முன்னுரை
வேதநாயக சாஸ்திரியார் Fabricius ஐயர் மொழிபெயர்த்த German ஞானப்பாட்டுகளிருந்து கருத்துகளை எடுத்து எழுதி இருக்கிறார். ஆங்கில பாடல்கள் இசைக்கு ஏற்ப கீர்த்தனைகளை இயற்றி இருக்கிறார். தியாகராஜர் முதலியவர்களின் கீர்த்தனை இராகங்களையும் உபயோகித்து பாடல்களை எழுதி இருக்கிறார். பொதுப்பட கிறிஸ்து சபையின் பிரயோஜனத்திற்கென்று ஒவ்வொரு விசுவாசியின் பக்தி அப்பியாசத்திற்கும், வளர்ச்சிக்கும் தமிழ் மொழியில் மாணிக்கவாசகர் முதலியவர்கள் எழுதிய திருப்புகழ், விருத்தம், கழிநெடில் முதலிய இலக்கிய முறையில், தம்முடைய ஆழ்ந்த, உயர்ந்த ஆவிக்குரிய அனுபவங்களை தன்னுடைய ஜீவிய காலத்தின் நீண்ட பகுதியை உபயோகித்து, திருச்சபையின் பக்தி விருத்தியினால் தேவநாமம் மகிமைப்பட இந்நூலை இயற்றி பிரதிஷ்டை செய்திருக்கிறார். பூர்வ பக்திப் பாடல்களைப் படிப்பது புது இலக்கிய விருத்திக்கு அத்தியாவசியமாயிருக்கிறது. இதற்கு ஜெபமாலை மிகவும் பிரயோஜனமானது.
மெய்யான கடவுளை ஆராதித்து, எல்லாவற்றிற்கும் மேலான சத்தியத்தைத் தம்முடைய காவியங்களில் எழுதுவதே தனக்கு அமைந்த சிறப்பு என்று அறிவிக்கிறார். Dr. தேவநேசன் வே.சா.வின் சரித்திரத்தில், மாணிக்கவாசகரின் ‘திருவாசகம்’ முதலிய செய்யுட்களிலிருந்து சிலவற்றை எடுத்து, அதனோடு ‘ஜெபமாலை’ No.13 : 8 முதலிய கவிகளையும் No.6 : 3 முதயலியவைகளையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். ஜெபமாலையில் கருத்தும், இசைச் சுவையும், செய்யுட் சுவையும் மிகுந்துள்ளன. Internal rhyme – உள் எதுகை நிறையப் பெற்று ஆத்துமாவைக் கவர்ந்து கொள்ளை கொண்டு போகிறது என்று எடுத்துக் காட்டுகிறார்.
சில பாகங்கள் (உ-ம்) No.21 முதலியவை ‘வேதநூல் ஜெபங்கள்’ என்று சொல்லப்படும். இவைகளிலும் சொற்சுவை தெளிவாக வளருவதைக் காணலாம். (உ-ம்) 4 – ஆம் கவி
‘கருத்தனே நீரென் உதட்டினைத் திறவும்
கனதுதி என்றனாப் புரியும்’
No.2. ’கும்பிடுகிறேன் நான்’, No.31 ‘கொண்டாட்டு’ (உ-ம்)
‘சுந்தர சீவக்காவே திருமந்திர தேவக்கோவே’
இவை கும்மி இராகங்களோடு சேர்ந்தவை.
No. 23 ஜெபமாலை ‘பிறப்பின்பேரிலே’ பாடினது. பக்தி விநயமாகவும் பாடலாம். (உ-ம்) No.10, 13 கவிகள் உரக்க, அழுத்தமாக, கெம்பீரமாக, கட்டியம் முழக்கமாகவும் வழங்கலாம். No.10, 11 ‘அகப்பற்று’, ‘மன்றாட்டு’, உருக்கமாக பாடத்தக்கது.
