதவி புரிவார்களென எதிர்பார்க்கிறோம்.

தமிழ் நாட்டுக் கிறிஸ்தவர்கள் யாவரும் இவ்வரிய நூல்களைக் கையாடி நிறைந்த ஆசீர்வாதங்களைப் பெற்றனுபவிக்க இஸ்ரவேலின் துதிகளுக்குள்ளே வாசம் பண்ணுகிற கர்த்தர் துணை நிற்பாராக - ஆமென்.

தஞ்சை கனம் வேதநாயக சாஸ்திரியாரவர்கள் நூல்களின் பிரசுர சங்கத்தார் நாமத்தில்,

P. John Christian, Secretary

978, Mission Street, No. 1

Tanjore

15.3.1935

1. ஞானத்தாராட்டுத் தலைவரிசை

அட்டவணை

                                        கண்ணி

1.        கடவுள் வாழ்த்து                        1

2.        தசாங்கம்                                8

3.        அவையடக்கம்                        13

4.        தாராட்டு                                15

5.        கிறிஸ்துவின் தாழ்மை                20

6.        பிறப்பின் பலன்                        34

7.        தேவலட்சணை மாறுதல்        40

8.        புகழ்ச்சி                                53

9.        ஏரோதேயின் கொடுமை                64

10.        நிந்தா ஸ்துதி                        78

11.        கிறிஸ்துவின் இனத்தார்                94

12.        தியானம்                                99

13.        பிரதிக்கினை                        110

14.        மன்றாட்டு                                118

15.        திருச்சபை வாழி                        126

காப்பு

திருக்கருணைப் பிரானார்

திருவுளத் துலகை மீட்க

அருட்கனி மரிபானின்றிங்

கவதரித் துதையமான

வுருக்கமெய்க் கிறிஸ்துவுக்கோ

ருனத ஞானத்தாராட்டுப்

பெருக்க விஸ்பிரீத்துச் சாந்தெம்

பிதாச் சுத னருபி காப்பாம்.

1. கடவுள் வாழ்த்து

1.        சீராருந் தேவ

                திருச்சுதன்மேற் செப்புகின்ற

        நேராருந் தாராட்டை

                நித்தியனே கேட்டருள்வாய்.

2.        வானத்தாராட்டு

                மகிமைதனக் கொப்பெனவே

        ஞானத்தாராட்டேசு

                நாயகன் மேலியான் படிக்க

3.        முந்தும் நரர் செய்த

                முழுவினையு மாற்றுதற்காய்

        வந்தவன்மேல் வந்திறங்கும்

                வல்லபமே முன்னடவாய்.

4.        தேசுவளர் நாட்டுத்

திருச்சபையின் கொண்டாட்டு

ஏசுவின் றாராட்டுக்

கீரறுப தன்பருக்கு

5.        வரிசித்த மெஞ்ஞான

வாருதியே தேவ

பரிசுத்த ரூபிப்

பராபரனே முன்னடவாய்.

6.        போராட்டங் கொண்டு

பொரும்பேய்பட ஞானத்

தாராட்ட தொன்று

தயாபரன் மேலியான் படிக்க

7.        வாக்குமன துக் கடங்கா

வல்ல பரிசு த்தாவி

நாக்கினில் வந்திருந்து

நல்வாக்குத் தந்தருள்வார்.

2. தசாங்கம்

8.        சீனாயி மாமலையான்

                திவ்விய யோர்தானதியான்

        கானானு தேயன்

                கனநசரை யம்பதிமேல்,

9.        வேசரி வாரணத்தான்

                விண்மேக வெண் பரியான்

        றேசுசிலுவைக் கொடியான்

                றேர்ந்த ஜெபமாலையின்மேல்,

10.        தூதர்களி னேழ்முரசான்

                றொல்லுலகும் வானுலகும்

        பாதலுமும் போற்றிப்

                பணியுஞ் செங்கோற்பதிமேல்,

11.        அண்ணலின் மேலென்னை ரட்சித்

                தாண்டவன் மேல் மாவுருக்கக்

        கண்ணனின் மேலென்றன்

                கவலையெல்லாந் தீர்த்தவன்மேல்,

12.        ஏசுக்கிறிஸ்துவின் மே

                லேக சக்கராதிபதி

        நேசக்கிருபை

                நிரந்தரன்மே னின்மலன்மேல்

3. அவையடக்கம்

13.        செப்புகின்ற தாராட்டைத்

                தேவ திருச்சபையோர்

        தப்பிதமென் றெண்ணாமற்

                சார்ந்தபிழை பொறுப்பார்.

14.        கிள்ளை குள றுமொழி

                கேட்டுமகிழ்வார் பெரியோ

        ருள்ளபடி யென்ற

                னுரைகேட்டுள மகிழ்வார்.

4. தாராட்டு

ராராரோ ராரரர

  ராராதி பாலகனே

 ராராரோ ராரேசு

    நாயகனே ராராரோ.

15.        காவில் விலகுங்

                கனியி னாலே விளைந்த

        பாவவினை தீர்க்கவந்த

                பாலகனே கண்வளராய்.

16.        திருந்தி வினை தீர்க்கத்

                தேடி யுனை யாரும்

        வருந்தியழைக்காமல் வந்த

                மாதவமே கண்வளராய்.

17.        மாசற்ற ஞான

                மனுவே மனுவேலே

        தேசுற்ற யூதர்குலச்

                சீர்வேந்தே நித்திரை செய்,

18.        தோற்றும் நரக

                சுவாலையில் வீழ்காம னரர்க்

        காற்றுதல் சொல்லவந்த

                ஐயனே நித்திரை செய்.

19.        தேவகோபஞ் சாபந்

                தீர்வை நரகஞ்சாவு

        பாவமெலா மாற்றவந்த

                பாத்திபனே கண்ணுறங்காய்.

5. கிறிஸ்துவின் தாழ்மை

20.        சீமானே வானுலகச்

                செல்வமே யூதர்களின்

        கோமானே மாடடையுங்

                கொட்டிலோ வுங்கள்பதி.

21.        கட்டிலுனக்கு மகா

                கஸ்தியோ தூங்குமஞ்சத்

        தொட்டிலிலும் புல்லுச்

                சுகமோ சுயாதிபனே.

22.        ஆனைபடைதேர் தளங்க

                ளான ரததுரகச்

        சேனைகளெல்லா மண்

                செருக்கோ விண் சீமானே.

23.        மேலுனக்கு நொந்ததுவோ

                மிக்ககுளிர் மேவினதோ

        பாலுனக்கு மெத்தப்

                பசித்ததுவோ பாத்திபனே.

24.        கேராபீ னெங்கே

                கிருபாசனங்க ளெங்கே

        சேராபீ மெங்கே யுன்

                செல்வமெங்கே தேயமெங்கே.

25.        வல்லமை யெங்கே

                மகத்துவ மெங்கே யுன்

        றுல்லிப மெங்கே

                சுரூபமெங்கே தூயவனே.

26.        வானவரெங்கே மோட்ச

                வாசிகளெங்கே யுனைக்கொண்

        டானவரெங்கே நீதா

                னாருமிலாப் பாலகனோ.

27.        பரதேசிலுள்ள பல

                பாக்கியத்தை விட்டுப்

        பரதேசிபோல் வரப்

                பட்சமுமக் குண்டாச்சோ.

28.        வானபரன் றேவ

                மகத்துவ மெலாமறைத்தே

        யீன நர ரூப

                மெடுக்கவோ விங்கு வந்தாய்.

29.        சுத்தவதி தேவ

                சுபாவத்தின் மேன்மையென்று

        சத்துருக்களாம் நரர்

                சுபாவத்தைச் சார்ந்தனையோ.

30.        சம்மனசோர் சூழுஞ்

                சதுர்விட் டுலகில் வந்தா

        லம்மாத்திர மகிமை

                யற்பவுலகந் தருமோ

. 31.        பரமண்ட லாதி

                பதியே யதிலும்

        தரைமண்ட லத்தின்மகா

                சங்கையென்று வந்தனையோ.

32.        அன்னையெளிய கன்னி

                யாஸ்திரியாச்சே யுனக்கிங்

        கென்னவிதத் தாலுயர்ந்த

                ஏற்றகலை போர்த்துவர்கள்.

33.        சொல்லுமெத்தைக் கேட்ட

                துரோகிகட்காய் வந்ததினாற்

        புல்லுமெத்தை யல்லாது

                பொன்னுமெத்தை யார்கொடுப்பார்.

6. பிறப்பின் பலன்

34.        வானவர சாதிபதி

                மண்மீதிங்கே கிடப்ப

        தீனநர ருன்னிடத்தங்

                கேகி யிருக்கவென்றோ.

35.        உன்னதத்தின் மேலா

                யுயர்த்தியெமை வைப்பதற்கா

        யிந்நிலத்தின் முன்னணையி

                லேகிடத்தப் பட்டனையோ.

36.        பாக்கியத்தைத் தேவ

                பவுசை யிழந்தவென

        தாக்கினையே நீக்கி

                யருமைசெய்ய வந்தனையோ.

37.        விந்தை விந்தை யானபல

                வெண்கலை யெங்கட்கருளக்

        கந்தைத் துணியுனக்குக்

                கைகண்ட நற்பலனோ.

38.        வானவனுக்கே மகிமை

                மண்ணிற் சமாதான

        யீனநரற்மேற் பிரிய

                மெய்தவந்த பாலகனோ.

39.        வங்கணமோ டங்கலகை

                மங்கைய ரிணங்கவிடு

        பங்கமற விங்கிருப

                தங்கடர வந்தவனோ.

7. தேவ லட்சண மாறுதல்

40.        கற்பனை பத்தும் வேறாய்க்

                கட்டுதச லட்சணமும்

        விற்பனமாய் மாறியொரு

                வேற்றுருவ மானனையோ.

41.        இறப்பும் பிறப்புமிலா

                னென்றவுன் மேன்மைக்கிங்

        கிறப்பும் பிறப்புமுளா

                னென் றிகழ வெய்தனையோ.

42.        என்றுமொரு கண்டசீ

                ராயிருப்போ மென்றதைவிட்

        டின்றுணை த்தான் கண்டவர்க

                ளென்னசொல்ல மாட்டார்கள்.

43.        மாறாத வஸ்துவும் நீ

                மாறினதுன் னன்பிரக்க

        வீறாலே வந்து

                விளைந்த வினோதமிதோ.

44.        சருவ பொருட்கும் வல்ல

                சாமியென் றாற்பின்னால்

        மறுகவிந்தக் கொட்டிலிலோர்

                வல்லமையுங் காணோமே.

45.        எங்கும் நிறைந்திருப்போ

                னென்றால்முச் சாஸ்திரிமார்

        திங்கட் டிசையினின்று

                தேடிவரக் காரியமேன்.

46.        எல்லாத்தையுந் தெரிந்தோ

                னேயானா லெங்கள்குறை

        யெல்லாத்தையுந் தெரியா

                னென்றாப்போ னின்றதெனோ

47.        பரிசுத்தவா னீதான்

                பாவிகளை மெத்தக்

        கரிசித்தா லத்தாற்

                கணிசமுனக் குண்டாமோ.

48.        நீதியுள்ளோ னேயானா

                னிஷ்டூரப் பாவிகளை

        வேதனை செய்யாமல்

                மீட்க வருவாயோ.

49.        ஞானவா னாமாகில்

                யாவு மதிசயிக்க

        ஈனக் குடிலிலுற்ற

                தெவ்வூர்ப் புதுஞானம்.

50.        சத்திய வாசகனீ

                சாவுகனி தின்றபொல்லாச்

        சத்துருக்கள் சாகாமற்

                றற்கா த்ததெந்தவிதம்.

51.        அளவிலா நன்மையுளோ

                னாச்சே யுனக்கோ

        ரளவுப் பிரமாண

                மானதென்ன வாச்சரியம்.

52.        பத்திலட்ச ணத்தினையும்

                பட்சமிரக்க மென்றே

        யுத்தவொரு லட்சணத்துக்

                குள்ளடக்கிக் கொண்டனையோ.

8. புகழ்ச்சி

53.        பட்சமிரக்க த்தானோ

                பட்சவுருக்க த்தானோ

        பட்சதாப த்தானோ

                பட்சமாய் வந்தானோ.

54.        இரக்கத் தொளிவோ

                விரக்கத் துருவோ

        இரக்கப் பெருக்கத்தி

                னேராள வெள்ளமதோ.

55.        கிருபாசனப் பரம

                கீர்த்திப் பிரதாப

        கிருபா சமுத்திரக்

                கிருபைக் கதிபதியோ.

56.        கருணா கடாஷக்

                கருணை யானந்தக்

        கருணாம்பரப் பொருளோ

                காட்சியோ காரணமோ.

57.        இரக்கமாய் வந்தா

                யிரக்கமாய்ச் சென்றா

        யிரக்கமாய் வானி

                லிருந்தாயினம் வருவாய்.

58.        சினேகத்தைக் காட்டிச்

                சினேகத்தை நாட்டிச்

        சினேகத்தைச் சூட்டிச்

                சினேகிக்க வந்தவனோ.

59.        ஆரென் றுரைக்கலா

                மப்பனே நின்மகிமை

        பேரொன்றை விஸ்தரித்துப்

                பேசுதற்கு நாவுளதோ.

60.        பாவிகளி ரஷகனீ

                பாவிகளி னாறுதனீ

        பாவிகளுக் கான

                பரமவடைக் கலநீ.

61.        கெட்டோரின் றாதையுநீ

                கெட்டோரி னன்பனும்நீ

        கெட்டோருக் கேற்ற

                கிருபா சமுத்திரம்நீ.

62.        நீயேயென் மோட்சம்

                நிலையான வாழ்வுபல

        னீயே யெனக்குயிராம்

                நித்திய சீவனலோ.

63.        என்னவிதமாக

                ஏற்றினும் நீசெய்ததயைக்

        கன்னதெல்லாங் கூடி

                யணுவுக் கணுவாமோ.

9. எரோதேயின் கொடுமை

64.        கட்டுமெட்டாய் வாழுங்

                கடுமெரோதே மாட்டுக்

        கொட்டிலிலுங் கூடக்

                குடியிருக்க வொட்டானோ.

65.        தோட்டத்தை விட்டுத்

                துரத்துண்டோர் செய்தபவ

        மாட்டுக் குடிலிலுந்தான்

                வந்திருக்க வொட்டாதோ.

66.        யூதர்களி ராஜாவென்

                றோதினா லச்சணமே

        பாதகர்தா னுன்னைப்

                பழிசெய்ய மாட்டாரோ.

67.        சொந்தவின மென்றுவந்த

                சொற்கேட்ட யூதருனை

        நிந்தனையாய் நினைந்தா

                னிஷ்டூரம் வேறதுண்டடோ.

68.        அழுத்த வொலியா

                யழுதக்காற் சேயர்

        கழுத்தை யறுக்கவந்தோர்

                கண்டுகொள்ள மாட்டாரோ.

69.        ஆட்டிடையர் தூதனைக்கண்

                டஞ்சினார் சேவகரிம்

        மாட்டிடையி லென்ன

                மகிமையைக்கண் டஞ்சுவர்கள்.

70.        எல்லா மெரோதே

                யிடஞ்சேர்ந்தார் காட்டிடைய

        ரல்லா லிராவிருளி

                லார்க்குவரச் சம்மதிக்கும்.

71.        எகிப்பத்துக் கோடவென்றா

                லெவ்வா றுன்றாதை

        யெகிப்பத்தோரைக் கடலு

                ளிட்டபழி கேளாரோ.

72.        இஸ்றா வேலுன்னை

                யிகழ்ந்தா லெகிப்பத்தி

        னசலா ரோவுன்ற

                னருமையறி யப்போறார்.

73.        எகிப்பத்துக் குத்திரும்பா

                யென்றிசைத் தநீயே

        யெகிப்பத்துக் கேகவிப்போ

                தெண்ணினதிங் கென்னசெயல்.

74.        அற்ப எரோதேக் கென்

                றஞ்சியெகிப் பத்தடைந்தாற்

        சொற்பவுல கமுனைத்

                தூஷணி த்துப்பேசாதோ.

75.        வல்லமையி லானோ

                மகிமையிலை யோகொலைஞர்

        கொல்லவந்தா னீயவரைக்

                கொல்லப் பெலனிலையோ.

76.        நோக்கிவான் றூதரந்நாள்

                லோ த்தூரார் கண்குருட

        தாக்கினாப் போனீயு

                மாக்கினா லொண்ணாதோ.

77.        தேடியே கொல்லவருஞ்

                சேவகர்க்காய் நீபயந்தங்

        கோடினாற் பெத்லேக

                மூரார்தானென்ன சொல்வார்.

10. நிந்தாஸ்துதி, அதாவது நிந்தையில்லாத் துதி

78.        சீனாமலையி னினீ

                செய்தபெரு மைகளிங்

        கானாலோர் வேளை

                யடம்வருமென் றஞ்சினையோ.

79.        மாடாடு சீனா

                மலையடுத்தாற் சாவெனவே

        யீடா யுரைத்தவுனக்

                கேற்றதுவோ முன்னணைதான்.

80.        எத்திசையும் பேரா

                யெகிப்பத்தைச் சங்கரித்த

        பத்துவிதச் சேவகரும்

                பாழடைந்து போனாரோ.

81.        வீடுமுட்டிக் காட்டில்

                மிருகத்தி டத்தில்வந்தோ

        மாடு முட்டுமென்று

                மருகியழாய் மாதவமே.

82.        மக்களுடன் பாதலத்தோர்

                        வானவரெ லாஞ்சிரிக்க

        வெட்கமற்று நீயழுதால்

                வேடிக்கை பார்க்காரோ.

83.        முன்னும றியா

                முகமறியாப் பேச்சறியா

        அன்னியதே சத்தில் வந்தா

                லாருனக்கு நன்மைசெய்வார்.

84.        ஊருமிலான் பேருமிலா

                னொன்றுமிலான் பந்துஐன

        மாருமிலான் சேயுனக்கிங்

                காருதவி செய்வார்கள்.

85.        பினாதிகள் நன்றறியாப்

                பித்தர்கள் மாபூதி

        யனாதிகட் காய்வந்தா

                லனாதியுன்பே ராகாதோ.

86.        சாலையிலையே பறித்துத்

                தைத்தணிந்தோர் தேயமதிற்

        சீலையிலை யென்றுவந்தாற்

                சீலையுனக் கெங்கருள்வார்.

87.        பெத்தலகே மூரானாற்

                பிள்ளையுன் சத்தங்கேட்டுச்

        சித்தம்வைத்தி ரண்டொருதர்

                சேர்ந்துதவி செய்யாரோ.

88.        வேந்தனீ யாகாசு

                வேருக்குன் னெஸ்தர்தனை

        யீய்ந்தோ விசறே

                லிடுக்கத்தை நீக்கிவைத்தாய்.

89.        சக்கரத்திலும் புவன

                சக்கரத்திலு மடங்காய்

        மிக்கவன்னை கைக்கடங்கி

                மிஞ்சாமற் போனனையோ.

90.        பேசுமெழுத் தைந்தினிலும்

                பின்னெழுத்தி னுமடங்காய்

        ஏசுவெனு மீரெழுத்தி

                லேயடங்கிப் போனனையோ.

91.        தேவனைத் தேவனென்று

                செப்புவதே மேன்மையல்லாற்

        றேவனை மாந்தனென்று

                செப்புவது செம்மையதோ.

92.        சிங்கமா யாடாய்ச்

                செழுஞ்சீவத் தாருவாய்ப்

        பங்கமா யென்றனுட

                பாக்கியமு மானனையோ.

93.        சிஷ்டியோ அல்லதுநீ

                சிஷ்டிகனோ செம்மறியின்

        குட்டியோ மேய்க்குகின்ற

                கோனோ குணாநிதியே.

11.        கிறிஸ்துவினினத்தார்

94.        தச்சனுனை வளர்த்த

                தாதையோ வுன்றனுட

        பிச்சளங்க ளெல்லாம்

                பெருமாட்டி டையர்களோ.

95.        வெட்டுக் கிளியருந்தி

                மெய்வனமெல் லாமலைந்தே

        யொட்டகத் தோலுடுத்த

                வோரிருடி யுன்றூதன்.

96.        பாவிகளா யக்காரர்

                பாதகங்க ளேபுரிந்து

        தீவினைக் காளானோர்

                சேர்ந்தசி னேகிதரோ.

97.        தேசமதி லுன்றனுட

                சீடர்களெ லாங்கடலில்

        வீசிவ லைபோட்டு

                மீன்பீடிக்குஞ் சாதிகளோ.

98.        ஆயக்கா ரனுனக்கன்

                பானவனோ தோற்பதஞ்செய்

        சாயக்கா ரன்வீட்டிற்

                றங்கினனிஸ் தானிகனோ.

12. தியானம்

99.        ஆண்டபொரு ணீபடைத்த

                வாதத்தின் மக்கள்சிறை

        மீண்டுகொள வோநரரின்

                வேஷத்தை மேற்போட்டாய்.

100.         வஞ்சம னுவோருன்

                வருகைத் தயவறிந்து

        நெஞ்சம கிழ்ந்துன்னை

                நினைந்துகொள்ளப் போறாரோ.

101.        தீயில்விழுந் தேள்

                திடுக்னெக்கொட்டும் பாவத்

        தீயில்விழுந் தோரையென்ன

                செய்கையினாற் றூக்கவந்தாய்.

102.        நிற்பந்தமும் பயமும்

                நிந்தையும்கே டும்நிறைந்து

        சற்பந்தனை யடுத்த

                சண்டாளர்க்கோ பிறந்தாய்.

103.        கட்டுண்டு பேயின்

                கடுஞ்சிறைக்குட் பட்டவர்கள்

        வெட்டுண்டு போக

                விரும்பினா லொண்ணாதோ.

104.        ஏதுகொடுத்தார் நரரென்

                றிக்கோலங் கொண்டதல்லாற்

        றீதுகொடுத்தோர்க் கருளச்

                சீவனையுங் கொண்டுவந்தாய்.

105.        உன்னைப்போ னாமாக

                வுன்னினதுன் னூர்க்கிருபை

        யென்னைப் போனீயான

                தெவ்வூ ரிரக்கமிது.

