ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

8. ஜெபமாலை

அத்தனாசி விசுவாசப் பிரமாணம்

சத்திய கிறிஸ்து மார்க்கத்தை யறிக்கை பண்ணுதற்
குத்த வேதசாஸ்திரத் துணர்ந்து கண்ட பொக்கிஷம்
அத்தனாசியார் விசுவாசப் பிரமாணமா மெனப்
பத்தனக் கருள் செய்வாய் பராபரம் பராபரம்.

தானதான தானதான தானதான தானவன்
தானதான தானதான தானதான தம்பிரான்

1. ஆவியுய்து வாழ்வதற் கியாரெனும் விரும்பினாற்
பூவிலத்தனாசி பொதுவான விசுவாசமே
மூவிய தனைத்தினுக்கு முன்ன நெஞ்சிறுத்துதல்
தேவையான காரியந் திருச்சபைக் குழாங்களே

மூவுதல் = முடிவு

2. இந்த விசுவாச மெவரேனு முழுதாகவே
புந்தியிற் கறைப்படாது போதவைத் திராவிடில்
அந்தமானிட னழிந்தவனுயிர்க்க நர்த்தமாய்ச்
சந்தேகமறச் சதாகாலமுங் கெடுவனே

3. ஆண் மகத்துவங்களை அளாவறச் சுபாவமுஞ்
சேண் மிதத்து நீத்திடாமலே திரித்துவத்தையோ
ராண்மறைக் கணத்தனாகவு மொருத்துவத்தையே
யேண்மிகத் திரித்துவமெனத் துதித்தல் மேரையே

அளாவற = கலக்காமல்; சேண் = தூரமாய்;
நீத்திடாமல் = பிரிக்காமல்; ஏண் = நிலை

4. இத்தகை யிறைஞ்சல் பொதுவான விசுவாசமே
வித்தமே தெனிற்பிதாவி னாண்மகிமை வேறதே
யுத்தமக் குமாரனா ருடையதும் வேறேபரி
சுத்தரூபி யினுடையதுஞ் சொல வேறானதே

5. ஆயினும் பிதாவுடையவுஞ் சுதனுடையவுந்
தூயவாவியினுடையவுந் தெய்வத்துவத்துடன்
சாயலுஞ் சரிசமான தத்துவமனாதியா
யோய்விலா மகத்துவமனைத்து மொன்றதொன்றதே

6. எப்படிப் பிதாவிருக்கு தோவியைந்த வண்ணமே
அப்படிக் குமாரனும் அரூபியு மிருக்கிறார்
மெய்பிதா விதிப்படார் மெய்யனும் விதிப்படார்
செப்பமிட்ட ரூபியுஞ் சிரிட்டிக்கப்படாதவர்

7. தந்தையா ரளவிடப் படாதவர் பிதாவுட
மைந்தனா ருமேவகுத் தளவிடப்படாதவர்
அந்தநேர் பரிசுத்தாவியு மளவறுக்கவே
யுந்திடாத விந்தையாள ருண்மை யுண்மை யுண்மையே

8. வலபிதாவு நித்தியர் மைந்தனாரு நித்தியர்
பலவரங்களைத்தரும் பரிசுத்தாவி நித்தியர்
இலகுநீதியேனு மூன்று நித்தியரெனத்தகா
துலகனாதி நித்தியத்த ரொன்ற தொன்ற தொன்றதே

9. அந்தவாய்மை மூன்றள விடப்படார்களுமலப்
பந்தமூன்று சிஷ்டிக்கப் படாதவர்களுமல
விந்தையி னொரேயொரு விதித்திடப்படாதவர்
சுந்தரத்தொரே யளவிடப்படாத சோதியே

10. அப்பிரகார மப்பனார் சமஸ்த வல்லபத்தினர்
தப்பறக் குமாரனுஞ் சமஸ்த வல்லபத்தினர்
துப்பரூபியுஞ் சமஸ்தவல்லபத்தர் தோற்றலால்
ஒப்பதற்ற மூவரன்றோரே சமஸ்தவல்லவர்

