ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

21. ஜெபமாலை

சமுதாயவிண்ணப்பம்

கழிநெடில்

1. பொற்புறு வானும் பூமியும் அதனிற்
பொருந்துபற் பலபொருள் அனைத்தும்
புகழுடன் ஆறு தினமதில் அருளிப்
பொறைமிகக் காத்தருள் புரியும்
அற்புத னாதிப ரன்றிருப் புதல்வா
அருண்மிகுங் கிறிஸ்தி ரட்சகனே
அளவிலாச் சகல நன்மையின் கடலே
ஆண்டவா மேசியா அரசே
கற்புறுங் கிறிஸ்தோர் கூடிய வேதக்
களரியி னின்புக ழுரைக்கக்
கர்த்தனே யெனையுங் கேட்பவர் தமையுங்
காத்திரட் சித்தருள் புரிந்தே
விற்பனக் குருக்கள் சாஸ்திரி மார்கள்
வேந்தர்கள் துரைகண்மற் றெவரும்
வேதநா யகனென் பாடலுக் கிரங்க
மேன்மைசெய் யேசுநா யகனே

களரி=கூட்டம்

தேவலட்சணம்

2. சாற்றரும் பரம கடவுள்நீ தானாய்
அனாதியாய்ச் சரீரமில் லானாய்த்
தற்சுய சொரூப நித்திய பிதாவாய்ச்
சமஸ்தகா ரணதிரி முதலாய்த்
தோற்றரும் பரிசுத் தரூபியாய்த் தேவ
சுவாபலக் கணப்பகு திகளில்
துவக்கமு முடிவு மில்லனாய் மாறச்
சுயம்பதாய்ச் சருவவல் லவனாய்
ஆற்றிய தனைத்தும் அறிந்திருப் பவனாய்
அளவில்லா ஞானமுள் ளவனாய்
அனைத்துல கெங்கு நிறைவியா பகனாய்
அரியசத்தி யமுடைத் தவனாய்
மாற்றருந் தூய பரிசுத்த நீதி
மட்டிலாக் கிருபையோ டோங்கு
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

இலிற்றானி

3. சருவவல் லபத்தின் கிருபையின் பிதாவே
தமியன்யான் கெட்டஆ டதுபோற்
சத்திய வழிவிட் டேசித றுண்டு
தவித்தரும் வனாந்தரத் தலைந்தேன்
கெறுவமோ டெனது சுயவிரு தயத்தின்
கெட்டயோ சனைகள்ஆ சைகளைக்
கேடுறத் தொடர்ந்து நடந்துனி ன்றூய
கெழுமரைக் கெதிர்த்திடர் புரிந்தேன்
திறமையாய்ச் செயத்தக் கவைகளை நீவிச்
செயத்தகா தவைகளைப் புரிந்தேன்
தேவனே எனக்குட் சுகமது மில்லைச்
சிறியனுக் கிரங்குவா யையா
மறைதரும் பிதாவாய்ச் சுதனுமாய் பரிசுத்
தாவியும் ஒன்றதாய் வளர்ந்த
மகத்துவ தேவதிரி த்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

கெழு = பிரகாசம்; நீவல் = தட்டுதல்

4. கருத்தனே நீரென் உதட்டினைத் திறவுங்
கனதுதி என்றனாப் புரியுங்
கடாட்சம்வைத் தெனைத்தற் காக்கத்தீ விரித்துக்
கடுகவந் துதவியாய் நின்று
திருத்தமா யெனக்குன் இரக்கமே காட்டித்
திடவிரட் சிப்பையே அளித்துத்
தீவினைத் துயராற் கூப்பிடும் போதென்
சிறுமைகள் அனைத்தையுங் கேட்டு
விருத்தியாய்ச் சமாதா னத்தையே யளித்தெவ்
வேளையும் என்னையா தரிப்பாய்
மீண்டெனக் காகப் பரிந்துபோ ரிடுவோர்
வேறிலை யுனையலால் ஐயா
வருத்தியென் மனத்தைத் துப்பர வாக்கி
வசப்படு வதற்குன்ஆ வியைத்தா
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

