ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

25. ஜெபமாலை

ஆத்துமப்பெண் நிந்தாஸ்துதி

கழிநெடில்

1. சீர்மிகும் பிதாவாம் ஒருபரா பரனின்
றிருச்சுத னெனத்திரித் துவத்தின்
றிவ்விய இரண்டாம் ஆளதாய்ச் சிறந்து
தேவனு மனுடனு மான
பேர்மிகுங் கிறிஸ்து மேசியா வேந்தைப்
பேதையோர் ஆற்றுமப் பெண்ணாள்
பேசிய நிந்தாஸ் துதிகளிற் சிலதைப்
பிரபலப் படுத்துதற் கிசைந்தேன்
நேர்மிகு மிசறா வேலையாண் டருளும்
நீதியின் அரசனென் பிரிய
நேசனா மாசைப் பிராணநா யகனீ
நீடியுன் வலதுபா ரிசத்தில்
ஏர்மிகும் ஒப்பீ ரினதுபொன் அணிந்தே
இலங்கிய அரசியான் சொலக்கேள்
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

சங். 45:10

நிந்தாஸ்துதி = நிந்தித்தல்போல் துதித்தல்

2. உன்றனின் செய்தி யான்அறிந் திலனோ
உடுப்பதற் கங்கியொன் றதனை
உவந்துசே வகர்தான் பீலிபோட் டெடுத்தார்
ஒன்றுமற் றம்மணத் திருந்தாய்
அந்தநா ளுனக்கோர் நடத்திலு மிடமற்
றயல்வனத் திடைவிடை யடையும்
அகத்தினிற் பிறந்தாய் மிடியினா லுனைப்புல்
லணையின்மேற் கிடத்தின ரன்றோ
கந்தையா லுன்னைப் பொதிந்ததும் அழுது
கதறிநீ பால்குடித் திருந்த
கவடமும் அறிவேன் றலைமுடி சாய்க்கக்
கழுமரத் திடமிருந் ததுவோ
எந்தையே யுனக்கோர் நீசவா கனந்தான்
இகுந்துனை ஆட்டுதோ ஐயா
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

3. அரசனெ ரோதே கொல்வனென் றஞ்சி
அகன்றெகிப் பத்தினை யடைந்தாய்
அர்கெலா வுக்காய்க் கலிலேயாப் புறங்கள்
அணுகியே நசரைய னானாய்
பரிவிலுன் மாதா பன்னிரு வயதிற்
பண்ணிய முனிவினாற் பரிந்து
பாங்குடன் முப்ப தாண்டள வாகப்
பணிந்தவர்க் கூழிய மிழைத்தாய்
ஒருவிசை தினநாற் பதுகொடும் வனத்தில்
உண்பதற் கன்றியு மிருந்தாய்
ஓங்கிய அத்தி மரம்படச் சபித்த
உபாயமும் அறிந்துதா னிருப்பேன்
இருதகை யதற்குச் சமாரியாப் பெண்பால்
எழும்புனற் கேட்டது மியல்போ
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

4. அப்பனோ தச்சன் தாயரோ வெளியகன்
னியாஸ்திரி சமுத்திரத் தணுகி
அடர்ந்துமீன் பிடிக்கும் வலையருன் சீடர்
ஆயமத் தேயுனக் கடுத்தோன்
ஒப்பியே வெட்டுக் கிளியோடு தேனை
உண்டொரா ரணியமே கிடந்தங்
கொட்டகத் தோலை உடுத்தவோ ரிருடி
உன்றன்முன் றூதனாய் வந்தோன்
செப்புபா விகளே உன்சிநே கிதர்கள்
தினச்செல விடுபவன் றிருடன்
சேட்டனா யிருந்தோன் அசத்தியக் காரன்
சின்னப்பன் கண்ணையுங் கெடுத்தாய்
இப்படிக் கொத்த கொள்ளையி லெனைநீ
எப்படித் தாங்குவாய் ஐயா
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

ஆரணியம்=காடு

5. நிசமதா யிசறா வேலுனின் மூத்த
நேரிழை யாமவள் உன்னை
நிகழ்ந்துபா காலோ டகந்தையே புரிந்தும்
நீயினும் அவடனை நேர்ந்தாய்
வசையிதை யறிந்தும் யூதவென் பவளு
மறுமுக நோக்கினள் அவளின்
வஞ்சகந் தனைநீ நெஞ்சில்வை யாது
மறுபடி அவளையே அழைத்தாய்
திசையெலாம் பேர்போய் வேசையாய்த் திரிந்த
திருடியாம் எழுமலைக் கள்ளி
தீங்கெலா மறிந்தும் நீயவ ளுக்கே
சேனைநாட் குணப்படக் கொடுத்தாய்
இசறவேல் யூதா ரோமியென் பவளோ
ஏற்றவ ருன்றனக் கையா
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

