1. பொற்புறு பரமானந்த
பூர்த்தியா னந்தவெள்ள
விற்பன ஞானசத்துவ
விமரிசைக் களவில்லாத
தற்பரா இஸ்பிரீத்துச்
சாந்துதற் சொயசொரூபா
அற்புதா பரிசுத்தாவி
அர்ச்சய தேவதேவே
பூர்த்தி = நிறைவு; விமரிசை = ஆராய்வு
2. காரணக் கருணாகாட்சிக்
கதிர்க்கொள் அக்கினிப்பிரகாசப்
பூரணக டாட்சதீட்ச
பூச்சியஅட் சயசற்சீலத்
தாரணத்தி ரித்துவத்துவ
சற்பிர சாதநீத
ஆரணப் பரிசுத்தாவி
அர்ச்சய தேவதேவே
பூச்சியம் = பூசித்தல்
3. பெரியமெய்த் தெய்வமான
பிதாச்சுத னிடநின்றெய்தி
உரியபா தகரைநீதி
உற்ப்பவித் திரமேசெய்து
தெரியநூன் முறையைக்காட்டித்
திடவசப் படுத்தித்தேற்றும்
அரியவா பரிசுத்தாவி
அர்ச்சய தேவதேவே
பவித்திரம் = சுத்தம்
4. மூவரில் ஒன்றதான
மூர்த்தியே முடிவில்லாத
சீவனே மனதுக்கான
திவியசஞ் சீவியேநற்
காவலே களிப்பேதுப்பே
கதித்தமெய்ப் பலனேகற்றோர்க்
காவலே பரிசுத்தாவி
அர்ச்சய தேவதேவே
மூர்த்தி = தேவன்
5. திருந்திய பரமநூலே
சேணகர்த் திறவுகோலே
வருந்திய அடியார்மாலே
மகிழ்ச்சியின் எண்ணைக்காலே
பொருந்திய ஞானப்பாலே
பொழிந்துதா பரியன்பாலே
அருந்தவப் பரிசுத்தாவி
அர்ச்சய தேவதேவே
மால் = ஆசை; கால் = வாய்க்கால்
6. சோதியே சுடரேமிக்க
துய்யதுப் பரவேசுத்த
நீதியே நெறியேஅன்பர்
நெஞ்சகத் துறைந்தவாழ்வே
ஓதியே உயர்வேயுண்மைக்
குண்மையே ஊழியூழிக்
காதியே பரிசுத்தாவி
அர்ச்சய தேவதேவே
ஓதி = அறிவு
7. சூட்சியே வேதாசாரத்
தொன்மையே சுகிர்தநன்மைக்
காட்சியே சீடர்சென்னிக்
கண்ணின்அக் கினியினாக்கே
மாட்சியே மனதுக்கெட்டா
வாய்மையே மகத்துவத்துக்
காட்சியே பரிசுத்தாவி
அர்ச்சய தேவதேவே
சென்னிக்கண் = தலையிடம்; ஆட்சி = உரிமை
8. மதுரமே யின்பமேவா
னிதியமே மதியமேநற்
புதியநூ தனமேமாளாப்
பொக்கிஷபக் கிஷமேஞானத்
துதியபி ஷேகமேநற்
சுப்பரி மளமேசொல்லுக்
கதியமே பரிசுத்தாவி
அர்ச்சய தேவதேவே
9. மனுப்பயிர் தழைக்கத்தாவும்
வானகப் பனியேகாற்றே
தினத்தினமெஞ் ஞானஊற்றே
சீவதண் ணீரேநேரே
கனத்ததேற் றரவேகாதற்
கருணைமா நதியேபாவிக்
கனுக்கிரகப் பரிசுத்தாவி
அர்ச்சய தேவதேவே
10. பத்தியே தெளிவேமோட்ச
பாதையின் துணையேபண்பே
முத்திமுத் திரையேவேத
முதல்நடு முடிவேஓங்குஞ்
சத்தியே மனதைமுற்றுந்
தான்குணப் படுத்தித்தேற்றும்
அத்தியா பரிசுத்தாவி
அர்ச்சய தேவதேவே
அத்தி = கடல்
11. போதமே இதமேமேலாம்
புத்தியோ சனையேபொற்பே
நாதமே சிதமேஞான
நன்மையே நலமேநட்பே
வேதநாய கனுக்கென்றும்
வெளிப்படு மெய்ப்புறாவே
ஆதமா பரிசுத்தாவி
அர்ச்சய தேவதேவே
ஜெபமாலை 9 வரை செய்யுள் 98