விருத்தம்
1. அகிலபுவ னங்களெல்லாம் அமைத்தார் வந்தார்
ஆதியிலே யிருந்தவார்த் தையுமே வந்தார்
சகலசரா சரங்களெல்லாந் தந்தார் வந்தார்
தானாக நின்றதயா பரனார் வந்தார்
புகலரிய வேதபோ தகனார் வந்தார்
பூரணசற் குணமிகுபுண் ணியனார் வந்தார்
உகமுடியு மூழிவரை நிற்பார் வந்தார்
உன்னதப்ப ராபரனே வந்தார் தாமே
2. அனைத்துலகங் காக்கும்அரு ளாளர் வந்தார்
அண்டமெல்லாம் படைத்திரட்சித் தாள்வார் வந்தார்
கனத்தபர மண்டலத்தின் கர்த்தா வந்தார்
காரணப்ப ராபரனார் மைந்தன் வந்தார்
தனைப்பலியாய்ப் படைத்துலகை மீட்டார் வந்தார்
தம்மையன்றித் தேவனில்லாச் சாமி வந்தார்
எனைக்கிருபை யாய்நோக்குங் கண்ணார் வந்தார்
இம்மானு வேலரசே வந்தார் தாமே
3. முத்திவழி காட்டுவிக்கு முன்னோன் வந்தார்
மூவுலகும் படைத்தளிக்கு முதல்வன் வந்தார்
சத்தியவே தத்தைவிரித் துரைக்க வந்தார்
சருவசீ வாற்றும தயாலு வந்தார்
பத்தருக்குப் பதநான்கும் பகுப்பார் வந்தார்
பரிசுத்த வேதபரி பாலன் வந்தார்
எத்திசையும் கொள்ளாத இறைவன் வந்தார்
இம்மானு வேலரசே வந்தார் தாமே
4. பொன்னுலகம் வீற்றிருக்கும் புகழார் வந்தார்
பூரணசற் குணபொறுமை யாளர் வந்தார்
தன்னிகரில் லாதசரு வேசன் வந்தார்
சத்தியவே தாந்தசாஸ் திரியார் வந்தார்
முன்னிருந்தார் பின்னிருந்தார் முடியார்வந்தார்
மூன்றாளு மொன்றான மூர்த்தி வந்தார்
இந்நிலத்துக் கொளிவுதிக்கும் எம்மான் வந்தார்
இம்மானு வேலரசே வந்தார் தாமே
5. ஆறிலக்க ணச்சொருப ஐயன் வந்தார்
ஆராலு மளவிடக்கூ டாதார் வந்தார்
பேறுதரும் பாக்கியசம் பன்னார் வந்தார்
பிசகாத சத்தியவா சகனார் வந்தார்
நூறுலட்சங் கோடிசங்கத் தலைவர் வந்தார்
நூதனபு ராதனநூ லாசான்வந்தார்
மாறுதலி லாதமகா தேவன் வந்தார்
மானுவேல் கிறிஸ்தரசே வந்தார் தாமே
6. ஓசையா உயிரையா ஒழியார் வந்தார்
உன்னதபத் திராசனத்தி லுயர்ந்தார் வந்தார்
ஆசையா அன்பையாஅருளாய் வந்தார்
அனாதிபிதா வின்சுதனா யாண்டார் வந்தார்
மேசையா நேசையா மெய்யாய் வந்தார்
மிக்காரும் ஒப்பாரு மில்லார் வந்தார்
யேசையா கிறிஸ்தையா இந்தோ வந்தார்
இம்மானு வேலரசே வந்தார் தாமே
7. ஒன்றுமில்லா ஊழிகா லத்தார் வந்தார்
ஒப்பில்லாப் பரமநா யகனார் வந்தார்
அன்றுமின்று மென்றுமிருப் பவரே வந்தார்
அர்ச்சயஅர்ச் சயப்பரிசுத் தாவி வந்தார்
நன்றறியார்க் கருள்புரியும் நாதன் வந்தார்
நாசரேத் துக்கலிலே நாட்டார் வந்தார்
வென்றிதரும் ஞானபோ தகனார் வந்தார்
மேசியா கிறிஸ்தரசே வந்தார் தாமே
8. மட்டளவில் லாதஒரே வஸ்து வந்தார்
வானவரெ லாம்வணங்கு மகத்துவன் வந்தார்
வெட்டவெளி யாயிருக்கும் விமலன் வந்தார்
வேதாந்த சித்தாந்த விநோதன் வந்தார்
கட்டழகர் கண்ணழகர் கதையாய் வந்தார்
கருணாக டாட்சம்வைத்துக் காக்க வந்தார்
எட்டியுமெட் டாதபரப் பொருளே வந்தார்
இம்மானு வேலரசே வந்தார் தாமே
9. நல்லவர்க்குந் தீயவர்க்கும் நடுவர் வந்தார்
நாட்டவர்க்குங் காட்டகர்க்கும் நட்பாய் வந்தார்
பல்லவர்க்கும் பாவிகட்கும் பரிவாய் வந்தார்
பத்தருக்குஞ் சுத்தருக்கும் பரிந்து வந்தார்
புல்லருக்கும் பொடியருக்கும் பொறுக்க வந்தார்
புரவலர்க்கு மிரவலர்க்கும் பொதுவார் வந்தார்
எல்லார்க்கும் ஏழையர்க்கும் இரங்க வந்தார்
இம்மானு வேலரசே வந்தார் தாமே
10. பாட்டகர்க்குப் பலனளிக்கும் பத்தா வந்தார்
பரவிகட்கெல் லாம்பாவ நாசர் வந்தார்
கேட்டவர்க்கு மோட்சகதி கிடைக்க வந்தார்
கெட்டவர்க்கெல் லாங்கிருபைக் கிறிஸ்து வந்தார்
மாட்டகத்தி னாட்டகத்தின் வடிவார் வந்தார்
மாறாத பெருங்கருணை வைத்தார் வந்தார்
ஏட்டகத்தி லென்னகத்தை யெழுதார் வந்தார்
இம்மானு வேலரசே வந்தார் தாமே
11. ஆகநாய கன்றிருச்சே யானார் வந்தார்
ஆபிரகா மைப்பெயரிட் டழைத்தார் வந்தார்
நீதநாய கன்றரும நிலையார் வந்தார்
நித்தியரா சாங்கநன்னி தானார் வந்தார்
போதநாய கன்பொறுமை யாளார் வந்தார்
புண்ணிய சொரூபபூ பதியே வந்தார்
வேதநாய கன்பாட்டுக் கட்டார் வந்தார்
மெய்யான கிறிஸ்தரசே வந்தார் தாமே