ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

31. ஜெபமாலை

கொண்டாட்டு

தந்தானத்தனத் தானா - தன
தந்தானத்தனத் தானா

1. சுந்தர சீவக் காவே - திரு
மந்திர தேவக் கோவே
தூதாக் களதி பதியே - நெடு
மூதாக் கணிதி மதியே
தந்தை யாதிபி தாவே - நரர்
சொந்த மோதுசு தாவே
சாகா நித்திய சீவா - அதி
வாகா சத்திய தேவா
விந்தை யேமிக வேலே - குடில்
வந்தை யேமக வாலே
வெண்கலச் சற்பநீ தானே - உயர்
நன்குலப் பற்பனி நானே
நிந்தைப் பாட்டுக் காளே - பல
சந்தப் பாட்டுக் கேளே
நேயா வந்தனைக் கீவே - சர
ணீயே வந்தெனைக் காவே

எ-து. அழகான சீவத் தோட்டமே
ஆலோசனையின் தேவாதிபனே
சம்மனசுக்களின் அதிபதியே
நீண்ட காலப் பிதாப்பிதாக்களின் நிறைந்த அறிவே
பிதாவாகிய முதற் கடவுளே
நரர்கள் சொந்தமாய்ச் சொல்லும்சுயம்பே
பொன்றா நித்திய சீலா
அதீக அழகா மெய்த் தேவா
வினோதமே மிகவேலென்றதூதா
சிற்றிலிற் பிள்ளையாய் வந்தனையே
நீதானே வெண்கலச் சற்பம்
நானே நம்முயற்குலத்தின் முதற் குணப்பெண்
தீழ்ப்பான பாட்டுக்களா
பலவித இராகப்பாடலைக் கேட்பாயே
அன்பனே வணங்குதலுக்கீகையே
அடைக்கலம் நீயே வந்தெனை இரட்சியுமே

2. ஆய னாட்டுக் கிடையா - நெறி
நாய னாட்டுக் குடையா
ஆமனா தன வாமா - கன
பூமனா தன சீமா
தூயமே சுடர் வாளா - உச்
சாயமே அடர் தோளா
சுத்தாங் கப்பரத் துவமே - திவிய
சத்தாங் கத்திரித் துவமே
ஞாயமே தரு நடுவா - ஐங்
காயமே யரு கொடுவா
நாதாந் தப்புர விடிவே - ஒரு
வேதாந் தப்பா வடிவே
நேயனே குண வாளா - பரன்
சேயனே மண வாளா
நீண்டமிக் கொளித் தாளே - அருள்
பூண்டெனக் களித் தாளே

எ-து. ஆயனான கடவுளின் ஆட்டுக்கு மேய்ப்பனே
நீதி யாசன் இராச்சியத்துக் குடையவனே
ஆமனென்ற அற்புத அழகா
மகா பூமியின் அரசே தன சம்பன்னா
துப்புரவே ஒளிவுள்ளவாளா
ஊக்கம் பொருந்திய தோளா
பரிசுத்தப் பரமாகிய ஒன்றே
தேவ சத்தாங்கத் திரியேசு வஸ்துவே
நீதி செய்கின்ற ஞாயாதிபா
ஐந்து காயமே வடிவாய்க் கொண்டுவா
ஓசையின் அந்தமான நகரியின் விடிவே
ஒரே வேதாந்தப் பரத்துருவே
சிநேகிதர் பண்பான பணிவிடையாளா
பராபரன் சுதனே மணவாளா
நீண்டமிகும் பிரகாசப் பாதத்தையே
தயைகொண்டு எனக்குத் தந்தாளுமே

