ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

10. ஜெபமாலை

திருச்சபையூஞ்சல்

விருத்தம்

விருட்சமொன் றாகா தென்று
விலக்கின விமலன் மைந்தன்
பரிட்சை பார்த்தேவை தின்ற
பழவினை தீர்த்தா னென்றே
குருச்சபை யோரை வாழ்த்திக்
குலவிவா கத்தோர் கேட்கத்
திருச்சபை யூஞ்சல் பாடத்
திவ்விய ரூபி காப்பாம்

1. பொன்னுலகும் பூவுலகும் படைத்தானந்த
பூரணமாய் நின்றபரா பரனைப்போற்றி
உன்னதனா ராதாமின் குலத்தைமீட்க
ஒருசுதனை யனுப்புவித்த உண்மையாலே
இந்நிலத்துக் கொளிவுதித்த தேழைமக்கள்
எல்லவருங் கிருபைபெற்றார் என்றேதேர்ந்து
பன்னுகலைக் கிறிஸ்தவர்நீர் ஆடிரூஞ்சல்
பராபரனின் பிள்ளைகள்நீர் ஆடீரூஞ்சல்

2. ஆதிசுதன் மானிடவ தாரமானார்
அம்புவியைத் தமக்குறவ தாக்கிக்கொண்டார்
வாதையுறப் பாடுபட்டார் சிலுவைமீது
மரித்தடக்கப் பட்டுயிர்த்தார் வான்போய்நின்றார்
நீதியெல்லாம் நிறைவேற்றி முடித்தாரொன்றும்
நிலுவையில்லை வாழ்வனைத்துஞ் சம்பாதித்தார்
பாதகர்க்குப் பயமினியேன் ஆடீரூஞ்சல்
பராபரனின் பிள்ளைகள்நீர் ஆடீரூஞ்சல்

3. வானுலகை தூதருக்காய்ப் படைத்தநாதன்
மண்ணுலகை மானிடர்க்காய் வகுத்தாரேனும்
ஈனமுறும் பாவிகளின் அகந்தைக்காக
எரிநரகத் தையும்படைத்தங்க ழுத்தாதெம்மைத்
தானவரோ டேயிருத்திச் சரியதாக்கித்
தாரணியும் வானுலகஞ் சமனாய்ச்செய்யப்
பானுவெனக் கிறிஸ்துதித்தார் ஆடீரூஞ்சல்
பாபரனின் பிள்ளைகள்நீர் ஆடீரூஞ்சல்

4. காடவர்க்கு நாடெமக்குத் தலமாயிற்று
கனத்தமா ளிகைநமக்கு அவர்க்கோகொட்டில்
பூடணங்கள் புற்பமெத்தை பொன்னுமெத்தை
புண்ணியர்க்கோ கல்லுமெத்தை புல்லுமெத்தை
மாடுயர்ந்த வலமையுண்டு தலைமையுண்டு
மன்னவர்க்கோ கந்தையுண்டு நிந்தையுண்டு
பாடுமுண்டு பலனமக்குண் டாடீரூஞ்சல்
பராபரனின் பிள்ளைகள்நீர் ஆடீரூஞ்சல்

5. சீரான வாழ்வெதல்லாம் எங்கட்குண்டு
சேனையுண்டு தானையுண்டு செங்கோலுண்டு
நேரான பந்துக்களின் கூட்டமுண்டு
நித்தியகல் யாணசோ பனங்களுண்டு
ஊராளு மாதிபத்தியந் தானுமுண்டு
உத்தமர்க்கோ என்னவுண்டிங் கொன்றுமில்லை
பாரீரோ சிநேகமிதென் றாடீரூஞ்சல்
பராபரனின் பிள்ளைகள் நீர்ஆடீரூஞ்சல்

6. வச்சிரத்தி னாலிழைத்த கால்கணாட்டி
மரகதத்தி னாலரிய விட்டம்போட்டுத்
தற்சீசின் ரத்தினத்தாற் பலகைசேர்த்துத்
தங்கச்சங் கிலிகள்தக தகெனப்பூட்டி
உச்சிதமுத் தாபலத்தாற் கொடுங்கைகூட்டி
உன்னதபத் திராசனத்துக் கொப்பதாக்கிப்
பட்சமுடன் கிறிஸ்துவைக் கொண்டாடீரரூஞ்சல்
பராபரனின் பிள்ளைகள்நீர் ஆடிரூஞ்சல்

கொடுங்கை = தேரின்கொடுங்கை

7. மட்டதில்லா மகத்துவப்பு தெருசலேமின்
வாழ்வனந்தம் வாழ்வனந்தம் வளமோகோடி
கட்டுயர்ந்த சுத்தக்கண் ணாடித்தங்கங்
கனத்தபளிங் கொளிவஸ்பிக் கற்போற்காந்தி
திட்டமதின் மதிட்பனிரண் டஸ்திவாரந்
திவ்வியமாம் விலையுயர்ந்த ரத்தினங்கள்
பட்டணத்தின் மகிழ்ச்சிபெற ஆடீரூஞ்சல்
பராபரனின் பிள்ளைகள்நீர் ஆடிரூஞ்சல்

8. உண்டான நன்மையெல்லாம் நமக்குண்டாச்சு
உம்பரமும் அம்பரமும் நமக்கென்றாச்சு
அண்டசரா சரங்களெல்லாம் நமக்கேசொந்தம்
அனாதிசுதன் றானும்நமக் கருளப்பட்டோர்
கண்டகண்ட சிஷ்டியெல்லாம் நமக்கல்லாமற்
கடவுளுக்குத் தேவையென்ன கவைகளென்ன
பண்டோரே நன்றியறிந் தாடீரூஞ்சல்
பராபரனின் பிள்ளைகள்நீர் ஆடீரூஞ்சல்

9. யேசுவினால் மேன்மைபெற்றோங் கிருபைபெற்றோம்
இன்முறப் பரிசுத்தா வியையும்பெற்றோம்
யேசுவினாற் புத்திரசுவி காரம்பெற்றோம்
எத்தனையோ பாக்கியங்கள் எல்லாம்பெற்றோம்
யேசுவினால் நித்தியசீ வனையும்பெற்றோம்
எண்ணூழி காலமும்வாழ்ந் திருக்கப்பெற்றோம்
பாசம்வைத்துக் கிறிஸ்தவர்நீர் ஆடீரூஞ்சல்.
பாபரனின் பிள்ளைகள்நீர் ஆடிரூஞ்சல்

10. சத்தியத்தின் மேலான பாதைகண்டோஞ்
சாங்கமா யுலகத்தைத் தள்ளிப்போட்டோம்
பித்தர்களின் சாஸ்திரத்தைக் குலைக்கச்செய்தோம்
பிசாசினா டம்பரங்கள் அனைத்தும்விட்டோ
மெத்தமெத்தக் கிருபைபெற்றோந் தேறிப்போனோம்
வேதநா யகன்பாடல் விரும்பிக்கொண்டோம்
பத்தியுள்ளோர்க் கென்னகுறை ஆடீரூஞ்சல்
பராபரனின் பிள்ளைகள்நீர் ஆடிரூஞ்சல்

2. கா. ஜெபமாலை 10 வரை செய்யுள் 145

முற்றும்

Table of contents

previous page start next page