1. ஒன்றுமில் லாமையில் நின்றுலகம் யாவையும்
உண்டு பெண்ணின தில்லையோ
ஊழித்து வாந்தத்தில் நின்றொளி பிரகாசிக்க
உத்தரவு செய்த திலையோ
சென்றந்த ரங்களிற் கிரகங்கள் வான்மீன்கள்
சேரும் வழிவைத்த திலையோ
திவளைக ளனந்தனந் தங்களா யேறியே
சேணின்று பெய்ய விலையோ
வென்றிபெ றஇஸ்ரவேற் கொருநாளில் ஆதித்தன்
மீண்டு நின்றேக விலையோ
விரிகடல் இரண்டாய்ப் பிளந்துயோர் தானும்வழி
விட்டடங் கின தில்லையோ
கன்றிடா தென்மனஞ் சீராக ஒருநவன்
காட்டுவ துனக் கருமையோ
கருத்தா பரத்தாள் திரித்துவ ஏகத்துவமே
கருணை யானந்த வடிவே
ஊழித்துவாந்தம் = ஊழியிருள்; வான்மீன் = நட்சத்திரம்; சேண் = ஆகாயம்; ஆதித்தன் = சூரியன்
ஆதி.1:1; யோபு 26:7; சங். 19:2; ஆதி. 1:3-5; 2 கொரி. 4:6; ஆதி. 1:16; யோபு 38:32,33; ஆதி. 2: 6; யோபு 36:27; யோசு. 10:12-14; யாத். 14: 21,22;யோசு. 3: 13-16.
2. பொறையை இடம்விட்டுப் பெயர்ந்து கடலிற்றாழ்ந்து
போகஉத் தரவு செயலாம்
பொங்கு திரையின்மேல் நடக்கலாஞ் சிங்கத்தைப்
போர்செய்து கொன்று விடலாம்
மறுபாடை பேசலாம் பேயைத் துரத்தலாம்
வல்லரவு களை நீக்கலாம்
மரணத்துக் கினமான நஞ்சுண்டு தீவினை
வராது காத்துக் கொள்ளலாம்
அறுதியாய்ச் சுகமிலா தவர்கள்மேற் கைகள்வைத்
தாரோக்கியம் ஆக்கி விடலாம்
அனாதி ரட்சகரை விசுவாசித்த பேர்களின்
அடையாளம் இவை களன்றோ
கறையான மனதினி ருள்இரித லரிதரிதே
கடாட்சித்துன் அடிமை கொள்வாய்
கருத்தா பரத்தாள் திரித்துவ ஏகத்துவமே
கருணை யானந்த வடிவே
பொறை = மலை; திரை = கடல்; வல்லரவு = வலிய சற்பம்; இரிதல் = கெடுதல்
மத். 21:21,22; 14:28; 1 சாமு. 17:34-36; மாற்.16:17,18.
3. மலடனாய் நூற்றாண் டிருந்தவன் வித்தை
மண்டூ ளாகவுந் தொகையிலா
வானத்தின் மீன்களுக் கொப்பாகவும் பெருகி
வர்த்திக்கச் செய்த திலையோ
அலைகடற் கொந்தளிப் புங்கொடுங் காற்றும்
அமரச்சொற் பகர்ந்த திலையோ
ஆதித்தனைப் பூமியும் பூமியைச் சுற்றி
அம்புலியும் ஓட விலையோ
வலியகன் மலையினின் றுதகமும் வானின்று
மன்னாவும் வர வில்லையோ
மறையவன் கோற்றுளிர்த் துப்புயர் கம்பமும்
வந்துவழி காட்ட விலையோ
கலையாமல் என்மன நிலையாக நிற்கவழி
காட்டுவ துனக் கருமையோ
கருத்தா பரத்தாள் திரித்துவ ஏகத்துவமே
கருணையா னந்த வடிவே
மண்டூள் = பூமியின் தூள்; அமர்தல் = அடங்கல்; ஆதித்தன் = சூரியன்; அம்பு = சந்திரன்; உதகம் = தண்ணீர்; புயற் கம்பம் = மேகத்தூண்
ஆதி. 15:3-6; 18:10-14;மாற். 4:37-39; யாத்.16:31;17:6; எண்.17:8;யாத்.14:19,20; 40:36,38
4. ஆகாய விரிவின் முடிவென்ன நீர்களுக்
களவுபிர மாண மென்ன
ஆயிரம் வருடமொரு நாளாகி நாளுமா
யிரம்வருட மாகு விதமென்
வாகான காற்றுக்குத் தக்கநிறை யென்னஅது
வருமுதலு முடிவு மெங்கே
மழைகளின் றிட்டமென இடிமுழக்கங் கண்மின
லுக்குவழி வைத்த தெனவிஞ்
சாகாத ஏனோக்கும் எலியாவும் வைகின்ற
தலமேது விசுவா சிகள்
தாபரிக் கின்றபர தீசுபா தாளமோ
தரையிலோ வானத் திலோ
காகா வுனக்கபையம் நின்சித்து வித்தையைக்
கண்டறிந் தவர்க ளுண்டோ
கருத்தா பரத்தாள் திரித்துவ ஏகத்துவமே
கருணையா னந்த வடிவே
வைகின்ற = தங்குகின்ற
யோபு 28:25; 2 பேது. 3:8; யோவா. 3:8; பிர.11:5; யோபு 28:25; 37:6; 28:26;ஆதி. 5:24; 2 இரா.2:11; யோவா.3:13.