3. உச்ச மாகிய தெருளே - கன
மிச்ச மாகிய பொருளே
ஓசனா மனு வேலா - கிரு
பாசனா அனு கூலா
அட்சயப் பர வெளியே - மிகு
நிச்சயத் திரு ஒளியே
ஆண்டவா பர தேவா - சிறை
மீண்டவா நர யோவா
பட்சமே சுப வாரி - வன
லட்சமே உப காரி
பாட்டுக்கிட்ட மன் றாட்டா - நரர்
தேட்டுக்கிட்ட கொண் டாட்டா
முட்செடிக் கிருக் கிறவா - கொடும்
அச்சடித் திருக் கறவா
மூசா வந்தனைச் சீரே - கும
ரேசா வந்தெனைச் சேரே

எ-து. உயர்ச்சியாகிய தெளிவே
மிகவும் அதிகமான உரிமையே
ஓசியன்னா மனுவேலா
கிருபாசனா நன்மையானவா
அர்ச்சயமான அகண்ட வெளியே
மகாநிலை வரமான திவ்விய பிரகாசமே
கர்த்தாவே வானோர்களின் தேவா
சிறை மீட்டவா மனிதனான யோவா
பக்கிஷமே நன்மைக் கடலே
வன்னலட்ச உபகாரியே
பாட்டுக்குச் சமீபித்த விண்ணப்பத்தாய்
மனுடர் தேட்டுக்களித்த கொண்டாட்டா
முட்செடியில் தரிசனை தந்திருக்கிறோ மென்றவா
கொடுமையான அச்சடிப் புத்தகங்களின் மாறுபாடறும் படிவா
மோசே வந்திக்கும் புகழே
சுதனாகிய சருவேசுரா வந்தென்னைச் சேருமேன்

4. ஆதி கால வஸ்துவே - எரி
நீத மூலக் கிறிஸ்துவே
ஆரணத் திற நேசமே - பரி
பூரணப் பிர காசமே
சாதி யாருட புகழ்ச்சியே - பரஞ்
சோதி யாருட மகிழ்ச்சியே
சாத்திர ஞானத் தானமே - இரு
நேத்திர வானத் தானமே
காத லுற்றகண் மணியே - நெறி
ஓத லுற்றவிண் ணணியே
காரணத் திருக் காட்சியே - உ
தாரணப் பர மாட்சியே
வேத நாயகன் பாட்டனே - அதி
தூதர் தாயக நாட்டனே
மேசையா உனக் கபயமே - கிறிஸ்
தேசையா வெனக் குபயமே

எ-து. ஆதிகாலத்தின் வஸ்துவே
உக்கிர நீதியின் வேராகிய கிறிஸ்துவே
வேதத்தின் வலிய சிநேகமே
நிறைந்தன பிரகாசமே
சாதிகளின் புகழ்ச்சியே
பராபரனுடைய மகிழ்ச்சியே
வேதசாஸ்திர ஞானஸ்நானமே
இரண்டு கண்ணான வான சொற்கமே
விரும்பிய கண்மணியே
நீதியோதிய வான அலங்காரமே
கரரணத் தேவகாட்சியே
திட்டாந்தமான பரத்துரிமையே
வேதநாயகன் பாட்டனே
மகா தூதரின் தாய் வீடான நாட்டனே
மேசையா உனக்கு அடைக்கலமே
கிறிஸ்தேசையா உனக்குச் சோடே

5. ஆதி சர்ப்பத்தை மடக்கியே - பரஞ்
சோதி சொற்பத்தை அடக்கியே
ஐயிரு கற்பனை ஆக்கியே - மறு
கையிரு கற்பனை தாக்கியே
நீதி மறையைக் காட்டியே - தமிழ்ச்
சாதி முறையை மாட்டியே
நீற்றுப் பூச்சையுந் தவிழ்த்துமே - உரு
வேற்றுத் தீட்சையுங் கவிழ்த்துமே
வாதி டும்பர்கள் சலிக்கவே - அறி
வோதி டும்பர்கள் கெலிக்கவே
வானத் தெழுந்தும் வெளிப்பட்டே - கரு
வானத் தெழுந்தும் ஒளிப்பிட்டே
பூத லத்தருட் பரத்தியே - படு
பாத லத்திருட் டுரத்தியே
புரக் குமாதி திருக்குமார
னரர்க் குண்மேவின ரிரக்கமே