5. பரமதா தாவே நிர்ப்பந்த மான
பாவியாம் என்றனுக் கிரங்கும்
பாதகன் யான்செய் குற்றமு முன்னோர்
பண்ணிய குற்றமு நினையாய்
தரும்பவங் களுக்குத் தக்கநீ தியையே
சரிக்கட்டா திருந்திரு வுளமாய்த்
தப்புவித் தெனையே இரக்கமாய் நடத்துந்
தாங்கலென் றைக்கும்வை யாதே
நிரம்பிய பொல்லாப் புகட்கும்கே டுகட்கும்
நேரிடும் பலபவங் களுக்கும்
நிந்தனைப் பேயின் சோதனை களுக்கும்
நீடுமோ சங்கள்யா வுக்கும்
வருமுன்னுக் கிரத்தி னித்தியாக் கினைக்கும்
வலிமையாய்க் காத்தரு ளையா
மகத்து தேவ திரித்துவப் பொருளே
மாசிலா இயேசுநா யகனே

6. என்னிரு தயத்தின் அந்தகா ரங்கள்
எக்குருட் டாட்டம்ஆ ணவங்கள்
இடும்புகள் பெருமை வீண்புகழ்ச் சிகட்கும்
ஏய்க்குமா யங்கள தெவைக்குந்
துன்னிய காய்ம காரங்கள் பகைகள்
துர்க்குணங் களுக்கும்ஈ விரக்கந்
தோன்றிடா மைக்கும் வேசிமார்க் கங்கள்
தொடர்ந்த சாவானபா வங்கள்
பின்னையும் பிசாசும் உலகுமாங் கிஷமும்
பெய்திடுஞ் சகலதீ வினைக்கும்
பெருமிடி பெருங்காற் றுக்கும்வா தைக்கும்
பிரண்டெழும் வாரிக்காச் சலுக்கு
மன்னிய பஞ்சம் போர்கொலை அசுப்பில்
வருமர ணத்திலு மெனைக்கா
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

7. அரசனின் விரோதத் துக்கும்அந் தரங்கக்
கட்டுப்பாட் டுக்குந்துர்க் கலகம்
அனைத்துக்கும் பொய்போ தகத்துக்கும் வீணக்
கியானசாஸ் திரசடங் குகட்கும்
இருளுறும் அமார்க்கம் வேதவின் னங்கள்
இருதய கடினமுன் வசனத்
தினியகற் பனையை அசட்டைபண் ணுதற்கும்
இன்னமற் றெவைக்குமென் றெனைக்கா
திருமனு டவதா ரச்சென னத்தாற்
சேதனத் தாலுன்றீட் சையினாற்
செயுமுப வாசம் பட்டசோ தனையாற்
செங்குரு திகளின்வேர் வையினால்
மரணவஸ் தையினாற் சிலுவையின் றுயரான்
மரித்துயிர்த் தெழுந்ததா லெனையாள்
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

8. உலகி லெங்கணு மவைகிய வுனின்சபையை
ஒழுங்கினேர் வழியினி னடத்தும்
ஓங்கி யெங்களை யாள்அர சனையுனதுத்
தமவணக் கத்தினீ தியினும்
பலனு றும்பரி சுத்தந டக்கையினும்
பலப்படக் கிருபைசெய் துன்மேற்
பத்தி நம்பிக் கையா யிருந்துனக்குப்
பயந்தொழு கப்புரிந் தினமே
அலகி லாக்கண் காணிகள் குருக் களையும்
அரியபோ தகரையு முன்றன்
அருள்வ சனத்தின் சத்திய ஞானத்
தறிவிலும் உணர்விலுந் துலக்கி
வலமை யோசனைக் கத்தாக் களெப்பெரியோர்
மனத்தையும் அலங்கரித் தருள்வாய்
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

அலகு = எண்

9. உந்திருச் சபைகள் அனைத்தையும் ஆசீர்
வதித்தெல்லாச் சாதிக ளுக்கும்
ஒருமை யைச்சமாதா னத்தையோர் மனதை
உதவியுன் றுன்னைநே சித்துச்
சிந்தையிற் பயமாய் உனதுகற் பனையிற்
றிடத்துடன் செலுமிரு தயத்தைச்
செய்துனின் சனமெலா முன்வாக்கி யத்தைச்
சினேகமும் பணிவுமாய்க் கொண்டு
சந்ததம் ஆவி யின்கனி களையே
தரக்கிரு பையின்வளர்த் தியைத்தா
தப்பிமோ சம்போ னவர்யாவ ரையுஞ்
சத்திய வழியிலுட் படுத்துய்
வந்திநிற் பவர்கள் தமைப்பெலப் படுத்தி
வலியிலீ னரையெலாந் திடத்தாம்
மகத்துவ தேவ திரித்துவ பொருளே
மாசிலா யேசுநா யகனே

