ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

16. ஜெபமாலை

கிறிஸ்துவின் பாடுகளின் தேவாரம்

1. திருமனு டவதாரத்தை
விருத்தசே தனத்தையுன்றன்
அறியஞா னஸ்நானத்தை
அடைந்தசோ தனையைத்துன்பை
வருடமுப் பத்துமூன்றின்
வறுமையைஉ பவாசத்தை
இருதயத் தன்பைநோக்கி
இரங்குவா யேசுநாதா

2. சுந்தர ஒ லிவக்காவிற்
றூயவர் சூழ்கச்சென்றே
தந்தையம் பரனைநோக்கித்
தரையில்வீழ்ந் திறைஞ்சுநேரஞ்
சிந்திட உதிரவேர்வை
திகிலடைந்தாற் றுமம்நோக
எந்தைநீர் படுந்துன்பங்கண்
டிரங்குவா யேசுநாதா

3. முப்பது வெள்ளிக்காக
முத்தியால் யூதாசென்போன்
ஒப்புவித் திடஒன்னார்கள்
ஒருங்குடன் கரங்கள்பற்றிச்
சற்பனை யாகக்கட்டித்
தயங்கிட நடத்திச்சென்ற
இப்பெருந் துயரங்கண்டே
இரங்குவா யேசுநாதா

4. வஞ்சகன் அன்னாமுன்னும்
வன்குருக் காய்பாமுன்னுந்
தஞ்சமற் றவராய்நின்றோர்
தறுகணன் கன்னமீது
வெஞ்சினத் தறையநொந்து
மிகும்பொய்ச்சாட் சிகளினாலே
எஞ்சலற் றுறுந்துன்பங்கண்
டிரங்குவா யேசுநாதா

5. வல்லவன் சுதனானென்ற
வார்த்தையால் மரணத்தீர்ப்பிட்
டல்லினி லிகழ்ச்சிகூறி
யசங்கத மடித்துக்குத்திக்
துல்லிப முகத்திற்றுப்பித்
துயருற முக்காடிட்டே
எல்லையற் றிடுந்துன்பங்கண்
டிரங்குவா யேசுநாதா

6. விம்மியே சேவல்இரண்டு
தரம்விளிப் பதற்குமுன்ன
மும்முறை மறுத்தசீமோன்
றனைமுகம் நோக்கினாப்போற்
செம்மையற் றொழுகும்பொல்லாத்
தீயபா தகரேயான
எம்மையுந் திருக்கண்ணோக்கி
இரங்கு வாயேசுநாதா

7. நிந்தனை யாகக்கட்டி
நடத்திநிஷ் டூரமாகப்
பொந்தியுப் பிலாத்துவின்பாற்
பூரியர ளித்தபோது
வந்தவீங் கிஷையகோர
வாதைவன் முறைப்பட்டாலும்
எந்தைநீர் படுந்துன்பங்கண்
டிரங்குவா யேசுநாதா

8. பத்தியற் றெரோதேமன்னன்
ஆகடி யங்கள்பண்ணிப்
பித்தனென் றுரைத்துத்தன்ரா
ணுவத்துட னிகழ்ந்துபேசிச்
சுத்தவெண் கவசமிட்டுத்
தூஷணித்த னுப்பச்செய்த
இத்துரி தங்கண்ணோக்கி
இரங்குவா யேசுநாதா

9. மன்னும்வெண் ணுடையைமாற்றி
வாரினால் அடித்துத்தீயோர்
மின்னிய சகலாத்தங்கி
வேந்தனென் றிகழ்ந்துபோர்த்துப்
பின்னுமுண் முடியதிட்டுப்
பெலத்தொரு தடியாற்றாக்க
இன்னமும் படுந்துன்பங்கண்
டிரங்குவா யேசுநாதா

10. பாதகன் பரபாவோடு
பணிவுற நிறுத்தினாலும்
வேதியர் கனன்றுகூவிக்
கும்பையும் எடுத்துவிட்டு
வாதையின் மரணத்தாலே
வன்குரு சேற்றுமென்ற
ஏதமே பொறுத்தவண்ணம்
இரங்குவா யேசுநாதா

11. சேவகர் சேர்ந்துசொந்த
வஸ்திரஞ் சிறக்கச்சுட்டி
ஓவியச் சிலுவைதோண்மேற்
சுமத்தியுக் கிரத்தினோடு
சாவுறக் கொண்டுபோகுந்
நடத்தினிற் படுந்துன்பங்கண்
டேவையின் மக்களெம்மேல்
இரங்குவா யேசுநாதா

12. சிலுவையைச் சுமந்துசீமோன்
சிரேனைய னொருபாற்றாங்க
மெலிவினா னடந்துசெல்க
மெல்லியர் அழுதுநிற்கப்
பலநெறி யவர்கட்கோதிப்
பரதபித்த துபோலெம்மேல்
இலகும்நின் கருணைகூர்ந்தே
இரங்குவா யேசுநாதா

13. மள்ளர்கள் கொல்கதாவில்
வந்தபின் சிலுவைமீதில்
ஒள்ளிய கரங்கால்பற்றி
ஆணியா லுருவத்தைத்துக்
கள்ளர்கள் இருவர்தங்கள்
நடுவனிற் கடூரத்தேற்றி
எள்ளிய நிந்தைகண்டே
இரங்குவா யேசுநாதா

14. அவ்வழி யிற்செல்வோரும்
ஆரியர் தலைவமாருஞ்
சவ்வியக் கள்ளன்றானுந்
தறுகட்சே வகருமொய்த்துத்
திவ்விய அருளைச்சற்றுஞ்
சிந்தியா திகழ்ந்துசொன்ன
எவ்விதப் பழிச்சொல்லுங்கண்
டிரங்குவா யேசுநாதா

சவ்வியம் = இடப்பக்கம்; தறுகண் = வன்கண்

15. வாடியே ஆறாந்தாசு
துடங்கியொன் பதுமட்டாக
நீடிய துயராற்றாமல்
நெடுங்குரு சதனிற்றொங்கிப்
பாடுபட் டேழுவார்த்தை
பகர்ந்துகா டியுங்கொண்டாதிக்
கீடுசெய் திறத்தல்கண்டே
இரங்குவா யேசுநாதா

16. மரித்தபின் றிருவிலாவை
வஞ்சக னீட்டியாலே
திருத்தமாய்க் குத்தியீர்த்துத்
திறந்திடச் செந்நீர்நீரும்
பெருத்தெழ அடக்கப்பட்டுப்
பேறுதந் தெமைவானத்தில்
இருத்திட நினைத்தஅன்பால்
இரங்குவா யேசுநாதா

17. ஆதிமா னிடர்கள்செய்த
அகந்தையான் மனுடனாகிப்
பாதகம் அனைத்துந்தீர்க்கப்
பாடுபட் டுயிரைத்தந்து
வேதநா யகனும்வாழ்க
மிக்கநன் றியற்றினாப்போல்
ஏதுமற் றவரெம்மேலும்
இரங்குவா யேசுநாதா

ஜெபமாலை 16 வரை செய்யுள் 193

Table of contents

previous page start next page