106.        குப்பையு யர்ந்துநெடுங்

                கோபுரங்கீ ழானதுபோ

        லப்பனீ தாழ்ந்திங்

                கடியாரு யர்ந்தனமோ.

107.        ஏதோ கடவு

                ளெளிமையாய்க் கொட்டிலுக்குட்

        பாதகா புல்லிற்

                படுத்திருப்ப தைப்பாரேன்.

108.        நன்றியறி யாமனமே

                நாயகனார் முன்னணைக்குட்

        சென்றங் கவரின்

                சினேகத்தைக் காண்கிலைபோ.

109.        இவ்விதமா யத்தனுனை

                யீடேற்ற வந்திருக்க

        எவ்விதமா யின்னமுல

                கிச்சைகளை எண்ணி நிற்பாய்.

13. பிரதிக்கினை

110.        இத்தனை யன்பா

                யிரங்கியெனை மீட்கவந்த

        அத்தனே யுன்னை

                யனவரதமும் பணிவேன்.

111.        தேவரீர் சித்தமதைச்

                செய்வேனேன் சீவனையு

        மாவலையு முன்னையன்றி

                யாரிடத்தும் வைத்துவையேன்.

112.        உன்னைப் புகழ்வே

                னுனைப்பணிவே னுன்னைவிட்டுப்

        பின்னையொரு பொருளைப்

                பேணிப்பி தற்றேன்யான்.

113.        வாக்கினாற் கண்ணால்

                மனத்தாலுன் வாஞ்சையினா

        னாக்கினா லுன்றனையென்

                னாட்களிலெல் லாந்தொழுவேன்.

114.        அனியாய மானவுல

                கற்ப சுகத்துக்கா

        யினிமே லுனக்கேறா

                தேதினையும் யான்புரியேன்.

115.        ஆற்றும நேசா

                அருமை மணவாளா

        வேற்றுமையா யுன்னைவிட்டு

                வேறாரி டத்திலுய்வேன்.

116.        பொன்னுலகை விட்டுப்

                புவியிலெனைப் போற்பிறந்த

        மன்னவனே நின்னை

                மறந்திருக்கும் வாறதெங்கே.

117.        பொல்லாத பாவியெனைப்

                போக்கமனம் வாராம

        லெல்லா மிலவசமா

                யீந்தாயென் னையாவே.

14. மன்றாட்டு

118.        மண்ணைப் பொருளை

                மனையாளை மற்றதொன்றை

        யெண்ணி யுனையிகழா

                தென்னையாட் கொண்டருளே.

119.        கெட்டோரைத் தேடுங்

                கிருபையே நீயெனைக்கை

        விட்டாலென்னாஞ் சிறையை

                மீட்டால லோமேன்மை.

120.        ஐயனே யென்னைமுற்று

                மாட்கொளுனக் கானதையே

        செய்யவருட் கண்ணாற்

                றிருவுளமே பார்த்தருள்வாய்.

121.        இத்தனைநாள் வீணா

                யெனைக் கெடுத்த பாதகங்க

        ளத்தனையும் நீக்கி

                யடிமையைக் கைக்கொள்வாயே.

122.        என்னையல்லாற் பத்தருனக்

                கெண்ணிறந்த கோடிகளுண்

        டுன்னையல்லா லென்றனக்கிங்க்.....

                கோருதவி யார்பரனே.

123.        தூயபரி சுத்தாங்கத்

                தூதர்புகழ் நீவேத

        நாயகனின் பாடலையும்

                நாட்டம்வைத்துக் கேட்டனையோ.

124.        சொல்வேத நீதத்

                துரையேயுன் தாசனெனை

        நல்வேத நாயகனாய்

                நாட்டியா சீர்வதிப்பாய்.

125.         நன்றாய்ச் சதாகால

                நாளெல்லாம் வாழ்ந்துகளித்

        தென்றுமென் மேலன்பா

                யிருந்தாள் பராபரனே.

15. திருச்சபை வாழி

126.        வேந்த ரறிஞர்

                மிகக்கற்றோர் மெய்குருக்கள்

        சாந்த சுவிசேடச்

                சபையோ ரெலாம்வாழி.

127.        வாழிப ராபரனின்

                மைந்தன்மனு வேலரசன்

        வாழியின்று மென்று

                மறுமையிலும் வாழியதே.

முற்றும்.

II. திருச்சபைத் தாராட்டு தலைவரிசை

அட்டவணை

                                                                        கண்ணி

1.        தேவபராமரிப்பு                                                1

2.        தேவனார் பிறப்பும் மனுடனார் சிறப்பும்                10

3.        பிள்ளைகள் வருணிப்பு                                        21

4.        கிறிஸ்து உண்டுபண்ணின நன்மை                        30

5.        பிள்ளைகளின் ஆறுதல்                                        49

6.        தேவதோத்திரம்                                                56

7.        திருச்சபை வாழி                                                59

1. தேவ பராமரிப்பு

1.        சீர்பூத்த தேவ

                திருச்சபைத் தாராட்டுரைக்கப்

        பார்பூத்த ஞானப்

                பரமசுதன் காப்பாமே.

2.        காப்பாற்ற வந்த

                கருணைமனு வேலரசே

        மூப்பான மெய்ச்சபையின்

                முப்பொருளே முன்னடவாய்.

3.        முன்னடவாய் நாயேற்கு

                மோசமொன்றும் வாராம

        லன்னை மரிமகனே

                ஆதிபிதா வின்சுதனே.

4.        ஆதிபிதா வானோ

                ரருமைமக னைப்பார்த்து

        மாதய வாய்த்தந்த

                மதலையே நித்திரைசெய்.

5.        நித்திரைசெய் சத்துருக்கள்

                நின்னிடத்திற் சேராமற்

        சித்தமி ரங்கித்

                திருக்கண்ணாற் பார்த்தருள்வார்.

6.        பார்ப்பார் ருனைத்தயவாய்ப்

                பார்த்துனது துக்கமெல்லாந்

        தீர்ப்பா ருனக்குத்

                தினந்தினமு நன்மைசெய்வார்.

7.        நன்மைசெய்வார் தேற்றரவி

                னல்லாவி யைத்தருவார்

        துன்மையெல் லாநீக்கிச்

                சுகத்திலுனை யாதரிப்பார்.

8.        ஆதரிக்கக் கர்த்தருண்டு

                அற்புதனாற் காவலுண்டு

        வேதன்று ணையதுண்டு

                வித்தகனார் தஞ்சமுண்டு.

9.        தஞ்சமுண்டு காவலுக்குச்

                சம்மனசுண் டேசுவுட

        ஐந்து காயத்தி

                னடைக்கலமுண் டெந்நாளும்.

2. தேவனார் பிறப்பும் மனுடனார் சிறப்பும்

10.        எந்நாளும் வாழ்ந்திருக்க

                யேசுவு னக்காக

        அந்நாளின் மாட்டகத்தி

                லன்னைவயிற் றிற்பிறந்தார்.

11.        அன்னை மரிவயிற்றி

                லாரிருள்சூழ் கானகத்தில்

        முன்னணையி லேபிறந்தார்

                மூடுதற்குச் சீலையற்று.

12.        சீலையுனக் குண்டவர்க்குச்

                சேர்த்தகந்தை மாத்திரந்தான்

        மேலும்நல்ல தொட்டிலுண்டு

                மெத்தையுண்டு கட்டிலுண்டு.

13.        கட்டிலுண்டோ கர்த்தருக்குக்

                காட்டிலென்ன வுண்டாகுங்

        கொட்டிலுக்குள் மாடுதின்குங்

                கூளமல்லால் வேறதுண்டடோ.

14.        வேறொருத்த ராதரவோ

                மேய்ப்பர்களை யல்லாமற்

        கூறுதற்கோ வுன்றனக்குக்

                கூடமுண்டு வீடுமுண்டு.

15.        கூடமுனக் குண்டவர்க்குக்

                கொட்டிலுண்டு புல்லுமுண்டு

        மாடுமுண்டு பின்னே

                மடத்திலிட முண்டாமோ.

16.        உண்டா முனக்கோ

                வுலகவெகு மானமெல்லாங்

        கொண்டாடத் தந்துவிட்டார்

                கோடிவிதச் சீராட்டும்.

17.        சீராட்டத் தாயருண்டு

                சேர்ந்திருக்கத் தோழருண்டு

        தாராட்டச் செல்வியுண்டு

                சந்ததிகள் வீட்டிலுண்டு.

18.        வீட்டி லுனக்கு

                வெகுபே ருதவியுண்டு

        காட்டிலெங்கள் கர்த்தருக்குக்

                கைக்குதவி யாரிருந்தார்.

19.        ஆரிருந்துங் காரியமே

                னக்குடிலும் விட்டேகக்

        கோர எரோதே

                கொடுமைமிகச் செய்தானே.

20.        கொடுமைசெய் வாரில்லைக்

                கொல்லு வாரில்லைக்

        கடுமைசெய் வாரில்லைக்

                கவலையற்று நித்திரைசெய்.

3. பிள்ளைகள் வருணிப்பு

21.        நித்திரைசெய் தெள்ளமிர்தே

                நேசமுறும் பைங்கிளியே

        சித்திரப்பூங் காவனத்திற்

                சென்றுவருங் கோகிலமே.

22.        கோகிலமே தாராவே

                கூவும் புறாவினமே

        பாகுதனிலே சமைந்த

                பஞ்சா முதத்தேனே.

23.        தேனே ரசமே

                திகட்டாத செங்கரும்பே

        மானேயென் கண்ணே

                வயிரமணிப் பெட்டகமே.

24.        பெட்டகமே பொற்பணியே

                பேழையே யென்னாசைக்

        கட்டழகே மாத்துயர்ந்த

                கட்டித் திரவியமே.

25.        கட்டிமுத்தே சீவரத்னக்

                கண்ணே யெனதுயிரே

        வட்டமிட் டாடு

                மயிலே மயில்பேடே.

26.        பேடே இளங்கொடியே

                பிள்ளைக் கலிதீர்த்து

        வீடே யுலாவி

                விளையாடும் நல்லனமே.

27.        அன்னமே சோபனமே

                யாதனமே மாதனமே

        சொன்னமே மின்னே

                துலங்கவரும் பாக்கியமே.

28.        பாக்கியமே கூத்தாடும்

                பாவையே பங்கயமே

        தீர்க்கமிகும் ஞான

                தீபமே கண்வளராய்.

29.        கண்ணுறங்கு மின்னரசே

                கர்த்தரிரக் கம்வைத்துப்

        புண்ணியமாய்த் தந்தருளப்

                பூத்துவளர் கற்பகமே.

4. கிறிஸ்து உண்டுபண்ணின நன்மை

30.        கற்பகமே நீதான்

                கலங்கி யழவேண்டாம்

        அற்புதனா ருன்மேலு

                மன்புவைத்தா ரந்நாளில்.

31.        அந்நாளில் யூதர்க்

                களித்ததுபோ லிங்குனக்கு

        மன்னாவைத் தந்தருள

                வந்தார் பரமசுதன்.

32.        பரம சுதனும்

                பராபர னுமானோர்

        வரமனைத்து முண்டாக்க

                வந்தாரே பாவிகட்காய்.

33.        பாவிகளுக் காகவென்றே

                பாடுபட்ட புண்ணியனார்

        சீவக னியுனக்குத்

                தின்பதற்குக் கொண்டுவந்தார்.

34.        கொண்டுவந்தா ரெங்கள்

                குலமானா ராதிநரர்

        பண்டுகனி தின்ற

                பழவினையும் பொய்யாமோ.

35.        பொய்யான பேய்களுடன்

                போர்செய் திளைத்தவர்க்கு

        மெய்யான அப்பமவர்

                மேன்மையுள்ள பானமவர்

36.        மேன்மையுள்ள ராஜா

                வினைதீர்க்கு மேசியா

        மானமிகுந் தேவ

                மனுவேல்தம் மாங்கிஷத்தை.

37.        மாங்கிஷத்தைப் போசனமாய்

                மாற்றித் தமதுதிரம்

        ஈங்குனக்குப் பானமதா

                யீய்ந்தார் கிறிஸ்திறைவன்.

38.        கிறிஸ்து மனோவாக்காற்

                கிரகிக்கக் கூடாத

        திரித்துவத்தி லொன்றாகச்

                சேர்ந்திருக்கும் ஞானமவர்.

39.        ஞானப் பராபரனார்

                நல்மனதா யுன்றனக்கு

        வானத்தி னப்பமென

                மைந்தனையுந் தந்தாரே.

40.        மைந்தனுக் காயாவும்

                வகுத்தா ருனைப்படைத்தா

        ரிந்தவித நன்மைகளுக்

                கென்னதா னொப்பாகும்.

41.        ஒப்பற்ற தேவ

                னுனக்கிரங்கி வானாட்டின்

        அப்பத்தைத் தந்தா

                ரதிலுமின மென்னசெய்வார்.

42.        என்னென்ன வேண்டினதோ

                வெல்லா முனக்கிருக்கப்

        பின்னையும்நீ கத்தியழப்

                பேச்சுண்டோ கண்மணியே.

43.        கண்ணே யுனது

                களையாறச் சீவனுட

        தண்ணீர் குடிக்கத்

                தருவார் பரமசுதன்.

44.        பரமசுதன் தேடிவைத்த

                பாக்கிய மெல்லாந்

        தருவார் நீகேட்டால்

                தரமாட்டோ மென்பாரோ.

45.        மாட்டாரோ நின்கவலை

                மாற்றாரோ நின்னை விட்டுப்

        போட்டாரோ புஸ்தகத்துன்

                புள்ளியிரா தேபோமோ.

46.        புள்ளிபுள்ளி யானபல

                பொற்சரிகைப் பூப்போட்ட

        வெள்ளை நிலையங்கி

                விதவிதப்பட் டாடைகளும்.

47.        பட்டுப்பட் டாவளியும்

                பன்னிருமுத் தாரமதுங்

        கட்டு பன்னிரண்டு

                கதிர்மின்னும் ரத்தினமும்.

48.        மின்னிய ஞானாபரண

                மேன்மையுள்ள பெட்டகமும்

        பொன்னின் முடியுமெங்கள்

புண்ணியனார் கையிலுண்டு.

5. பிள்ளைகளின் ஆறுதல்

49.        கையிலொரு பிள்ளைதனைக்

                கர்த்த ரெடுத்தேந்திச்

        செய்த தயவுனக்குஞ்

                செய்யா திருப்பாரோ.

50.        செய்வாரா சீர்வாதஞ்

                செய்வா ரனுக்கிரகம்

        பெய்வார் கிருபைப்

                பெருக்கில்விளை யாடாயோ.

51.        ஆடாடு சாஞ்சாடங்

                காடிங்கா டாஞ்சுகளோ

        டாடாடுன் னேசுவுமோ

                ராடவர்க்கு நீயாடு.

52.        ஆட்டுக்காய்ச் சீவனைவிட்

                டாட்டுக்காற் றாவீது

        சூட்டுக்கோல் பற்றித்

                துரத்திவிட்டார் துன்மனசை.

53.        துன்மனசாம் பேய்கள்வந்து

                சோதனைகள் செய்யாமற்

        சம்மனசிலே சிலரைத்

                தற்பரனார் காவல்வைப்பார்.

54.        காவலாய் நிற்பாரென்

                கண்ணேநீ கண்ணுறங்கு

        கூவியழு தேங்காதே

                கோபமிகப் பூணாதே.

55.        பூண்டெழுந்த பேய்களுடன்

                போர்செய்து வெற்றிகொண்ட

        ஆண்டவனார் காவலிங்குண்

                டஞ்சாம னித்திரைசெய்.

6. தேவ தோத்திரம்

56.        அஞ்சவரும் பாவிகளுக்

                கஞ்சல்தரு மைங்காயர்

        கஞ்சமலர்ப் பாதங்

                கனவிலேயும் யான்மறவேன்.

57.        கனவி னினைவிற்

                கருத்திற் கண்ணுக்குள்

        மனதிலென் றன்வாக்கில்

                மனுவேலைச் சிந்தைசெய்வேன்.

58.        சிந்தித் துருகித்

                தியானசெப மாலையினால்

        வந்தித்தென் னேசுவுடன்

                வாழ்ந்திருக்கச் செய்வேனே.

7. திருச்சபை வாழி

59.        செய்யதிரு நெல்வேலித்

                தேவ சகாயனருள்

        மெய்வேத நாயகன்சொல்

                மிக்கசபைத் தாராட்டே.

60.        தாராட்டு வாழி

                சபைவாழி யச்சபையிற்

        சீராட்டும் பாலர்

                சிறந்திருக்க வாழியதே.

முற்றும்.

……………………………..

III. பேரின்ப காதல் தலைவரிசை

     அட்டவணை                                                                                                                                                                                                                                கண்ணி

1.        கடவுள் வாழ்த்து                                                                        1

2.        அவையடக்கம்                                                                        9                

3.        தசாங்கம்                                                                                15

4.        காதற்புகழ்ச்சி                                                                        25                                                                                        

5.        தேவலட்சணம்                                                                        39

6.        தாழ்ச்சி                                                                                65

7.        விசுவாசம்                                                                                107

8.        பாடுபட்ட தியானம்                                                                130

9.        கிறிஸ்துவினாத்துமப் பாடுகள்                                                        134

10.        கிறிஸ்துவின் சரீரப்பாடுகள் (1) தோட்டத்திற் பட்ட பாடுகள்                142        

11.        (2) காய்பாவின் வீட்டிற் பட்ட பாடுகள்                                        148

12.        (3) பிலாத்துவின் வீட்டிற் பட்ட பாடுகள்                                        160

13.        (4) கொல்கதாமலையிற் பட்ட பாடுகள்                                        190

14.        மனவிசாரம்                                                                                 244

15.        மனஸ்தாபம்                                                                        282

16.        யூதர்களின் நன்றிகேடு                                                                304

17.        ஆற்றுமப்பெண்ணெப்பாரி                                                        340

18.        வியாகுலம்                                                                                348

19.        மனஸ்தாப முக்கியம்                                                                357

20.        மன்றாட்டு                                                                                383

21.        செபம்                                                                                397

22.        பக்தி                                                                                        412

23.        மனஸ்தாப யோசனை                                                                419

24.        பிரதிக்கினை                                                                        430

25.        நம்பிக்கை                                                                                437

26.        காதலன் புகழ்ச்சி                                                                        457

27.        திருச்சபை வாழி                                                                        465

28.        பேரின்பக்காதலளவு                                                                473

காப்பு

        திருவுரை மறுத்த மாந்தர்

தீதறச் சிலுவைமீது

குருதி யனை த்துஞ் சிந்திக்

கொலைப்படச் சித்தமான

பெருமைசே ரேசவுக்கோர்

பேரின்பக் காதல்பாடக்

கருணையிஸ் பிரீத்துச் சாந்தெங்

கடவுடா டுணைக் கொள்வோமே.

1. கடவுள் வாழ்த்து

1.        சீர்பூத்த மானிடனுந்

                தேவனுமொன் றாயெழுந்த

        பார்பூத்த யேசு

                பராபரன்மேற் காதலுக்கு.

2.        சிந்தைதனில் வந்தெனக்குத்

                தீர்க்கமிகும் வாக்குதவி

        தந்தருளு மிஸ்பிரீத்துச்

                சாந்துவெனுங் கர்த்தாவே.

3.        வானத்தோர் பூதலத்தோர்

                மற்றவருங் கொண்டாடும்

        ஞானக் கிறிஸ்தேசு

                நாயகன்மேற் காதலுக்கு.

4.        தேற்றரவே சீடர்

                சிரத்திலன்று செஞ்சுடர்போ

        லாற்றவரும் பரிசுத்

                தாவியே முன்னடவாய்.

5.        மாசில்லாத் தேவனுக்கு

                மைந்தருக்கு மைந்தனெனு

        மேசியா விம்மானு

                வேலிறைமேற் காதல்சொல.

6.        ஆய்ந்ததவ நூற்றிருப

                தன்பர்புக ழிஸ்பிரீத்துச்                                (அப்.1:14,15)

        சாந்து திருப்பாதஞ்

                சதாகாலம் யான்மறவேன்.

7.        தேசுலவு மேலாந்

                திரியேக வஸ்துவென்ற

        பேசரிய கர்த்தனின்மேற்

                பேரின்பக் காதல்சொல.

8.        ஆண்ட பரிசுத்த

                வரூபியே யென்றனக்கு

        நீண்டதமிழ் வாக்களித்து

                நித்தநித்தங் காத்தருளே.

2. அவை யடக்கம்

9.        பாடுபட்ட யேசு

                பராபரன்மேற் காதலையா

        னேடுகற்ற நாவலர்முன்

                னேற்றத் துணிந்ததுதான்.

10.        அன்றொரு பெண்பேதை

                யறிவின்மிக்க சால்மோனை

        வென்றுகொள்ளச் சொன்ன

                விடுகதைக்கி தொப்பாகும்.

11.        சொல்லாகும் பாட்டாகுந்

                தோத்திரிக்கும் நாவாகுங்

        கல்லாகும் நெஞ்சக்

                கசடனா னாகாதே.

12.        இவ்வா றடியே

                னிழுக்குடைய பாட்டிலொன்று

        மொவ்வா தெனினு

                முசிதமெனக் கொண்டருள்வார்.

13.        பிள்ளைகளன் றோசியன்னா

                பேசினதற் கேசுபரன்

        றள்ளிவிடக் கேட்ட

                சாஸ்திரிகட் கென்னசொன்னார்.

14.        அன்னதுபோ லென்கவிதை

                யாகாதெனி னுமன்பாய்ப்

        பன்னுதமிழ்ப் பாவலர்கள்

                பக்கிஷமாய்க் கேட்பாரே.

3. தசாங்கம்

15.        போதந்தரும் புகழ்சேர்

                பூருவமோ சேக்குமுனம்

        வேதந்தரும் பெருமை

                மேவியசீ னாமலையான்.

16.        வல்ல மறைப்பெட்டி

                வரக்கண்டு பின்வாங்கி

        நல்ல யொவான் றீட்சை

                நடத்தியயோர் தானதியான்.

17.        ஆறுகுடம் நீரை

                யரியமணப் பந்தலிலே

        தேறுமது வாகவருள்

                செய்கலிலே யாத்தேயன்.