வந்தி = வருத்தம்

10. விழுந்தவர் களைக்கை தூக்கியென் காலால்
வெறியினை யுதைக்கும் வீறளித்து
மிக்கமோ சத்தாற் சிறுமையாற் றுன்பான்
மெலிந்தவர்க் குதவிசெய் தாற்றி
அழுந்துநீர் நிலத்தில் யாத்திரை செய்வோர்
ஆகுலப் படுங்கெர்ப வதிகள்
அரும்பிணி யாளர் சிறுவர்க டமையும்
அன்பதாய்த் தாங்கியா தரித்துச்
செழுஞ்சிறைப் பட்டோர் காவலுற் றவர்மேற்
றிருவிரக் கந்தனைக் காட்டிச்
சேர்ந்துதாய் தகப்பன் அற்றசே யர்களைத்
திடனிலா விதவைக டம்மை
மழுங்கியா தரவற் றொடுக்கப்பட் டவரை
வளர்த்திமா னிடர்க்கெலாம் இரங்கும்
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

வெறி = பிசாசம் ; வீறு = பெருமை; துன்பு = துன்பம்;
ஆகுலம் = வருத்தம்; செழும் = வளமை

11. சத்துருக் களுக்குந் துன்பமே படுத்துஞ்
சதியினர் தூஷணிக் கிறசண்
டாளர்க்கு மிரங்கி அவர்மனந் திருப்புந்
தரணியின் பலன்களை நயமா
யுற்றகா லத்தில் அனுபவிக் கத்தந்
துண்மையின் குணப்படு தலையீந்
தூன்றிய பவங்கள் அசதிகள் அறியா
மைகளுலோ பங்களைப் பொறுத்துச்
சுத்தஆ வியினால் எனையலங் கரித்துன்
றுய்யவா சகப்படி யெனது
துன்மனந் தனைச்சீர்ப் படுத்தியாண் டருளுஞ்
சோதியின் குமாரனே ஓலம்
மத்திஸ்தா உலகின் பவஞ்சுமர்ந் தொழிக்கு
மைமறிக் குட்டியே ஓலம்
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

தரணி = பூமி; ஓலம் = அபயமிட்டழைத்தல்;
மைமறிக்குட்டி = செம்மறியாட்டுக்குட்டி

12. கடவுளே கேளுங் கிறிஸ்துவே கேளுங்
கருத்தனே கிறிஸ்துவே கேளுங்
கணக்கிலா வெனது பவங்களுக் காகக்
கடிந்துதக் கதையெனக் கியற்றாய்
இடறுமென் னச்சிர மங்கட்குச் சரிக்கட்
டாதிருங் கிருபையி னெந்தாய்
இடுக்கணுற் றுடைந்த மனத்தரின் பெருமூச்
சேக்கமுந் துயருறக் கூவு
மிடியர்வேண் டுதலையும் புறக்கணி யீர்
மிகவுபத் திரம்பல வருத்த
மேவியென் றனையே நெருக்கும்போ தடியேன்
விளம்புமன் றாட்டினுக் குதவு
மடிவதாய்ப் பேயு மனுடருஞ் செய்யும்
வஞ்சகம் அனைத்தையுந் தீர்த்தாள்
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

இயற்றல் = செய்தல்

13. வெறுமையாக் குதற்குப் பிசாசுமா னிடரும்
விரோதமாய்ச் செய்கிற சூட்ச
வினைகடந் திரங்க ளானதீங் கினையுன்
விசாரணை யாற்சித றடித்துச்
சிறியனுன் றாச னாகிய நானெத்
தீங்கினுஞ் சேதமு றாமல்
தேவனுக் கிரகத் தாற்றிருச் சபையிற்
றினமுனக் கருச்சனை செய்யக்
கிருபையா யெனைக்கேட் டருளுமிச் சணமே
கிலேசமற் றிடவெழுந் தெனக்குக்
கெட்டியாய்ச் சகாயஞ் செய்துன்பேர் நிமிந்தங்
கிறிஸ்துவே இரட்சியும் ஐயா
மறைதருங் குருவே கேருபீன் களின்மேல்
வாசமா யிரக்கும்வல் லவனே
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