No.6 ‘தேவஇலட்சணம்’ ஆசிரிய விருத்தங்களாக எழுதப்பட்டுள்ளது. ஆண்டவருக்குத் தகுந்த சிறப்பு மொழிகளால் தொடுக்கப்பட்டது. (உ-ம்) 8 ம் கவி:
‘துக்கத்தில் என் ஆறுதல்
வாழ்வில் என் களிப்பு
துன்பத்தில் எனதின்பம் நீ’
No.7 ‘தேவ சுபாவ மகிமை’யின் பேரிலே, உபயாயார்த்தமாக அதாவது ஒரே விதமான தொனியில் மற்றொரு அர்த்தங்கொண்டதாக எழுதப்பட்டது. இது ஒரு சிறந்த கவித் திறம். ஒவ்வொரு கவிக்கும் கீழே அர்த்தமும் கொடுத்திருக்கிறார்.
‘பொன்னாட்டவர்கள் வணங்கானே
பொன்னாட்டவர்கள் வணங்கானே’
பொன் (பொருள்) நாட்டமுள்ளவர்களால்ஆராதிக்கப்படாதவர்,வானாட்டார் வணங்கப் பெற்றவனே என்றவாறு அர்த்தங்கொள்ள வேண்டும். அர்த்தமும் நெடுகிலும் கொடுத்திருக்கிறார். No.14 பாவசங்கீர்த்தனம் ஆகும். “துணையில்லையே எனக்காதியாம் திருப்பாவா” என்ற கீர்த்தனையைப் பார்க்கிலும் இசையிலும், கருத்திலும் உருக்கமானது.(உ-ம்) No.10 கவி:
‘மறுதலித்து லோக வாழ்வு முழுதையும் வெறுக்கவும்
வானகத்தி னாசையால் மூவாசையை யொறுக்கவும்’
No. 4 எளிதாகப் பாடக்கூடியது. சொற்சுவையும் கருத்தும் நிறைந்தது.
‘திருவானொளிவே தெருளே பொருளே
தேவேகாவாவே
திரமே யுரமே வரமே பரமே
சீவாயே யோவா’
No. 25 நிந்தாஸ்துதி. “கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து வெட்கப்படேன். அவரையே அன்றி வேறொன்றையும் அறியேன்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறபடி கிறிஸ்துவின் தாழ்மையினூடே அவருடைய மகத்துவத்தையும், சிறுமையினூடே அவருடைய சிறப்பையும் விசுவாசி காணவேண்டும் என்று இவ்விதமான கவியையும் இயற்றி இருக்கிறார்.
இரண்டாங் காண்டம் 10ம் ஜெபமாலை ‘திருச்சபை ஊஞ்சல்’. இதில் கவிராயருடைய மனப்பான்மை, வேத அறிவு, தேவ துதி இவை பொங்கி வழிவதைக் காணலாம். உள்ளான அர்த்தத்தையும் அறிவது பிரயோஜனமாகும். கடைசி மூன்று கவிகளில் கிறிஸ்துவினால் அனுபவிக்கும் சந்தோஷங்களையும் சிறப்புகளையும் பாடியுள்ளார். 8, 9 ம், கவிகள்:
‘உண்டான நன்மையெல்லாம் நமக்குண்டாச்சு
உம்பரமும் அம்பரமும் நமக்கென்றாச்சு’
...........................................................................
‘யேசுவினால் மேன்மை பெற்றோம் கிருபை பெற்றோம்
இன்பமுறப் பரிசுத்தாவியையும் பெற்றோம்’
கிறிஸ்துவினால் மீட்கப்பட்டவர்கள் ஜெபமாலையை இசையோடும் ஆவியோடும் பாடி, பரவசமாகி ஆவியில் வளர்ந்து தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே எமது நம்பிக்கையும் விண்ணப்பமுமாகும்.
கடைசியாக இப்புத்தகத்தை அச்சிட முன்வந்து பதிப்பிக்க உதவி புரிந்த மாரநாதா அச்சக உரிமையாளர் கனம் D.Henry Joseph அவர்களுக்கு எம் நன்றி உரித்தாகும். அதோடு இதை அச்சிடபண உதவி புரிந்த உறவினருக்கும் எம் நன்றி.
தஞ்சாவூர்
ஜனவரி, 1974
இப்படிக்கு
வே. சேம் வேதநாயகம் சாஸ்திரியார்