18.        பேரின்பச் செல்வப்

                பெருக்கில் மிகவளர்ந்து

        சீரின்பத் தாயர்பணி

                செய்நசரை யம்பதியான்.

19.        மூவாள தொன்றாய்

                முடிந்தெருச லைக்கெழுந்த

        மாவேச ரியெனச்சொல்

                வாய்மைமிகும் வாரணத்தான்.

20.        பற்றுதலாய்ச் சீடரெல்லாம்

                பார்க்கப் பிரஸ்தாபமுடன்

        வெற்றிபெற வானிலெழு

                மிக்கமே கப்பரியான்.

21.        அதிரு மலகை

                யனைத்து மடங்கிப்

        பதறுஞ் சிலுவைப்

                பசுமைப் பதாகையினான்.

22.        வீறாக மானிடரும்

                விண்ணவரு மந்திசந்தி

        மாறாம லுச்சரிக்கு

                மந்த்ரஜெப மாலிகையான்.

23.        தூய வெழுதாரை

                தொனிக்க மரித்தோரை

        மூய்வி லெழும்ப

                முழங்குங் கனமுரசான்.

24.        வானோர்கள் பூதலத்தோர்

                வன்பாத லத்தோர்மற்

        றானோரு மெவ்வுயிரு

                மஞ்சல்செய்யு மாணையினான்.

4. காதற் புகழ்ச்சி

25.        உலக முழுது

                மொரு குடைக்கு ளாண்ட

        வலவன் றவிதரச

                வங்கிஷ கிரீடாதிபதி.                 (1 நாளா.18:1. முதல்)

26.        நேசத் திரித்துவத்தி

                னித்திய மத்திஸ்தமுறை

        யேசுக் கிறிஸ்தென்

                றிசைந்த திருநாமன்.

27.        வீரப்பட்டந் தரித்த

                மிக்க குருவினதி                           (எபி. 5 :6.)

        காரப்பட்டந் தரித்த

                காவ லபிஷேகன்.

28.        திக்கிலெழு ஜாதிகளைச்

                சேரநிக்கிர கம்புரிந்து

        மிக்கவிச றாவேலின்

                மேனடத்துஞ் செங்கோலான்.         (ஆதி. 15:18.)

29.        சங்கரிப்பி னூற்றெண்பத்

தையாயிரஞ் சனத்தைச்              (2 இரா. 18:18.)

சங்கரிக்கு மோர்சம்

மனசுதரச் சேனையினான்.              (சங். 60:8-10)

30.        பாராளும் வேந்தர்

                பணிந்துகப்பங் கொண்டுவரு

        மீராறு வாசல்வைத்த

                யேருசலேங் கோட்டையினான்.          (சங். 72:10.)

31.        ஆருந் திறவா

                தடைத்தவனப் பாற்றிறந்தா

        லாரு மடைக்காம

                லதிசயஞ்செய் வாசலினான்.             (வெளி. 3:7.)

32.        கற்பதித்த த்தினக்

                கபாடமின்னப் பொற்றகட்டின்

        பொற்பிலங்க முத்தமெல்லாம்

                பூத்திலங்கும் வாசலினான்.

33.        சிங்காச னத்திற்

                செழிக்குந் தவிதரசன்

        சங்கீதம் பாடிக்கூத்

                தாடிவரும் வாசலினான்.

34.        தூதர்க ளெக்காளத்

                தொனிமுழங்கப் பன்னிருவர்

        வேத முழங்க

                வெடிமுழங்கும் வாசலினான்.

35.        நாலு ஜீவன்கணின்றி

                ராப்பகலு மோயாமற்

        கோலமாய்ப் பாப்பாடிக்

                கூவிநிற்கும் வாசலினான்.       (வெளி. 4:6,8)

36.        தங்கண் மகுடங்க

                டனைக்களைந்தப் பாற்போட்டு

        மங்களங் கணாலாறு

                மன்னவர்சொல் வாசலினான்.

37.        பன்னிருவர் வேதபா

                ராயணங்கள் பண்ணமுன்னாட்

        பன்னிரு பிதாக்கள்

                பணிந்துதொழும் வாசலினான்.

38.        கேராபீன் போற்றக்

                கிறிஸ்தவ ரெல்லாமகிழச்

        சேராபீம் மேற்பவனி

                சென்றுவருஞ் சீர்வேந்தன்.

5. தேவ லட்சணம்

39.        தோற்ற முடிவற்ற

                சுயம்பா யனாதியுமாய்

        மாற்றமில்லாப் பேரொளிவாய்

                வந்த திருவுருவான்.

40.        ஆராயக் கூடாத

                ஆழத் திருக்கருணைப்

        பேராயு தவும்

                பெருமைப் பெரும்புகழான்.

41.        எல்லா மறிந்திருப்போ

                னெங்கும் நிறைந்திருப்போ

        னல்லார் பொல்லார்கிரியை

                யாவும் நடுத்தீர்ப்போன்.

42.        எல்லா வுயிர்க்கு

                மிறையா யிறைவனுமா

        யல்பாவா யோமேகா

                வாயனைத் துங்காத்தளிப்போன்.

43.        எவ்வுயிர்க்கு மீச

                னிரக்ஷகனி யேசுவென்ற

        திவ்விய திருநாமத்

                திரித்துவத் திரண்டாளான்.

44.        ஞானத் தளவில்லா

                நன்மை வடிவானோன்

        வானத் தமலர்

                வணங்கிநிற்கு மாவேந்தன்.

45.        காணக்கூடா தானோர்

                கண்டிப்ப தில்லாதான்

        தோணக்கூடா த

                சொரூப னருபா ரூபன்.

46.        சமஸ்த சகாய

                சமஸ்த வுபாய

        சமஸ்த குணால

                தயாப சருவேசன்.

47.        ஒன்றுநிக ரில்லாதா

                னோர்பழுது மில்லாதா

        னென்றுமொரு கண்டசீ

                ராயிருக்கு மேகாந்தன்.

48.        வாக்குக் கடங்கான்

                மனத்தினுக்கு மெடடாதா

        னோக்குக்கு நோக்கானன்

                னோக்குக்கு நோக்காவான்.

49.        முத்தி வழிகாட்டி

                முதன்மைக் குருவடியாய்ச்

        சத்திய வேதத்தைத்

                தரவுதித்த தாஷ்டீகன்.

50.        ஈரைந்தி லட்சணத்தா

                னீரைந்து கற்பனையா

        னோரைந்து காயத்

                துலகமுழுதும் புரப்போன்.

51.        துன்மையென்ப தில்லான்றுற்

                சிந்தையில்லா னிந்தையில்லா

        னன்மையெல்லா முள்ளா

                னலமுள்ளான் ஞானமுள்ளான்.

52.        தாய்தந்தை யில்லான்

                றமரில்லான் றாரமில்லான்

        பேய்தந்தி ரத்தரத்தைப்

                பிட்டவுக்ரமப் பெலத்தான்.

53.        ஏறாத கண்டவெளிக்

                கெட்டாப் புறத்தினிற்கு

        மாறாத திட்டவட்ட

                மண்டலீகப் பெருமான்.

54.        ஆதத்த கத்தி

                னதத்தை யதமாக்கி

        வேதத்தி தத்தில்

                விதத்தில்வைத்த விச்சேத்திரன்.

55.        சிற்றின்ப மாயவலைச்

                சிற்றிடையா ராசைகொண்டு

        முற்றுந் திரிந்ததிரி

                மூர்த்திகளுங் காணாதான்.

56.        ஆறாறு சக்கரத்து

                மச்சரத்துந் தத்துவத்தும்

        வேறேதுள சமய

                வேடத்து மேவாதான்.

57.        அக்குமணி சங்குமணி

                யாண்டிமணி தாதர்மணி

        பொக்குமணி யல்லாற்

                புகழ்மணியென் றெண்ணாதான்.

58.        அவ்வுநவ்வுஞ் சவ்வுமதி

                லையுங் கிலியுமென்றே

        செவ்வையற் றக்கியானர்

                செபிக்குஞ் செபங்கேளான்.

59.        பேச்சாற் பிதற்றல்களாற்

                பேய்க்கூத்தால் வெண்சாம்பற்

        பூச்சால் முழுக்கதனாற்

                போற்றக் கிடையாதான்.

60.        செம்பில் மரத்திற்

                சிலையி லிருக்குதென்று

        கும்பிட்டு நிற்குங்

                குருடரைக் கைக்கொள்ளாதான்.

61.        வாயிற் றலையில்

                மடியில்மனை யைச்சுமந்த

        பேயைக்கொண் டாடுகின்ற

                பித்தர்களைக் கொண்டாடான்.

62.        பொல்லாக் குணம்படையான்

                புண்ணியமெல் லாமுடையா

        னெல்லாப் பொருளு

                மிறைஞ்சிநிற்கு மெண்குணத்தான்.

63.        எல்லையில்லா மெஞ்ஞானத்

                தின்பக் கடல்சருவ

        வல்லமைக்கு மேலா

                மகத்துவப் பிரகாசன்.

64.        தேவாதி தேவன்மகா

                திவ்வியபரி சுத்தவஸ்த

        தேவாள் தினுங்கனியா

                லிஸ்திரியின் வித்தானோன்.

6. தாழ்ச்சி

65.        எந்தை யிசறாவே

                லிறைவ னெழுந்தொருநா

        ளந்தமிகும் பொற்சிலுவை

                யாசனத்தி லேயிருந்தான்.

66.        வேதத்துரை குருசின்

                மேலிருக்கும் நாட்பழைய

        வாதத்தின் பிள்ளை

                யரும்பாவி யானடியேன்.

67.        தேவாதி தேவனுக்கொப்

                பாயிருக்கச் சிந்தைசெய்த

        வேவாளின் பிள்ளையிறைக்

                கேறாத புத்திரனான்.

68.        நாலுவர மெல்லாம்போய்

                நன்மையும்போய் ஞானமும்போய்

        மேலு மலகைக்கு

                மிகவடிமைப் பட்டதொண்டன்.

69.        நன்றியற்றுச் செய்த

                நடக்கையைக் கண்டச்சணமே

        யொன்றுக்கு மாகானென்

                றொற்றிவிடப் பட்டவிடன்.

70.        தோட்டத் திலுள்ள

                சுதந்தரமெல் லாம்பறித்துக்

        காட்டிற் றுரத்திவிடக்

                கண்கலக்கப் பட்டலைந்தோன்.

71.        நீதிக்குஞ் சாகா

                நிலைமைக்குந் தூதர்களின்

        சரதிக்கு மப்புறத்தே

                தள்ளுபட்ட சண்டாளன்.

72.        எல்லாச்சு தந்தரமு

                மெல்லாப் பெருக்கமும்போய்ப்

        பொல்லாதா னென்று

                புறக்கணிக்கப் பட்டவம்பன்.

73.        தட்டுதலா கப்பேசித்

                தந்தையை விட்டுத்தூரப்

        பட்டிடுக்கப் பட்டவதிப்

                பட்டலையப் பட்டமகன்.

74.        இட்ட நலத்தோ

                டிளமையெல்லாம் போக்கடித்த

        கெட்ட குமாரக்

                கிருத்திரமக் காலாந்திரன்.

75.        காலா காலத்திற்

                கதிவழியைத் தோணாம

        னாலா விதத்திலேயும்

                நன்மையற்ற மூடாற்றுமன்.

76.        வஞ்சமனப் பேய்க்கு

                மனதை முழுதுங்கொடுத்திட்

        டஞ்சலெனக் கும்பிட்

                டலைந்த வறிவீனன்.

77.        சொற்ப வுலகைச்

                சுகமென் றகத்திலுன்னி

        யற்ப நினைவா

                லலைக்கழிந்த வாங்காரன்.

78.        பாவத் துருவாகப்

                பார்மீதிலே பிறந்து

        தேவத் தைச்சற்றெனினுஞ்

                சிந்தைசெய்யாத் தீபாவி.

79.        நற்புத்தி சொல்வாரை

                நாடாம னாரியர்க

        டுற்புத்தி கேட்டுச்

                சுகங்கெட்ட துன்மார்க்கன்.

80.        ஆன நாளெல்லா

                மலகைக்கா ளாயலைந்து

        மான மழிந்து

                மதியழிந்த வன்பாவி.

81.        என்ன படித்தாலு

                மேதேதைக் கேட்டாலு

        மன்னபடி செய்யாத

                வக்கிரமச் சிந்தையினான்.

82.        சாடி சொல்லுதற்குஞ்

                சகல பிரளிகட்குங்

        கோடி புலைக்குங்

                கொலைக்குங் குருபீடம்.

83.        வாங்காம னீதி

                மறைபகரு மாதவரோ

        டாங்காரம் பேசியெதிர்த்

                தாடிநிற்கும் மாகாத்தியன்.

84.        மோகமுற்ற பாவவிருண்

                மூடியதி னாற்படித்த

        வாகமத் தாலுள்ள

                மடங்காத துர்சீலன்.

85.        சன்மார்க்க வேதத்

                தவமில்லாச் சாந்தமில்லாத்

        துன்மார்க்கப் பொல்லாத்

                துடுக்கர்கட் கெல்லாந்தோழன்.

86.        மோகவெறி யான்மயங்கி

                மூதறிவெல் லாமழிந்த

        தேக சுகபோக

                சிற்றின்ப வுல்லாசன்.

87.        ஞான வறிவுணர்த்தல்

                நல்லோர்கள் சங்காத்தந்

        தானந் தவமுயற்சி

                சற்குணங்க ளொன்றுமிலான்.

88.        பாவ வழியிற்

                பலகால முந்திரிந்து

        சீவனுக்கு முத்திவழி

                தேடாத சீர்கேடன்.

89.        ஆகாதோர் சங்காத்தத்

                தாலவர்கள் யோசனையால்

        வாகான நீதி

                வழிமறுத்த வஞ்சகத்தான்.

90.        மங்கையரைக் கற்பழிக்க

                வங்கணஞ்செய் காமுகரோ

        டெங்குமுறவாய்த் தெருவெல்

                லரமலைந்த காவாலி.

91.        சம்பிரதா யங்கள்பல

                சாற்றிப் பிரிவினைக்காய்க்

        கும்புகளைக் கூட்டிக்

                குழப்புங் கலகேந்திரன்.

92.        திருட்டுப் பிரட்டுத்

                திருவா தரத்துக்

        குருட்டு முரட்டுக்

                குணத்துக் குருசாமி.

93.        கற்ற புலவர்க்குங்

                கவலைகொண்ட நல்லவர்க்கு

        முற்ற வொருகாசு

                முதவா மகாவுலுத்தன்.

94.        வீறாகக் கற்றவர்முன்

                மேட்டிமைய தாயெதிர்த்துத்

        தூறாக யாவரையுந்

                தூஷணிக்குந் துர்க்குணத்தான்.

95.        பொன்றிய கோபப்

                புகையெழும்பி யோருரைக்காய்

        கன்றிமனம் பொங்கித்

                கதறுங் கடுஞ்சினத்தான்.

96.         வாதாடிச் சூதாடி

                வாயாடிப் பேயாடிக்

        காதாடிக் கூத்தாடிக்

                காற்றாடித் காலாடி.

97.        வெட்கமற்றுச் சிக்கதற்று

                வேலையற்றுச் சோலியற்றுக்

        கட்குடித்து வீணாட்

                கழிக்குங் கசுமாலன்.

98.        பெத்தரிக் கக்காரப்

                பிசாசோ டுறவாகிச்

        சத்துருவி னுங்கடையாய்த்

                தாழ்ந்தநீ சத்தனத்தான்.

99.        பேய்க்காளாய்ப் பேய்க்குணமாய்ப்

                பேய்க்குலமாய்ப் பேய்க்குருவாய்ப்

        பேய்க்கோலப் பேய்க்கூத்தாய்ப்

                பேயாடும் பேயாண்டி.

100.        எந்தெந்தச் சங்காத்த

                மேதே துலகிலுண்டோ

        வந்தந்தக் கேட

                தனைத்தினுக்கு முந்தியவன்.

101.        இத்துர்க் குணக்கே

                டெலாமுடைய பாதகனான்

        சுத்த சபைக்குட்போய்த்

                தொழுவது கூடாதெனவே.

102.        பத்தி யில்லாமற்

                பராபரன்றன் கோவில்புக்க

        லெத்ததென்று சொல்லி

                யிருதயத்திலே யுணர்ந்தேன்.

103.        ஆவதினா லம்பரனை

                யாவியினா லுண்மையினால்

        மேவி வணங்குவதே

                மேனமையெனச் சிந்தைசெய்தேன்

104.        புத்திசொல்லு மாதவர்கள்

                போதகங்கேட் டாற்பதவி

        சித்திக்கு மென்றே

                திருமனையைக் காணநின்றேன்.

105.        இன்னபல நீதிநினைந்

                தேகசரு வேசுரன்றன்

        சன்னதிக்குப் போகச்

                சனங்க ளுடனடந்தேன்.

106.        பாடுங் கலையாற்

                பராபரனைக் கொண்டாடித்

        தேடுங் குழாங்களொடு

                தேவாலயஞ் சேர்ந்தேன்.

7. விசுவாசம்

107.        சேர்ந்தேன் றயாபரனைச்

                சேவித்தேன் சிந்தைகளி

        கூர்ந்தேன் பணியக்

                குனிந்துமுழங் காலினின்றேன்.

108.        வள்ளலென யூதரெல்லா

                மாபரிகா சங்கள்செய்து

        முள்ளினாற் சூட்டு

                முடிதரித்த பொற்சிரமும்.

109.        மொய்த்தகொடுஞ் சேவகர்தான்

                மோதிவிழுந் தேபிடித்துப்

        பிய்த்திழுக்க ரோமமெல்லாம்

                பிய்ந்திருக்கும் நற்சிகையும்.

110.        ஓராத பொய்ச்சாஷி

                யோடியங்கள் தூஷணங்க

        ளேராத வார்த்தையெல்லா

                மேற்ற திருச்செவியும்.

111.        ஆட்டுங் குதிப்பு

                மடாமையுங்கண் டொன்னார்க்கு

        காட்டுங் கருணா

                கடாட்சத் திருவிழியும்.

112.        கண்டகடற் காளானைக்

                காடிதுவைத் தீசோப்பத்

        தண்டதனிற் பூட்டித்

                தரக்குடித்த நல்வாயும்.

113.        பாய்ந்தபுலி போலவொரு

                பாதகனாங் காரமுடன்

        காய்ந்தடிக்க வீங்கிக்

                கறுப்படர்ந்த கன்னமதும்.

114.        சூடுமிரத்தக் கறையாற்

                றுப்புமுமி னீர்க்கறையால்

        வாடி வடிவ

                மறைந்த மதிமுகமும்.

115.        வன்கட்டாயக் களவாய்

                வந்துகனி கொய்தவர்க்காய்ப்

        பின்கட்டாய்ச் சேர்த்துப்

                பிணித்த திருக்கரமும்.

116.        தருவிற் றிருட்டான

                சங்கதி யீதென்றே

        குருசைச் சுமந்து

                குனிந்துநின்ற கோப்புயமும்.

117.        சாயாமற் கற்றூணிற்

                றான்பிணித்துச் சேர்வையெல்லா

        மோயா தடிக்க

                வுழுநிலம்போலா முதுகும்.

118.        ஈட்டியதி னாற்றுளைக்க

                வேயுருவக் குத்தினதாற்

        காட்டியதெண் ணீரிரத்தக்

                காயவிலா வதுவும்.

119.        ஆதாம் நிருவாணி

                யானானென்றே மருங்கி

        லேதாகிலுங் கலையி

                லாதிருந்த வம்மணமும்.

120.        தோன்றும் பராபரனைத்

                தொல்வினைக்காய் மன்றாட

        மூன்றுதரங் காவில்

                முடக்குமுழங் காலும்.

121.        சூட்சிபெறக் குருசிற்

                றொங்கி மனுவுயிர்க்குக்

        காட்சிதர வாணிதைத்த

                கைபோற் றிருப்பதமும்.

122.        சிரசுமுதற் பாதம்வரை

                செம்புன லாறோடி

        யுருவதெல்லா மாறி

                யொளிமறைந்த மெய்யுடலும்.

123.        பார்த்தே னிளகாக்கற்

                பாறையைப்போ லானமன

        மீர்த்தே மெழுகா

                யிருவிழியா றோடநின்றேன்.

124.        நின்றே னடுநடுங்கி

                நெஞ்சகமெல்லாங் கரைந்து

        கன்றா தபாவி

                கருத்தனைத்தும் வேறானேன்.

125.        நோக்கினே னாகமத்தி

                னூன்முறையோ டேகுருவின்

        வாக்கினா லேசு

                மரணவுருக் காணலுற்றேன்.

126.        பாடுபட்ட கத்தனையான்

                பார்த்தவுடனே யெனது

        கேடுகெட்ட நெஞ்சிற்

                கிலேசமிகத் தோன்றினதே.

127.        கண்ணா லருவிவிழக்

                காரணனைக் கண்டவுடன்

        புண்ணா யிதையமெல்லாம்

                பொங்கத்து யர்பூண்டேன்.

128.        சங்கையின் ராசாகொலையாய்ச்

                சாகவரும் பாதையிலே

        யங்கழுத பெண்களுடன்

                யானுமழச் செய்வேனே.

129.        எப்போது மோயாம

                லேசுவைக்கண் டாற்றுமத்தோ

        டொப்பாரி சொல்லி

                யுருகிப் புலம்புவனே.

8. பாடுபட்ட தியானம்

130.        மத்தே முதலாய்

                வளமையோ வான்வரைக்கும்

        வித்தா ரமாக

                விளம்பினமே ரைப்படியே.

131.        ஆற்றுமா வேயுன்

                னருமை மணவாள

        னேற்றது யரத்

                திகழ்ச்சியெல்லா மாராய்ந்து.

132.        முந்திய தோட்டத்தில்

                முகாமைக் காய்பா மனையிற்

        பொந்திப் பிலாத்திடத்தும்

                போய்ப்போர்க் களத்திலும்போய்.

133.        யேசுசுவாமி பட்ட

                வெண்ணிலாப் பாடனைத்தும்

        நேசமுறக் கண்டு

                நினைந்து தியானிப்பாயே.

9. கிறிஸ்துவினாற்றுமப்பாடுகளின்பேரில்

134.        தோட்டத்தி லாதிசெய்த

                தோஷமதினா லேசு

        தோட்டத்திற் பாடுபட்டுச்

                சோரிசிந்திச் சோபமுற்றார்.

