ஜெபமாலை

வேதநாயக வேதசாஸ்திரியார்

4. ஜெபமாலை

கிறிஸ்துவின்துதி

1. திருவா னொளிவே தெருளே பொருளே
தேவே காவாவே
திரமே யுரமே வரமே பரமே
சீவா யேயோவா
ஒருவா இருவா நடுவா முடிவா
ஓரே கோனாரே
ஒழியா நிலையே வழியே விழியே
ஓமோ மூவாரே
தருவே குருவே பரிபூ ரணமே
தாதா வேநீயே
சருவே சுரனே தயவா யிருநீ
தானா னேதானே
அருவே யுருவே சுரார்பூ பதியே
ஆலே ஆலேலோ
அமலா சரணே மனுவே லரசே
ஆலே ஆலேலோ

சுரர் = தூதர்

2. கனிமா துண்பா தகமா றவுமே
காடூ டாவீடே
கவிவா னவர்பா டியுமா டவுமே
காலாய் மாலாய்நீ
தனையே பலியே தரவே வருவாய்
தாதா வேதாவே
சயமே நயமே தவிதா திபனே
சாலேம் வாழ்கோவே
உனையே தொழுகா தவர்வாழ் குவரோ
ஊழார் பாழாரே
ஒழியா நரகா னதில்வீழ் குவரே
ஓயா தோயாதே
அனைமா மரியா ளொருபா லகனே
ஆலே ஆலேலோ
அமலா சரணே மனுவே லரசே
ஆலே ஆலேலோ

ஊழார் = பழவினையர்

3. பொருளே புகழே பொறையே நிறையே
பூமா னேதேனே
புவிபா தலம்வா னிறைவே மறைவே
போதா மாவேதா
இருளோ டவுமே யெழுமா தவமே
யேகா ஓமேகா
இணையே துணையே யிதமே சிதமே
யீசா ராசாவே
மருளே கெடவா மடிதீர் மிடிதீர்
வானா திகாரா
மணியே யணியே மதியே கதியே
வானோர் கோமானே
அருளே தெருளே அழகே அமுதே
ஆலே ஆலேலோ
அமலா சரணே மனுவே லரசே
ஆலே ஆலேலோ

4. துதியே கிருபா நதியே நிதியே
சூர்சே ராதானே
சுபமே நவமே தவமே சிவமே
தோமா வோடேநூல்
விதியே சொலியே வெளியா னவனே
வேதா வேநாதா
விடிவே வடிவே விரிவே தெரிவே
மேலா வோலோலா
கதியே கருணா கரதே சிகனே
கானா னாடாள்வோய்
கலையே யலையே கனமே தனமே
காவா யோகோவே
அதிதூ தர்கடா டொழுமே சையனே
ஆலே ஆலேலோ
அமலா சரணே மனுவே லரசே
ஆலே ஆலேலோ

சூர் = துன்பம்

5. தொண்டர் பவத்தைக் கொண்டு பொறுத்துச்
சூதோர் வாதாலே
துன்ப மிகுத்துச் செம்புனல் விட்டுச்
சோர்வா யேவாளே
பண்டு பறித்துத் தின்ற கனிக்குப்
பாடா யீடாயோர்
பங்க மரத்திற் றொங்கி மரித்துப்
பாதா ளமேதாழ்
வண்டர வத்தைத் தண்டிமி தித்தப்
பாலே வானேபோய்
வந்துல கத்தைச் சிந்த வழித்துச்
சீறாய் மாறாதே
அண்டர் துதிக்கக் கண்ட கருத்தர்க்
காலே ஆலேலோ
அன்பின் மகத்துவத் தெங்கள் கிறிஸ்துக்
காலே ஆலேலோ