எழுமலை=ரோமாபுரி

6. முன்னுகத் தினில்யக் கோபினோ டேபோர்
மூட்டவுன் றன்னைமேற் கொண்டான்
முனையிதை யறிந்து நொண்டியா யவனை
முடக்கின தென்செய லையா
பின்னொரு காக்கை வண்டுமீன் கழுதை
பேசியுன் சித்தமே இயற்றப்
பெருமையா யெகிப்தில் ஒருபத்தற் புதத்தைப்
பேணின சேவகர் திறமு
மன்னிய புகழென் றெண்ணுவோ மானால்
மறையின்மோ சேயுட கோலை
மனுடரைக் கெடுத்த சர்ப்பமாய் மாற்று
மந்திர வித்தையைப் போலே
இன்னமுஞ் சிலதுண் டென்றுநீ என்னை
ஏய்ப்பதுங் கண்டனே யையா
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

7. வரையெனுஞ் சீனா வனமெலாம் அதிர
மறைதரும் போதொரு விலங்கும்
வரப்படா தெனவே வகுத்தநீ இங்கே
மாட்டின்முன் னிட்டியிற் படுத்தாய்
அரசனென் றிருந்துன் சனத்தினுக் கடர்ந்த
அவதியை நீக்குதற் கேலா
தாயிழை எஸ்தர் யூதரின் பெண்ஆ
காசுவேர்க் களித்தது மடவோ
தரைதனிற் சவுலுக் கஞ்சின விதமோ
சாமுவேல் பலியிடச் செல்லுந்
தகமைபிற் றவிதை அரசபி ஷேகந்
தாபியென் றதுசரி தானோ
எருசலை யறிய வெண்கவ சமதிட்
டெரோதேஏன் பயித்திய னென்றான்
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

முன்னிட்டி = விலங்குணா விடுந்தொட்டி அல்லது மிருகங்களுக்கிரையிடுமிடம்

8. அங்கொரு நாள்நீ அலைகட லதன்மேல்
அத்தராத் திரியினி னடந்தாய்
அடைத்ததோர் கதவும் அடைத்திருக் கையிலே
அர்ச்செயர் நடுவினில் வந்தாய்
மங்கிய துயரால் ஏகுசீ டர்களின்
மனக்கவ லைகளற வழுத்தி
மறுவுரு வாகக் காட்டிநீ மறைந்த
மாயம்ஆய்ந் தறிந்தவ ருண்டோ
தங்குமீன் வாயிற்கா லவரா கனைத்தான்
றராசினில் நிறுத்துவைத் தனையோ
தந்திர மிதைப்போல் அனந்தநீசெய்த
சமர்த்தெலாம் அறிந்துகேட் டிருப்பேன்
இங்கதை போலே என்னையு மருட்ட
எண்ணமோ இருக்கட்டு மையா
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

மத்.17:27

9. மதிமிகும் லாசர் மரித்தசொற் கேட்டு
மனத்தினிற் கவலையற் றவன்போன்
மறுத்துநாற் றினமே தாமதம் புரிந்த
வாய்மையி துன்மகத் துவமோ
சதிருடன் சீடர் காலினைக் கழுவித்
தன்கலை யாலேநீ துடைத்த
தாழ்மையோ கன்னத் தடித்தவன் றனக்குந்
தயவதாய் மறுமொழி கொடுத்தாய்
கதிமிகு முனைத்தான் பெற்றமா மரியாள்
கன்னியாஸ் திரியெனச் சொன்னாற்
காரண மிதுதான் றந்தை யிலாத
காலெனக் கேட்டவர் நகைப்பார்
இதுவெலா மிருக்கக் குருசினீர் பட்ட
இகழ்ச்சிகள் என்சொல்வே னையா
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

கால் = மகன்

10. நேசநீ எனைபோற் பிறந்துனை விருத்த
சேதனப் பட்டனை நிலத்தில்
நெடும்பவம் புரிந்த பாவிபோல் ஞானத்
தீட்சையும் பெற்றனை நினைந்தென்
மாசற வுனதாற் றுமஞ்சரீ ரத்தால்
வரையிலாப் பாடுபட் டுயர்ந்த
மரத்தினில் அறையுண் டிருந்தனை யானு
மண்ணினில் ஓர்விசை இறப்பேன்
காசினி தனினீ எழுந்தனை யானுங்
கடைசியில் எழுந்திருக் கேனோ
கடவுளின் வலத்தில் இருந்தனை யானுங்
கடவுளுன் வலத்தில்வந் திருப்பேன்
யேசுவென் றுனக்கு மாத்திரம் பெயரோ
யேசுசீ ராக்குக்கு மிருந்த
தொழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