135.        மகத்துவத்தின் றேவனிங்கே

                மண்மீதில் வீழ்ந்து

        முகத்தை மறைத்தேமும்

                முறைஜெபங்கள் செய்யலுற்றார்.

136.        துக்கமடைந்தார்

                துயரமிகப் பூண்டார்

        மிக்க பிரலாப

                வியாகுலத்தினால் மெலிந்தார்.

137.        மரணத்த வஸ்தையதாய்

                வாதையெல் லாம்பட்ட

        தரணத்திலு மெனக்காய்த்

                தான்வேண்டிக் கொண்டிருந்தார்.

138.        தேவகோ பாக்கினையின்

                றீயில்விழுந் தோர்புழுப்போற்

        பாவிகளுக் காகப்

                பதைபதைக்க வேநெளிந்தார்.

139.        வருந்தியதோ ராற்றுமத்தின்

                வாதையி னால்வேர்வை

        பெருந்துளி யிரத்தப்

                பிரளையமா யோடினதே.

140.        ஆற்றுமத்தில் மாந்தர்செய்த

                வக்கிரம மத்தனையு

        மாற்றுதற்குத் தாதை

                வரவிடுத்த பாத்திரமே.

141.        இப்படியே யாற்றுமப்பா

                டேற்றபிற காண்டகைதா

        னப்புறமுந் தேகத்

                தரும்பாடெ லாமடைந்தார்.

10. கிறிஸ்துவின் சரீரப்பாடுகளின் பேரிலே

  1.  தோட்டத்திற் பட்ட பாடுகள்

142.        பன்னிருவரின் றொகைக்குட்

                பட்ட யூதாசுவென்போன்

        கன்னமிசை முத்திசெய்து

                கத்தனைக்காட் டிக்கொடுத்தான்.

143.        சத்துருவாம் யூதாச்

                சதிசெய் திரண்டகமாய்

        முத்தியி னாலே

                முதல்வனைக் காட்டிக்கொடுத்தான்.

144.        பெற்றநன்மை யெண்ணாப்

                பெரும்பாவீ யூதாசு

        விற்றுக் கொடுக்க

                விமலன் விலையானார்.

145.        கட்டியொரு வக்கிரமக்

                காரனைப்போ லாண்டகையைத்

        துட்டர் வசைபேசித்

                துண்டரிக்கஞ் செய்தார்கள்.

146.        விள்ளரிய நன்மைசெய்த

                வித்தகனென் றெண்ணாமற்

        கள்ளனைப் போற்பிடித்துக்

                கட்டிநிந்தை செய்தார்கள்.

147.        வள்ளலையிக் கோலமதாய்

                மானமறப் பிடித்துத்

        தள்ளியே காய்பாவு

                தன்மனையிற் கொண்டுசென்றார்.

11. (2) காய்பாவின் வீட்டிலே பட்ட பாடுகள்

148.        அன்னாவுங் காய்பாவு

                மங்கவர்கள் சங்கமெல்லாம்

        பொன்னாட தாளும்

                புரவலன்மேற் பொங்கலுற்றார்.

149.        வின்னமுறப் பேசி

                வெகுண்டொருதுற் சேவகன்றான்

        கன்னத் திறையவனைக்

                காயமுறவடித் தான்.

150.        மட்டில்லான் றன்னையந்த

                வஞ்சகர் முக்காடதிட்டுக்

        குட்டி யிராமுழுதுங்

                கோரணிகள் கொண்டார்கள்.

151.        கைச்சரசஞ் செய்தார்கள்

                காவல்தனில் வைத்தார்கள்

        துட்சணர்தா னேர்ந்தபடி

                தூஷணங்கள் சொன்னார்கள்.

152.        எண்ணாமல் வைதுதிட்டி

                யீங்கிஷைக ளாய்ப்பேசிப்

        பண்ணாத நிந்தை

                பரிகாசம் பண்ணினார்கள்.

153.        மெய்ச்சாட்சி வேண்டாத

                வீணனுக்காய் வேண்டியிரு

        பொய்ச் சாட்சிக்காரர்

                புலைசொலவுங் கே‌ட்டிருந்தார்.

154.        உத்தம வப்போஸ்தலனு

                முண்மைசற்று மில்லாமற்

        சத்தியம் பண்ணித்

                தயாபரனைத் தான்மறுத்தான்.

155.        தனைத்திடமாய் நம்பித்

                தடையுரைத்த சீமோன்

        மனப்பயத்தி னாலே

                மறுதலித்தான் மாதவனை.

156.        ஆற்றுதல்செய் தெவ்வுயிர்க்கு

                மன்புசெய்ய வந்துதித்த

        மாற்றமிலான் சாக

                மரணத்தீர்ப் பிட்டார்கள்.

157.        தேவ குமாரனென்று

                செப்பின வார்த்தைக்காகப்

        பாவிகள் கோமானைப்

                பழிசெய்யத் தீர்த்தார்கள்.

158.        கட்டின கட்டோடே

                காய்பாவின் வீட்டினின்று

        துட்டர்க ளக்கியானத்

                துரைக்களிக்கப் போனார்கள்.

159.        கூட்டமெல்லாங் கொம்பிக்

                கொதித்துப் பிலாத்தரசன்

        வீட்டில்வந் தையன்மேல்

                மிகைசுமத்தச் செய்தார்கள்.

12. (3) பிலாத்துவின் வீட்டிற் பட்ட பாடுகள்

160.        பொந்திப் பிலாத்துவின்பாற்

                பொல்லாத யூதர்சனந்

        தந்த முறைப்பாட்டைச்

                சகித்திருக்கச் சம்மதித்தார்.

161.        ஆசாரிமார் முறையிட்

                டாகடியஞ் சொன்னதற்குப்

        பேசாம லங்கே

                பிலாத்துவின்முன் பாகநின்றார்.

162.        சாற்றும் பகைவர்குற்றச்

                சாட்டுதலெ லாங்கேட்டு

        மாற்ற முரையாமல்

                மவுனம தாகநின்றார்.

163.        எத்தன் சனத்தை

                யெடுத்துவிட்டோ னென்றுசொன்ன

        பெத்தரிக்கக் காரர்

                பிரளியதெல் லாங்கேட்டார்.

164.        பாவிகளுக் காகப்

                பரிந்துபிணைப் பட்டதினாற்

        பாவமற்ற சோதியொரு

                பாவியைப்போற் றாழ்ந்துநின்றார்.

165.        பொங்கி யெரோதேயும்

                பொலிந்தவிரா ணுக்களுடன்

        பங்கப் படுத்திப்

                பரிகாசஞ் செய்துவிட்டான்.

166.        பித்தனென்று மேதுமற்ற

                பேதையென்றுஞ் சொல்லிவெள்ளை

        வஸ்திரத்தைப் போற்றியவ

                மானப்படுத் திவிட்டான்.

167.        இத்தனையாய் ஞானத்தோ

                டெவ்வுயிருஞ் செய்தபிரான்

        பித்தனென்று சொல்லப்

                பிரியமாய்க் கேட்டிருந்தார்.

168.        தொலையாக் கலாதிசெய்த

                துஷ்டன் பரபாக்

        கொலைபா தகனோடே

                கூடநின்றார் கோததில்லான்.

169.        திண்டாடி வெட்டித்

                திருடிக் கொலையுரிந்த

        சண்டாள னோடு

                சரியாக்கப் பட்டுநின்றார்.

170.        அடிமையைப்போ லேமரத்தி

                லாண்டகையைக் கொன்று

        விடுதலைக் காகாதவனை

                விட்டுவிடக் கேட்டார்கள்.

171.        பொருள் யாவுங்காக்கும்

                புரவலனைக் கொன்று

        பரபாவை விட்டுவிடப்

                பாதகர்கள் கேட்டார்கள்.

172.        சத்துருக்க ளானனரர்

                தப்பி யுயிர்பிழைக்க

        வித்தகனார் சாக

                மிதவு மனதானார்.

173.        ஆடையுரிந் தம்மணக்கோ

                லத்தோடோர் கற்றூணிற்

        பீடையுறக் கட்டிப்

                பெலத்தடிக்கச் செய்தார்கள்.

174.        காரிருள்சூ ழக்கியானக்

                காவலன்றன் சேர்வையெல்லாம்

        வாரதினால் வீச

                மருகித் துயரானார்.

175.        இருப்புக் கொடுக்க

                திசைந்த சவுக்கா

        னெருப்பெழக் காய்ந்தடித்து

                நெட்டூரஞ் செய்தார்கள்.

176.        எண்ணமற வாரதினா

                லேயடித்த தல்லாம

        லண்ணலு மைக்குட்டி

                யகந்தைமிகச் செய்தார்கள்.

177.        தூறாய்ப் பரிகாசத்

                தோன்றலெனத் தோன்றவைத் து

        வீறாய்ச் சகலாத்து

                மேற்சட்டை யிட்டார்கள்.

178.        முள்ளுக்க ளாலோர்

                முடிசமைத்தாங் காரமுடன்

        வள்ளல்சி ரத்தழுத்தி

                வைத்திகழ்ச்சி செய்தார்கள்.

179.        செங்கோலுக் கொப்பாய்த்

                திகிரிக்கோ லைக்கொடுத்து

        நங்காக யூதர்களி

                ராசாவென் றேத்தினர்கள்.

180.        மேலவனைத் துப்பி

                மிகுந்தசர சங்கள்செய்து

        கோலைவாங்கிச் சிரத்திற்

                கோபித் தடித்தார்கள்.

181.        ஆவலுளோர் போல்முழங்

                காலூன்றித் தெண்டனிட்டுக்

        காவலனைத் தானிறைஞ்சிக்

                கன்னத் தறைந்தார்கள்.

182.        புண்ணியனை யிவ்விதமாய்ப்

                பூரிய ரெலாங்கூடி

        யெண்ணத் துலையா

                விகழ்ச்சியெல்லாஞ் செய்தார்கள்.

183.        பொந்திப் பிலாத்தரசன்

                புண்ணியனை விட்டுவிடத்

        தந்துசெய்து பார்த்தாலுந்

                தன்னால் முடியாமல்.

184.        தண்ணீ ரெடுத்துத்

                தனது கரம்விளக்கி

        யெண்ணாமற் கொல்ல

                விறையவனைக் கையளித்தான்.

185.        சற்று மிரக்கமில்லாச்

                சண்டாள யூதருக்காய்க்

        குற்றமிகும் பாவக்

                கொடுமைப் பிலாத்ததிபன்.

186.        கள்ளன் பரபாக்

                கலாதிமிகும் பாதகனை

        விள்ளரிய தோஷம்

                விளைத்தவனை விட்டுவிட்டு.

187.        உள்ளமெல்லா மன்பா

                யுறவா யுதித்தெழுந்த

        வள்ளல்தனை நீண்ட

                மரத்தேற்றக் கையளித்தான்.

188.        குற்றமில்லை யென்றுசொல்லிக்

                கூறினவ னீதிதப்பிக்

        குற்றமில்லான் றன்னைக்

                கொலைசெய்ய வொப்புவித்தான்.

189.        நீதியில் லாத

                நிருபன் பிலாத்தரச

        னீதிமான் றன்னை

                நெடுங்கொலைசெய் யக்கொடுத்தான்.

13. (4) கொல்கதா மலையிற் பட்ட பாடுகள்

190.        சுந்தரஞ்சேர் தேவசுதன்

                சொல்லரிய பாடுபட்டு

        நிந்தைக் குருசேறும்

                நெஷ்டூர மென்சொலுவாம்.

191.        கொல்கதா வென்றமலைக்

                கோட்டிற் கொலைப்படுத்த

        வல்லவனைக் கொண்டுசென்ற

                வஞ்சகத்தைச் சொல்வதுவோ.

192.        வலிய பிலாத்து

                மனுமகனைக் கொன்று

        சிலுவைதனி லேற்றத்

                தீர்மானஞ் செய்தவுடன்.

193.        அன்ன சமையத்

                தடர்ந்துநின்ற சேர்வையெல்லா

        மன்னவனைத் தங்கள்

                வசமாக்கிக் கொண்டார்கள்.

194.        சேவகரெலாஞ் சேர்ந்து

                தேவன் றிருவுடலில்

        மேவுஞ் சகலாத்து

                மேற்சட்டை யைக்களைந்தார்.

195.        அண்ணல்சொந்த வஸ்திரத்தை

                யங்குடுத்திப் பாதகர்கள்

        வண்ணச்சி லுவை

                மரத்தேற்றக் கொண்டுசென்றார்.

196.        முள்ளின் முடிமீது

                மோதி விதனமுறத்

        தள்ளிச் சிலுவை

                தனைச்சுமத்தி வைத்தார்கள்.

197.        பந்தமிகும் பாரப்

                பணையைத் தோற்மேற்சுமத்திக்

        கொந்தளித்துக் கூட்டிக்

                கொலைக்களத்துக் குப்போனார்.

198.        மேனியெல்லாங் காயமுற

                மேவும்விர ணத்துயராற்

        கூனிக் குனிந்து

                குருசைச் சுமந்துசென்றார்.

199.        கள்ளாண்மை மாந்தர்

                கனிதின்ற பாதகத்தாற்

        றள்ளாடி வீழ்ந்து

                தருக்குருசைக் கொண்டுசென்றார்

200.        அத்தன்மொழி மறுத்த

                வாதத் திடரகற்றச்

        சுத்தன் சிலுவை

                சுமந்துதய வாய்நடந்தார்.

201.        பாவச் சுமையிறக்கிப்

                பாவிகட்கு நன்மைசெய்யத்

        தேவப் பிரகாசன்

                சிலுவை சுமக்கலுற்றார்.

202.        எல்லாத் தையும்படைத்தி

                யாவினையுந் தாங்கினவன்

        வல்லார் குருசெடுக்க

                மாட்டா துலைந்துநின்றான்.

203.        பாரச் சிலுவைப்

                பருஞ்சுமையைக் கொண்டுமலை

        வாரத் திற்போமுன்

                மரிப்பாரென் றீனரெல்லாம்

204.        சீமோன் சிரேனேயைச்

                சேர்ந்துவழி யிற்பிடித்துக்

        கோமா னெடுத்த

                குருசைச் சுமத்திவைத்தார்.

205.        சேனைத் திரள்போற்

                றிருநாட்கு வந்தவர்கள்

        ஞானக் குருவி

                னடத்தையைக்கா ணத்தொடர்ந்தார்.

206.        வாடிச் சிலுவை

                மரத்தறையக் கொண்டுசெல்லும்

        வேடிக் கைபார்க்க

                வெகுசனங்கள் பின்றொடர்ந்தார்.

207.        பெண்பிறந்த பேர்களவர்

                பேரினிலொப் பாரிசொல்லிக்

        கண்பிறந்த நீருதிர்த்துக்

                காவலனைச் சூழவந்தார்.

208.        தேவனவர் கடமைத்

                தேர்ந்துபார்த் தெருசேலம்

        பாவையரே யுங்களுக்கும்

                பாலகர்க்குந் தானழுவீர்.

209.        பச்சை மரத்துக்கிப்

                பாடுகளெலாம் புரிந்தா

        லிச்சையின் பட்டமர

                மென்னபடு மென்றிசைத்தார்.

210.        கொற்றவ னோடே

                கொலைசெய்ய வேறிரண்டு

        குற்றமிகும் பாதகரைக்

                கூடக்கூட் டிப்போனார்.

211.        வஞ்சர் கபால

                மலையதனில் வந்தவுடன்

        வெஞ்சி னத்தினாலே

                வினைகள்பல செய்யலுற்றார்.

212.        போளங் கலந்த

                புளித்த மதுவிரசம்

        நீளுங் கிருபை

                நிரந்தரனுக் குக்கொடுத்தார்.

213.        பிச்சு ரசத்தைப்

                பிரியமுட னேருசிபார்த்

        தச்சய னுட்கொள்ளா

                தகற்றி விடலானார்.

214.        பாதகரி லோர்தன்வல

                பக்கத் திடத்தொருத

        னாதவனை நடுவு

                மாகக் குருசறைந்தார்.

215.        மிக்க பராபரன்றன்

                மேலான தேவசுத

        னக்கிர மக்காரருக்குள்

                ளாகவெண்ணப் பட்டுநின்றார்.

216.        அத்தன் குருசி

                லறையுண் டிருக்கையிலுஞ்

        சித்த முடனேழு

                திருவசனஞ் செப்பலுற்றார்.

217.        யேசுநச ரேன்யூத

                ரேந்தலென வேந்தெழுதித்

        தேசுலவு கத்தர்

                சிலுவைநுனி யில்வைத்தான்.

218.        சிலுவைமரத் தேற்றினபின்

                சேவகர் சேர்ந்தண்ணல்

        கலையை யெடுத்துக்

                கதிக்கநாற் பங்குசெய்தார்.

219.        ஐயன் றெரிசி

                யறைந்தபடி யாண்டகைதன்

        றையலில்லாச் சட்டையின்மேற்

                றாயமது போட்டார்கள்.

220.        அவ்வழியிற் செல்வோரு

                மாசாரி மார்தலைவர்

        தெய்வனிடக் கள்ளனுந்துற்

                சேவகருந் தூஷணித்தார்.

221.        அங்கவர்க டங்கடலை

                யாட்டிச்சீ யுன்னைரட்சித்

        திங்கிறங் கென்றேசி

                யிகழ்ச்சிபல செய்தார்கள்.

222.        என்னவிவன் மற்றோரை

                யிரட்சித் தானிப்போது

        தன்னைரட்சித் தால்யூதர்

                தங்களர சாகுமென்றார்.

223.        தேவன் மகனாகிற்

                சிலுவையி னின்றிறங்கு

        மேவியுனை நம்பிவிசு

                வாசிப்போ மென்றுசொன்னார்.

224.        இவ்வர றெலாருமிகழ்ந்

                தீன முறப்பேசி

        யொவ்வா தனேக

                முதாசனப்பாட் டோதலுற்றார்.

225.        சிலுவை மரத்தடியிற்

                றேவமா தாவு

        மலைவா யோவானு

                மனுமகனைப் பார்த்துநின்றார்.

226.        ஆறுமுத லொன்பதள

                வாகவந்த காரமுண்டாய்

        வேறுபடச் சூரியனு

                மிக்கவிரு ளானதுவே.

227.        ஆகம் நிறைவேறி

                யனைத்து முடிந்ததினாற்

        றாகமுண்டென் றேசுபரன்

                சாற்றினா ரப்போது.

228.        ஓடி யொருத

                னுவர்க்கடலிற் பாசிபற்றிக்

        காடி துவைத்தாம்பற்

                களைதனிற்கோர்த் துக்கொடுத்தான்.

229.        காடியையுட் கொண்டதற்பின்

                கர்த்தர் தலைசாய்த்துத்

        தேடுமுயிர்க் காய்த்தமது

                சீவனையும் விட்டுவிட்டார்.

230.        அந்தாதி யேநின்

                னருட்கரத்தென் னாற்றுமத்தைத்

        தந்தேனென் றோதித்

                தலைசாய்த்துச் சீவன்விட்டார்.

231.        அத்தருணந் தேவால

                யத்திரைமே லேதுவக்கிச்

        சத்தமுறக் கிழிந்து

                தாரணியெ லாமதிர்ந்து.

232.        கல்லறைகளுந் திறந்து

                கன்மலைகளும் பிளந்து

        வல்ல பரிசுத்த

                வான்க ளெழுந்தார்கள்.

233.        சேர்வைத் தலைவனிந்தச்

                செய்கையெல்லாங் கண்டவுடன்

        பார்வைக் கிவரே

                பரமசுத னாகுமென்றான்.

234.        வேடிக்கை பார்ப்பதற்காய்

                வேண்டிவந்த கும்பனைத்துங்

        கூடிநின்று மார்படித்துக்

                கொண்டு திரும்பினர்கள்.

235.        ஆரியன்மே னேசமுற்ற

                வாடவரு மாதர்களுந்

        தூரநின்று நோக்கித்

                துயர மிகப்பூண்டார்.

236.        கள்ள ரிருவர்

                கணைக்கா லெலும்பொடித்தார்

        வள்ளல் முதலே

                மரித்ததினால் விட்டுவிட்டார்.

237.        ஈட்டியினா லோர்த

                னிறைவிலா வைத்துளைக்கக்

        கூட்டிய நீருங்

                குருதியும் பொங்கினதே.

238.        அறிமத்தி யாவூரா

                னான யோசேப்புத்

        திறமைப் பிலாத்திடத்திற்

                சென்றுத் தரவெடுத்து.

239.        முந்திரவில் வந்த

                முனிநீக்கோ தேமுடனே

        கந்தவர்க் கத்தோடு

                கலையதுவுங் கொண்டுவந்து.

240.        ஐயன் சடத்தை

                யதிகதுய ராலிறக்கித்

        துய்ய பரிமளத்தாற்

                சூடி யலங்கரித்து.

241.        சீமோன்யோ சேப்புவெட்டிச்

                செய்தபுதுக் கல்லறையிற்

        கோமான் சடத்தைக்

                கொணர்ந்தடக்கஞ் செய்தார்கள்.

242.        புல்லர் பிலா த்திடத்திற்

                போய்விடைகொண் டேதிரும்பிக்

        கல்லறையில் முத்திரையுங்

                காவலதும் வைத்தார்கள்.

243.        இத்தனையாய்ப் பாவிகட்கா

                யேசுபட்ட பாடனைத்துஞ்

        சித்த முருகித்

                தியானிக்கச் செய்வேனே.

14. மன விசாரம்

244.        அன்புள்ள சுவாமியெனக்

                காகவிங்கே நீர்மிகவுந்

        துன்பமுறப் பூண்டு

                துயர்படவு மானீரோ.

245.        எந்தையே பாவமதா

                லெங்களுக்குண் டாகியநிற்

        பந்தமனைத் துஞ்சுமந்து

                பாடுபட லானீரோ.

246.        வஞ்சகனான் செய்தவெல்லா

                மாறுபாட்  டுக்காகத்

        தஞ்சமற்றிங் கையாநீர்

                தாழ்த்திபண்ணப் பட்டீரோ.

247.        கொடுமையெலாஞ் செய்த

                கொலைபா தகர்க்கா

        யடிமையைப்போ லிங்கேயென்

                னாண்டவனே நின்றீரோ.