எ-து. ஆதி சர்ப்பத்தை மடங்கடித்துப்
பராபரனுடைய பத்துச் சொற்களை சுருக்கிப்
பத்துக் கற்பனையாக்கி
மறுத்தும் இரண்டு கற்பனையாய்ச் செய்து
நீதியான வேதத்தைக் காண்பித்துத்
தமிழ்ச் சாதியின் முறைமைகளை அழித்துச்
சாம்பற் பூச்சைகளையும் தள்ளி
உருச்செபிக்கும் தீட்சை விதிகளையும் அகற்றி
தர்க்கஞ் செய்கின்ற அகந்தையர் துக்கிக்க
அறிவோதும் வானோர்கள் வெற்றி சிறக்கப்
பரமண்டலத்திருந்தெழுந்து வெளிப்பிரவேசம் பண்ணிச்
கருப்பத்தில் உருவாய் மறைந்து
பூமியில் கிருபையைப் பரப்பி
மகா பாதாளத்தின் இருளை ஓட்டி
இரட்சிக்கும் முதன்மைத் திருக்குமாரனானவர்
மனுடருக்குள்ளே வந்தார் இரக்கமே

6. சீனாக் கோட்டைக் கடந்துமே - வளர்
கானாக் காட்டைத் தொடர்ந்துமே
செருசிலைப் பதி முறியவே - திரு
எருசலைப் பதி அறியவே
கோனாட்டுத் தவி தனைக்கண்டே - முழு
மாநாட்டுப் புவி யினைப்பண்டே
கொடுத்து வந்தவன் றலத்திலே - சிறந்
தடுத்து வந்தவன் குலத்திலே
ஆனாட் டிடையர் கூடவே - அம்ம
னானாட் டுடையர் பாடவே
அடுத்த பெத்தலைக் கெட்டியே - பசும்
படுத்த சிற்றிலைக் கிட்டியே
தானாட்டித் தரை சிறக்கவே - உயர்
மேனாட்டுத் துரை பிறக்கவே
தாராட்டுச் சொன பெருக்கமே - நரர்
சீராட்டுத் தன திரக்கமே

எ-து. சீனா மலையைத் தாண்டி
வளர்ந்த கானான் எல்லையைப் பற்றி
போர் வில்லரசர் முறிந்தோடப்
பரிசுத்த எருசலேம் பட்டணம் அறிய
ஆட்டு மேய்ப்பனான தாவீதைக் கண்டு
மகாநாடாகிய கானான் தேசத்தை முழுவதும்
முன்னாளில் தந்து பிரியம் வைத்தவன் தானத்திற்
சிறப்பாய்க் கிட்டி அவன் வம்சத்தில் வந்து
மாடாடு மேய்ப்பர் கூடவும்
அந்த மன்னா நாட்டாராகிய சம்மனசுக்கள் பாடவும்
சமீபித்த பெத்லேகேமுக்கு அருகே
பசுக்கிடக்கும் சிறுகுடிலை அடைந்து
தாம் நாட்டின இப் பூமி சிறக்க
உயர்ந்த மேலோக நாட்டுத் துரை பிறந்தபோது
தாராட்டுச் சொன்ன மிகுதியே
மனுடர் சீராட்டின் இரக்கமே

7. கன்னி மரி யினிடத்திலே - ஒளி
மின்னி அரிய திடத்திலே
கரிசித் துருவிற் றொந்தமா - யுயர்
பரிசுத் தருவிக் கந்தமாய்
உன்னி உற்பவித் தோங்கியே - விற்
பன்னி கெற்பத்தை நீங்கியே
உயர்ந்த பெத்தலைக் காட்டிலே - பசுப்
பெயர்ந்த கொத்தலைக் கோட்டிலே
முன்ன ணையினைச் சிறந்துமே - மனர்
பொன்ன ணைதனைத் துறந்துமே
முச்சாஸ் திரிகள் வருகவே - ஒரு
முக்கா ணிக்கைகள் தருகவே
துன்னி மானவர் குதிக்கவே - செய
வென்ன வானவர் துதிக்கவே
சொற்கத் திருந்து மிக்கப்பரமன்
மெய்க் குமரனு மேவினார்

