ஒம்பிரணவம்-இருக்கிறோம்
யாத். 3:14 வெளி. 1:8
1. பொன்னுல குச்சிதப் புகழ்ச்சி யோம்நமா
பூரண காரணப் புதுமை யோம்நமா
தன்னிக ரொன்றிலாத் தாதை யோம்நமா
தற்பர மெய்பர சுயம்ப தோம்நமா
இந்நிலம் புரக்குமி ரட்சிப் போம்நமா
இசறவே லதிபதி யேசு வோம்நமா
நன்னிலை யிருக்கிறோம் ஓகோம் நமோநமோ
நாயனா ஓசனா நமஸ்த னாதியே
2. அந்தமா தியுமிலா ஆம னோம்நமா
அனைத்தையுந் தாங்கும்அந் தாதி யோம்நமா
சிந்தனைக் கடந்தவான் றெருட்சி யோம்நமா
சேனையின் கத்தனோந் திரித்துவ மோம்நமா
மைந்தனைத் தந்தவா சனத்த னோம்நமா
மானிட சொரூபமா சேன னோம்நமா
நந்தனோ மிருக்கிறோம் ஓகோம் நமோநமோ
நாயனா ஓசனா நமஸ்த னாதியே
3. துங்கவா னவர்தொழுஞ் சோதி யோம்நமா
துல்லிப ஞானமோந் தூய்மை யோம்நமா
மங்கள சோபன மகிழ்ச்சி யோம்நமா
மாசிலா வுன்னத வஸ்து வோம்நமா
சங்கையி னரசனோந் தகமை யோம்நமா
சத்திய வுத்தம சாட்சி யோம்நமா
நன்குவோ மிருக்கிறோம் ஓகோம் நமோநமோ
நாயனா ஓசனா நமஸ்த னாதியே
4. அடிமைகொண் டாண்டவற் புதத்த னோம்நமா
வளவிட முடிவிலா ரணத்த னோம்நமா
படும்வினை தவிர்க்குமெய்ப் பரத்துவ மோம்நமா
பாசமே மிகுமுழுப் பட்ச மோம்நமா
கொடுமைய தொன்றிலாக் குணபத்தி ரோம்நமா
கூறுமி ரட்சிப்பின் கொம்ப தோம்நமா
நடுவனோ மிருக்கிறோம் ஒகோம் நமோநமோ
நாயனா ஓசனா நமஸ்த னாதியே
5. வரமிகும் நன்மண வாள னோம்நமா
வார்த்தையா யிருந்தமத் திஸ்த னோம்நமா
தீரமிகுந் தவிதுசெங் கோல தோம்நமா
சேட்டன்யூ தாவெனுஞ் சிங்க மோம்நமா
பரமசால் மோன்பகல் வெள்ளி யோம்நமா
பராபரன் றன்பரி சுத்த மோம்நமா
நரபதி யிருக்கிறோம் ஓகோம் நமோநமோ
நாயனா ஓசனா நமஸ்த னாதியே
6. செம்மறிக் குட்டிநற் சேய னோம்நமா
சீவனின் விருட்சமெய்த் தெரிசி யோம்நமா
தம்மையே பெலியிடுந் தனிமை யோம்நமா
தவிதிறை வங்கிஷத் தனைய னோம்நமா
எம்மையாட் கொண்டதோ ரிரக்க மோம்நமா
யேயோவாக் கிறிஸ்திம்மா னுவேல்மன் னோம்நமா
நம்முத லிருக்கிறோம் ஓகோம் நமோநமோ
நாயனா ஓசனா நமஸ்த னாதியே
7. எண்ணிய படிதரும் ஏகனோம் நமா
என்றுமா றாதொளிர் இரவி யோம்நமா
கண்ணதிற் காண்கொணாக் காட்சி யோம்நமா
கருணைவா ருதியெனுங் கடவு ளோம்நமா
அண்ணாலோ மரூபியோம் ஆதிக் காதியோம்
அட்சய வுச்சித அருமை தேவனோம்
நண்ணலோ மிருக்கிறோம் ஓகோம் நமோநமோ
நாயனா ஓசனா நமஸ்த னாதியே
8. ஆதியோம் நடுவதோம் அந்தத்தந்த மோம்
ஐயனோ மெய்யனோம் அனந்த ஞானியோம்
நீதியோம் நித்திய நிலைமைக் குன்றதோம்
நேற்றுமின் றென்றுமாய் நின்ற ஒன்றதோம்
ஓதியோ மகத்துவத்து யர்ந்த ஒல்லியோம்
உண்மையி லுண்மையோம் உடன்ப டிக்கையோம்
நாதனோ மிருக்கிறோம் ஓகோம் நமோநமோ
நாயனா ஓசனா நமஸ்த னாதியே
9. தொன்மையோம் பன்மையோஞ் சூட்சி யாட்சியோம்
சோதியோம் நீதியோஞ் சொருப ரூபியோம்
வன்மையோந் தன்மையோ மயசு ராரியோ
மானியோந் தானியோ மகாநி தானியோம்
புன்மைய தின்மையோம் பொறுமைச் சாமியோம்
புண்ணிய தன்மியோம் பூரி மூரியோம்
நன்மையோ மிருக்கிறோம் ஓகோம் நமோநமோ
நாயனா ஓசனா நமஸ்த னாதியே
10. வேதநா யகன்சொல்வே தாந்த னோம்நமா
மேசியாக் கிறிஸ்துவிண் வேந்த னோம்நமா
தாதையோந் தற்சுவா பத்தச் சோம்நமா
சருவசீ வாற்றும தயாலு வோம்நமா
காதலோங் கன்மலைக் கழுக தோம்நமா
காரிய துரந்தர காரி யோம்நமா
நாதனோ மிருக்கிறோம் ஓகோம் நமோநமோ
நாயனா ஓசனா நமஸ் தனாதியே
கழுகு - யாத்.19:4;உபா. 32:11,12
செபமாலை 3 வரை செய்யுள் 32