248.        உன்னதத்தி லேயுயர்ந்த

                வொப்பதற்ற மாவேந்த

        ரின்னவி தக்கோல

                மெடுக்கமன தானாரோ.

249.        நீசத்தன னெனது

                நிந்தையனைத் துஞ்சுமந்து

        மாசற்ற சோதி

                மகாதயவாய் நின்றாரோ.

250.        சற்றெனினும் பாவமில்லாத்

                தம்பிரா னேயபுத்திரன்

        குற்றமிகச் செய்தவர்போற்

                கோட்டிகொள்ளப் பட்டாரோ.

251.        கடன்பட்ட பாவி

                கடனையெல் லாந்தீர்க்கக்

        கடன்படாக் கத்தன்

                கடன்றீர்க்க லானாரோ.

252.        என்னசெய்தீ ரையாநீ

                ரித்தீங் குமக்குவர

        வன்னதெல்லாம் பாவி

                யடியேன்செய் பாதகமோ.

253.        கறைப்பட்ட பாவக்

                கடியினடி யாரைச்

        சிறைப்பட்டு மீட்கத்

                திருவுள மானீரோ.

254.        கட்டுண் டெந்நாளும்

                கடுஞ்சிறைக்குள் ளேகிடந் து

        வெட்டுண்க மாந்தர்

                மிகநேரஸ் தோராமே.

255.        சின்னத் தனமாயான்

                செய்ததுடுக் காலெனைத்தான்

        கன்னத் தடிப்பதற்குங்

                கள்ளனைப்போற் கட்டுதற்கும்.

256.        நிந்தைப் படுத்துதற்கும்

                நெஷ்டூரஞ் செய்வதற்குங்

        கொந்தளிக்க வென்னைக்

                கொடுஞ்சிறைக்குள் வைப்பதற்கும்.

257.        எண்ணுழி காலத்

                தெரிநாகப் பேய்களென்னைப்

        பண்ணாத கோட்டியெல்லாம்

                பண்ணுதற்கும் ஞாயமலோ.

258.        ஆனாலும் பாவியிந்த

                வாக்கினைக்குள் ளாகாமற்

        றானேநீ ரிவ்விதமாய்த்

                தாழ்த்தி பண்ணப்பட்டீரோ.

259.        என்முகத்திற் றுப்பியெனை

                யீங்கிஷைசெய் யாப்படிக்கு

        நின்முகத்திற்றுப்ப வென்ன

                நீதியதுண் டையாவே.

260.        பொல்லாத வஞ்சப்

                புலையனான் செய்தவினைக்

        கெல்லாரு மென்முகத்தி

                லேயுமிய வேஞாயம்.

261.        வெட்கமற்றுப் பாவமதில்

                வீழ்ந்திலட்சை கெட்டலைந்த

        வக்கிரமக் கார

                னகந்தைக்கீ துத்தரிப்போ.

262.        நற்பணி வில்லா

                நடக்கையைக்கண் டாரேனு

        மற்பன்முகத் துமிந்தா

                லாங்கார மாவேனே.

263.        சீறியே வஞ்சரெல்லாஞ்

                சேர்ந்துன் றிருமுகத்திற்

        காறி யுமிந்துங்

                கனபொறுமை யானீரோ.

264.        பாவமொன் றுஞ்செய்யாப்

                பரிசுத்த வஸ்துனது

        தேவ திருமுகத்திற்

                செய்யும்நிந்தை கொஞ்சமதோ.

265.        பெத்தரிக்கத்தால் விழுந்த

                பேதுருவைத் தள்ளாமற்

        சித்த மிரங்கித்

                திருவிழியாற் பார்த்தீரே.

266.        அவ்வாறிந் நாள்வரைக்கு

                மாகாத பாவிகளை

        யெவ்வேளையுங் கண்

                டிரங்கமன தானீரோ.

267.        நிற்பந்த மாய்மடிய

                நின்றனக்குத் தீர்ப்பான

        தற்பனுயிர் வாழ்ந்

                தழியா திருப்பதற்கோ.

268.        நித்திய சாவுக்கிடமாய்

                நீசனான் போகாம

        லுத்தம னீர்சாக

                வுவந்துசித்த மானீரோ.

269.        பயித்திய காரனெனப்

                பண்ணிவைத் தகோலஞ்

        சயித்திருக்க வென்னாற்

                றயவதுமக் குண்டாச்சோ.

270.        வலியகொலை பாதகன்றன்

                வஞ்ச வுயிர்தீப்பச்

        சிலுவையின் மீதேறத்

                திருவுள மானீரோ.

271.        சதைதெறிக்கச் செந்நீர்

                சரீரமெல் லாமோட

        விதனமுற வையா

                மிகவடிக்கப் பட்டீரோ.

272.        சிக்கதற்று வெட்கமற்றுச்

                சீலையதற் றம்மணத்தோ

        டக்கிரமக் காரர்செய்த

                வாகாத்தி யத்தாலே.

273.        எந்தை தமதுடையெ

                லாமுரியப் பட்டதினால்

        வந்தவவ மானத்தால்

                வாடிநிற்க லானாரோ.

274.        தீயபிசா செம்மைச்

                சினந்தடிக்கச் செய்யாம

        லாயனிங்கே யாடுகளுக்

                காயடிக்கப் பட்டாரோ.

275.        எள்ளத் தனைமுள்

                ளெலுங்கழலிற் றைத்தவுடன்

        கள்ளத் தனன்மிகுந்த

                கஸ்திப் படுவேனே.

276.        மிஞ்சின முட்கூருருவ

                மெய்ச்சிரமெ லாந்துளைத்த

        சஞ்சலத் தாலையா

                தவித்துநிற்க லானீரோ.

277.        சிங்காரித் தீனர்

                சிரத்தை மினுக்கினதற்

        கெங்கோன் றலைக்கித்

                தனைவாதை வந்ததுவோ.

278.        வாயினாற் றூஷணமும்

                வம்புமே சொல்லிவரும்

        பேயனுக்கல் லோகசப்பும்

                பிச்சுமுமக் காகாதே.

279.        பூணுகின்ற பாவப்

                புலையனிரு கால்கரத்தி

        லாணிகடா வத்தகும

                லாதுமக்கீ தாவானேன்.

280.        நாட்டமற்ற பாவியென்ற

                னஞ்சகமா நெஞ்சகத்தி

        லீட்டியி னாற்குத்தா

                திறைநீர்குத் துண்டீரோ.

281.        என்னை யுயர்த்தி

                யிறைவான்மே லாகவைக்க

        நின்னைமிகத் தாழ்த்தி

                நீசனைப்போ னின்றீரோ.

15. மனஸ்தாபம்

282.        ஐயா வெனைப்படைத்த

                ஆதி பரப்பொருளே

        துய்யா வுமையித்

                துயரமெல்லாஞ் செய்தவரார்.

283.        பாதகமெல் லாம்புரிந்த

                பாவியடி யேனிருக்கக்

        கோதில்லா னேநீர்

                கொடுங்கொலைக்கு ளாவானேன்.

284.        வெஞ்சினப் பேய்க்காளாய்

                மெலிந்துசிறைப் பட்டிருந்த

        வஞ்சகனை மீட்பதற்காய்

                வந்தடிமை யாவானேன்.

285.        பாவத்தின் கட்டறுத்துப்

                பாதகனை மீட்டுவிடச்

        சீவப் பிரபு

                திடுக்குறக்கட் டுண்பானேன்.

286.        வானோர றியவெகு

                மானமெல்லாம் நானடைய

        ஆனாலு மிந்தவவ

                மானமுமக் காவானேன்.

287.        பாரமிகுங் கொடிய

                பாவச் சுமையிறக்கக்

        கோரமெல்லாம் பட்டுக்

                குருசைச் சுமப்பானேன்.

288.        செய்கின்ற பாவச்

                சிறியே னுயிர்வாழ்க

        வையகத்தி னீர்தான்

                மரித்தடக்க மாவானேன்.

289.        மத்தியஸ்தமா யெனக்காய்

                வந்ததினா லிவ்விதமாய்க்

        கஸ்தியெல் லாம்பட்டுக்

                கடாட்சித்துக் கொண்டீரோ.

290.        பிணையா ளியாகப்

                பிணைப்பட் டெனக்கே

        துணையாக நின்று

                துயரமெல்லாம் பட்டீரோ.

291.        அச்சமில்லாப் பாவி

                யடியேனுக் காய்வேண்டிப்

        பட்சமுட னையா

                பரிந்துநிற்க லானீரோ.

292.        என்றாலும் பாதகனை

                யீடேற்ற வையாநீர்

        நன்றாகச் சம்மதித்து

                நாட்டமன தானீரோ.

293.        ஆச்சரியஞ் சாவதற்கென்

                றாண்டவர் வாரார்மேய்ப்பர்

        தாட்சியுடன் மந்தைகட்காய்த்

                தஞ்சீவ னைத்தாரார்.

294.        குற்றமிகச் செய்த

                கொடியோனைத் தப்பவைக்கக்

        குற்றமற்ற மீட்பர்

                கொலைக்களத்துக் குப்போறார்.

295.        சன்மார்க்க ராக்கினைக்குள்

                ளாய்விழுந்து தான்மரித்தார்

        துன்மார்க் கனுக்குச்

                சுகமுமுண்டு சீவனுண்டு.

296.        உள்ளங்காலைத் துவக்கி

                யுச்சிமட்டும் பொல்லாப்பாற்

        கொள்ள நிறைந்த

                கொடும்பாவி யானடியேன்.

297.        நன்மையற்று வீணாக

                நானிலத்தி லேயிருக்குந்

        துன்மையுற்ற சண்டாளன்

                றுன்பமுற வேஞாயம்.

298.        இவ்விதமாம் வாதையைநீ

                ரேற்றவும துத்தரப்ப

        தெவ்விதமுன் பட்ச

                மிரக்கமன்பு மட்டுளதோ.

299.        நானோ வுலகத்தோ

                டேவாழ்ந்து நாள்விடுத்தே

        னேனோ வுமைமுழுது

                மிவ்விதநிற் பந்தமுறும்.

300.        இத்து தியைப்பாட

                வெவனாலாம் நன்றிகெட்ட

        சத்துருக்க ளென்ன

                சரியுபகா ரம்புரிவார்.

301.        தீதற்று னக்குச்

                செலுத்தத் தகுமான

        தேதென் றெவர்க்கு

                மிருதயத்திற் றோன்றாதே.

302.        ஆண்டவனே நின்றயவை

                யன்பையோ சித்தடியேன்

        மீண்டுமெதற் கொப்பிடவு

                மேதினியி லேயறியேன்.

303.        பின்னெப் படித்தான்

                பிரதி நலமளிப்பே

        னென்னபதிற் சொல்வே

                னிறைஞ்சியிங்கே வெட்கிநிற்பேன்.

16. யூதர்களின் நன்றிகேடு

304.        அலையாதென் னாற்றுமமே

                யப்பா லுஞ்சென்று

        கொலைகார யூதர்

                கொடுமையைச் சிந்திப்பாயே.

305.        ஆதத்தைச் செய்தவனுக்

                காயொருபெண் ணைக்கொடுத்துப்

        போதத் தயைசெய்

                புராதனனைக் கொன்றாரோ.

306.        எட்டுப்பே ருஞ்சலத்தி

                லேயழியா மற்காத்து

        விட்டதற்கோ புத்திரர்கள்

                வேதனைசெய் யத்துணிந்தார்.

307.        கல்தேயர் தேசத்தாரைக்

                கானானா டானவைத்த

        வல்லமையை யூதர்

                மறந்துதான் போனாரோ.

308.        ஆன சாராளை

                யபிமெலேக்கும் பார்வோனு

        மானமழிக் காதகற்றும்

                வண்மை மறந்திட்டாரோ.

309.        உள்ளபடி யூதர்தந்தைக்

                குற்ற மலடகற்றிப்

        பிள்ளைவரந் தந்த

                பெருமானென் றெண்ணலையோ.

310.        ஆபிரகா மன்றுமல

                டாயிறந்தால் யூதர்குலந்

        தீவிரமாய்க் கொல்லவுனைச்

                சேர்ந்துவர மாட்டாரே.

311.        தொண்ணூற் றோராண்டு

                தொலைந்த மலடிமக்கள்

        பண்ணாத கீர்த்தியெல்லாம்

                பண்ணமனம் வைத்தாரோ.

312.        எலியேச ரீசாக்குக்

                கென்றுபெண் ணைத்தேட

        வலிய வெதிராக

                வரச்செய்த மாதவனோ.

313.        இலாபானின் மக்களை

                யியாக்கோ புக்கீய்ந்து

        வலாபே ரெடுக்கவைத்த

                மன்னவனென் றெண்ணலையோ.

314.        பஞ்சத்தினால் மெலிந்த

                பன்னிரு பிதாக்களுக்கும்

        நெஞ்சத்தோ டீவளித்த

                நேயனுக்கோ தீமைசெய்தார்.

315.        ஏழாண்டு பஞ்சத்

                தெகிப்பத்தில் யோசேப்பைத்

        தாழாம லாதரித்த

                தன்மமதன்ம மாச்சோ.

316.        நேராய்ச் சிறைமீட்

                டிரட்சிக்கா தேபோனாற்

        பாரோ னடிமைகளிப்

                பாதகங்கள் பண்ணாரே.

317.        ஆற்றிலெறி யுண்டமிழ்ந்தி

                யாவிபோம் பாலகரை

        யேற்றதற்கோ இவ்வா

                றெபிரேயர் செய்தார்கள்.

318.        பத்துவித வாதையினாற்

                பாழெகித்தைத் தாழ்த்தியிந்தச்

        சத்துருக்கள் சொந்தச்

                சனமென்றே யெண்ணினையோ.

319.        நானூறு சங்கம்

                நலிந்தசிறை மீட்டதைத்தா

        னானாலும் யூதர்மறந்

                தாகடியஞ் செய்தாரோ.

320.        கிடைமறித்து மேய்க்குங்

                கிழயக்கோ தந்த

        இடையர் குலத்தினுக்கிங்

                கென்னபுத்தி யுண்டாகும்.

321.        நன்மனதாய் மன்னாவை

                நாற்பதாண் டீந்ததலாற்

        கன்மலையிற் றண்ணீர்

                கனிந்தளித்த காரணனோ.

322.        அக்கினித்தூண் மாலையிலு

                மம்புதத் தூணைப்பகலு

        மொக்கவளித் தாதரித்த

                வுத்தமர்க்கோ நிந்தைசெய்தார்.

323.        கோட்டுமிரு கங்கள்பல

                கொள்ளிவாய்ச் சற்பமுற்ற

        காட்டி லமுதளித்த

                காரணனை யோபகைத்தார்.

324.        சேதமற நாற்பதிலுஞ்

                சீனா வனாந்தரத்திற்

        பாதரட்சை யாடை

                பழசாகக் கண்டாரோ.

325.        அத்தனை யற்புதங்கண்

                டன்றே வனாந்திரத்தி

        லெத்தனையா யுன்னை

                யிகழ்ந்தாரென் றெண்ணலையோ.

326.        அன்று வனாந்தரத்தி

                லாகடிய யூதர்களைக்

        கொன்ற பழிக் கின்றுனையுங்

                கொல்லத் துணிந்தாரோ.

327.        ஆதங்கொடுத்த வந்த

                கார விருளகற்ற

        வேதங் கொடுத்தமதி

                வித்தகனை யோவெகுண்டார்.

328.        வானத் திடிமுழங்க

                மாமலைமே லக்கினியின்

        றானத் திடையினின்று

                சத்தியமறை தந்தவனோ.

329.        விற்பனமோ டேசீனா

                வெற்பதின்மே லேயிருந்து

        கற்கனைபத்துங் கொடுத்த

                காரணனின் கண்மணியோ.

330.        கொண்டல வளைந் தெக்காலங்

                கூறக் கொடுமுடியிற்

        கண்டவரெலா நடுங்கக்

                காட்சி யளித்தவனோ.

331.        சாபமெல்லா மாசீர்வா

                தங்களாய் மாற்றிவிட்டு

        கோபமுறப் பீலேயாங்

                கொண்டபகை தீர்த்தவனோ.

332.        மாட்சிமையாய்ப் பத்து

                மறைப்பெட்டி மேலிருந்தங்

        காச்சரிய மாயோர்தா

                னாற்றைப் பிரித்தவனோ.

333.        அத்தமிக்கச் சூரியன்போ

                காமலிழுத் தேநடுவா

        னத்தில்வைத்து யூதர்கட்கு

                கல்லவெற்றி தந்தவனோ.

334.        எந்ததியெலாம் விளங்கத்

                தாவீதின் வங்கிஷத்தைச்

        சிந்தையினாற் றெரிந்த

                செய்கையெல்லாம் வீணாச்சோ.

335.        எத்தனையோ யாரா

                லியம்பலாம் யூதர்தமக்

        கத்தனையாய் நன்மைசெய்த

                வாண்டகையைக் கொன்றாரோ.

336.        சீயோன் குமாரிதனைச்

                சேர்ந்துமணஞ் செய்யவந்த

        ஆயோனையிந்த

                அலங்கோலஞ் செய்தாரோ.

337.        செத்தவரை யெழுப்பச்

                செய்தவுமைக் கொல்வதற்கோ

        சத்துருக்க ளெண்ணிச்

                சதிமானஞ் செய்தார்கள்.

338.        எவ்வுயிருங் காக்கு

                மிரட்சகனைக் கொல்வதுவே

        செவ்வையென்றோ யூதர்சனந்

                தீர்மானஞ் செய்தார்கள்.

339.        சொந்தமெனத் தங்கள்குலத்

                தோன்றலென வந்தவருக்

        கிந்தவித நன்மைசெய்ய

                வெண்ணினதோ யூதர்சனம்.

17. ஆற்றுமப் பெண்ணொப்பாரி

340.        நன்றியிதெல் லாமறந்து

                நாயகனை நாணமன்றிக்

        கொன்ற துரோகக்

                கொலைகாரி யானேனே.

341.        போதத் தயைபுரிந்த

                புண்ணியனுக் கேறாத

        பாதகத்தைச் செய்த

                பழிகாரி யானேனே.

342.        தன்னுயிரை விட்டென்

                றனதுயிரை யாதரித்த

        மன்னுயிருக் கன்பை

                வதைசெய்து போட்டேனே.

343.        எந்தனிரு கண்மணியை

                யென்பிராண நாயகனை

        நிந்தனை செய்தமகா

                நெஷ்டூரி யானேனே.

344.        என்னை வலியத்தேடி

                யென்பா லிருக்கவந்த

        மன்னவனைக் கொன்றமுழு

                வஞ்சகிநா னானேனே.

345.        சத்துருவா னாலுமெனைத்

                தற்காத்த நாயகன்மேற்

        பத்தியில்லாப் பஞ்சமா

                பாதகத்தி யானேனே.

346.        வன்மப் பசாசை

                மடக்கியெனை வாழ்கவைத்த

        தன்மத் துரையைச்

                சதிசெய்து கொன்றேனே.

347.        பற்றுதலே யில்லாமற்

                பத்தாவைக் கொன்றுவிட்டுச்

        சற்று முருகாத

                சண்டாளி யானேனே.

18. வியாகுலம்

348.        என்னாற் றுமாவே

                யிரட்சகரிங் கேகொலையா

        யுன்னால் மடிந்த

                வுபகாரந் தோன்றாயோ.

349.        தேவாதி தேவனிங்கே

                சீவன்விட்டு மாண்டதைத்தான்

        பாவாசை யாலுழன்ற

                பாதகிநீ பாராயோ.

350.        சீவனுனக் காய்மடிந்து

                செத்திருக்கப் பொல்லாத

        பாவியு னக்குப்

                பயம்வரா தேபோமோ.

351.        சாகாத வஸ்துனக்காய்ச்

                சாவானா ரென்றாலு

        மாகாத பாவியுன

                தாசையின்னஞ் சாகாதோ.

352.        அசையாயோ பாவி

                யனைத்து மசையச்சே

        யிசையாயோ முன்போ

                லினியு மிருப்பாயோ.

353.        கற்குன்றெல்லாம் பிக்கக்

                கண்டாயே யென்றாலுந்

        துற்குணநெஞ் சுன்னைவிட்டுத்

                துன்னிப் பிளவாதோ.

354.        உன்னத வஸ்திங்கே

                யுனக்காய் மடிந்திருக்கப்

        பின்னையு முன்னெஞ்சம்

                பிளந்துருக மாட்டாதோ.

355.        இச்சைகளுக் கெல்லாந்தா

                னின்னமின்னஞ் சாகாம

        லச்சமற்று நீநடந்தா

                லாக்கினைக்குள் ளாவாயே.

356.        யேசுவின்சா வாலினமுன்

                னிச்சைகட்குச் சாகாம

        லாசைகளுக் கேபிழைத்தா

                லாரிருளில் வீழ்வாயே.

19. மனஸ்தாப முக்கியம்

357.        என்னுயிருக் கன்பே

                யிராசாவே யும்மைமுற்றுஞ்

        சன்னைசெய்து யூதர்

                தமக்களிக்கச் செய்தேனே.

358.        சின்னப்ப டுத்தித்

                திருமுகத்தி லேயுமிந்து

        வின்னமுறப் பேசி

                மிகத்தூஷ ணித்தேனே.

359.        முள்ளின்முடி சூட்டினனே

                மூர்க்கத் தறைந்தேனே

        வெள்ளமெனக் குருதி

                மேவ வதைத்தேனே.

360.        ஆளிற் பயித்தியனென்

                றாக்கி யடாமையினாற்

        றோளிற் சிலுவை

                சமத்திவைக்கச் செய்தேனே.

361.        கோல்கொடுத்தி ராசனெனக்

                கோட்டியெல்லாங் கொண்டேனே

        கால்கரத்தி லாணி

                கடாவி யறைந்தேனே.

362.        ஈதெல்லாம் பாவி

                யிடும்பினா லேவிளைந்த

        தீதெல்லா மிக்கொடுமை

                செய்யவே தானதுவே.

363.        ஐயோவென் பாவத்

                தகோரமுமை யிவ்விதமாய்ச்

        செய்யாவ தைகளெல்லாஞ்

                செய்தடிக்கச் செய்ததுவே.