எ-து. கன்னி மரி யினிடமாய்ப்
பிரகாசம் ஒளி விட மகா வல்லமையாய்க்
கரிசித் துருவாய்ச் சேர்ந்து
உயர்ச்சி பொருந்திய பரிசுத்தாவிக் கழகாய்
நினைந்து உற்பவித் தோங்கி
விவேகமுடையாள் கெற்பத்தைப் பிரிந்து
வளமையான பெத்லேகே மூர்க்காட்டிலே
மாடுபோம் பூங்கொத்தலைக்கும் பக்கத்திலே
முன்னணையிற் சிறப்பிக்கப்பட்டு
அரசரின் பொற்பு மெத்தை அகற்றி
மூன்று சாஸ்திரிமார் வரவும்
ஒரு மூன்று காணிக்கைகள் கொடுக்கவும்
நெருங்கி மனுடர் குதித்தாடச்
செயா வென்று வானோர் தோத்திரிக்கப்
பரமண்டலத் திருந்து மகாபராபரனுட
மெய்யான குமாரன் வந்தார்

8. மெட்டாய் நீளெரு சலையிலே - பிறந்
தெட்டா நாளொரு நிலையிலே
விருத்த சேதன மேவியே - நரர்
கருத்த சேதன நீவியே
அட்டே யுறழைந் தினத்திலே - அரு
ளிட்டே யுறவுந் தினத்திலே
அந்நாளுந் தமிழ் தானுமே - புகழ்ந்
தன்னாளு ஞ்சிமி யோனுமே
கட்டாய் பன்னிரு சங்கமே - ஒரு
மட்டாய்ப் பின்னிரு சங்கமே
கனத்தவேதபா ரகர் நின்றே - தர்க்கித்
தனத்தவேதசா ரகர் வென்றே
தட்டோர் முப்பது நிதியிலே - மிகக்
கொட்டோர்க் கற்புத நதியிலே
தாட்சி விண்டவன் தீட்சைகொண்டது
காட்சி கண்டவன் சாட்சியே

எ-து. திட்டத்தா னீண்ட எருசலேமி
பிறந்து எட்டா நாளொரு முறைமையில்
சுன்னத்துப் பண்ணப்பட்டு
மனுடர் நினைவின் அஞ்ஞானத்தைத் துடைத்து
எண்ணைந்து நாற்பதாம் நாளில்
கிருபை செய்துறவேற்றின இனத்தினால்
அந்நாளில் இனிமையாய்
அன்னாளும் சிமியோனும்புகழ
நன்றாய்ப் பனிரெண்டாம் வயதில்
ஓரளவாய்ப் பின்னிருந்த சபையிலே
கனமான வேதபாரகர் நின்று தர்க்கித்துப் போராட
வேதத்தின் பொருளானவர் செயங்கொண்டு
நடுவானவர் முப்பது வயது நிறைவானபோது
மிகவும் கெட்டவர்களுக்காகப் புதுமையாற்றிலே அதாவது
பூர்வத்தில் புதுமை நடந்த யோர்தானிலே(யோசு 3:16)
தாழ்மையாயிருக்கப் போதி வித்தவன் ஞானஸ்நானம் பெற்றதற்குக்
காட்சி கண்டவனாகிய யோவான் சாட்சிதானே

