ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

4. ஜெபமாலை

முச்சத்துருநாசம்

1. மதியேகன நிதியேயுயிர் வழியேதிரு விழியே
மறையோர்தரு புகழேயுனை மனமீதணு வளவே
பதியாதிரு வினைமேவிய பழிகாரனை யுடனே
படுதீநர கிடுகாதருள் பரிவா யிஸரலையே
சதியாயம ரிடவேவரு தனசூரியர் படையே
தடுமாறிட அனல்வாசிக டளவாய்வரு மதிரால்
அதிநூதன மளிகாரண வரசேயெனி னுடனே
அமராடுவர் படநீசம ரமராய்திரித் துவமே

இருவினை = நல்வினை, தீவினை; அனல்வாசி = அக்கினிக்குதிரை

2 இரா. 7: 6,7

2. நானோவிது நாளாயெனை நானேயுண ராதே
நாய்போல்அலை வானேனுனின் ஞானாகம நூன்மேல்
ஏனோநினை வாகாவிதம் ஏனோவொரு நேரால்
ஏகாவுனை யோதாததும் ஏனோஅறி யேனே
கானானிய ரேபூசிய ரேமோரிய ரோடேழ்
கால்சாதிகள் வீறாரிட வேபோரிடு சூரா
சீனாமலை நாதாமறை வேதாதிற லாலே
தீயோரெனை யாளாதெதிர் தேவேதிரித் துவமே

கால்சாதிகள் = காலனானசாதிகள்

யாத். 34:11

3 அலையொத்திடு துயருட்படு மசதிக்குண னெனையே,
அளவற்றிடு மகிமைப்பொறை அருளிட்டதி சயமாய்
நிலையொத்திடு முயர்சத்திய நெறிபற்றிய படியே
நிருபித்திடு கருணைக்கட லெனுநித்திய நிருபா
மலையொத்தெழு புயமுக்கிய வளமைச்சுப சிமசோன்
வருபற்பல நரியைக்கொடு வினையிட்டொரு மனதா
யுலையொத்தெழு படையிற்சக சரமக்களி னுயிர்போம்
உயர்வெற்றிகள் செயவற்புதம் ஒளிர்மெய்த்திருத் துவமே

சகசரமக்கள் = ஆயிரம்பேர்

நியா.15:8

4. நீயித்தனை யாய்மெத்தவு நேயப்பரி வாலே
நேமத்தொடு வேதக்கலை நீதிப்புகன் மேலா
வாய்நித்தியம் ஓதக்குரு மாரைத்தர லானாய்
மாடொற்றிய கோலைக்கொடு வாய்மைச் சமிகார்தா
னாயொப்பன வேகத்தறு நூறிச்சையு ளாரை
நாடிப்பொரு தேயெற்றிட மாலைத்தரு நாதா
தீயுக்கிர ரூபத்தொடு சீறித்திரி வோர்க
டீமைச்செயன் மாயக்கெடு தேவத்திரித் துவமே

மாடொற்றிய கோல் = மாட்டாங்கோல்

நியா. 3:31

5. தினமும்பய முறவெங்கலி திமிலங்கொடுவரவுந்
திறமுந்திட வுரமும்பல செயலுங்குல நலமுங்
கனமுங்கனி வுரையும்பெறு கலையும்பறி படுமென்
கதையின்புகல் சொலமண்டிய கடலுங்கொள வரிதுன்
சனமஞ்சிட வெதிரும்படி பொருதுந்தனு சனைமுன்
றவிதுங்கவு ணதுவுங்கொடு சமரஞ்செயு மதிசம்
பனமும்பல வரமுந்தரு பதம்வந்தனன் அடியேன்
பகைவஞ்சக ரிடுநிந்தனை பகலுந்திரித் துவமே

தனுசனை = வில்லனை; பகலும் = ஒழித்துவிடும்

1 சாமு. 17:49

6. பீடும்புலை நாவும்பெறு பேய்கொண்டவர் வேடம்
பேசும்புவி ஞானபல பேதங்களை யானுங்
கூடுஞ்செய லாய்நம்பியு மோசங்கொடி தாமுன்
கூறுந்தய வாலும்பல மாய்வந்தருள் கூர்முன்
சாடும்படி யாய்நின்றெதிர் சாருஞ்சிசெ ராவின்
றாயுந்துணை யாளுந்துயர் தாவும்படி கீதம்
பாடும்படி யோர்பெண்டரு பாவின்புகல் போலும்
பாரும்தயை கூறும்பகை தீருந்திரித் துவமே