364.        நீங்காமற் பாவ

                நிலையிலே நிற்பதுதான்

        பாங்கோ வதும்மைப்

                பரிகாசஞ் செய்வதல்லோ.

365.        ஆகாத பாவியென்ற

                னாங்காரத் தாற்புரியு

        மாகாமை யும்மை

                யடிக்கிறதற் கொப்பாமே.

366.        வாயினா னின்னை

                வசனித்தும் பத்தியில்லா

        மாயமெல்லா நின்னை

                வதைக்கிறதற் கேசரியே

367.        அப்படியா னாலு

                மனுக்கிரகஞ் செய்யுமென

        வெப்படியான் சொல்வே

                னெனக்குரைக்க வாயதுண்டோ.

368.        செய்யுமும தன்பையெல்லாஞ்

                சிந்தியா தேபோனால்

        வையகத்தி லென்போல்

                மகாபாத கனாரோ.

369.        சித்தமிரங் கியென்பாற்

                செய்தநன்றெ லாமறந்து

        நித்தியமுந் தீமைசெய்தா

                னின்றனக்கா ளாவேனோ.

370.        அருந்துய ரீதெல்லா

                மறிந்து மிளகா

        இரும்பாய் மனதிருந்தா

                லீடேறப் போறேனோ.

371.        கண்டார் நகைக்கக்

                கழுக்குருசி னீரிருக்கச்

        சண்டாளனுக் குலக

                சந்தோடம் வேண்டுவதோ.

372.        பரதாபத் தோடேநீர்

                பாரக்கு ருசு

        மரமீதி ருக்கையிலும்

                வஞ்சகனெஞ் சஞ்சாதோ.

373.        சீவன்விட்டு நீரிறந்த

                செய்கையைச்சற் றேநினைந்தாற்

        பாவியுயிர் வாழ்ந்திருக்கப்

                பாருலகில் ஞாயமுண்டோ.

374.        மிக்க பரமசுதன்

                மேனியெல்லாங் காயமுற்ற

        தக்கிர மக்கார

                றியாமற் போனேனே.

375.        ஈசனி தையம்பிளந்

                திரத்தவௌளக் காட்சிகண்டு

        மாசுபற்றிக் கெட்டலைந்து

                மாபவத்தைச் செய்வேனோ.

376.        ஆகாத பாவியகத்

                தச்சாயிப் பாடுறைந்தால்

        மோகாசை யாவு

                முழுதுங் கசப்பாமே.

377.        பற்றுதலாய்க் கத்தர்திருப்

                பாடனைத்துஞ் சிந்தைசெய்தாற்

        சிற்றின்ப வாழ்வெனக்குச்

                சேர வெறுப்பாமே.

378.        ஐயோ கடவு

                ளருங்கொலையாய்ச் செத்ததினால்

        மெய்யா யுலக

                வெகுமானம் வேண்டேனே.

379.        குற்றமில்லான் பட்ட

                கொடூரமெல்லாஞ் சிந்தை செய்தாற்

        சற்றெனினும் பாவவழி

                தன்னி னடவேனே.

380.        காரணனார் பட்ட

                கனதுயர்மேற் காதல்வைத்தா

        லாரென சொன்னாலு

                மாங்காரங் காட்டேனே.

381.        தேவன் மடிந்த

                திருச்செயலை யானினைந்தா

        லாவிபோ மட்டுமுல

                காசைவர மாட்டாதே.

382.        அத்தன்பொ றுத்தகுற்ற

                மத்தனையும் யானறிந்தால்

        மெத்தனவை யல்லாமல்

                மேட்டிமையைக் காட்டேனே.

20. மன்றாட்டு

383.        பாடான விப்பெரிய

                பாட்டிலென்றன் பங்கருளக்

        கூடாது போவெனவே

                கோபித்துச் சொல்வீரோ.

384.        அலகையடி யானெனையே

                யன்பு மகவாக்கி

        வலிய பிசாசாள

                மறுத்துங் கொடுப்பீரோ.

385.        தேவரீர் பட்ட

                சிலுவையின் வாதைகட்குப்

        பூவுலகிற் பாதகன்செய்

                பொல்லாங்கோ ரீடாமோ.

386.        அட்டதிக்கோர் பாவ

                மனைத்துஞ் சகித்தருளு

        மட்டிலா னின்பொறைக்கென்

                வஞ்ச மலையாமோ.

387.        அன்பாகக் கைநீட்டி

                யாவரையுங் கூவினபின்

        என்பாவத் தைப்பெரிதா

                யெண்ணியெனைத் தள்வீரோ.

388.        எத்தனையோ வத்தனைபே

                ரென்றுமுமக் கேவல்செய்யச்

        சத்துருவாய் நான்‌போகச்

                சம்மதியங் குண்டாமோ.

389.        கோணாம லென்னையாட்

                கொள்ளநீர் வந்துமற்பன்

        வீணாய் நரகில்

                விழப்பார்த் திருப்பீரோ.

390.        கிட்டவரும் பாவியெனைக்

                கிட்டாமற் றள்ளிவிடப்

        பட்டுருவ ஆணிதைத்த

                பங்கயத்தாற் கூடாதே.

391.        பத்தியினா லும்மைப்

                பணையிலறைந் தென்முனமே

        வைத்திருந்தா லென்னைவிட்டு

                மாறிநீர் போவதெங்கே.

392.        எங்கோ னுதிர்த்த

                இரத்தமெல்லாம் பாவிகட்கே

        பங்கான தல்லோவென்

                பங்குதர வொண்ணாதோ.

393.        அக்கிர மக்கார

                னகந்தைதனைப் பாராமற்

        பக்கிஷமாய் நீரடைந்த

                பாடதெல்லாம் பார்த்தருளும்.

394.        கொன்றவரைக் காக்கக்

                குருசினில் மன்றாடியதோர்

        நன்றெனக் கெந்நாளும்

                நயந்துசெய்யுங் கர்த்தாவே.

395.        உருகிவ லப்பாகத்

                துமைநோக் கிநின்ற

        திருடனைப் பார்த்தகண்ணாற்

                றீபாவி யைப்பாரும்.

396.        பொங்கித் தரையிற்

                பொழிந்த திருவுதிரத்

        திங்கெனுளத் தோர்துளிய

                தென்னுந் தெளித்தருளும்.

21. செபம்.

397.        வேதாவே நின்சுதனை

                வேண்டி யெனைநோக்கித்

        தீதான யாவினையுந்

                தீர்த்தெனையாட் கொண்டருளும்.

398.        பாடுபட்ட கத்தர்திருப்

                பாடதெல்லாம் பார்த்திரங்கிக்

        கேடுகெட்ட வென்மேற்

                கிருபைசெய்யு மாண்டவனே.

399.        பாதுகாத் துன்றன்

                பரிசுத்த மைந்தனுட

        நீதியினா லென்னைமுற்றும்

                நீதிமா னாக்கிவிடும்.

400.        பரிசுத்த ரூபிப்

                பரனே நின்னன்பை

        வரிசித்தென் கன்மனதை

                மாற்றியெனைச் சீர்ப்படுத்தும்.

401.        காந்திமிகு மக்கினியின்

                கண்ணான விஸ்பிரீத்துச்

        சாந்துவே யென்னுளத்திற்

                றங்கியெனக் கன்புசெய்யும்.

402.        திரியேக வஸ்துவெனுந்

                தேவ பொருளேயென்

        னறியாமை நீங்க

                வனுக்கிரகஞ் செய்தருளும்.

403.        மோசப் படுத்திவரு

                மூர்க்கப் பிசாசையெல்லா

        மேசுவே கோபித்

                தெனைவிலகச் சொல்வீரே.

404.        என்ன சீருண்டா

                மிதையந் திரும்பாட்டா

        லன்னதற்கு நீரே

                யருள்புரியு மற்புதனே.

405.        வெள்ளமெனத் தெய்வீக

                மான துயர்மேவி

        உள்ளம னைத்து

                முருகுதற்குச் செய்வீரே.

406.        அண்ணலு மக்கேறா

                தனைத்தையும் விட்டோடி

        யெண்ணம்வைத்தும் மோடயிக்க

                மாயிருக்கச் செய்வீரே.

407.        எல்லா லௌகீக

                யிச்சைகட்கெல் லாமாண்டு

        நல்லாளா யுன்றனக்குள்

                நானிலைக்கச் செய்வீரே.

408.        என்விசு வாசத்தை

                யெடுக்கப்போர் செய்துவருந்

        துன்மனசை வெல்லத்

                துணைநீர்தான் கத்தாவே.

409.        மீட்பரே யென்றன்

                விசுவாசத் தைத்திடத்தித்

        தீட்படரு மாயையென்னைச்

                சேராமற் காத்தருளே.

410.        பாங்குபெற நித்தியமும்

                பத்தியினிற் சூடாகி

        யோங்கி வளர

                வுமதுதவி செய்வீரே.

411.        கெட்டஇச்சை யாவுமெனைச்

                கிட்டாம லேமுறியக்

        கட்டளை செய்யுங்

                கருணை மனுவேலே

22. பத்தி

412.        இத்தக மையாக

                இரங்கிப் புலம்பிநின்று

        வித்தகனா ராலயத்தில்

                மேவிவந்த கும்பினுடன்.

413.        திரும்பி யெனையாண்ட

                தேவன் மரணத்

        தருந்துயரங் கொண்டதெல்லா

                மாற்ற முடியாதே.

414.        எந்தை விலாவி

                னிருகால் கரத்திலுற்ற

        வைந்து வடுவென்ற

                னகத்திற் றழும்பாமே.

415.        கார்த்த கொலைஞர்

                கடவு டிருச்சிரத்திற்

        சேர்த்தமுடி முள்ளெனது

                சிந்தைதனிற் றைத்திடுமே.

416.        ஆண்ட வெனதைய

                னருங்கால் கரந்துளைத்த

        நீண்ட விருப்பாணியென்ற

                னெஞ்சைத் துளைத்திடுமே.

417.        சீலமனு வேலின்

                றிருவிலா வைத்திறந்த

        வேலின்முனை யென்னுளத்தை

                மேவியுறப் பாய்ந்திடுமே.

418.        அந்நாளி லண்ண

                லடைந்ததுய ரத்தனையு

        மிந்நாளெ னின்மனதுக்

                கெண்ணிலா வாதையதே.

23. மனஸ்தாப யோசனை

419.        இச்சணமோ வல்லதுதா

                னின்னமொரு நாழிகைக்கோ

        யெச்சமயஞ் சாவுவரு

                மென்றறிய மாட்டேனே.

420.        ஆங்கால மெல்லா

                மதன்மத்தி லேநடந்து

        போங்கால மாராலாம்

                புண்ணியத்தைச் செய்வதற்கே.

421.        சுகத்தோ டிருக்கச்

                சுகிர்த வழிசெல்லார்

        மிகத்தான் வியாதியுற்ற

                வேளைதனிற் செல்வாரோ.

422.        இளவயதி னன்மைசெய்யா

                தீன னுயிர்போம்போ

        துளமகிழும் ஞானத்

                துறுதியெனக் குண்டாமோ.

423.        வாராப் பிணியு

                மருந்தும் வயித்தியனும்

        நேராகச் சூழுமந்த

                நேரமறஞ் செய்வேனோ.

424.        ஒப்பாரி சொல்லி

                யுறவின்முறை யார்புலம்பு

        மப்போ தவம்புரிய

                ஆர்க்கு மனதாகும்.

425.        பெண்டீரும் பிள்ளைகளும்

                பெற்றவருஞ் சுற்றியழக்

        கண்டாற் றிடனாய்க்

                கதிவழியிற் சேர்வதெங்கே.

426.        இனியினி யென்றெண்ணி

                யிருக்கையி லேசாவு

        நினையாதுற் றார்பிறகோர்

                நேரம்வா வென்பேனோ.

427.        இருளோ பகலோ

                எதிலோ இறைவன்

        றிருடனைப்போல் வந்தாலென்

                செய்கைக்கென் சொல்வேனான்.

428.        ஆற்றும மொன்றே

                யதையு மிழந்தக்கால்

        வேற்றுமொரு வஸ்துவினால்

                மீட்கமு டியாதே.

429.        இன்னபல ஞானமெல்லா

                மெண்ணியெண்ணிக் கற்றாலும்

        பின்னுமுனக் கென்மனமே

                பேரின்பம் வேம்பாமே.

24. பிரதிக்கினை

430.        எறிந்துவிடு மாங்கிஷத்தி

                னிச்சை யழிவாமென்

        றறிந்தா யினியா

                கிலும்பவத்தைச் செய்யாதே.

431.        பார்க்கு முலகப்

                பவிசதெல்லாம் பாழ்மனமே

        நீர்க்குமிளி போலாம்

                நினைவையதில் வையாதே.

432.        ஆடம் பரங்க

                ளலகையி னாராதனைகள்

        கேடென்று தள்ளிக்

                கிறிஸ்துவைப்பின் செல்வாயே.

433.        வானத்தின் கீழனைத்து

                மாயையென்று கண்டாயே

        ஞானத்தான் றானுமதை

                நாட்டிவைத்துப் போனானே.

434.        என்ன வந்தாலு

                மினியுமக்கே றாததொன்றா

        லென்னை யழுக்காக்கா

                திருப்போன் மனுவேலே.

435.        தேவனே யும்மைச்

                சினேகிப்பே னல்லாதென்

        சீவனிலெல் லாம்பவத்தைச்

                செய்யத் துணியேனே.

436.        பொல்லாக் குணத்தைமுற்றும்

                போக்கியென்றன் சீவனையு

        மெல்லாத்தை யும்பார்க்க

                யேசுவைநே சிப்பேனே.

25. நம்பிக்கை

437.        சொற்ப வுலகச்

                சுகத்தை யறவெறுத்தாற்

        றற்பரனைக் கண்ணாரத்

                தான்கண்டு வாழ்வேனே.

438.        இருதய சுத்தத்தோ

                டிருந்தாற் பரத்திற்

        சருவேசுரனை யென்றுஞ்

                சார்ந்து தெரிசிப்பேனே.

439.        பாவமெல்லாம் நீங்கிப்

                பரிசுத்த மாய்நடந்தாற்

        சீவனுடன் மோட்சதலஞ்

                சேர்ந்துகளி கூர்வேனே.

440.        தவசு நிலையிற்

                றவறா திருந்தாற்

        கவலையில்லா தூழியுள்ள

                காலமெல்லாம் வாழ்வேனே.

441.        ஆணுவத்தைத் தள்ளி

                யநித்தியத்தைக் கைநிகழ்ந்தாற்

        சேணுலக ராச்சியத்திற்

                சென்றுகளி கூர்வேனே.

442.        தானென்ற வெண்ணஞ்

                சரிவரச் சாகுங்காலம்

        நானென்றுஞ் சாகாம

                னன்றா யிருப்பேனே.

443.        காமா விகாரக்

                கனங்குழலா ராசையற்றாற்

        சீமானி யேசு

                திருமுகத்தைக் காண்பேனே.

444.        ஒன்றா யெழும்பு

                முடல்மூன்று சத்துருவை

        வென்றாற் கிறிஸ்துவுடன்

                மேவியர சாள்வேனே.

445.        வேத நெறிப்படியே

                மெஞ்ஞானி யாய்நடந்தார்

        தூதர் சபைதிரண்ட

                சொற்கத் திருப்பேனே.

446.        தற்பரனுக் கேற்கத்

                தரும வழிநடந்தாற்

        பொற்புறும் வானோர்களுடன்

                போயிருந்து கொள்வேனே.

447.        மேவு முடலை

                வெறுத்துத் தவம்புரிந்தாற்

        சீவ மரக்கனியைத்

                தின்று சுகிப்பேனே.

448.        அறியாமை நீங்கி

                யகம்பிரமை யற்றாற்

        சிறியேன் பராபரனைச்

                சேவித் திருப்பேனே.

449.        எல்லாத்திலும் பார்க்க

                யேசுவைநே சித்திருந்தா

        லுல்லாச மாயுன்

                னதத்தி லுயர்வேனே.

450.        என்னைச் சினேகித்

                திருப்பதுபோ லென்னயலான்

        றன்னைச் சினேகித்தாற்

                சம்மனசாய்ப் போவேனே.

451.        உத்தம பத்திவிசு

                வாச மதிலோங்கி

        மெத்தவும் நம்பிக்கை

                விளங்கவைத்தாய் மெய்ப்பொருளே.

452.        பவித்திரஞ் செய்தென்னைப்

                பரிசுத்த மாக்கிக்

        குவித்தென் னகத்தைக்

                குணத்தில் வைத்தாற்சுகமே.

26. காதலன் புகழ்ச்சி

453.        ஒன்றான வேதத்தி

                னுட்பொருளை யுன்னதத்திற்

        சென்றாளு மேக

                திரித்துவத்தைப் போற்றிசெய்வாம்.

454.        வேத முதலை

                வினையறுத்த வித்தகனை

        மாதவனை ஞான

                மணவாள னைப்பணிவாம்.

455.        புண்ணியனை மாளாத

                பொக்கிஷத்தைப் பக்கிஷத்தை

        விண்ணவனை மேலவனை

                மேசியா வைத்தொழுவாம்.

456.        பூரணனை மெய்வேத

                போதனைப் புராதனனைக்

        காரணனை யூதர்குலக்

                காவலனைக் கைதொழுவாம்.

457.        சுத்த சுவிசேட

                துரந்தரனைத் தூயவனை

        முத்திவழி காட்டவந்த

                முப்பொருளைப் போற்றிசெய்வாம்

458.        நின்றநிலை கெட்டவனை

                நீதிவழி யிற்சேர்த்தே

        யன்றுமுத னன்றுசெய்த

                வாண்டவ னைப்புகழ்வாம்.

459.        உருக்கத் தயவா

                யுயர்ந்தோனை யுண்மைப்

        பெருக்கத்தா னத்தானைப்

                பேணி நமஸ்கரிப்பாம்.

460.        என்றனு யிர்க்காக

                விரங்கித் தனதுயிரைத்

        தந்தைதனக் குப்பெலியாய்த்

                தந்தானைச் சிந்தைசெய்வாம்.

461.        செங்குருதி பானமதாய்ச்

                செய்யவுடற் போசனமாய்ப்

        பங்கமறத் தந்தெனைக்கண்

                பார்த்தானைத் தோத்திரிப்பாம்.

462.        முந்தினனைப் பிந்தினனை

                முன்னானைப் பின்னானை

        வந்தனை யுவந்தானை

                வந்தானை வாழ்த்தல்செய்வாம்.

463.        சமஸ்த வரப்பிரசா

                தத்தா வியானை

        நமஸ்கரித்தென் னாளுமிந்த

                நானிலத்தில் வாழ்ந்திருப்போம்.

464.        மங்கள மனாதியர்க்கு

                மைந்தனுக்கு மாவியர்க்குந்

        தங்கு மனந்த

                சதாகாலம் வந்தனமே.

27. திருச்சபை வாழி

465.        வாழி கிறிஸ்தோரவையு

                மாறாத சத்தியமுஞ்

        சூழு மறையோர்

                சுகிர்தநெறி யேவாழி.

466.        காரண தபோதனர்கள்

                கற்றுணர்ந்த சாஸ்திரிக

        ளாரண புராண

                வரிஞர்களெ லாம்வாழி.

467.        ஞாயத் துரைகள்

                நடத்தியசேங் கோல்வேந்தர்

        தேயத் ததிகாரஞ்

                செய்நீதி யோர்வாழி.

468.        நற்றரும வான்களுடன்

                ஞாயவுப தேசியர்கள்

        கற்றகலைக் கியானக்

                கவிஞர்களெ லாம்வாழி.

469.        வரத்தர் தவத்தர்

                மயக்கறுத் தமாக்கள்

        விரத்தத்து வத்தர்முத்தர்

                வித்தியா தரர்வாழி.

470.        செய்ய சபையிற்

                செழிக்கும் விசுவாசிகடா

        னையமற் றெந்நாளு

                மம்புவியி லேவாழி.

471.        சந்ததிகள் வாழ்ந்து

                சகலசுப சோபனமாய்ச்

        சிந்தை மகிழ்ந்தோங்கிச்

                சிறந்திருக்க வேவாழி.

472.        ஆற்றும சரீசுக

                வாரோக்கி யத்துடனே

        மாற்றமி லாதென்று

                மகிழ்ந்திருக்க வாழியதே.

28. பேரின்பக் காதலளவு

473.        வாட்டமில்லாத் தேவ

                சகாயன் மகன்மதுரை

        நாட்டினெல்லை வாழ்வேத

                நாயகன் பாடலதே.

474.        யேசுபிறந் தாயிரத்தெண்

                ணூற்றுப் பதின்மூன்

        றாசதில்லான் காத

                லறைந்தவாண் டானதுவே.

475.        காரணனார் பேரின்பக்

                காதலெனும் நூலளவ

        தேரிசைந்த நானூற்

                றெழுபத்தைங் கண்ணியதே.

முற்றும்

IV பிரலாப ஒப்பாரி தலைவரிசை

அட்டவணை

                                                                கண்ணி

1.        தேவ வணக்கம்                                        1

2.        அவையடக்கம்                                        6

3.        தசாங்கம்                                                8

4.        தியானம்                                                18

5.        ஒப்பாரி - பாடுகளின் றொகை                        28

6.        பரிகாச ராசாவினாளுகை                        51

7.        சிலுவை நடை                                        65

8.        சிலுவை மரணம்                                        99

9.        துக்கிப்பு                                                121

10.        உத்தம மனஸ்தாபம்                                133

11.        விண்ணப்பம்                                        161

12.        பிரலாப ஒப்பாரி – அளவு                        169

காப்பு

        திருத்தய வுணரார்செய்த

தீமையாற் பாடுபட்டுத்

தருச்சிலு வையிற்றஞ் சீவன்

றந்துலகத்தை மீட்ட

அருட்கிறிஸ்துவுக் கன்பாய்ப் பிர

லாப வொப்பாரி சொல்லப்

பரத்தி னிஸ்பிரீத்துச் சாந்தெம்

பரிசுத்த ரூபி காப்பாம்.

1. தேவ வணக்கம்

1.        சீராதி கத்தன்

                றிருமரணத் தைத்தேர்ந்து

        பேராய்ப் புலம்பும்

                பிரலாப வொப்பாரி.

