1. ஆதியு மந்தமு மில்லாய் சரணம்
அதுமுன் னதுமுன் அதுமுன் சரணம்
அல்பா வோமே காவே சரணம்
அடியே நடுவே முடிவே சரணஞ்
சாதிச னங்க ளில்லாய் சரணந்
தானா வானா ஞானா சரணஞ்
சருவ வியாபி சருவவல் லவனே
சரணஞ் சருவே சுரனே சரண
மாதர்கள் மைந்தர்க ளில்லாய் சரண
மனுடவ தாரகு மாரா சரண
மாசில் லாத மணியே சரண
மன்னா பொன்னா மின்னா சரணம்
ஏத மேது மில்லாய் சரணம்
இறையே நிறையே பொறையே சரணம்
எனை மீண்டவனே யெனை யாண்டவனே
யேசு நாதா சரணஞ் சரணம்
2. சத்திய வேதத் தொளிவே போற்றி
சயமே நயமே மயமே போற்றி
தன்முன் னொன்று மில்லாய் போற்றி
சற்குரு ஞானச் சாமி போற்றி
பத்துரை வேதப் பொருளே போற்றி
பரனே கிருபா கரனே போற்றி
பரமும் புவியும் பாதலம் யாவும்
பணியப் பெருமை பெற்றாய் போற்றி
சுத்த திருச்சுவி சேடா போற்றி
தோன்றுஞ் சபையின் றுணைவா போற்றி
சொல்லும் புகழுக் கேற்றாய் போற்றி
துங்கா புங்கா சங்கா போற்றி
யெத்திசை யோரும் ஈடே றிடவே
யிரட்சக னாக வந்தாய் போற்றி
யெனை மீண்டவனே யெனை யாண்டவனே
யேசு நாதா போற்றி போற்றி
3. ஊழியு முடியா தவனே சரணம்
ஒருவெண்
ணங்கி தரித்தாய் சரணம்
உயர்பொற் கச்சை யணிந்தாய் சரணம்
ஒளியோன்
பார்வைக் குயர்வான் சரணங்
காழெரி வன்னிக் கண்ணா சரணங்
கனசல
வொலியின் றொனியா சரணஞ்
காயு முலையின் சொகுசா வொத்த
காலா சீலா
ஞாலா சரணஞ்
சூழ்ந்திரு நற்கர மதிலே வேழு
சுடருடு வேந்திக்
கொண்டாய் சரணஞ்
சுற்றிய விருபுற முங்கூ ருளவாள்
தோன்றிய வாயா
தூயா சரணம்
ஏழு விளக்குத் தண்டா சரணம்
இணைபஞ் சுறைமிஞ் சகனே
சரணம்
எனை மீண்டவனே யெனை யாண்டவனே
ஏசு நாதா சரணஞ் சரணம்.
(வெளி. 1:12-16)
4. முந்திய பிந்திய எந்தாய் போற்றி
முதலுங் கடையு நீயே போற்றி
முச்சுட ரொன்றா மூர்த்தி போற்றி
முன்னா பின்னா கொன்னா போற்றி
சிந்த விறந்தும் எழுந்தாய் போற்றி
திருநடு விடவினம் வருவாய் போற்றி
தீ நரகம ரணங்களி னுடைய
திறவு கோலைக் கொண்டாய் போற்றி
சுந்தர சீவ விருட்ச்சக் கனியைச்
சுகமாய்த் தின்கத் தருவாய் போற்றி
சுற்று மிரண்டா மரணம்வ ராமற்
றுரிதாய்க் கிட்டிக் காப்பாய் போற்றி
யெந்தையு வந்துன் மகவா யெனைநீ
யென்று மேவல் கொள்வாய் போற்றி
யெனை மீண்டவனே யெனை யாண்டவனே
யேசு நாதா போற்றி போற்றி
5. ஆருந் திறவா தடைக்குஞ் சரணம்
அடைக்கா தெவருந் திறக்குஞ் சரணம்
அரசன் றவிதின் மைந்தா சரணம்
அன்னான் றிறவு கோலா சரணம்
நேருஞ் சத்திய நாதா சரணம்
நித்திய பரிசுத் தாவி சரணம்
நீதியி னுத்தம சாட்சி சரணம்
நிமலா விமலா வமலா சரணஞ்
சேருஞ் சிஷ்டிக் காதி சரணஞ்
சென்ன மனைத்துக் காமன் சரணந்
திருவுள மேயுன் றாளே சரணந்
தேவே கோவே பாவே சரணம்
ஏருந் திறமுஞ் சயமும் புகழும்
என்று மென்று முளனே சரணம்
எனை மீண்டவனே யெனை யாண்டவனே
ஏசு நாதா சரணஞ் சரணம்
6. அருமைக் குருவே திருவே போற்றி
யருவே யுருவே தருவே போற்றி
யற்புத ஞானக் கடலே போற்றி
யையா மெய்யா துய்யா போற்றி
யொருமெய்ப் பொருளே யருளே போற்றி
யுச்சித வுச்சித பட்சா போற்றி
யோங்கிய வானத் தொருவா போற்றி
யுன்னத வுன்னத மன்னா போற்றி
பெருமைப் பரனின் மகனே போற்றி
பெரியா யரியாய் தெரியாய் போற்றி
பேசிய வேதத் துரையே போற்றி
பெந்தா யெந்தாய் தந்தாய் போற்றி
யிருமைப் போதும் நீயே போற்றி
யிங்கு மங்கு மெங்கும் போற்றி