வண்டரவம் = குற்றமுடைய சர்ப்பம்

6. தந்தைய னாதியர் தந்தசு தாகர
தாதா நீயாமே
சம்பிரம நீடிய வும்பர் பராபர
சாலேம் ராசாவே
சுந்தர மேவிய சந்தகு ணாகர
தூயா வேநேயா
துங்கவி ணோர்நவ சங்கமு லாவிய
சூரா மாவீரா
மைந்தர் களால்வரு நிந்தைய டாமலே
வாராய் பாராயோ
வந்துனை யேபலி தந்த தயாபர
வாகா தெய்வீகா
அந்தர வானுல குந்தரு வேதர்க்
காலே ஆலேலோ
அம்பர தேவசி தம்பர நாதர்க்
காலே ஆலேலோ

சிதம்பரம் = ஞானமுள்ள பராபரம்

7. நெறிநிறை வாகர சருவதயா வொடு
நின்றாய் சீமானே
நிமலநி ராதர அமலம யேசுர
நின்பால் வாழ்வோமே
பொறிவழி யாய்வரும் வெறியுட தீவினை
பொங்கா தோர்நேராய்ப்
பொறையொடு மாகிரு பையினொடு பாவிகள்
பொன்றா தேகாவே
மறியினி லேறியும் எருசலை மாநகர்
வந்தாய் சீயோனே
மகிழவு நீடவு மணமது சூடவு
மந்திரா நீதானே
அறிவினு லாவிய திரிமுத லேயுயர்
அன்பே ஆலேலோ
அருளும னோகர பரமசு தாகர
இன்பே ஆலேலோ

வெறி = பிசாசு; மறி = குட்டி

8. பரமசு யாதிப தரும குணாதிப
பண்டார் பாவாரே
பகரரி தாமுயர் சகலகு ணாகர
பண்பார் சீராரே
ஒருவரு மேயள விடமுடி யாமுதல்
ஒன்றாம் யோவாவே
உலகதி லேவரு திருவடி வேகதி
உன்றாள் சேர்வோமே
எருசலை நீடிய விசறலர் நாடிய
எங்கோ மானாரே
இடியது போல்விழு கவலையி னான்மனம்
எஞ்சா தேகாவே
அருமறை யேகன தவிதிறை யேயக
ளங்கா ஆலேலோ
அதிசய மேதவ சிவசொரு பாவதி
துங்கா ஆலேலோ

அகளங்கன் = கடவுள்; எஞ்சல் = குறைதல்

9. வலமைமி குத்தம கத்துவ பொற்புச்
சொல்லே மாறானே
மனுடர்க ளுக்கொரு மித்த கருத்துக்
கிவ்வா றேநீயே
தலைமக ளுத்தமி கற்பிலு தித்துத்
தள்ளா தேதீயோர்
தமையரு ளுற்றுந யத்தின டத்திச்
சல்லா பநூலார்
கலைகள னைத்தும் வருத்தியி தத்திற்
கல்லா தோர்தாமே
கனவறி வுற்றுல கத்தைவி ளக்கக்
கைதூ வாமையால்
அலைகடல் பட்டம ரத்தரு சத்தத்
தையா ஆலேலோ
அனைய வுயிர்க்களி னித்திய தத்தத்
தல்லா ஆலேலோ

பொற்பு = அழகு
கைதூவாமை = ஒழியாவொழுக்கம்

10. சாதி யாவுமி டேறம னோகர
தாதா வேநேயா
தாழ்வி லாதம காபர மேசுர
சாகா வோரேகா
மாது மாமரி யாளிட மேவிய
மாதே வாசீவா
மாசி லாஅவ தாரம னாகன
வாகா நீவாகா
வேத நாயகன் ஓதிய பாடலின்
மேலா மேலாவே
மேசி யாகரு ணாநதி யேததி
மீள்வா யாள்வாயே
ஆதி யேதிரி யேக பராசர
ணாலே ஆலேலோ
ஆம னாமனு வேலர சேசரண்
ஆலே ஆலேலோ

ஜெபமாலை 4 வரை செய்யுள் 42

Table of contents

previous page start next page