        

2.        தந்தைப் பிதாவே

                தயவாகக் கேட்டிரங்கி

        மைந்தனுக்காய் வேண்டி

                மகிழ்ந்தெனையாட் கொண்டருளே.

3.        தப்பாக் கிறிஸ்து

                தயாபரா நின்மீது

        ஒப்பாரி சொல்ல

                வுவந்தெனக்கு வாக்கருளே.

4.        நித்திய பிதாவினொரு

                நேயகுமா ரனரர்க்கு

        மத்தியஸ்த நேச

                மரித்த புலம்பலுக்கு.

5.        பாவிகளைச் சுத்தாங்கம்

                பண்ணுகின்ற மெய்ப்பரிசுத்

        தாவியே முன்னின்

                றனுக்கிரகஞ் செய்தருளே.

2. அவையடக்கம்

6.        மூப்பான வேத

                முதன்மையோ ரிப்புலம்பல்

        தீழ்ப்பான பாடலெனச்

                செப்பமனங் கொள்ளாரே.

7.        எப்பா வலரேனு

                மேழைமதி யாற்புலம்பு

        மொப்பாரிக் கென்மே

                லொருகுறையுஞ் சொல்லாரே.

3. தசாங்கம்

8.        சீனா மலையிற்

                றிடவெனச் சீயோனீன்ற

        மானார் பொருட்டான்

                மடிந்தகொல்க தாமலையான்.

9.        சீவப் பெருநதிக்குஞ்

                செல்வயோர் தானதிக்கு

        மாவிப் பெருக்கி

                னகண்டகிரு பாநதியான்.

10.        இவ்வுலகின் ராச்சியந்தா

                னென்னுதல்ல வென்றுசொன்ன

        திவ்விய பேரின்பச்

                செயல்வான ராச்சியத்தான்.

11.        சாத்தா னடிமைத்

                தனத்திலுற்ற பாவிகளுக்

        கேற்தான் கையேற்தான்ஞா

                னேத்தா னசரேத்தான்.

12.        ஓசியன்னா ரட்சியுமென்

                றோலமிட மாந்தர்குழா

        மீசுரத்தோ டேறிவரும்

                வேசரியாம் வாரணத்தான்.

13.        சீவனுள்ளோர் தங்களுடன்

                செத்தோரை யுமெழுப்பி

        மேவிநடுத் தீர்க்கவரும்

                வெள்ளைமே கப்பரியான்.

14.        சத்துருக்க ளோடிவிழச்

                சர்ப்பனைப் பிசாசலற

        எத்திசையு மேற்கொண்

                டிலங்குசிலு வைக்கொடியான்.

15.        வானவரு மானிடரும்

                வாஞ்சையினா லுச்சரிக்குஞ்

        சேனைவித மந்திர

                தியானசெப மாலையினான்.

16.        வாழ்ந்தோருங் கூடிவர

                மாய்ந்தோ ரெலாமெழும்பச்

        சூழ்ந்தே ழெக்காளந்

                தொனிக்குந் தனிமுரசான்.

17.        பூதலத்தோர் பாதலத்தோர்

                பொன்னுலகத் தோரும்வந்து

        பாதந்தொழுது

                பணிந்துநிற்குஞ் செங்கோலான்.

4. தியானம்

18.        இத்தகமை வல்லபத்தி

                யேசுக் கிறிஸ்திறைவன்

        சித்தம்வைத்துப் பாடுபட்டுச்

                சீவனையும் விட்டிறந்தான்.

19.        ஆறு தினத்தி

                லனைத்தையுஞ் செய்தோனுருவ

        மாறிக் கபால

                மலையிலுயிர் விட்டிறந்தான்.

20.        நல்குந் திருக்கருணை

                நாயகனா ராடுகட்காய்க்

        கொல்கதா வெற்பிற்

                குருசிலறை யுண்டிறந்தான்.

21.        சீவன் மடிந்து

                சிலுவையினிற் றொங்கிறதைப்

        பாவிகளா ரேனுமுண்டோ

                பார்க்கவர மாட்டீரோ.

22.        அன்பிற் குரிய

                அருமைக் கிறிஸ்தோரே

        யென்பிற கேகூடி

                யிரங்கியழ மாட்டீரோ.

23.        சொந்தப் பிரானார்க்குச்

                சூழ்ந்ததுய ரத்தனையும்

        வந்து கண்ணாற்காண

                மனதிலையோ சீயோனே.

24.        ஆற்று மநேச

                ரரும்பாடு பட்டிறந்தான்

        போற்றுஞ் சபையே

                புலம்பவர மாட்டீரோ.

25.        என்னைபோற் பொல்லாதா

                ரிங்கிரா ரிங்கிருந்தா

        லுன்னிப்போய்க் கத்தருக்கென்

                றொப்பாரி சொல்லீரோ.

26.        அன்றெ ருசலேமி

                லழுதுசென்ற மாதர்பின்போ

        யின்று புலம்ப

                எழுந்துவர மாட்டீரோ.

27.        மெய்ப்பாஞ் சபையே

                விசுவாசக் கண்ணோக்கி

        யொப்பாரி சொல்லி

                யுறுதுயரங் கொள்ளீரோ.

5. ஒப்பாரி

பாடுகளின் றொகை

        ('என்னையா தயாபரரே

யென்ற வார்த்தையை அடிதோறுந்

கொடர்ந்து கொள்க)

28.        ஆதிபரப் பொருளே

                ஆட்கொண்ட நாயகமே

        மாதுவினை தீரவென்றே

                வையகத்தில் வந்தீரோ.

29.        வேதம் நிறைவேற்றி

                வெற்றி முடிசூட்டப்

        பாதகருக் காய்வேண்டிப்

                பாடுபட வந்தீரோ.

30.        உன்னதத்தின் மெய்வாழ்வே

                யொன்றான கத்தாவே

        என்னை யிரட்சிக்க

                இரக்கமுமக் குண்டாச்சோ.

31.        சங்கையின் ராசாவே

                தாழ்த்திபண்ணப் பட்டீரோ

        பங்கமுற லானீரோ

                பாவியைப்போ னின்றீரோ.

32.        வானத்தின் வேந்தே

                மகிமையெல்லாம் விட்டீரோ

        ஈனத்தனமா

                யிகழ்ச்சியெல்லாம் பட்டீரோ.

33.        அன்னைவினை தீரக்க

                அரும்பா டடைந்தீரோ

        மன்னவனே பாதகர்க்காய்

                வன்கொலைக்கு ளானீரோ.

34.        அம்பரமும் வானு

                மனந்தவுல கும்படைத்த

        எம்பிரானே நீர்தா

                னேழையைப்போ லானீரோ.

35.        அண்டமெல்லாந் தந்து

                அனைத்தும் படைத்தோனே

        கொண்டஇந் தக்கோலங்

                கொடுமையல்லோ கத்தாவே.

36.        கட்டுண்டு நின்றீரோ

                கள்ளனைப்போற் சென்றீரோ

        வெட்டுண்கும் பாதகரை

                மீட்டுவிட வேண்டினதோ.

37.        பண்ணிய நிந்தை

                பரிகாச கோரணிக

        ளெண்ணி முடியா

                இகழ்ச்சியெல்லாம் பட்டீரோ.

38.        முக்கா டிட்டாரோ

                முகத்தி லறைந்தாரோ

        எக்கேடுங் கெட்டோர்க்

                கிரங்கமன தானீரோ.

39.        மறுதலிக்கப் பட்டீரோ

                வன்சிறைக்கு ளானீரோ

        பொறுமையுடன் கேட்டீரோ

                பொல்லாதோர் தூஷணத்தை.

40.        கற்றூணிற் சேர்த்துக்

                கடூரத் தடித்தாரோ

        பற்றாதோ இப்பாடு

                பாவிகளை மீட்பதற்கு.

41.        வாராலடிக்க

                மருகிநிற்க லானீரோ

        ஆராரை மீட்க

                அரிதாகு மப்பாரே.

42.        கோர்த்த இருப்புக்

                கொடுக்குச் சவுக்கதனா

        லார்த்தடிக்கச் சேர்வையெல்லா

                மாங்காரங் கொண்டாரோ.

43.        சீவவிருட் சக்கனியைத்

                தின்றிருக்க மாட்டாமற்

        பாவி பறித்த

                பழிவந்து நேர்ந்ததுவோ.

44.        நீதியில்லான் வீடு

                நிறைந்தரத்தக் காடாச்சோ

        வேதமில்லான் வீடு

                வெந்தோன்றிக் காடாச்சோ.

45.        ஞாயக் களரி

                நனைந்து பெருக்காச்சோ

        மாயக் களரி

                வழிமுடியச் செந்நீரோ.

46.        பெருகி ரத்தமோடப்

                பிலாத்தின் மனங்குன்றி

        அரண்மனை யாஸ்தான

                மதிர்ந்து நடுங்கலையோ.

47.        சாலேமின் மாதர்

                தயங்கிப் புலம்பலையோ

        ஓலோல மோலமென்று

                ஒப்பாரி சொல்லலையோ.

48.        யேருசலேம் பெண்க

                ளிரங்கிப் புலம்பலையோ

        மாரிபோற் கண்ணீர்

                வழிந்தோடக் காணலையோ.

49.        தாவீதின் வீட்டார்

                தனித்துப் புலம்பலையோ

        பாவா யுருகிப்

                பரதபித்து நிற்கலையோ.

50.        சீயோன் குமாரி

                திடுக்கிட் டலறலையோ

        பாயாதோ கண்ணீர்

                பரதேசுத் தோட்டமட்டும்.

6. பரிகாச ராசாவினாளுகை

72. சங்கீதம்

51.        வெள்ளையரைச் சட்டையிட்டு

                மீண்டதிரு மேனியிலே

        தெள்ளுஞ் சகலாத்துச்

                செஞ்சட்டை யிட்டாரோ.

52.        முள்ளின்முடி சூட்டினரோ

                மூர்க்கத் தறைந்தனரோ

        வள்ளலெனச் செய்து

                மதிமுகத்திற் றுப்பினரோ.

53.        பரிகாச ராசனெனப்

                பாதகர்செய் கோலமதை

        வரிசையெனக் கொண்டீரோ

                வாழ்த்தினதுங் கேட்டீரோ.

54.        செங்கோல்மூங் கிற்கோலாய்ச்

                செங்கைதனிற் கொண்டீரோ

        எங்கோனே யூதர்களை

                யின்றாளப் போறீரோ.

55.        தாவீதின் வீட்டார்முன்

                சந்தித்துக் காணாரோ

        கோவேந்தர் கப்பமிட்டுக்

                கும்பிட்டு நிற்காரோ.

56.        பன்னிரு பிதாக்கள்

                பணிந்துநின்று போற்றாரோ

        அன்னிய தேசத்தி

                னரசரெதிர் கொள்ளாரோ.

57.        இஸ்றாவேற் றேசமெங்கு

                மெக்காள மூதாரோ

        திசைதோறும் வேந்தர்

                தெரிசனைக்கு வாராரோ.

58.        முச்சாஸ் திரிமார்

                முடிமன்னர் போற்றாரோ

        எச்சாதியுஞ் சேவித்

                தேற்றித் தொழுகாரோ.

59.        சித்திரபா னுள்ளமட்டுஞ்

                செங்கோல் செலுத்தீரோ

        சுத்தநி லாமட்டுஞ்

                சுயாதிபதி யானீரோ.

60.        வனாந்தரத்தார் வந்து

                வணங்கிப் பணியாரோ

        அனாந்தர மானோரு

                மடைக்கலமென் றண்டாரோ.

61.        தற்சீசின் ராசாக்கள்

                சங்கைசெய்து நிற்காரோ

        உச்சிதங்கள் கைகொண்

                டுவந்து பணியாரோ.

62.        தீவுகளின் மன்னர்

                திறைகொண்டு வாராரோ

        காவலர்கா ணிக்கையிட்டுக்

                கைகட்டி நிற்காரோ.

63.        வெகுமானங் கொண்டுவந்து

                வேற்றரசசர் போற்றாரோ

        தகுமான சங்கைத்

                தளபதிகள் வாழ்த்தாரோ.

64.        பூமியி னெல்லையெல்லாம்

                பூபதிமேற் கொள்ளாரோ

        சாமிக் கிடும்பொன்

                சபேயாவின் பொன்னலவோ.

7. சிலுவை நடை

65.        கள்ளன் விடுதலையாய்க்

                காராள வங்கிஷத்து

        வெள்ளன் கொலையாக

                வேதன் விதிவசமோ.

66.        மூப்பான் றலைவன்

                முதன்மையா னெம்மையன்பாய்ப்

        பாப்பான் மடியப்

                பரமன் விதிவசமோ.

67.        சத்திகரிப் போன்

                சுயாதிபதி சாலேமின்

        சத்திரியன் றாவீது

                சாகத்தீர்ப் பானானோ.

68.        உசிதத் தயவா

                லுலகை வசமாக்கும்

        வசியர் குலப்பெருமான்

                வன்கொலைக்கு ளானானோ.

69.        சாத்திர புராண

                சமஸ்தவே தாஷரத்தின்

        சூத்திரன் சாகத்

                துணிந்துமனங் கொண்டானோ.

70.        செஞ்சோதி நாட்டான்

                றிருப்பத்தூர்க் கோட்டைகட்டத்

        தஞ்சா வூருக்குத்

                தனிவழியே போறானோ.

71.        குருதிவெள்ள மோடக்

                குருசைச் சுமந்தீரோ

        மருகி மருகி

                வழிப்பயணம் போறீரோ.

72.        பாரச் சிலுவைதனைப்

                பாவிகளுக் கோசரமோ

        கோரச் சிலுவைதனைக்

                கொண்டுசெல்லக் கூடலையோ.

73.        சீமோன் சீரேனே

                திடவானோ வும்மைவிடக்

        கோமான் சுமந்த

                குருசெடுக்க வல்லவனோ.

74.        உலகத்தைத் தாங்குகின்ற

                ஒப்பிலாக் கத்தாவே

        கலகச்சி லுவை

                கனத்தசுமை யானதுவோ.

75.        வானத்தை தாங்குகின்ற

                மட்டில்லா வல்லவனே

        சனச்சி லுவை

                யெடுத்தேக ஏலலையோ.

76.        அண்டமெல்லாந் தாங்கு

                மனாதி பரபொருளே

        கொண்ட குருசெடுக்கக்

                கூடலையோ அப்பாரே.

77.        அந்தர சொர்க்க

                மகிலமெல்லாந் தந்தோனே

        பந்தச்சி லுவைமகா

                பாரமோ ஐயாவே.

78.        எந்தவூ ரையாநீ

                ரெங்கையிருந் தெங்குவந்தீர்

        சொந்தவூரி லுமக்குத்

                துன்பம்வந்து நேர்ந்ததுவோ.

79.        சிலுவை சுமந்து

                செருக்களத்துப் பாதையிலே

        மெலிவாய் நடந்து

                விரும்பிநீர் போறதெங்கே.

80.        குருசைச் சுமந்து

                கொலைக்களத்துப் பாதையிலே

        வரிசைத் துரையேநீர்

                மாளுதற்கு போறீரோ.

81.        ஆதாம் புரிந்த

                அரும்பாவந் தீர்ப்பதற்கு

        நாதாநீர் போறவழி

                நானறிய மாட்டேனோ.

82.        மாதா புரிந்த

                மகாபாவந் தீர்ப்பதற்கு

        வேதாநீர் போற

                விதந்தெரிய மாட்டேனோ.

83.        கொல்கதாப் பாதை

                கொடுந்தூர மானதுவோ

        ஒல்கலையோ நெஞ்ச

                முருகாதோ பாவிகட்கு.

84.        மலைப்புறத்துப் பாதை

                வழியுந்தொ லையாதோ

        கொலைக்களத்துப் பாதையிலே

                கோட்டிமெத்த வுண்டாமோ.

85.        கள்ளருடன் கூடிக்

                கபாலமலைக் கேகுதற்கு

        மெள்ள நடந்தால்

                வெகுதூரம் போவதெப்போ.

86.        கூனிக் குனிந்து

                குருசெடுத்துப் போகையிலே

        மானக் குலப்பெண்

                மயங்கிவிழ மாட்டாளோ.

87.        சீயோன் குமாரியுட

                சிந்தைதடு மாறாதோ

        ஓயாமற் கண்ணீர்விட்

                டொப்பாரி சொல்லாளோ.

88.        நெஞ்ச முருகி

                நெடுந்துயரம் பூணாளோ

        அஞ்சியஞ்சிப் பேதை

                யதிர்ந்து நடுங்காதோ.

89.        சாலேமின் பெண்கள்

                தலைவிரித்துச் செல்லாரோ

        மேலான ராசாத்தி

                விம்மியழ மாட்டாளோ.

90.        ஏருசலே மாத

                ரெதிர்கொண்டு செல்லாரோ

        மார்பி லடித்து

                மனைக்குத் திரும்பாரோ.

91.        தாவீதின் புத்திரியின்

                சத்தமெங்கும் கேளாதோ

        ஏவாளின் சத்த

                மெருசலையி லெட்டாதோ.

92.        சாறாளின் சத்தந்

                தனிவழியிற் கேட்பதென்ன

        மாறாத துக்க

                மனத்துயரங் கொண்டாளோ.

93.        அம்மாள் ரேபக்கா

                ளலறுகிற சத்தமென்ன

        எம்மா திபனுக்

                கிடுக்கண்வந்து நேர்ந்ததுவோ.

94.        லேயாளின் சத்தம்

                நெடுந்தூரங் கேட்பதென்ன

        ஆயாச மாகி

                யருந்துயரம் பூண்டாளோ

95.        ராகேல் புலம்பி

                நடுத்தெருவிற் செல்வதென்ன

        போகாத் துயரம்

                பொருந்தினதோ பொற்கொடிக்கு.

96.        கன்னி மரித்தாயார்

                கனிந்துருகுஞ் சத்தமென்ன

        உன்னி யிதையத்

                தொருவா ளுருவினதோ.

97.        அன்னை மரியம்மா

                ளழுதுருகுஞ் சத்தமென்ன

        மன்னு மிருதயத்தில்

                வாளுருவிப் பாய்ந்ததுவோ.

98.        வியாகுல மாதா

                மிகுதுயரங் கொண்டதென்ன

        தயாபரருக் கேதோ

                சதிமரணம் வந்ததுவோ.

8. சிலுவை மரணம்

99.        ஏதன்மலை யாதாமு

                மேவாளுஞ் சீவனுறக்

        காதல் மலையான்

                கபாலமலை வந்தானோ.

100.        நல்குந் திருக்கருணை

                நாதன் கொலையாகக்

        கொல்கதாக் கோடு

                குறுகிவந்து நின்றதுவோ.

101.        ஆளுந் தயாபத்

                தனாதி திருவுளமே

        போளங் கலந்த

                புளித்த ரசங்கொள்ளலையோ.

102.        ஆடை களைந்தே

                யரும்பாத கர்நடுவே

        நீடும் பொருளை

                நெடுங்குருசி லேற்றினரோ.

103.        செய்யமலர்ப் பதத்துஞ்

                செங்கரத்து மாணிகளால்

        நைதுருவத் தைக்க

                நடுக்க மடைந்தீரோ.

104.        கள்ளர் நடுவாகக்

                கானானா டாளவந்த

        வள்ளல் சிலுவை

                மரத்தேற்றப் பட்டாரோ.

105.        ஆரியரு மூப்பர்களு

                மவ்வழியிற் செல்வோருஞ்

        சோரர்களுஞ் சேவகருந்

                தூஷணங்கள் சொன்னாரோ.

106.        நாடித் தவித்து

                நலிந்த இறையவர்க்குக்

        காடி கொடுத்தாரோ

                கடற்காளா னானிரப்பி.

107.        சிலுவை மரத்தேழு

                திருவசனஞ் சொன்னபின்பு

        வலியபிதா வைக்கூவி

                மாய்ந்துயிரை விட்டீரோ.

108.        ஆகாத பாவிகளி

                னக்கிரமத் தைத்தொலைக்கச்

        சாகாத வஸ்து

                தமதுயிரை விட்டாரோ.

109.        ஆடுகளுக்காக

                அருமையுள்ள நல்மேய்ப்பர்

        பாடுமிகப் பட்டுப்

                பரிந்துயிரை விட்டாரோ.

110.        மைந்தரை யுண்டாக்கி

                வைத்ததய வுக்காக

        எந்தைவிலா வைத்துளைக்க

                ஈட்டியொன்று வேண்டாமோ.

111.        மாயப் பிசாசினுட

                வல்லடிக்குத் தப்பவைத்த

        ஆயன் விலாத்துளைக்க

                ஆலவேல் வேண்டாமோ.

112.        மண்ண ததிராதோ

                வானுலகுங் கேளாதோ

        விண்ண ததிராதோ

                மேலுலகங் கேளாதோ.

113.        சூரியன் மங்கித்

                துயர மடையாதோ

        பாரும் நடுங்கிப்

                பருப்பதங்கள் வீழாதோ.

114.        குன்று பிளவாதோ

                கொல்கதாச் சாயாதோ

        சென்ற திருக்கோவிற்

                றிரை கிழியமாட்டாதோ.

115.        கேரூபீன் கூட்டங்

                கிலேசித்துப் பார்க்காரோ

        சேரூபீங் கூட்டந்

                திகைத்து நின்றுநோக்காரோ.

116.        கல்லறை வாசற்

                கபாடந் திறவாதோ

        வல்லவன் போட்ட

                மதிலிடிந்து வீழ்காதோ.

117.        அந்தரமும் வானு

                மனந்த சராசரமுஞ்

        சந்திரனுந் தாரகையுந்

                தத்தளித்து நிற்காதோ.

118.        வேதனடைந்த

                வியாகுலத்தைக் கேட்டவுடன்

        பூதியங்கள் வெந்து

                புகைந்துருகிப் போகாதோ.

119.        வெளிச்சமிரு ளாகாதோ

                விண்ணுலகு மங்காதோ

        பளிச்சென்ற யேருசலேம்

                பட்டணந்தீப் பற்றாதோ.

120.        பாதாள மஞ்சிப்

                படுசாம்ப லாகாதோ

        வேதாள மஞ்சி

                விழுந்தோடிப் போகாதோ.