11. அத்திறத்தி லத்தனார் தேவனே குமாரனு
முத்ததேவனே பரிசுத்தாவியாருந் தேவனே
சித்திரமிதேனு மூன்று தேவர்களெனத்தகா
தொத்துணர்ந்து நொக்குவீர் தெய்வ மொன்ற தொன்றதே

12. அத்தகை பிதாவுமாண்டவர் குமாரனாண்டவர்
சுத்தமே செயும் பரிசுத்தாவியாரு மாண்டவர்
இத்தகமையேனு மூன்றாண்டவ ரெனத்தகா
தொத்துணர்ந்தறியு மினோராண்டவ ரொராண்டவர்

13. ஏனெனிற் றனித்தனித் தொவ்வொருத்தரையுமே
ஆனதற்பராபரன் ஆண்டவரென்றுஞ் சொலி
ஞானமுற் றறிக்கைசெய நாங்களெங்களின் கிறிஸ்து
மான சத்தியத்தினா லுடந்தையாய் வயங்குதல்

14. எப்படி யோவப்படியே மூன்று தேவரென்கவும்
அப்புற மூன்றாண்டகைய தாயிருப்பதாகவுஞ்
செப்புதற் றகாதெனத் திருத்தமாக நம்முட
மெய்ப்பொதுவின் மார்க்கமே விலக்குதறிவீர்களே

15. அப்பனா ரொருத்தனா லுண்டாக்கப்பட்டவரலச்
செப்பும் வாய்மையாற் சிருட்டிக்கப்பட்டவருமலத்
தப்பிலாமையே சனிப்பிக்கப்பட்டவருமல
இப்படியிருப்பதே ஏகமெய்ப்பராபரம்

16. மைந்தனார் பிதாவினால் மாத்திரமிருக்கிறா
ருந்தினின்று நோக்குவீ ருண்டாக்கபட்டவரலச்
செந்துக்களுக் கொப்பதாய்ச் சிருட்டிக்கப்பட்டோரலத்
தந்தையின் கணின்றுமேதான் சனிக்கப்பட்டவர்

17. ஆவியோ பிதாவினாற் குமாரனாலும் வைகிறார்
ஓவியங்களாகவே யுண்டாக்கப்பட்டவரல
சீவசிஷ்டியுமலச் செனிப்பிக்கப்பட்டோரல
மேவியே புறப்படுகிறா ரிதறிவீர்களே

18. அத்தகமையே யொரேபிதா மூன்றுபிதாக்களன்
றுத்தமத்தொரே குமாரன் முக்குமாரனுமல
சுத்திகரிக்கின்ற வரொரே பரிசுத்தாவியே
பத்திரங் கவனியும் பரிசுத்தாவிமூன்றல

19. இந்தமெய்த் திரித்துவத்திலே யொருதர்க் கோர்தரே
முந்தினவருமிலை முறபிந்தினவருமிலை
விந்தையி னொருத்தருக்கு மேலொருத்தரென்னவே
தந்தனி லுயர்ந்தவருந் தாழ்ந்தவருமில்லையே

20. ஏனெனி லிம்மூவரும் அனாதி காலமாகவே
தானொருமித்தே யனைத்தினுஞ் சரிசமானமா
யீனபற்றிருக்கிறார்கள் என்பது சுபாவமே
மானிட குழாங்களே வகுத்ததறிகுவீர்களே

21. அத்தகையனைத்தினுமுன் சொல்லியதிடத்திலொ
ருத்துவத்தையே திரித்துவத்தினு முச்சத்திரித்து
வத்தையே யொருத்துவத்தினும் வணங்கவேண்டிய
துத்தமப்பிரமாண மீதுண்மை யுண்மை யுண்மையே

22. ஆகையா லிரட்சிக்கப்படுவதற்கு வேண்டினோ
னேகசத்தியத்தி லிவ்விதந் திரித்துவத்தையே
யூகமாய்ச் சிந்திக்கவேண்டும் உத்தமத்திலுத்தமம்
வாகதான காரிய மாற்றதொன்று மில்லையே