11. தேவனென் றிருந்து மனுடனு மானாய்
சிஷ்டிகன் சிஷ்டியாய் போனாய்
சிங்கமோ மிருக நீயும்யூ தாவின்
சிங்கமென் றெடுத்தபேர் திறமோ
மேவிநீ ஆட்டுக் குட்டியே யானால்
மேய்ப்பதற் காவெங்கே கிடைக்கு
மேய்ப்பனீ யானாற் குட்டியு மாகும்
விதமுல கெங்கணுங் காணோங்
காவினீ சீவ விருட்சமே யானாற்
கனியுணும் பறவைகள் எவையோ
கண்டஎம் மவுவழிப் போக்கனீ யெனிலுங்
கவையிலை என்றுதா னிருந்தேன்
ஏவையின் மகள்நா னீயுமிஸ் திரிவித்
தெனக்குநீ மேன்மையாய் வாய்த்தாய்
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

12. கள்ளமற் றுனையே செபத்தினாற் பிடித்துக்
கருத்தினாற் சிலுவையில் அறைந்து
கால்கரத் தாணிக டாவிவைத் திருந்தாற்
கடந்துபோம் வழியுனக் கில்லை
வள்ளலே இதையுன் வல்லபத் தாலே
மாற்றுவா யென்றுதான் வைப்போ
மறுபடி யுனையென் மனத்தகத் தடைத்து
வைத்திருந் தாலெனை விட்டுத்
தள்ளிநீ போகும் இடமுனக் கேது
தரைபர மியாவுமென் னுடதே
சமுத்திரத் தினினீ தூங்கின கள்ளத்
தனமினி நடக்குமோ நடக்கா
எள்ளள வெனுமுன் றனைவிடுத் திருக்கேன்
இதுதிடம் என்னையா ளையா
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

மத். 8:24-26

13. அத்தனே யுனது மகத்துவந் தனையார்
அளவிடக் கூடுமுன் பெயரும்
அதிசய மானோன் உன்மனு டவதா
ரச்செய லண்டரா னவரும்
புத்தியிற் கிரகித் துணர்வதற் கரிதே
புகழ்ச்சியோ இகழ்ச்சியோ பேதை
போற்றிய நிந்தாஸ் துதியெலாங் கேட்டுப்
பொறுத்திரட் சியும்பரா பரனே
பித்தரும் படியா மடையருங் கல்விப்
பெருமைகொண் டவரும்வெவ் விதமாய்க்
பிதற்றுவார் மனதுக் கெட்டின படியே
பேசுவார் ஏசுவார் உன்னை
எத்தனை கோடி நிந்தையோ பட்டாய்
இதுமகா அதிசயப் பொருட்டோ
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

14. மகதலா வூரின் மரிபவம் பொறுத்தாய்
வஞ்சகர் இடறெலாம் ஒறுத்தாய்
வருதிமிர் வாதன் வல்வினை தீர்த்தாய்
மாதர்கள் அழுத்தாற்றி வித்தாய்
சகமதிற் கையுங் களவுமாய்க் கண்ட
தையலுக் காக்கினை தவிர்த்தாய்
தவறுசெய் கள்ளன் றனக்குரை கொடுத்தாய்
சந்தெகத் தோமையைச் சயித்தாய்
அகமதாய் மறுத்த பேதுரு தனையும்
அகற்றிடா திரங்கிரட் சித்தாய்
அஞ்சிய கானான் இஸ்திரிக் கிரங்கி
அவள்மனுப் படிசெய்தா தரித்தாய்
இகமெலாம் புரக்கச் சிலுவையின் மரித்தாய்
என்னையுங் காத்தரு ளையா
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே

யோவா. 8:11; மத். 15:28

15. [வேதநா யகன்மேல் வாமனை யெடுத்து
விட்டுவே டிக்கைள் பார்த்தாய்
மிக்கேலு முத்தவன்பெண் டீரையே கொண்டு
வியாகுலப் படுத்திவா தித்தாய்
சாதிக டனையும் உசுப்பிவிட் டனேகஞ்
சங்கடங் களையெலாம் விளைத்தாய்
சற்குணத் திருந்த பாக்கிய நாதன்
சதிசெய்வ தற்கிடங் கொடுத்தாய்
போதவே பகைத்த அடைக்கல த்தையர்
போரதி கரிக்கவே வைத்தாய்
புண்ணிய வானே எத்தனை வேடம்
போடுவாய் ஆடுவா யையா
ஈதெலாம் படுத்திக் கோபமா றினபின்
எழுப்பியா பத்தெலா முடித்தாய்
எழில்பெறு சீயோன் மகள்மண வாளா
இறைவனே யேசுநா யகனே]

ஜெபமாலை 25 வரை செய்யுள் 367

Table of contents

previous page start next page