5. சிற்றுட லெறும்புக்குக் கண்வைத்த தில்லையோ
சிங்கத்தைக் கெற்சிக்க வுந்
தேசிக்கத் தின்கழுத்திற் கனைக்கு தலையுந்
திறல்வீர முந்தந்த தார்
சுற்றுமுகி லுக்காடை யாயிருளை மூடியே
தொனிகடற் கணையிட்ட தார்
தோன்றும்வி டியற்கிடங் காண்பித்த தாரதின்
றோற்றமுண் டானதெவி டம்
பற்றியதி காலைநட் சத்திரங்கள் ஏகமாய்ப்
பாடுமிங்கி தஓசை யாற்
பரமபுத்தி ரர்களிக் கும்படிஅ தின்கோடிக்
கல்லைப் பதித்தவ ரெவர்
கற்றறிவி லாதசிறி யேனுனது மகிமையைக்
கண்டுதொழ நின்கருணை கூர்
கருத்தா பரத்தாள் திரித்துவ ஏகத்துவமே
கருணையா னந்த வடிவே
தேசி = குதிரை; முகில் = மேகம்
நீதி.6:6-8; யோபு 39:22-28; 38:7-31
6. மனுடரை நிர்த்தூளி யாக்கிமீண் டுமனுப்
புத்திரரை வருக வென்று
மண்மீதி ருத்திநூற் றாண்டில்ஒரு முறையுலகை
வருத்திப் பினாற்பெ ருக்கி
அனையவு யிர்யாவை யும்தாபர சங்கங்கள்
யாவற்றையும் அழித்துந வமாய்
ஆக்கிவா னத்திலும் பூமியிலும் அதிசயங்
களைநடப்பிக் கவி லையோ
இனியபார் வையிலோரா யிரம்வருட நேற்றைக்
கிறந்தநாள் இரவு சாமம்
இவர்பதினா யிரவர் ஒருவரா யிரவரை
எவ்வாற் தோட்ட வியலுங்
களிவுனது செயல்மகிமை அறிகிலே னெனையுங்
கடாட்சிப்ப துனது கடனே
கருத்தா பரத்தாள் திரித்துவ ஏகத்துவமே
கருணையா னந்த வடிவே
சங். 68:3; ஏசா. 26:19; தானி. 12:2; சங். 90:4; உபா.32:30
7. மலையைஅணு வாக்குவாய் அணுவைமலை யாக்குவாய்
வான்வில்லை உண்டாக்கு வாய்
மாறாது கிரகங்கள் ஆதித்த னைச்சுற்றி
வருவதற் காட்டிவைப் பாய்
அலையையுந் திவலைசெய் வாய்திவலை யப்புணரி
ஆக்கியதின் மீதுலவு வாய்
அல்லையெல் லாக்குவாய் எல்லையல் லாக்குவாய்
அமரரைப் பேயாக்கு வாய்
நிலையாத நீடூழி காலத்தை நிமிஷமாய்
நிமிஷத்தை நீடூழி யாய்
நெடியவே தத்தையொரு சொல்லாயோர் சொல்லையே
நீண்டமறை யாக்கிவைப் பாய்
கலையாமல் என்மனமே நிலையாக நிற்கவழி
காட்டுவது னக்கருமை யோ
கருத்தா பரத்தாள் திரித்துவ ஏகத்துவமே
கருணையா னந்த வடிவே
வான்வில் = பச்சைவில்; அலை = கடல்; திவலை = துளி; புணரி = கடல்;
அல் = இருள்; எல் = ஒளி
ஆதி. 9:13,14; யோபு 38:12; மாற். 6:48, 49; யூதா 6; சங். 90:4
8. வித்திலாமை யினின்று விளைவுசெய் வாய்மேக
மின்றிமழை பெயவிதிப் பாய்
வெய்யவனி லாமலொளி வீசுவாய் ஆகாய
விரிவின்மே லேநடப் பாய்
செத்துலர்ந் தழிவான என்புகளை யுந்தீர்க்க
தெரிசனஞ் சொலவுயிர்ப் பாய்
திரும்பஇஸ் றேலைமுடி சூட்டியே கானானு
தேசத்தில் வாழ்கவைப் பாய்
பக்தியில் லாதபர சமையங்கள் யாவையும்
பாழ்த்தழி யப்பண்ணு வாய்
பாவிகளை நரகபா தாளத்தில் வீழ்த்திநின்