அனாதி திருவிரக்கத்தை சூரியம்
அற்புத வற்புதப் பரமாச்சரியம்

வேறு

23. அப்புறம் நமதாண்டவரான
அருமைக் கிறிஸ்தேசு நாதனாரின்
றப்பிலா மனுடவதாரத்தை நீ
தானமாய் விசுவாசிப்பதுதானே
செப்பமே நித்திய இரட்சிப்புக்குத்
தேவையானதுவே திருச்சபையே
ஒப்பிலான் மாங்கிஷத்தில் வெளியான
உன்னதப் பரமரகசியந்தானே

24. ஆவிப் பராபரன்றன் சுதனான
அண்ணல் கிறிஸ்தேசு நாதர்தானே
தேவனு மனுடனுமா யிருந்தல்
திடமென் றுறுதி கொண்டறிவிப்பதே
ஓவிய நிதான விசுவாசமாமே
உலகங்க ளுண்டாகு முன்னர்தானே
சீவப் பிதாவின் சுபாவத்தினாற்
றேவனாய்ச் செனிக்கப்பட்டவராமே

25. மாதாவுடைய சுபாவத்தாலே
வையகத்தில் மனுடனாகத் தோன்றினோர்
கோதேது குறையற்ற தேவனாரே
குறையற்ற மனுடனு மானாரே
வேதா விவேகமுள்ள ஆத்துமமு
மெய்மனுஷ மாங்கிஷமு முடைத்தோரே
தாதாவுக்குச் சரியானவரே
தம்முடைய தேவத்துவத் தன்மைதானே

26. தமது மனுஷ தத்துவத்தின்படியே
தந்தை பிதாவுக்குத் தாழ்ந்தவரே
விமலனு மனுடனுமாயிருந்தும்
வேறாமிருவரல்ல ஓர் கிறிஸ்துவே
அமலத்துவமேதையாக மாறு
பட்டதினா லொருவ ரல்லத்தானே
சமயத்தெழுந்து தெய்வமே மனுஷ
தத்துவத்தை யெடுத்ததினாற்றானே

27. சுவாபத்தை யொருமிக்க கலந்ததினாற்
றுய்ய கிறிஸ்துவும் ஒருவரல்ல
அவாவுக்கடங்கா அற்புதமான
ஆண்மகிமையின் அயிக்கத்திற்றானே
விவேகமுடைத்தான ஆத்துமாவு
மேதையுமொரே மனுடனானதுபோ
லிவாறாகத் தேவனுமனுடனுமோ
ரேககிறிஸ்துவா யிருக்கின்றதே

28. பாடுபட் டெங்களீடேற்றத்துக்காய்ப்
பாதாளத் திலிறங்கி மூன்றாம்நா
ளீடுடன் மரித்தவரிடத்திலிருந்
தெழுந் தருளிப் பரத்துக்கேறித்தானே
நீடுஞ் சமஸ்தவல்லமைத் தேவ
நித்திய பிதாவலத்தில் வீற்றிருக்கிறார்
நாடியே சீவியர் மரித்தோரையும்
நடுவிட அங்கிருந்து வருவாரே

29. இறுதியி லவர்வரும்போது மனுட
ரெல்லாருந் தங்கள் சரீரத்தோடே
மறுபடியு மெழுந்து தங்கள் கிரியை
வழிப்படு கணகொப்புக் கொடுப்பார்கள்
நறுமை செய்தோர் நித்திய சீவனிலும்
நன்றலார் நரக நித்தியாக்கினியிலும்
அறுதி அறுதியாய்ப் போவார்கள்
அனந்த வனந்த சதாகாலந்தானே

30. இதே பொதுவான விசுவாசமாமே
இத்தையுண்மையாய் விசுவாசித்தாலன்றிப்
பதாரத்தொருவன் கடத்தேறி ரட்சிக்கப்
படக்கூடாது கூடாதுதானே
பிதாவுக்குஞ் சுதனுக்கும் அருபியர்க்கும்
பெருமை மகிமை யுண்டாவதாக
சதாகாலத் தாதியி லிப்போதெப்போதுந்
தங்கிய பிரகாரமே ஆமனாமன்

2. கா. ஜெபமாலை 8 வரை செய்யுள் 128

Table of contents

previous page start next page