1. சீரிலங்கும் ஆதியானின் சேயனேஎன் னாயனே
தீயபாவ மாறவந்த தேவதேவ தேவனே
நேரிலங்கு ஞானமங்கை நேயனேச காயனே
நேர்மையான தீர்வைகூறும் நீதனேஅ தீதனே
பேரிலங்கு சத்தியத்தின் ராசனேபிர காசனே
பேதையான பாவியென்றன் பாடல்கேட்டி ரங்கியே
ஏரிலங்கு வானநாடர் பேறுதந்த ருளவென்
றேகனுக்கு ரைக்கவேணும் இயேசுநாத சுவாமியே
2. அத்தனேஅ னாதியே சுத்தஞான ரூபியே
அண்டபிண்டம் யாவையும் விண்டமெய்ப்பிர தாபியே
கத்தனேகிரு பாசனா சத்தியவேத வாசனா
கண்கொள்ளாத காட்சியே விண்கொள்ளாத சூட்சியே
நித்தனே ம கத்துவனே முத்தொழிற்றி ரித்துவனே
நீசனான பாவியென்றன் மாசறுத்த கற்றியே
இத்தரையி லேதயவு வைத்திரங்க வேணுமென்
றேகனுக்கு ரைக்கவேணும் இயேசுநாத சுவாமியே
3. மண்ணிலேப வத்தினால்உ தித்துவந்த பாவியான்
மதலையான நாள்துவக்கி வன்பிலேந டந்தநான்
கண்ணினாலே செய்தபாவம் எண்ணினாலு முடியுமோ
காதொடைம்பொ றிவினைக ணக்கினைக் கடந்ததே
புண்ணியம ணுத்துணைய தேனுமற்ற வஞ்சகப்
புலையனான பாவியான்பு ரிந்தரண்ட கங்களாம்
எண்ணிறந்த கோடிபாவ மும்பொறுத்தீ டேற்றவென்
றேகனுக்கு ரைக்கவேணும் இயேசுநாத சுவாமியே
4. அங்கமுங்கி மங்கியேஅ லைக்கழிந்த பாவியான்
ஆசையிச்சை லட்சையின்அ கந்தைமிஞ்சு கன்மியான்
பெண்கள்சங்க வாஞ்சையிற்றி ரிந்தெனின்பெ ருமையால்
பெத்தரிக்கம் பேசியேபெ ரியவர்த மக்குமுன்
சங்கைசெய்து கீழ்ப்படிந்த டக்கமாயி ராதநான்
சாண்குழிபி ழைக்கவெகு தப்பறைகள் சொல்லியே
எங்கணும்வி னைபுரிந்த கேடனுக்கி ரங்கவென்
றேகனுக்கு ரைக்கவேணும் இயேசுநாத சுவாமியே
5. பொன்னைநாடு மாசையும் பொருளைநாடு மாசையும்
பூமிதேடு மாசையுஞ் சீமைதேடு மாசையுங்
கன்னிமாத ராசையுங் காமலீலை யாசையுங்
கட்புலன்க ளைந்ததின்க ணக்கில்லாத ஆசையும்
மின்னுமாடை யாடுமாடு வீடுவாச லாசையும்
மிக்கதந்தை தாயராசை மக்கள்பெந்தி னாசையும்
என்னையெண்ணும் ஆசையும்இ கழ்ந்தியான்பி ழைக்கவென்
றேகனுக்கு ரைக்கவேணும் இயேசுநாத சுவாமியே
6. வஞ்சமிஞ்சு பஞ்சபாவி நெஞ்சிலன்பி லாதவன்
வானவனு ரைத்தபத்து மறைதனைம றுத்தவன்
தஞ்சமென்ற டைந்தபேரைத் தள்ளிவிட்ட பாதகன்
தன்மநீதி ஞாயமுந்த வத்தையும றந்தவன்
அஞ்சலென்று னைப்பணிந்தி டாததுர்க்கு ணன்றனை