பத்தரைக் கதியில்வைப் பாய்
கத்தபம் போலான புத்தியிலே னுனது
காட்சியைக் காணஅருள் கூர்
கருத்தா பரத்தாள் திரித்துவ ஏகத்துவமே
கருணையா னந்த வடிவே
வெய்யவன் = சூரியன்; பரசமையம் = புறச்சமையம்
கத்தபம் = கழுதை
எசே.37:11-13; உபா.30:4, 5; எரே. 33:20-26; எசே. 39:26-28; ரோம.11:26
மீகா 5:12; சகரி.13:2; ஏசா. 2:17,18; மத்.25:34,41
9. வஸ்திரம் போற்பழ சாய்ச்சுருட் டப்பட்ட
சால்வையாம் மாறி யுலகும்
வானங்க ளும்பூதியங் களும்வெந் துருகி
மடமடப் போடொய்ந்து போம்
நித்தலு நீயோ இருக்கிற பிரகாரமாய்
நீடூழி யுமிருப் பாய்
நின்றன்வ ருடங்கட்கு முகிவில்லை நினதிராச்
சியபாரம் என்று நிற்குஞ்
சத்துருக்க ளைநொறுக்கிப் பாதப்ப டியிட்டுச்
சருவசங் கார மாக்கித்
தாழ்ந்தவரை மேலாய்உ யர்த்திப்பெ ருமைக்காரர்
தங்களைத் தாழ்த்த அறிவாய்
கத்துக டலைப்படி யவைத்த சித்தாஎன்
கருத்தைத் திருத்த வரிதோ
கருத்தா பரத்தாள் திரித்துவ ஏகத்துவமே
கருணையா னந்த வடிவே
எபி.1:10-12; 2 பேது. 3:10; சங்.102:28;110:1; எபி.1:8; 2:9-11
1 சாமு. 2:7,8;யோபு 40:6,7; 38:11
10. எல்லாவா னங்களின் கீழிருக் கின்றயா
வற்றையுங் கண் ணோக்கியே
எண்ணிலா உயிர்களும் கும்படி யளந்தெளி
யவர்களை யுமினிது தாங்கிப்
பொல்லாத பேர்களைத் தாழ்த்தியா காதவர்
புயங்களை முறித் தெரிந்து
பூமியின் கடையாந் தரங்களைக் கண்டொருவர்
பூட்டாம லே திறந்து
வல்லாமை யாருந் திறக்காது பூட்டு
மகாமகத் துவத் தெய்வமே
வானத்தி லும்பூமி யிலுமுமக் கொப்பில்லை
வலியகா ரியமு மில்லை
கல்லாதமூ டாத்துமமெ னினுமெனை யாட்கொண்டு
காப்பதரி தோ பிரமமே
கருத்தா பரத்தாள் திரித்துவ ஏகத்துவமே
கருணையா னந்த வடிவே
புயங்கள் = தோட்கள்
யோபு 28:24; சங். 33:13-14; யோபு 39:2,3; சங்.136:25; 136:2,3; 146:9-37;
யோபு 38:15; 38:14,18; வெளி. 3:7; 1இரா. 8:23;லூக்கா 7:1,37
11. இருளார்ந்த ஈந்தியா விற்கிறிஸ்த வர்குழாம்
எவ்வாற துண்டா யின
ஈரோப்புத் துரைகளித் தேயத்தை ஆள்வதற்
கென்னவித மாய்முளைத் தார்
தெருளார்ந்த சுவார்ச்சையர் தஞ்சையிற் சபைகளைச்
சேர்த்ததா ருடைய சித்தந்
திருநெல்லைச் சிவபத்தன் யேசுவின் சீடனாய்ச்
செபமாலை பாட விலையோ
பொருளார்ந்த வேதாக மங்கள்எச் சாதிக்கும்
பொதுவாய்வ ழங்க விலையோ
பொய்தேவர் வாழ்வுகுறை பட்டதிவை யாவுமுன்
புதுமையல் லாது வேறோ
கருளார்ந்த மனதுநின் அருள்கூர்ந்தி ருக்கவழி
காட்டுவ துனக்கருமை யோ
கருத்தா பரத்தாள் திரித்துவ ஏகத்துவமே
கருணையா னந்த வடிவே
குழாம் = கூட்டம்; கருள் = இருள்
ஜெபமாலை 26 வரை செய்யுள் 378