14. ஐயனே யெனது பிதாக்கணா ளிலுமங்
கவர்க்குமுன் னானகா லத்தும்
ஆற்றுநின் மேன்மைக் கிரியையா வத்தும்
அவர்சொலக் காதினாற் கேட்டேன்
றுய்யகத் தாவே எழுந்திருந் தெனக்குத்
துணைசெயும் உனதுசங் கைக்காய்ச்
சூழ்ந்தெனைப் புரந்தாள் பிதாச்சுதன் பரிசுத்
தாவிக்குத் தோத்திரம் உண்டாக
உய்யுமா தியிலிப் போதும்எப் போதூ
ழியுமனா திசதா காலத்
துறும்பிர கார மாகவும் ஆமன்
உத்தம கிறிஸ்துவே யோலம்
வையமீ தென்சத் துருக்கள்கைக் கெனையே
வலிமையாய் நின்றுகா ஐயா
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

15. பட்சமா யெனதுபத் திரங்களைப் பாரும்
பரிதவித் தென்னிரு தயத்திற்
படுந்துயர் நோக்கும் இரக்கமாய்ச் சனத்தின்
பாவங்கள் தனைப்பொறுத் தருளும்
உச்சிதன் பாலென்விண் ணப்பங்க ளைக்கேட்
டுயர்தவி தின்சுதா உருகும்
ஓசனா கிறிஸ்து வேயின்றும் என்றும்
உருக்கமாய் என்றனைக் கேளும்
அட்சய தேவ கிறிஸ்துவே கிருபை
யாயிருஞ் சுவாமியே கிருபை
யாயிரு மேசை யாவென்னாண் டவனே
அபையமே அபையமே ஐயா
வைத்த நம்பிக்கைக் குதவிசெய் துனது
மகிமைப் பிரதாபமே காண்பி
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

அட்சயம் = கேடின்மை

16. ஏகனே யிரக்க மாயெனின் பெலயீ
னங்களைப் பார்த்துநீ தியதாய்
எனக்குற வேண்டுந் தீங்கனைத் தையுமுன்
னீட்டினா மத்தினால் விலக்கி
வேகமாய் வருமெல் லாவருத் தத்தில்
மிக்கநம்பிக் கைவீ ரியத்தை
மேலுன திரக்கத் துய்த்துனக் கன்பாய்
மெய்நலஞ் சங்கையும் விளைத்துத்
தாகமோ டென்றும் பரிசுத்த சன்மார்க்
கத்துனக் கூழியம் புரியத்
தயவுசெய் யெனதொன் றானமத் திஸ்தா
சமஸ்தகா ரியதுரந் தரனே
வாகுறுங் கர்த்தா வாகிய கிறிஸ்திம்
மானுவேல் மேசியா அரசே
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே

[17. பரங்களி லிருக்கும் தயாபர பிதாவே
பணிந்தவிண் ணப்பமொன் றினங்கேள்
பத்தனான் சுவிசே டக்கவி ராயன்
பாடல்யா வுக்குநா யகனீ
இரங்கியா தரித்தெவ் வேளையு மெனைக்கேட்
டேணுகொண் டென்புறத் தினினின்
றிடரெலாந் தவிர்த்தெண் ணியபடி முடிக்கும்
என்குல தெய்வமா னதனாற்
றரங்கையி லெனக்குப் பரிந்துகொண் டிருந்த
தானியேல் சந்ததிக் கிரங்குஞ்
சந்தத மெனக்கும் ஞானப்பாட் டகர்க்குந்
தருமுப காரிகட் கெல்லாம்
வரங்களை யளியும் வேதநா யகனை
வழிவழி அடிமையாய்க் கொள்ளும்
மகத்துவ தேவ திரித்துவப் பொருளே
மாசிலா யேசுநா யகனே]

ஜெபமாலை 21 வரை செய்யுள் 255

கவனிப்பு

இலிற்றானியாகிய சமுதாய விண்ணப்பம் பன்மையிற் சொல்லப்பட்டாலும் ஜெபமாலை ஒழுங்கின்படி ஒருமையாக்கிற்று.

இலிற்றானி திருத்துவத்தின் முன்னிலைக்கிருக்கப் பாவின் முடிவாகிய மகுடத்தைப் பற்றி இயேசுவின் முன்னிலைக்குப் பாடப்பட்டது.

[1817 ஆடி மாதம் தரங்கன்பாடியில் சீட்டுக்கவித் தருக்கத்தாலுண்டான கலாதியில் இராயப்ப நாட்டையர் குமாரன் தானியேல் பிள்ளை எல்லாரிலும் விசேஷித்த பத்திவைராக்கியத்தைக் கொண்டிருந்த தரும சிந்தனையைப் பற்றி அவருக்கு மத். 26:13 வசனப் பிரகாரம் எழுதின உடன்படிக்கைப்படி இதின் அந்தம் 17-பாட்டில் அவர் பெயரை நாட்டிற்று]

Table of contents

previous page start next page