9. சாத்தான் சோதனைக் கடுத்துமே - கொடு
மாத்தான் றீதினைக் கெடுத்துமே
தண்டலை வனத் தடைந்துபேய் - மருட்
கொண்டலை வனெத் திடைந்துபோய்ச்
சேர்த்தான் பன்னிரு வரையுமே - வினை
தீர்த்தான் பின்னொரு வரையுமே
தேசமே பிர சங்கித்தான் - விசு
வாசமே பெறச் சங்கித்தான்
பார்த்தான் பவத்தின் கடனையே - பிணை
ஏற்றா ன வத்தின் றிடனையே
பாடு பட்டதி னாலுமே - பரிந்
தீடு பட்டதின் மேலுமே
போர்த்தான் சாவினை முனைத்துமே - கடிந்
தீர்த்தான் றீவினை அனைத்துமே
பெலத்தி னோடு நலத்தினாதி
வலத்தி லேறினர் கெலித்துமே

எ-து சாத்தான் சோதனையில் கிட்டிக்
கொடூர சத்துருவின் பொல்லாங்கை அழித்துச்
சோலைவனத்திற் சேர்ந்து பசாசின்
மயக்கங் கொண்டு அலைகின்றவனெத்தைச் சாய்த்
தேகிப் பன்னிருவரைச் சேர்த்தான்
துன்பத்தைத் தீர்த்தான் பின்னும் ஒருவராகிய கடவுளையே
தேசத்தில் பிரசங்கித்தான்
விசுவாசமுண்டாகக் கனப்படுத்தினான்
பாவத்தின் கடனை நோக்கினான்
பிணையெற்றான் பயனின்மையின் வலிமையைப்
பாடுபட்டதினால் அறுத்து
உத்தரவாதம் பண்ணின பிறகு
சாவைச் சினந்தகற்றினான்
கடிந்து எல்லாத் தீவினைகளையும் பிளந்தான்
பராக்கிரமத்தோடு நன்மைக் கடவுளின்
வலது பாரிசத்தில் செயல் கொண்டேறினார்

10. சங்க வானவர் சூழ்கவே - தவத்
தங்க மானவர் வாழ்கவே
தராத ரத்தின் மேவியே - பவத்
தாரா தரத்தின் ஆவியே
பங்கமே படத் தீர்த்துமே - அழல்
அங்கமே கெடச் சேர்த்துமே
பாதா ளத்தினிற் றாழ்த்தியே - கொடும்
வேதா ளத்தையும் வீழ்த்தியே
துங்க ஆட்டுக் குட்டிக்கே - கிறிஸ்
தெங்கள் பாட்டுக் கெட்டிக்கே
சோப னங்களுங் கூடியே - நித்திய
சீவ னங்களு நீடியே
மங்கலத் தந்தையர் அகத்திலே - ஒளிர்
பிங்கலச் சிந்தையர் சுகத்திலே
மகிழ்ந்து மகிழ்ந்து மகிழ்ந்து மகிழ்ந்து
மகிழ்ந் திருக்கவும் வாழியே

எ-து. கோடி கோ டிதூதாக்கள் சுற்றிவரத்
தவத் தேகத்தோர் வாழ்க
மேகாசனத்தில் எழுந்தளிருப்
பவத்தோர் ஆசையின் ஆத்துமம்
ஆக்கினைப்பட நடுத்தீர்த்துச்
சரீரம் தீயிற் கெடச் சேர்த்துப்
பாதாளத்தில் தாழ்த்திக்
கொடூரப் பசாசையும் விழத்தள்ளி
உன்னத ஆட்டுக் குட்டியாகிய
கிறிஸ்தென்ற எங்கள் பாட்டுக் கெட்டிக்குக்
கலியாணங்களும் கூடி
நித்திய சீவனின் அழகு நீடித்துப்
பிதாவின் விவாக வீட்டிலே
ஒளி விடும் பொன் மனக் கன்னியர் சுக சீவியாய்
மகிழ்ந்து களித்துப் பூரித்தெக்களித்து
வாழ்ந்திருக்க வாழியே

செபமாலை 31 வரை செய்யுள் 445
காப்பு 9, வருகைப்பதிகம் 11, ஆகத்திரண்ட தொகை 465

முற்றிற்று

Table of contents

previous page start next page