நியா. 4:21; 22: 5,28

7. எத்தாலுல கத்தாரொரி டக்காகந டப்பார்
எப்போதுமி கற்போகமி ருக்காதவ ரிற்றே
செத்தால்அவர் பற்றாசையை நற்றார்செய லுற்றார்
சிச்சீயென வப்பாலில்எ டுப்பார்தி ரிப்புக்கோ
பித்தாய்நிலை யுற்றேனிது பெற்றாயருள் பற்றாய்
பெட்பாலட லொட்டார்கள்பி னிட்டோடநி னைத்தே
ஒத்தூடுயர் நற்கீதைய னுக்கோதின தைப்போல்
ஒத்தாசையெ னக்காதர வொப்பாய்திரித் துவமே

பெட்பு = ஆசை; அடல் = புயத்தம்; ஒட்டர் = பகைவர்

நியா. 6:14-16

8. காற்றுப்பட மாற்றப்படு காட்டுச்சர மாக்கிக்
காட்டிப்பய மூட்டிப்பல காட்சிக்கென வாட்டிக்
கூற்றுக்கொளு பேய்க்குப்பிணி நோய்க்குக்குலை நாய்க்குக்
கோட்சொற்றுவர் வாய்க்குக்கொடு தீக்குத்திட நீக்கித்
தோற்றத்துயர் போக்கித்தொழு வோர்க்குச்சுப மாக்கிச்
சூட்சத்தெலி யாச்சற்றொரு தூற்றத்தழல் வீழ்த்திச்
சீற்றப்பரர் கூட்டத்தினை நீற்றுப்பலி தேக்கித்
தீழ்ப்பீட்டத மார்க்கர்க்கிடு தேற்றத்திரித் துவமே

சரம் = நாணல்

2 இரா. 1:9-12

9. தக்கும்புகழ் மெய்க்கும்புல வர்க்குந்தலை வர்க்கும்
சற்றும்பய மற்றுங்கன தர்க்கங்களை யிட்டுஞ்
சிக்குஞ்சதி யிற்றந்துசெ ருக்குங்கய வர்க்குஞ்
செப்பும்புலை ஞர்க்குந்திரு டர்க்குஞ்சிறை யுற்றுந்
துக்கந்தவிர்த் துப்பின்கழ லைக்கொண்டனெ னக்குஞ்
சொற்றத்தரு ணற்சந்திர னுக்குஞ்சுட ருக்கும்
பக்கங்களி னிற்கும்படி வைத்தங்கருள் வெற்றம்
பட்சங்களு மிட்டன்புரை பற்றுந்திரித் துவமே

யோசு.10:12,14

10. பந்தந்திக ழும்பெண்களி னின்பம்பழு தென்றும்
பங்கம்புவி யெங்கும்பல துன்பங்கள தென்றுந்
தொந்தந்திக ழும்புன்கடி தொண்டன்புற நின்றுந்
துன்பஞ்செயு மென்றுந்துயர் கொண்டும்பதம் வந்தன்
சந்தந்திகழ் துங்கன்றவி தின்பங்கிலி ருந்துஞ்
சண்டம்புரி வண்டன்சவுன் மங்கும்படி கொன்றுங்
கந்தந்திகழ் பொன்செந்தமிழ் கஞ்சன்சொல வென்றுங்
கம்பஞ்செறி தம்பங்கொடு சண்டுந்திரித் துவமே

1 சாமு. 31:2-5

11. எல்லைப்பதி னிருசீடர்கள் சொல்லைப்பதி யாதார்
எள்ளத்தனை யெனுமாவலின் உள்ளத்துரு காதார்
வெல்லைப்பதி தனின்மேவெரு செல்லைப்பதி மீதே
வெய்யப்பதி தர்கள்போலொரு பொய்யைப்பதி வார்கள்
கல்லைப்பதி விடைதாவிய புல்லைப்பதி விடையார்
கள்ளப்பதி யலவானுறும் வள்ளற்பதி யலவோ
நெல்லைப்பதி தனினீடிய செல்லக்கவி யானே
ஞெள்ளற்படி இறைபாடின னுள்ளத்திரித் துவமே

ஞெள்ளற்படி = மேன்மைப்படி

2.கா. ஜெபமாலை 4 வரை செய்யுள் 70

Table of contents

previous page start next page