அக்கினிக்க டற்படுத்தி ஆக்கினையி டாமலே
எஞ்சலன்றி முற்றினும்இ ரங்கவேணு மென்பதா
யேகனுக்கு ரைக்கவேணும் இயேசுநாத சுவாமியே
7. மண்டலத்தில் மகதலாம ரிபவம கற்றினீர்
வலதுகள்ள னுக்கிரக்கம் வைத்துமே வழுத்தினீர்
கண்டுதிமிர் வாதரோகி கன்மபாவ மாற்றினீர்
கண்ணூறச்சீ மோனையுங்க டாட்சம்வைத்து நோக்கினீர்
தொண்டர்துன்பம் யாவையுந்து யர்க்குருசி லேற்றினீர்
சொல்லுதற்க தீததீத துய்யதுய்ய துய்யனே
எண்டிசைக்கு ளென்பவத்தை யும்பொறுத்தி ரங்கவென்
றேகனுக்கு ரைக்கவேணும் இயேசுநாத சுவாமியே
8. தந்தைதாயி றந்தனர் பெந்துளோரி றந்தனர்
தரணிமன்னர் மாண்டனர் சகலபேரு மாண்டனர்
இந்தலோக சங்கடத்தில் ஆரிருந்து வாழ்ந்தனர்
ஏழையானும் வீயுநாள தின்றுநாளை யென்றிலை
விந்தையான மாயவாழ்வை அந்தமாக நாடியே
வீணிலேய லைந்துழன்று தீயிலேவி ழாமலே
எந்தநாளு மென்றனக்கி ரங்கியாத ரிக்கவென்
றேகனுக்கு ரைக்கவேணும் இயேசுநாத சுவாமியே
9. ஆரிருந்து மாவதென் தாயிருந்து மாவதென்
ஆனைசேனை யோடுகூடும் வாழ்விருந்து மாவதென்
பாரிருந்து மாவதென் ஊரிருந்து மாவதென்
பாவியாவி போகுநேரம் ஈதுவந்து தவுமோ
வேரிருந்த மூலநாடி ஊடழிந்து வீழ்ந்துமே
மேனியெங்கும் ரோகமுண்டு வேதனிட்ட தீர்வையால்
ஏரிருந்த ஜீவனாவி கூடுவிட்டு தங்குமுன்
ஏகனுக்கு ரைக்கவேணும் யேசுநாத சுவாமியே
10. மறுதலித்து லோகவாழ்வு முழுதையும்வெ றுக்கவும்
வானகத்தி னாசையால்மூ வாசையையொ றுக்கவும்
உறுதியுற்று வேதசத்தி யத்திலேயி ருக்கவும்
உண்மையோடு சீவன்மட்டும் நன்மையாய்ந டக்கவும்
பொறுதிவைத்து வந்ததுன்பங் களையறச்ச கிக்கவும்
புண்ணியவ ழியிலூன்றி விண்ணிலேறி வாழ்கவும்
இருதயத்தி லேசெபத்தின் ஆவியைய ளிக்கவென்
றேகனுக்கு ரைக்கவேணும் யேசுநாத சுவாமியே
11. ஆதியேவை செய்தபாவம் அகலவந்த தந்தையே
அவனிமீது மனுடனாக அவதரித்த விந்தையே
தூதர்சேனை பாடியாடு தோத்திரக்கரு ணாகரா
சோதியேஅ னாதியே தூயதற்ப ராபரா
வேதநாய கன்சொல்பாவின் மேலுலாவும் ஈசனே
மிக்கபாவ நாசனா பக்கிஷக்கிரு பாசனா
ஏதமன்றி வாழ்கவுன்ற னீதிகொண்டெ னைப்புரந்
தேகனுக்கு ரைக்கவேணும் யேசுநாத சுவாமியே
ஜெபமாலை 14 வரை செய்யுள் 155