யெனை மீண்டவனே யெனை யாண்டவனே
யேசு நாதா போற்றி போற்றி
7. ஏழுடு வேந்திய கையா சரணம்
ஏழா வியையு முடையாய் சரணம்
ஏழு விளக்கி னிடையே சரணம்
ஏழ்மொழி குருசி லிசைத்தாய் சரணம்
ஏழு முத்திரை யாளா சரணம்
ஏழெக் காளத் தொனியா சரணம்
ஏழு குமுற லெழுதாய் சரணம்
ஏழு கோபக் கலையா சரணம்
ஏழு தூதர்க் கிறையே சரணம்
ஏழா நாளின் றேவா சரணம்
ஏழப் பத்தற் புதனே சரணம்
ஏழ்சா தியைமுன் கொன்றாய் சரணம்
ஏழு சபையி னிருபா சரணம்
ஏழ்மன் றாட்டைத் தருவாய் சரணம்
எனை மீண்டவனே யெனை யாண்டவனே
யேசு நாதா சரணஞ் சரணம்
வெளி. 2:1; 8:1,2; 3:1; 1:4; 4:5; 5:1; 10:3; 16:1
8. சருவே சுரனின் றேவா லயமாய்ச்
சமைத்தே யெனக்குள் ளிருப்பாய் போற்றி
தயவா யென்முன் ராப்போ சனமே
தான்செய் தருள வருவாய் போற்றி
திரமாய் பரனா லயம்விட் டேகாச்
செல்வித் தூணென் றாக்கும் போற்றி
திருநக ரின்பெயர் கடவுள ரின்பெயர்
சேர்த்துன் பெயருந் தீட்டாய்போற்றி
நரனென வென்னைச் செய்தாய் போற்றி
ஞான மனைத்துந் தருவாய் போற்றி
நல்வழி காட்டி நிற்பாய் போற்றி
நானே நீயென் றெண்ணும் போற்றி
யிருதய மீதிற் பரிசுத் தாவியின்
எல்லா வரமும் ஈவாய் போற்றி
எனை மீண்டவனே யெனை யாண்டவனே
யேசு நாதா போற்றி போற்றி
9. அளிப்பா யுன்னோ டுன்னா சனமே
அடியே னுட்கார்ந் திருக்கச் சரணம்
அழகிய வெண்ணிற யங்கிய திட்டே
அந்தா திக்குஞ் சொல்வாய் சரணம்
ஒளிப்பிட மன்னாத் தருவாய் சரணம்
உயர்வெண் கல்லொன் றருள்வாய் சரணம்
ஒருவரு மறியா நூதன நாமம்
ஒன்றிட் டென்னை யழைப்பாய் சரணங்
களிப்புட னாளச் சாதிகள் மேலே
கனவதி காரம் ஈவாய் சரணங்
கதிரொளி வீசும் விடிவெள் ளியையுங்
காரண மாகத் தருவாய் சரணம்
இளிப்பாய்ச் சீவ பொஸ்தகம் விட்டே
யென்பெயர் கிறுக்கிப் போடாய் சரணம்
எனை மீண்டவனே யெனையாண் டவனே
யேசு நாதா சரணஞ் சரணம்
(வெளி. 2:7,17, 26; 3:5,12, 21)
10. விண்ணதின் வாழ்வைத் தருவாய் போற்றி
வினைபல நீக்கி விடுவாய் போற்றி
வேதனை நோயைத் தீர்ப்பாய் போற்றி
வேளை யறிந்து வருவாய் போற்றி
மண்ணதின் வாழ்வும் பகுத்தாள் போற்றி
மன்றாட் டேழுங் கொடுத்தாள் போற்றி
மரண மதளவுங் காப்பாய் போற்றி
மறுமயி லுன்பால் வைப்பாய் போற்றி
கண்ணறி வொன்றுங் கழலதி ரண்டுங்
காயம தைந்துங் கருதாய் போற்றி
கவலைகள் மூன்றுங் கெடவிடு போற்றி
கதிப்பத நான்கும் பெறவருள் போற்றி
யெண்ணின வெண்ண முடிப்பாய் போற்றி
யென்பவம் யாவும் பொறுப்பாய் போற்றி
யெனை மீண்டவனே யெனை யாண்டவனே
யேசு நாதா போற்றி போற்றி
கண்ணறிவு = ஞானம்; கழல் = பாதம்;
கவலை மூன்று = மண், பெண், பொன்;
கதிப்பதம் நான்கு = மோட்சப்பதவி -
சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்
11. திருநெல் வேலித் தேவச காயன்
சேயென வென்னைச் செய்தாய் சரணஞ்
சிறியனை வேத நாயக னென்றே
சித்தத் தடிமை கொண்டாய் சரணந்
தருசெப மாலை முப்பத் தொன்றுந்
தயவாய் நித்தங் கேட்பாய் சரணந்
தாவீ தருளுஞ் சங்கீ தத்தைச்
சரியொத் திதையுங் கொள்வாய் சரணங்
குருமறை யோரும் பெரியவ ராருங்
கோவில் கடோறுஞ் சொல்லச் சரணங்
குவலய மெல்லா நின்னைப் பாடிக்
கொண்டே வாழ்கப் பண்ணுஞ் சரணம்
எருசலை யதிபா ஒருசரு வேசா
என்றூ ழிக்கும் நின்றாள் சரணம்
எனை மீண்டவனே யெனை யாண்டவனே
யேசு நாதா சரணஞ் சரணம்
ஜெபமாலை 1-க்கு செய்யுள் 11