9. துக்கிப்பு

சகரி. 12: 10-14

121.        ஆடித் திருவிளையாட்

                டத்தனையுஞ் செய்தோனை

        வேடிக்கை பார்க்க

                மிகுந்த திரள்கூடாதோ.

122.        தாவீதின் வீட்டார்

                தனித்தனிதுக் கிக்காரோ

        பாவாணர் வீட்டார்

                படிப்படிதுக் கிக்காரோ.

123.        நாத்தானின் வீட்டார்

                நலிந்து புலம்பாரோ

        கோத்திரப் பிதாக்களெல்லாங்

                கூவியழ மாட்டாரோ.

124.        இலேபித்தர் கூட்ட

                மிரங்குகண்ணி ராறோட்டங்

        கலாபித்த பேருங்

                கனிந்துருக மாட்டாரோ.

125.        சீமேயி வங்கிஷமுந்

                தேவிமா ருந்தனித்து

        மாமா ரடித்து

                வலுமுழக்கஞ் செய்யாரோ.

126.        குத்தினவர் நோக்கிநின்று

                        கோவென் றழுகாரோ

        எத்திசையும் மண்ணும்விண்ணு

                மெங்கும் புலம்பாதோ.

127.        தலைச்சன் குமாரனுக்காய்த்

                தாய்கதறி நிற்பதுபோல்

        மலைத்தபெரு மூச்செறிந்து

                மாதுயரங் கொள்ளாரோ.

128.        தேசம் புலம்பாதோ

                தீவுகளுங் கத்தாதோ

        ஓசை முழங்கவெங்கு

                மொப்பாரி சொல்லாரோ.

129.        பத்தினி மாரெல்லாம்

                பரதபித்து நிற்காரோ

        உத்தமிக ளெல்லா

                முருகிப் புலம்பாரோ.

130.        காவலன்வே றாய்த்தனித்துக்

                காதலிவே றாய்த்தனித்துக்

        கூவி முழ்ங்குங்

                குரலோசை கேட்பதென்ன.

131.        மூவரிலே யோர்தன்

                முடியான் முடிந்ததுவோ

        பாவலனெல் லைப்பதியான்

                பாட்டன் மடிந்ததுவோ.

132.        சீலோவின் பெண்கள்

                திருநாளின் கொண்டாட்டோ

        சாலேமின் பெண்கள்

                தவசினாட் கொண்டாட்டோ.

10. உத்தம மனஸ்தாபம்

133.        அன்பே யென்னாதா

                அருமைக் கிறிஸ்தரசே

        வன்பாய் நீர்சாகவந்த

                வல்வினையே தாண்டவனே.

134.        ஆராய்த வில்லாத

                ஆழ்க்கிரு பாநதியே

        பேரா யுமக்குப்

                பெருந்துயரஞ் சூழ்ந்ததென்ன.

135.        பாவமறியாப்

                பரிசுத்த கத்தாவே

        தேவரீர்க் கென்னாலித்

                தீங்கு வந்துநேர்ந்ததுவோ.

136.        தின்றாக்கனி பறித்தேன்

                செங்கரத்தி லாணிதைத்தே

        னொன்றாக் கனிபறித்தே

                னுச்சிதனி லாணிதைத்தேன்.

137.        தீயக் கனிபறித்தேன்

                சீர்பாதத் தாணிதைத்தேன்

        மாயக் கனிபறித்தேன்

                வன்கொலைக்குள் ளாக்கிவைத்தேன்.

138.        நன்றி மறந்தே

                னலமிழந்தே னாதனரு

        ளொன்று முணரா

                துயர்நிலையை விட்டேனே.

139.        நின்றநிலை மைகெட்டே

                னீதிவழி யைக்கடந்தே

        னென்றைக்கும் வாழ்ந்திருக்கு

                மேதனிலக் காணிவிட்டேன்.

140.        நாலுவர மிழந்தே

                னன்மையெல்லாம் போக்கடித்தேன்

        சீலமிகுஞ் சிங்காரச்

                செல்வ வனமிழந்தேன்.

141.        சீவ னிழந்தேன்

                றிடனிழந்தேன் பொல்லாத

        பாவி நரக

                பயங்கரத்துக் குள்ளானேன்.

142.        ஏதன் மலையு

                மீரிரண்டு மாநதியும்

        நாத னுறவும்

                நடுத்தோட்ட வாழ்வுமற்றேன்.

143.        சாகா நிலைமையற்றேன்

                சாதி வலமையற்றேன்

        வாகான தேவ

                மகிமையற்றேன் சாயலற்றேன்.

144.        செய்யமலர்க் காவைவிட்டேன்

                சீவவிரு ஷத்தைவிட்டேன்

        ஐயனரு ளைவிட்டே

                னப்பானா னேதைவிடேன்.

145.        தோட்டச் சுதந்தரமுஞ்

                சுத்தமனச் சாட்சியும்போய்க்

        காட்டும னுதியுமாய்க்

                கன்மனதி யுமானேன்.

146.        தின்ற கனியாலே

                தீபாவி யானதல்லா

        லன்றுமுதற் றேவகோ

                பாக்கினைக்கு முள்ளானேன்.

147.        கட்டளை மீறினதாற்

                கானகத்தி லேதுரத்தப்

        பட்டவதிப் பட்டுப்

                பரதபித்து நின்றேனே.

148.         ஈசனைப் போலாகி

                யிருக்க நினைத்ததற்கு

        நீசனைப் போலாகி

                நிந்தைகளுக் குள்ளானேன்.

149.        நெற்றி வெயர்வைவிழ

                நித்தியமும் பாடுபட்டுப்

        பற்றுந் துயரம்

                பலகவலைக் குள்ளானேன்.

150.        எண்ணத்தி னாலே

                யெதிராளி யாய்ப்போனேன்

        மண்ணுக்கு மண்ணாய்

                மகாபாவி யானேனே.

151.        பாவத்துக் காளாய்ப்

                பசாசுக் கடிமையுமாய்ச்

        சாபத்துக் காளாகிச்

                சத்துருவு மானேனே.

152.        கோமானை மாலையிட்டுக்

                கொண்டானை வானுலகச்

        சீமானை விட்டகன்ற

                சீர்கேடி யானேனே.

153.        கத்தாவை யன்பாகக்

                கைப்பிடித்த மெஞ்ஞானப்

        பத்தாவைக் கொன்ற

                படுநீலி யானேனே.

154.        அன்பிற் குரியானை

                யாற்றும சினேகிதனை

        யென்பிராண நாயகனை

                யெண்ணாமற் போனேனே.

155.        பாவலனைத் தாவீது

                பாத்திபனைப் பட்சமுள்ள

        காவலனைக் கொன்ற

                கனபாவி யானேனே.

156.        நன்மார்க்கத் தூடழைத்த

                நாயகனை விட்டகன்று

        சன்மார்க்க மற்றுத்

                தனிமார்க்க மானேனே.

157.        நற்குணமும் நற்பணிவும்

                நற்புகழு மில்லாமற்

        றுற்குணமே மேலான

                துற்சீவி யானேனே.

158.        நிதக்கிருபை செய்தானை

                நெஞ்சகத்தே யெண்ணாம

        லதக்கிரமங் கொண்டமுழு

                வாங்காரி யானேனே.

159.        பற்றுந் துயரமெல்லாம்

                பாழ்க்கடித்த வானாட்டுக்

        கொற்றவனைக் கொன்ற

                கொடுசூரி யானேனே.

160.        கற்பனையால் வந்த

                கடாட்சக் கணவனுக்குச்

        சற்பனையே செய்த

                சதிகாரி யானேனே.

11. விண்ணப்பம்

161.        ஆண்ட பரப்பொருளே

                அக்கிரமத் தைப்பொறுத்து

        நீண்டதய வாயுமக்கு

                நேமித்துக் கொள்ளீரோ.

162.        தந்தை மகனைத்

                தடுத்தாண்டு கொண்டதுபோ

        லெந்தனையும் நோக்கி

                யிரட்சித்துக் கொள்ளீரோ.

163.        பாவிகளை மீட்கவந்த

                பக்கிஷமே மெய்யான

        சீவனே யென்வினையுந்

                தீர்த்துவிட வொண்ணாதோ.

        

164.        துன்பேத மெல்லாந்

                தொலைத்தெனையா சீர்வதித்தா

        னின்பாதத் தன்புவைத்து

                நித்தியமும் போற்றேனோ.

165.        ஆயத்த னைத்து

                மகற்றியெனை யாதரித்தால்

        மாபத்தி பாலுன்

                மலர்ப்பதத்தைப் போற்றேனோ.

166.        பாருந் திருக்கண்ணாற்

                பார்த்தெனது பாவமெல்லாந்

        தீரு மனுக்கிரகஞ்

                செய்யுமே சையாவே.

167.        கைதூக்கிப் பாவியெனைக்

                காத்திரட்சித் தாண்டருளுந்

        துய்யாவு மக்கனந்த

                தோத்திரசங் கீர்த்தனமே.

168.        தஞ்சை முதலான

                சகல திருச்சபையும்

        எஞ்சலிலா தேசுவுக்கு

                னெந்நாளும் வாழியதே.

12. பிரலாப ஒப்பாரி

அளவு

169.        தேவச காயன்சேயன்

                செய்யதிரு நெல்வேலி

        நாவலருஞ் சொல்வேத

                நாயகன் பாடலதே.

170.        முன்னவனா ராயிரத்தெண்

                ணூற்றுமுப்பா னாலாண்டிற்

        சொன்ன பிரலாபத்

                துயரமிகு மொப்பாரி.

171.        ஓதும் பிரலாப

                வொப்பாரி யாண்டகைமே

        னூதனமாய்ச் சொன்னகண்ணி

                நூற்றெழுபத் தொன்றாமே.

முற்றும்

கவனிப்பு:-  இஃது ஒப்பாரி ஒழுங்காய்ப் பாடப்பட்டது. காதலாய்ப் பாட விரும்பினோருக்கு நிரையசைகளான 16 பாட்டிற் தளை தட்டும். அவைகளை இருபிறைக்குள் எழுதியிருக்கிறபடி பாடிக்கொள்க.

____________________

அநுபந்தம்

கிறிஸ்து எல்லாரிலும் எல்லாமாயிருக்கிற திருஷ்டாந்தம்

கொலோ. 3: 11

பிரலாப ஒப்பாரி

7. சிலுவை நடை

65-69 மட்டும்

பிரம, ஷத்திரிய, வைசிய, சூத்திரரென்ற நான்கு சாதியையுங் கிறிஸ்துவுக்கு உவமானமாகக் காட்டியது

65.        கள்ளன் விடுதலையாய்க்

காராள வங்கிஷத்து

வெள்ளன் கொலையாக

வேதன் விதிவசமோ.  எ-து.

இந்நூற் சொன்னோன் வெள்ளாளனென்ற காராள வங்கிஷமானதால் தன் சாதியைக் கிறிஸ்துவுக்கு முன்னர் ஸ்தாபித்தான்.

வெள்ளன், கவடற்றவன், சுத்தன். கள்ளன், கவடனென்றது போல ஆளன், ஆளுகிறவன். இப்பதவுரையின்படி வெள்ளாளன் பரிசுத்தமாய் ஆளுகிறவன். இவன் காராள வங்கிஷமென்றழைக்கப் படுகிறான்.

காராளன்=கார்மேகம், ஆளன்=ஆளுகிறவன். மேகத்தை ஆளுகிறவன். இவ்வாறே கிறிஸ்துவுங் காராளனாகிய வெள்ளாள னென்று காட்டிற்று.

1. காராளன் - மேகத்தை ஆளுகிறவன்.

உ-ம்

மேகத்தூணிலிருந்தார். யாத்.. 14 : 19. 24.

மேகத்தின் நடுவிலிருந்தார்.  யாத்.. 24 : 16.

மேகத்தில் ஏறிப்போனார் அப். 1 : 1

மேகத்தின்மேல் வருவார்  மத். 26 : 64.

2. காராள வங்கிஷம். பிதா எப்படியோ அப்படிக் குமாரன். குமாரன் எப்படியோ அப்படிப்பிதா. யாத் 40 : 34. மத். 17 : 5.

3. வெள்ளன், வெள்ளாளன்; கிறிஸ்து வெள்ளனென்கிற தற்கத்தாட்சியாக ஏரோதே அவருக்கு வெள்ளை வஸ்திரந் தரிப்பித்தான். லூக். 23 : 11. வெள்ளன் - பரிசுத்தன். ஏசா. 6 : 3. வெளி. 4 : 8.

அப்பால் பிரம, ஷத்திரிய, வைசிய, சூத்திரரென்ற சாதி வகுப்பின்படி போவோம்.

1. பிரம

66.        மூப்பான் றலைவன்

        முதன்மையா னெம்மையன்பாய்ப்

        பார்ப்பான் மடிய

        பரமன் விதிவசமோ.  எ-து.

பிரம-பிராமணன் அல்லது பார்ப்பான். இதின் முந்தின அர்த்தம்.

1. பிரமன், வேதமுடையவனென்றதுபோல் கிறிஸ்துவும் வேதன், வேதநாதன், வேதநாயக னென்றழைக்கப்படுகிறார். உ.ம்.

வேதங்கொடுத்தவர். யாத் 20. அதி.

சுவிசேஷங் கொடுத்தவர், போதிவித்தவர். மத்.4 : 17.  மாற் 16 : 15, 16.

2. பாப்பான் மூப்பும், குருவும், ஆசாரியனுமாயிருக்கிறது போல கிறிஸ்துவுமிருக்கிறார். மத். 23 : 10. யோவான் 13 : 13-14.  எபி.7 : 17.

பிரம-பாப்பான் அல்லது பார்ப்பான். இதினிரண்டாம் அர்த்தம்.

1. பார்ப்பான்-பார்க்கிறவன். உ.ம். இஸ்‌றாவேலை அல்லது நம்மை இரத்தத்திற் கடந்ததையும் அப்பால் நிருவாணமும் அம்மணமுமாயிருந்ததையும் பார்த்தவன். எசே. 16 : 6-8.

பெத்லகேங் குறவஞ்சி

பார்க்கு தந்தாலையேயென்ற தரு 1, 5, 6, 8, 10 பாட்டுக் காண்க.

2. ஷத்திரியன்

67.         சுத்திகரிப்போன்

        சுயாதிபதி சாலேமின்

        சத்திரியன் றாவீது

        சாகத்தீர்ப் பானானோ. எ-து.

ஷத்திரியன்-அரசன், வாளுடையவன், சுத்திகரிக்கிறவன், அறுக்கிறவன்.

கிறிஸ்து சாலேமின் ராசாவாகிய தாவீதுச் சத்திரியனாயிருக்கிறார்.  இவர் சுத்திகரிக்கிறார். அவருக்கு வாள் அல்லது பட்டையமுண்டு. வெளி. 1 : 16. அவர் சாதிகளை வெட்டிச் சங்கரிக்கிறார். வெளி. 19 : 15. அவர் சாதிகளை இருப்புக்கோலால் ஆளுகிறார். சங். 2 : 9. அவருக்கு வில்லு முண்டு. வெளி.6 : 2.

3. வைசியன்

68.        உசிதத் தயவா

        லுலகை வசமாக்கும்

        வசியர் குலப்பெருமான்

        வன்கொலைக்கு ளானானோ. எ-து.

வைசியனே வெள்ளாளன். இவன் பூவைசியன், தனவைசியன், கோவைசியனென்ற மூன்று வகுப்பானவன்.

1. பூவைசியன்-பூமியை உழுது பயிரிட்டு வசியப்படுத்துகின்றவன் அல்லது வளப்படுத்துகிறவன்.

கிறிஸ்து பூவைசியனாயிருக்கிறார்.  மத். 13 : 3-8. ஏசா. 5 : 1-4. ஏசா. 27 : 2,  3. மத். 21 : 33. மத். 20 : 1-6.

2.  தனவைசியன்-செட்டி, வியாபரம் பண்ணுகிறவன், தனத்தைக் காத்து வளப்படுத்துகிறவன்.

கிறிஸ்து தனவைசியனாயிருக்கிறார். மத். 25 : 15-30. லூக். 19 : 12-26. லூக். 7: 41-43. மத். 18 : 24-27. வெளி. 3 : 18.

செட்டியாருக்குத் தராசிருக்கிறதுபோல கிறிஸ்துவுக்குந் தராசிருக்கிறது. தானி. 5 : 27.

3. கோவைசியன்-ஆயன், இடையன், மேய்ப்பன், பசுக்காத்து வளப்படுத்துகிறவன் அல்லது மந்தை மேய்க்கிறவன். ஆட்டுமந்தை மேய்க்கிறவனுக்கு அதிகச் சிறப்பு. இடைக்காட்டார் பாடலைக் காண்க.

கிறிஸ்து மேய்ப்பனாயிருக்கிறார்.  ஏசா. 40 : 11. சங். 23 : 1. ஏசா. 34 : 23. யோவா. 10 : 11.

4. சூத்திரன்

69.        சாத்திர புராண

        சமஸ்தவே தாஷரத்தின்

        சூத்திரன் சாகத்

        துணிந்துமனங் கொண்டானோ.  எ-து.

சூத்திரன் பலவிதச் சூத்திரங்களையுந் தொழில்களையு முடையவன். பலவிதச் சாதி வகுப்பானவன்.

கிறிஸ்து சூத்திரனும் பலவிதத் தொழிலாளியுமாயிருக்கிறார்.

1.         சூத்திரரென்ற தொழிலாளிகளில் முந்தினவன் தச்சன். மத்.13 : 55.

        ஞானத் தச்சனாடகத்தில் வீடுகட்டினானேயென்ற தருவைக் காண்க.

2.        கொல்லன். ஏசா.54 : 16. கொல்லனுக்குச் சம்மட்டியுண்டு. ஏரே.23 : 29.

3.        தட்டான். மல்கி. 3 : 3.

4.        கன்னான். ஏசா 1 : 25

5.        கற்றச்சன் யாத்.32 : 16.

ஞானத்தச்சனாடகத்தில் கற்பலகை செய்தேனையாவென்ற தருவைக் காண்க. ஈங்கு பஞ்சாளத்தா ரைவர் வகுப்பும் ஒருமிக்க வந்தது கண்டுகொள்க.

அப்பால் பலவிதச் சாதிகள் வகுப்பின்படி.

1. வீடுகட்டுகிற கொல்லத்துக்காரன் அல்லது கொத்தன். ஏசா. 54 : 11 யோவா. 14 : 2, 3.

2. குயவன். ஏசா. 64 : 8. எரே.18 : 2-6.

3. குருவிக்காரன். மற்றது. ஆதி 2 : 19, 20.

4. வண்ணான். மல்கி. 3 : 2. ஏசா. 1 : 18.

உதாரணம் : முன்னோர் பாடல்

        நல்லருணை நாதர் நமைவருத்த னெஞ்சமே

        கொல்லவல்லப் பொல்லாக் குணம்போக்கமெல்ல

        மழுக்குவான் கூறைதனை மாறுபடவண்ணா

        னழுக்கு வாங்கற்கென்றறி.

5. சவரகன். ஏசா.7 : 20.

6. வைத்தியன். யாத் 15 : 26.

7. செம்மான். ஆதி. 3 : 21.

8. நிசவுகாரன். யாத். 25:40 ;  26 : 30. எபி. 8 : 5.

9. சவளிக்காரன். சீலை விற்கிறவன். வெளி. 3 : 18.

10. சுயம்பாகி. யோவா. 21 : 9. சுயம்பாகிக்கு அடுப்புண்டு. ஏசா.31 : 9.

11. பந்திவிசாரிப்புக்காரன். லூக். 12 : 37.

12. திராட்சப்பழரசமும் பாலும்  விற்கிறவன். ஏசா. 55 : 1.

13. தண்ணீர்ப் பந்தல்காரன். வெளி. 22 : 17.

14. கள்ளன். வெளி. 3 : 3.

15. செப்படி வித்தைக்காரன்.

அவன் தொழிலாவது

1. பாம்பாட்டுகிறது. யாத் 4 : 2-4. யாத் 7 : 9-12. எண்ணா.. 31 : 6-9.(?)

        வெண்கலச் சற்பம். 20-பாட்டு முதல் 24-மட்டுங் காண்க.

2. சலஸ்தம்பனம். அலைகளின் மேனடக்கிறது. யோபு.9 : 8 மத். 14 : 25.

3. கண்கட்டி வித்தை. லூக். 4 : 29, 31. லூக் 24 : 31.

4. வினோதம். கதவடைத்திருக்கையிலுள்ளாக நடுவே வந்து நிற்கிறது. யோவா. 20 : 19-26.

16.  வாத்தியக்காரன். யோபு. 38 : 7-31  35 : 10.

17. துடைப்பத்தாற் பொருக்குகிறவர்.  ஏசா. 14 : 22, 23.

18. உடைக்கிறவர்.  ஏசா. 30 : 14.

19. அறுக்கிறவன்,  பள்ளன்.  வெளி.  14 : 15.

20. வெட்டியான், வழியன். யோவா. 14 : 6.

அவனுக்குத் தூற்றுக்கூடையுண்டு. மத்.  3 : 12.

அவன் வீட்டிலே கன்றுக்குட்டி அடிக்கிற வழக்கம். லூக். 15 : 23.

அவன் றொழில் சவஅடக்கம்பண்ணுகிறது. 5 மோ. 34 : 5, 6.

21. ஐரோப்பிய ரெல்லாம் வெள்ளை மனுஷரென்று பெயர். கிறிஸ்துவும் வெள்ளையுஞ் சிவப்புமாயிருக்கிறார்.  உன். 5 : 10.

22. ஈந்தியரெல்லாங் கறுத்த மனுஷரென்றழைக்கப்படுகிறார்கள். கிறிஸ்துவும் பாடுபட்டதினாலே கன்னிக் கறுத்துப்போனார்.  உன். 5 : 14.

23. காப்பிரிகளுக்கு இச்சிக்கத்தக்க ரூபமில்லை.  அவ்வாறே கிறிஸ்துவுமானார்.  ஏசா. 53 : 2.

மற்றும் இப்படிக் காண்க.

இதினாலே கிறிஸ்து எல்லாச் சாதிகளுக்கும் பொதுவாய் மனுடவதாரம்பண்ணி எல்லாருக்கும் எல்லாமானுரென்பது சத்தியந்தானே.

__________________________