ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

முகவுரை

இப்புஸ்தகம் ஐரோப்பியருடைய உன்னதமான பாடல்களாகிய பிரார்த்தனைப் புஸ்தகத்துக்கொப்பாய்ச் செய்யப்பட்டது.

இஃது நாடோறும் காலைமாலை ஜெபத்தில் ஜெபப்பிரமாணத்தைப்போல வழங்கப்பட்டு வருவதினால் இதற்கு ஜெபமாலையென்று பெயராயிற்று.

முதற்பாகத்திலே பிதா, சுதன், பரிசுத்தரூபியென்ற திரியேக பராபரனுடைய தேவசுபாவமகிமைகளையும், தேவலட்சணங்களையும், இரட்சிப்பின் கிரியைகளையும் விக்கிரக தேவர்களின் துன்மார்க்கங்களையும் மகிழ்ச்சியின் காலத்துக்கும், உபத்திரவ காலத்துக்கும், மரணகாலத்துக்கும், நித்தியத்துக்கும் அடுத்த சில தோத்திரங்களையும் சபையில் வழக்கமான பதினைந்துஜெபங்களையும், இலித்தானியாகிய சமுதாய விண்ணப்பங்களையும் தேவபக்திக்கடுத்த சில உபதேசங்களையும் பற்பல பாவினங்களாய்ப் பாடி அங்கங்கேஸ்தாபித்து நிதமொன்றாக மாதத்தின் முப்பத்தொரு தேதிக்குச் சரியான முப்பத்தொரு ஜெபமாலைகள் உண்டு.

இரண்டாம் பாகத்திலே பன்னிரண்டு விருத்தமாய்ப் பாடப்பட்ட பன்னிரண்டு இலக்க தோத்திரத்தில் வேதத்தின் பிரதான சங்கதிகள் எல்லாம் அடங்கியிருக்கும்.

குருக்கள் உபதேசிகள் முதல் வாத்திமார்மட்டும் மனப்பாடம் செய்திருந்தால் வேதாகமங்களிற் கேட்ட கேள்விக்கெல்லாம் ஏற்ற மறுமொழி கொடுக்கச் சமர்த்தராயிருப்பார்கள்.

பூர்வத்தில் தாவீது ஆசாப்பு முதலானவர்கள் பாடின சங்கீதங்களில் தங்கள் பெயரை நாட்டினது போல், இங்கேயும் ஜெபமாலைக்கு ஜெபமாலை அதின் அந்தத்தில் வேதநாயகன் தன்பெயரை நாட்டினான். அது பெருமையினால் அல்ல. கிருபாசனத்தின் நினைப்புக்கென்றும் இதைச்செய்தவன் இன்னானென்று விரும்பினோர் அறிந்துகொள்ளவுந்தானே. யாத். 28:9-12, 29.

இச்செபப் பிரமாணத்தை வாசிக்கிற கிறிஸ்துவின் அவயவங்களாகிய திருக்கூட்டங்களே! ஐரோப்பியருடைய தேவாராதனைத் திட்டங்களைக்காட்டுஞ் ஜெபப்பிரமாணத்துக்கு ஒப்பாக உங்களுக்கும் உங்கள் தேசாசாரத்தின்படி யாதொரு தேவாராதனைத் திட்டம் இருக்க வேண்டுமென்று சிந்தித்து வேதநாயக வேதசாஸ்திரி மிகுந்த கருத்தோடும் பிரயாசத்தோடும் 1810 முதல் 1855 மட்டுஞ்சென்ற 45 வருடக்காலத்தில் வருடாந்திரங் கொஞ்சம் இந்த ஜெபமாலையை உண்டுபண்ணி இப்போது உங்களுக்குக் காணிக்கையாக அனுப்பி, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின்பிள்ளைகளும் தன்னையுந் தன் பின்னடியாரையும் கர்த்தர் நிமித்தயமாக நினைக்கவும் சிநேகிக்கவும் மன்றாடிக் கொள்கிறான்.

சுவிசேடகவிராய
வேதநாயகசாஸ்திரி

Table of contents

previous page start next page